Published:Updated:

தானே தாண்டவம் !

க.பூபாலன் நா.இள.அறவாழி படங்கள்: ஜெ.முருகன், எஸ்.தேவராஜன்

தானே தாண்டவம் !

க.பூபாலன் நா.இள.அறவாழி படங்கள்: ஜெ.முருகன், எஸ்.தேவராஜன்

Published:Updated:
##~##

2012 புத்தாண்டை வரவேற்கத் தயாராக இருந்த புதுச்சேரிவாசிகளுக்கு, துயரமே பரிசாக வந்தது. துயரத்தின் பெயர் 'தானே’ புயல்.  ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி என்னும் பெருந் துயர் பதித்துப்போன சோகச் சுவடுகளின் மேல் காலம் இன்னொரு காயத்தை ஏற்படுத்திப் போயிருக்கிறது.

இதில் ஏமாற்றத்தின் உச்சிக்கே சென்றவர்கள், புத்தாண்டைக் கொண்டாட புதுச்சேரிக்கு வந்து இருந்த வெளி மாநிலத்தவர்கள்தான்.  புத்தாண்டை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்று திட்ட மிட்டுகொண்டு இருந்தவர்களுக்கு, இயற்கை அன் னையின் திட்டம் தெரியாமல் போனது அவலம் தான். வருடா வருடம் வெளி மாநிலத்தவர்கள் புது வருடப் பிறப்பைக் கொண்டாட ஏற்ற இடமாக இருந்தது புதுச்சேரி. அதன் அழகைத்தடம் தெரியாமல் அழித்துவிட்டு புதுச்சேரிக்கு 22 கி.மீ. தொலைவில் இருக்கும் கடலூரிலும் தன் கோரத்தாண்டவத்தை ஆடிவிட்டுச் சென்றுவிட்டது 'தானே’.    

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வங்கக் கடலில் ஏற்படும் புயல்கள் ஆந்திரா பக்கம் செல்வதைத்தான் வழக்கமாகக்கொண்டு இருந்தன. அதில் 'தானே’ மட்டும் விதிவிலக்காகி உள்ளது. சரி, அது என்ன 'தானே’? வங்கக் கடலில் ஏற்படும் புயல் குறித்து எட்டு நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஓமன், மியான்மர், மாலத் தீவு, இலங்கை, வங்க தேசம் போன்ற நாடுகளின் பங்கேற்போடு நடந்த கூட்டத்தில் ஒவ்வொரு நாட்டுக்கும் எட்டுப் பெயர்கள் வீதம் தலா 64 பெயர்கள் பெறப்பட்டு ஒவ்வொரு புயலுக்கும் ஒவ்வொரு பெயராகச் சூட்டப்படுகிறது. ஓமன் நாட்டைச் சிதறடித்த 'கெயிலா’வைத் தொடர்ந்து, 28-வது புயலாகப் புதுச்சேரி மற்றும் கடலூரைத் 'தானே’ தாக்கியுள்ளது. 'தானே’  என்பது மியான்மரால் சூட்டப்பட்ட பெயராகும்.

தானே தாண்டவம் !

புதுவை மக்களுக்கு புயலின் சேதம் குறித்து விளக்க வேண்டியது இல்லை. அதன் அழுத்தமான பாதிப்புக்கு உள்ளானவர்கள் அவர்கள். சில ஆண்டுகளுக்காவது இந்த சேதத்தின் நினைவுகள் மறையப் போவது இல்லை. புதுச்சேரியின் முக்கிய வணிக வீதியான நேரு வீதியில் அமைந்து இருந்த கடைகளின் விளம்பரப் போர்டுகள் புயலால் கிழிந்து தொங்கின. காவல் துறையால் சாலையில் வைக்கப்பட்டு இருந்த இரும்பு பாரிகாட்கள் இருந்த இடம் தெரியாமல் சாலைகளில் சிதறிக்கிடந்தன. பல ஆண்டுகளாக ஓங்கி வளர்ந்து இருந்த மரங்கள் அனைத்தும் புயலுக்கு முன் நிற்க முடியாமல் மடிந்து, மண்ணோடு மண்ணாகச் சாய்ந்தன. கிழிந்து தொங்கிக்கொண்டு இருந்த விளம்பரப் போர்டுகளில் இருக்கும் இரும்புகளைத் திருட ஒரு கூட்டமும், அத்தியாவசியத்தேவை யான 'பாண்லே’ பால் அரை லிட்டரை

தானே தாண்டவம் !

25 வரை விற்று காசு பார்த்த கூட்டமும் நம்மை வேதனைப்படவைத்தது.

அரசு சார்பில் செய்யப்பட்ட ஒரே முன் எச்சரிக்கை நடவடிக்கை மின் இணைப்பு களை துண்டித்தது மட்டுமே. 'கடலூர் - நெல்லூர் இடையே புயல் கரையைக் கடக் கும்’ என்ற செய்தியால், எப்படியும் ஆந்திரா பக்கம்தான் கரையைக் கடக்கும் என்ற நினைப்பில், எந்த ஒரு முன் எச்சரிக்கை நட வடிக்கைகளிலும் புதுச்சேரி அரசு ஈடுபட வில்லை. அதன் விளைவாக, 'தானே’ வுக்குப் புதுச்சேரி மக்கள் கொடுத்த துயரப் பரிசு தான் ஏழு உயிர்கள்.

தானே தாண்டவம் !

கடலூரிலும் உச்சக் கட்ட சேதம். 29-ம் தேதி மந்தமான மழையுடன், மிதமான காற்று வீசிக்கொண்டு இருக்க, அன்று இரவு 12.30 மணிக்கு மேல் தன் சுயரூபத்தைக் காட்டியது 'தானே’. 30-ம் தேதி அதிகாலை 5.30 மணியில் இருந்து 7.30 மணி வரை இடைவேளையே இல்லாமல் கடலூரை விழுங்கத் தொடங்கியது 'தானே’. கடலூர் நகரத்தில் இருக்கும் வணிக நிறுவனங்கள், ஷோ ரூம்கள் என அனைத்தும் 'தானே’ முன்பு தவிடுபொடியானது.

புதுச்சேரி - கடலூர், கடலூர் - சிதம்பரம் வழித் தடங்கள் அனைத்திலும் மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்து போக்குவரத்துக்குத் தடைபட்டது. புயல் ஓய்ந்தபின் பால் ஒரு லிட்டர்

தானே தாண்டவம் !

50க்கும், மினரல் வாட்டர் பாட்டில்கள் அதிக விலைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டு இருக்கும்போது புயலினால் இதுவரை 21 பேர் உயிர் இழந்துள்ளதாகவும் அதில் 2 குழந்தைகளும், 85 வயதான மூதாட்டி ஒருவரும் அடக்கம் என்பது தெரியவருகிறது.

'தானே’வின் கொடூர ஆட்டத்துக்கு ஆளான  புதுச்சேரியும், கடலூரும் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப, எப்படியும் சில வாரங்கள் ஆகலாம். புதுவை, கடலூரின் பாதிப்புகளுக்குத் தகுந்த இழப்பீடு வழங்கு வது, மறுசீரமைப்பு ஆகியவை அரசுகளின் கடமைகள். இருக்க வீடு, உடுக்க உடை இந்த இரண்டையும் இழந்து தவிக்கும் பலருக்கு நாம் வீட்டின் மூலையில் கிடக்கும் துணிகளை அளித்து உதவ வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. எல்லா இழப்புகளையும் தாண்டி மீண்டும் எழுந்து நிற்கும் புதுவையும் கடலூரும்.