Published:Updated:

தடைகள்தான் சவால்!

தடைகள்தான் சவால்!
பிரீமியம் ஸ்டோரி
தடைகள்தான் சவால்!

சூழல் காக்க... ஞெகிழி நீக்கு

தடைகள்தான் சவால்!

சூழல் காக்க... ஞெகிழி நீக்கு

Published:Updated:
தடைகள்தான் சவால்!
பிரீமியம் ஸ்டோரி
தடைகள்தான் சவால்!
தடைகள்தான் சவால்!

னவிலும் நனவிலும் கிரிக்கெட்டைச் சுமந்து வாழும் பெண், தன் இலக்கை எட்டுவதில் எதிர்கொள்ளும் போராட்டங்களை அபாரமாக அம்பலப்படுத்தியிருந்தது ‘கனா’ திரைப்படம்.

ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு நிஜ கிரிக்கெட் வீராங்கனையைப் போலவே கிரிக்கெட் ஆடி அசத்தியிருந்தார். அவரை அப்படித் தயார்ப்படுத்தியவர் ஆர்த்தி சங்கரன். தமிழ்நாடு பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர். கிரிக்கெட் வீரர் வி.சிவராமகிருஷ்ணனின் மருமகள். அவரைச் சந்தித்தோம், கனா தொடங்கி இந்திய மகளிர் கிரிக்கெட் அரசியல் வரை நிறைய உரையாடினோம்.

தடைகள்தான் சவால்! ``என் அண்ணன் கிரிக்கெட் விளையாடப் போகும்போது வேடிக்கை பார்க்க நானும் போவேன். அப்போ பெண்களுக்கான ஸ்டேட் டீம் இருக்கிறதோ, பெண்கள் கிரிக்கெட் இருக்கிறதோ தெரியாத வயசு. என் ஃப்ரெண்ட் ஒருவர், `எத்திராஜ் காலேஜ்ல கிரிக்கெட் ஆடப்போறேன். நீயும் வாயேன்’னு கூப்பிட்டாங்க. `முன்னபின்ன விளையாடினதில்லையே’ன்னு சொன்னேன். `பரவாயில்லை வா’ன்னு கூட்டிட்டுப் போனாங்க. விளையாட்டா ஆரம்பிச்ச விளையாட்டு, இன்னிக்கு வாழ்க்கையா மாறியிருக்கு’’ அடக்கமான அறிமுகம் தருகிறார் ஆர்த்தி.

``பி.எஸ்ஸி., மேத்ஸ் படிச்சேன். க்ளாஸ்ல உட்கார்ந்தா எதுவுமே புரியாது. அதுலேருந்து தப்பிக்கவே கிரிக்கெட் விளையாடப் போயிடுவேன். ஒருகட்டத்துல கிரிக்கெட்டுல நான் ரொம்பத் தீவிரமா இருக்கிறதைப் பார்த்துட்டு `பொம்பளக் குழந்தையாச்சே... எங்கேயாவது அடிபட்டுட்டா என்ன செய்றது?’னு வீட்டுல பயந்தாங்க. அப்புறம் கிரிக்கெட்டுலேருந்து என்னை மீட்க முடியாதுன்னு புரிஞ்சுக்கிட்டாங்க. கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுக்கும் பெண்கள், பெரும்பாலும் கல்யாண வாழ்க்கையைத் தவிர்த்திடுறாங்க. அவங்க ஆர்வத்தைப் புரிஞ்சுக்கிற குடும்ப வாழ்க்கை அமையுறது ரொம்பவே கஷ்டம். அந்த வகையில நான் அதிர்ஷ்டசாலி. மாமனார் சிவராமகிருஷ்ணன், கணவர் நிகில், மைத்துனர் வித்யுத்னு எல்லாருமே பிளேயர்ஸ். கிரிக்கெட் தெரிஞ்ச குடும்பம். கல்யாணமாகி, குழந்தை பிறந்திருந்தபோதே நான் கோச்சுக்காக குவாலிஃபை ஆகியிருந்தேன். `உன்கிட்ட திறமை இருக்கு... ஏன் வேஸ்ட் பண்றே? குழந்தையை  நான் பார்த்துக்கிறேன். நீ போய் கோச் பண்ணு’ன்னு அம்மா சொன்னாங்க. 2012-லிருந்து கோச் பண்றேன்’’ என்கிற ஆர்த்திக்கு, 8 வயதில் உத்தரா என்ற மகள் இருக்கிறார்.

தடைகள்தான் சவால்!

``நான் விளையாட வந்த காலத்துல, பத்து அகாடமியில ஒண்ணுல ஒரே ஒரு பெண் விளையாடினாலே அபூர்வம். இன்னிக்கு பெண்கள் இல்லாத அகாடமியே இல்லை. விளையாட வந்தபோது நானும் நிறைய அவமானங்களைச் சந்திச்சிருக்கேன். `பொண்ணுங்க விளையாடுறதா!’ன்னு இளக்காரமா பார்த்திருக்காங்க. பெளண்டரி அடிச்சா `ஒரு பொம்பள பெளண்டரி அடிச்சிட்டா!’ன்னு கேவலமா பேசியிருக்காங்க. கிட் பேகை எடுத்துக்கிட்டுத் தெருவுல நடந்தாலே, வித்தியாசமா பார்த்த காலம் அது.

இன்னிக்கு எல்லாமே மாறியிருக்கு. அதுக்கு, நான் கோச் பண்ற பெண் குழந்தைகளே சாட்சி. ஹோம் ஸ்கூலிங்ல படிச்சுக்கிட்டு முழுநேரமும் கிரிக்கெட்டுல தீவிரமாயிருக்கிற பெண் குழந்தைகளை நிறைய பார்க்கிறேன். ஐ.பி.எல் வந்த பிறகு பெண்கள் கிரிக்கெட் இன்னும் பிரபலமாகியிருக்கு. நிறைய பெண்கள் கிரிக்கெட் பார்க்க ஆரம்பிச்சாங்க. கிரிக்கெட்டை கரியரா எடுக்கலாம்கிற தெளிவு ஏழு, எட்டு வயசுலேயே நிறைய பெண் குழந்தைகளுக்கும் அவங்க பெற்றோர்களுக்கும் வந்திருக்கு.’’ கிரிக்கெட்டில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்திருப்பதில் ஆர்த்திக்குப் பெருமை. ஆனாலும் ஆண்கள் கிரிக்கெட் அளவுக்கு இது இன்னும் பிரபலமாகாததையும் ஆமோதிக்கிறார். 

தடைகள்தான் சவால்!``செலக்‌ஷனுக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கு. ஆனா, ஆந்திரா, கேரளா, நார்த் இந்தியாவோடு கம்பேர் பண்ணும்போது தமிழ்நாட்டுல கிரிக்கெட் விளையாடும் பெண்களின் எண்ணிக்கை ரொம்பவே கம்மி. தமிழ்நாட்டுல படிப்பை மட்டுமே முக்கியமா பார்க்கிறோம். அதுவும் ஒருவகையில நல்லதுதான். இன்னிக்கு கிரிக்கெட் இல்லைன்னாலும் என்னால வேற வேலை பார்க்க முடியும். நான் கிரிக்கெட்டை மட்டுமே நம்பி இல்லை. ஒரு அம்மாவா நானும் அப்படித்தான் யோசிப்பேன். என் மகள் ஸ்போர்ட்ஸைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனா, அவளுக்குப் படிப்பும் முக்கியம்னு நினைப்பேன். வேற எந்த விளையாட்டையும்விட அதிகம் விமர்சிக்கப்பட்ட விளையாட்டு, கிரிக்கெட். நல்லா விளையாடினா மக்கள் பார்ப்பாங்க. ஹர்மன்ப்ரீத் கௌர் 170 ரன் அடிச்சபோது அவங்க ஆட்டத்தைப் பாராட்டாத ஆளே இல்லை. அதனால இங்கே திறமைதான் பேசப்படும்.’’

`` `கனா’வும் சரி, இதற்கு முன் வந்த `ஜீவா’வும் சரி, கிரிக்கெட் அரசியலைப் பற்றிப் பேசிய படங்கள். குறிப்பாக, சாதி அரசியலும் செலக்‌ஷன் அரசியலும். நிஜத்திலும் அவை நடக்கின்றனவா?’’ என்றதும் சிலநிமிடங்கள் யோசனைக்குப் பிறகு பேசத்தொடங்குகிறார்.

``என் பீரியட்ல ஆள்கள் கம்மி. ஓரளவு நல்லா ஆடினாலே வளர்ந்துட முடிஞ்சது. நான் அந்த மாதிரியான அரசியலை எதிர்கொள்ளலை. ஆனா, அடுத்தடுத்த நிலைகளுக்குப் போகும்போது நிச்சயம் பிரச்னைகள் ஆரம்பிக்கும். ஸோன்ல ஆரம்பிச்சு இந்தியா செலக்‌ஷன் வரும் வரைக்கும் யார், எந்த ஸ்டேட்டை ரெப்ரசென்ட் பண்றாங்கங்கிறதுதான் முக்கியமா பார்க்கப்படும். இது கிரிக்கெட்ல மட்டுமில்லை, எல்லா ஸ்போர்ட்ஸிலும் இருக்கிறதுதான். திறமையானவங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காமப்போவது பலநேரம் நடக்கிறதுதான். அதையெல்லாம் தாண்டி வர்றதுலதான் இருக்கு சேலஞ்ச். அப்படியொரு சவால் நமக்கு முன்னாடி நிற்கிறபோது, `ச்சீ போ’ன்னு ஸ்போர்ட்ஸை விட்டே ஓடுறது, இதுவும் கடந்து போகும்னு பாடம் கத்துக்கிறதுன்னு ரெண்டு ஆப்ஷன்கள் இருக்கும். திறமை மேல நம்பிக்கை உள்ள ஸ்போர்ட்ஸ் பர்சன் ரெண்டாவது ஆப்ஷனைத்தான் தேர்ந்தெடுப்பாங்க, என்னைப்போல.’’

தடைகள்தான் சவால்!

`கனா’வில் கோச்சாக வேலைபார்த்தது நிஜத்தைவிடவும் நிறைவைத் தந்ததாகச் சொல்கிறார் ஆர்த்தி.

``நடிகை லட்சுமிப்ரியா, முன்னாள் கிரிக்கெட்டர். அவங்கதான் `கனா’ பட டைரக்டர் அருண்ராஜா காமராஜை எனக்கு அறிமுகப்படுத்தினாங்க. பெண்கள் கிரிக்கெட்டை வெச்சு ஒரு படம் பண்றதா சொன்ன அருண்ராஜா, நிஜத்துல பெண்கள் கிரிக்கெட்டின் நிலைமை எப்படியிருக்குங்கிறது உட்பட நிறைய தகவல்களைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டார். கொஞ்சநாள் கழிச்சு, `ஹீரோயின் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கிரிக்கெட் கோச் பண்ண முடியுமா?’ன்னு கேட்டார். சம்மதிச்சேன்.

ஒரு பெண் பிளேயருக்குப் பெண் கோச் சொல்லிக்கொடுக்கிறதுல நிறைய நுணுக்கங்கள் இருக்கு. குறிப்பிட்ட சில மூவ்மென்ட்ஸ் ஏன் சரியா வரலைன்னு கேட்டபோது, ஒரு லேடி கோச்சா என்னால ஐஸ்வர்யாவுக்குக் காரணங்களைப் புரியவைக்க முடிஞ்சது. அவங்க உடம்பின் எல்லைகளைப் புரியவெச்சு, அதை வெச்சுக்கிட்டு எப்படி கிரிக்கெட் விளையாட முடியும்னு சொல்லிக்கொடுத்தேன். பல வருஷமா பயிற்சி எடுக்கிறவங்களாலகூடப் பண்ண முடியாத விஷயங்களை, 25 நாள்ல செய்து அசத்தினாங்க...’’

சிசிஎல்-லின் அடுத்த சீஸனில் ஐஸ்வர்யாவைக் களமிறக்கலாம். அவ்வளவு நம்பிக்கை தருகிறார் ஆர்த்தி. `` `கனா’ படம், கிராமங்கள்ல நடக்கும் கிரிக்கெட்டின் நிஜமான பிரதிபலிப்பு. கிராமத்துப் பெண்கள் கிரிக்கெட்டுல உயரம் தொடுறது சாதாரண விஷயமில்லை. நிறையபேருக்கு அடிப்படை வசதிகள் இல்லை. ஆயிரங்களைச் செலவழிச்சு, பேட்டும் பேடும் வாங்கும் சூழலும் இல்லை. ஆனால், முன்பைவிட இப்போ நிலைமை ஓரளவுக்கு மாறியிருக்கு. இருந்தாலும், அது போதாதே!’’ வருத்தம் பகிரும் ஆர்த்திக்கு, இந்தியன் விமன் கிரிக்கெட் டீமுக்குப் பயிற்சியாளர் ஆவதே கனா. நனவாகட்டும்!

 -ஆர்.வைதேகி

படங்கள்: ப.சரவணக்குமார்