Published:Updated:

இது விகடன் மாஸ்!

இது விகடன் மாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
இது விகடன் மாஸ்!

இது விகடன் மாஸ்!

இது விகடன் மாஸ்!

இது விகடன் மாஸ்!

Published:Updated:
இது விகடன் மாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
இது விகடன் மாஸ்!

வ்வோர் ஆண்டும் தலைசிறந்த கலைஞர்களையும் படைப்புகளையும் முடிசூடி கௌரவிக்கிற தமிழ்த்திரையுலகின் நம்பர் ஒன் மேடை ‘ஆனந்த விகடன் - சினிமா விருதுகள் விழா.’  2018-ம் ஆண்டுக்கான விழா, சென்றவாரம் சென்னை  வர்த்தக மையத்தில் கோலாகமாக நடந்து முடிந்தது. தமிழ்த்திரையுலகமே ஒன்றுகூடிய விழாவில் எண்ணற்ற திரைக்கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். விரைவில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள நிகழ்விலிருந்து சில அசத்தலான தருணங்களின் தொகுப்பு இங்கே. 

இது விகடன் மாஸ்!

* டபுள் பேரல் ஃபன்களாக `மிர்ச்சி’ சிவாவும் சதிஷும் நிகழ்வைத் தொகுத்து வழங்க, கலகலப்பு குறையாமல் ஆரம்பமானது விகடன் விழா. வந்திருந்த விருந்தினர்களிடம் ஜாலிகேள்விகளை வீசி, கலாய்த்தும், விருது பெற்றவர்களுக்கு வித்தியாச அறிமுகங்கள் வழங்கியும் விழாவைக் கொண்டாட்டமாக நகர்த்திச்சென்றது இந்தக் காமெடி காம்போ. 

இது விகடன் மாஸ்!

* நிச்சயமாக 2018 கோடம்பாக்கத்தில் புதுமுக இயக்குநர்களின் ஆண்டு. அப்படி முத்திரை பதித்த அறிமுக இயக்குநர்கள் லெனின்பாரதி, மாரி செல்வராஜ், அருண்ராஜா காமராஜ், பிரேம் குமார், இளன், பி.எஸ்.மித்ரன், நெல்சன் ஆகியோரை மேடையேற்றி கெளரவித்தது விகடன். அவர்கள் இயக்கிய படங்களின் கருக்களை மையமாக வைத்து விகடன் கலைஞர்கள் வரைந்த ஓவியங்கள் பரிசளிக்கப்பட, இளம் இயக்குநர்கள் முகங்களில் அவ்வளவு மகிழ்ச்சி!

* சிறந்த படத்திற்கான விருதை விகடனின் நிர்வாக இயக்குநரும், ஆனந்த விகடனின் ஆசிரியருமான பா.சீனிவாசன் வழங்கினார். விருது பெறுவதற்காக மேற்குத்தொடர்ச்சி மலையின் கதை மாந்தர்களை மேடையேற்றினார் லெனின்பாரதி. தன் கணவர் பெயரைக் கையில் பச்சைகுத்தியிருந்த பாட்டியிடம் கணவர் பெயரைச் சொல்ல வைக்க சதீஷ் எவ்வளவோ முயன்றும் பாட்டி சம்மதிக்கவில்லை. படத்தின் மற்றொரு முக்கியக் கதாபாத்திரமான கிறுக்குக் கிழவியைக் கண்டுபிடித்த கதையைப் பகிர்ந்துகொண்டார் லெனின். `ரெண்டு வருஷம் பின்னாடியே சுத்தி படத்துல நடிக்க சம்மதிக்கவெச்சேன். முதல்நாள் ஷூட்டிங் அப்போ அசிஸ்டென்ட் கையில இருந்த வாக்கிடாக்கியைத் துப்பாக்கின்னு நினைச்சுட்டு `ஐயோ என்னைக் கொல்ல வர்றானுகளே'ன்னு ஓடிடுச்சு. திரும்பப் போய் சமாதானப்படுத்தி கூப்ட்டுவந்தேன்' என லெனின் சொல்ல அரங்கில் வெள்ளந்தி வாசம். கேமராவுக்குக் கூச்சப்பட்டு நின்றிருந்த ஒரு பாட்டியை, `இவங்க இளையராஜாவுக்கு முறைப்பொண்ணு' என லெனின் அறிமுகப்படுத்திவைத்தது நிகழ்வின் `அடடே' தருணம். `அவர மாமான்னுதான் கூப்பிடுவேன்' எனப் பாட்டி சொல்ல விசில் சத்தம் நாலாதிசையும் கிளம்பியது. 

இது விகடன் மாஸ்!

* `காட்டுக்குயிலு மனசுக்குள்ள' எனத் தளபதியின் முரசு அதிர மேடையேறினார் மம்மூட்டி.  இயக்குநர் ராம், நடிகை அஞ்சலி, தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் ஆகியோரும் அவரோடு மேடையேற, உலக அரங்கில் பாராட்டுகளைக் குவித்துவரும் `பேரன்பு' பட  டிரெய்லர் வெளியிடப்பட்டது. இரண்டு நிமிட டிரெய்லர் அரங்கில் கனத்த மெளனத்தைப் படரவிட்டது. எல்லோரையும் சகஜ நிலைக்கு மாற்ற மம்மூட்டியோடு கேஷுவல் அரட்டை நடத்தியது சிவா - சதீஷ் இணை. ``ஏன் தமிழ்ல 10 வருஷமா படமே பண்ணல?’’ என்று சிவா கேட்க, ``இப்படி ஒரு படத்துல நடிக்க வெயிட் பண்ணினேன். ஏன்னா `பேரன்பு' படத்துல எனக்கு 45 வயசு அப்பா கேரக்டர். எனக்கு நிஜமாவே 45 வயசாகணும்னு பத்து வருஷம் வெயிட் பண்ணினேன்’’ என்று அரங்கைச் சிரிப்பலையில் அதிரவைத்தார்.  

இது விகடன் மாஸ்!

* பரியனின் வாழ்வியலை அழுத்தமான சினிமா அனுபவமாக்கிய மாரி செல்வராஜுக்கு `சிறந்த இயக்குநர்’ விருது வழங்கினார்கள் மம்மூட்டியும், இயக்குநர் ராமும். தன் தயாரிப்பாளர் இரஞ்சித்தோடு மேடையேறினார் மாரி. `நீ பண்ணுற படம் தமிழ்ல தவிர்க்கமுடியாத படமா இருக்கணும்'னு ராம் சார் சொன்னார். இப்போ என் படத்துக்கு அவர் கையால விருது வாங்குறது நெகிழ்ச்சியா இருக்கு. இந்த விருது ராம் சாருக்குத்தான் சொந்தம்' என மாரி சொல்ல, குருவின் கண்களில் பேரன்பு பொங்கி வழிந்தது. `நல்ல திரைப்படங்களுக்கு மக்கள் அளிக்கிற வரவேற்புதான் தொடர்ந்து நல்ல படைப்புகள் வெளிவரக் காரணமா இருக்கு' என்றார் இரஞ்சித்.

இது விகடன் மாஸ்!

* சிறந்த நடிகருக்கான விருதைக் கொடுக்க விடுவிடுவென மேடையேறினார் பாரதிராஜா. `வி.ஐ.பி' தீம் மியூசிக் அலற கெத்தாக மேடைக்கு வந்தார் தனுஷ். வெள்ளை வேஷ்டி சட்டையில் ஸ்டைலான அடர் மீசை தாடியுடன், விருது வாங்கிய கையோடு வேட்புமனுத்தாக்கல் செய்யச் செல்லும் தோரணை. ``அன்புதானே எல்லாம். நமக்கு ஒருத்தர் அன்பு கொடுத்தால், பதிலுக்கு டபுள் மடங்கு அன்பைக் கொடுப்போம். வெறுப்பைக் கொடுத்தால், அப்பவும் அன்பையே கொடுப்போம். நல்லது நினைச்சா நல்லது நடக்கும். மத்தவங்களுக்கும் நல்லது நினைச்சா ரொம்ப நல்லதெல்லாம் நடக்கும். விகடனுக்கு ஸ்பெஷல் நன்றி ஒண்ணு இருக்கு. மாரி கதாபாத்திரம் பண்றது ரொம்ப சிரமமானது. அது கமர்ஷியல் படமா இருந்தாலும் அதைச் சரியா கவனிச்சு அதற்காகவும் விருது வழங்கினதுக்கு நன்றி’’ என, பேச்சில் தத்துவ மாஸ் காட்டினார் தனுஷ். அவருக்குச் சில சர்ப்ரைஸ்களும் வைத்திருந்தோம்.

தனுஷின் அம்மா, அப்பா, இரு அக்காக்கள் எல்லோரும் மேடைக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்து தனுஷை திக்குமுக்காட வைத்ததில், வார்த்தை வரவில்லை ரெளடி பேபிக்கு. ``இவன் மகன் இவன்ங்கிறதை மாத்தி, இவன் தந்தை இவன்னு சொல்ல வெச்சிருக்கார். இதுக்கு மேல வேற என்ன வேணும்’’ என, தன் மகனின் உச்சிமோந்தார் கஸ்தூரி ராஜா. அதை, முட்டி நிற்கும் கண்ணீரோடு பார்த்து நின்றார் தனுஷின் அம்மா. 

இது விகடன் மாஸ்!

* `தீமைதான் வெல்லும்' தீம் மியூசிக்கோடு கெத்தாக நடந்துவந்து கொத்தாக `வாவ்'களை அள்ளினார் அரவிந்த்சுவாமி. `என் சித்திக்கு மாப்பிள்ளை பார்க்கும்போது அரவிந்த்சுவாமி மாதிரி பையன் வேணும்னு கேட்டாங்க. பிறகு என் அக்காக்கு மாப்பிள்ளை பார்க்கும்போதும் அரவிந்த்சுவாமி மாதிரி பையன் வேணும்னு கேட்டாங்க. இப்போ நான் பொண்ணு பாத்தா பொண்ணு வீட்டுக்காரங்களும் அதையேதான் சொல்றாங்க. நீங்க இப்படிப் பண்ணுனா நாங்க எப்படி சார் கல்யாணம் பண்றது?' என சதீஷ் தன் மனக்குறையைக் கொட்ட, `எனக்கு ரொம்ப வயசாகிடுச்சு'ன்னு சூசகமா சொல்லிட்டீங்கல்ல' என ஜாலிக்கோபம் காட்டினார் அரவிந்த்சுவாமி. 

இது விகடன் மாஸ்!

* `காதலே காதலே' என வயலின் இசைக்க, கரகோஷம் பக்கத்து ஏரியாவரை கேட்டது. சேலை ஜொலிஜொலிக்க மேடையேறிய `ஜானு திரிஷா. `96' படத்திற்காக `சிறந்த நடிகை’க்கான விருதை அரவிந்த்சுவாமியிடமிருந்து பெற்றுக்கொண்டார் த்ரிஷா. ``1999-ல மிஸ்.சென்னை ஜெயிச்ச சமயம் என்னுடைய முதல் இன்டர்வியூ விகடன்ல வந்தது. அப்போ இருந்து விகடனுடனான என் பயணம் தொடர்ந்துகிட்டிருக்கு. போன வருஷம் நிறைய தமிழ்ப்படங்கள் சிறப்பா இருந்தது. அதுல சிறந்த நடிகையா என்னைத் தேர்ந்தெடுத்ததுக்கு ரொம்ப நன்றி. எப்பவும் என்னுடைய விருதுகளை யாருக்கும் டெடிகேட் பண்ணமாட்டேன். ஆனா, இந்த விருது கிடைக்கக் காரணம் முழுக்க முழுக்க டீம் ஒர்க்.  `96' டீமுக்கு இந்த விருதை டெடிகேட் பண்றேன்’’ எனப் புன்னகைத்தார் த்ரிஷா! 

இது விகடன் மாஸ்!

* `சிறந்த இசையமைப்பாளர்’ விருதை சந்தோஷ் நாராயணனுக்கு வழங்கினார்கள் பா.இரஞ்சித்தும் நலன் குமரசாமியும். ``நான் கோவிந்த் வஸந்தாவுக்குத்தான் கிடைக்கும்னு நினைச்சேன். எனக்கு `96' பாடல்கள் ரொம்பப் பிடிச்சிருந்தது. கடைசியில், எனக்கே கிடைச்சதுல ரொம்ப சந்தோஷம். என் முதல் மூன்று இயக்குநர்கள் பா.இரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ் மற்றும் நலன். இவங்ககூட என் முதல் மூன்று படம் அமைஞ்சது எனக்கான ஆசீர்வாதமா பாக்குறேன்’’ என்றார் சந்தோஷ்.

* தான் வாங்கப்போகும் `சிறந்த வில்லி’க்கான விருதை ஆசான் பாலாதான் கொடுக்கப்போகிறார் என்பதை அறிந்ததும், அவ்வளவு மகிழ்ச்சி வரலட்சுமி முகத்தில். ஆனால், ‘வரலட்சுமியோட அம்மா எனக்கும் அம்மா மாதிரி. அதனால அவங்க வருவுக்குக் கொடுக்கிறதுதான் சரியா இருக்கும்' என சர்ப்ரைஸ் கொடுத்தார் பாலா. அம்மா சாயா மேடையேறி விருதை வழங்க, வரலட்சுமி முகத்தில் மத்தாப்பு மகிழ்ச்சி. 

இது விகடன் மாஸ்!

* `சிறந்த குணச்சித்திர நடிக’ருக்கான விருதை இயக்குநர் ராஜீவ் மேனனிடமிருந்து, `வடசென்னையின் ராஜன்' அமீர் பெற்றுக்கொண்டார். வெற்றிமாறனையும் தனுஷையும் மேடையேற்றி அவர்களுக்குத் தன் விருதை சமர்ப்பிக்கவும் தவறவில்லை அமீர். ``இந்த விருது வெற்றிக்குத்தான் போய்ச் சேரணும். ஏன்னா, அவர்தான் இதுக்கு சூத்திரதாரி. காசு வெச்சிருக்கவன்லாம் புரொடியூசர் இல்ல. நல்ல படம் பண்ணணும் நினைக்கிறவன்தான் நல்ல புரொடியூசர். தனுஷ் அப்படியான ஒரு புரொடியூசர்'' என ராஜனாகவே மாறி, பாசமழை பொழிந்தார் அமீர். வடசென்னை படத்திலிருந்தும் அவர் பேசிய மெர்சல் வசனத்திற்கு விசில் சத்தங்களால் அரங்கம் குலுங்கியது!

* காத்திர காலாவைக் கலகலப்பூட்டிய ஈஸ்வரிக்கு, ‘சிறந்த குணச்சித்திர நடிகை’ விருது வழங்கப்பட்டது. செம ஹேப்பி மூடில் மேடையேறினார் `செல்வி.’ “விகடனுக்கும் எனக்கும் இருபது வருச பந்தம் இருக்கு. சின்னத்திரைக்கு என்னை முதன்முதலா கொண்டுவந்தது விகடன்தான்” என்று, அந்தக்கால ஞாபகங்களுடன் ஆரம்பித்தவர்,  “இந்த வருசம் எனக்கு ரெண்டு விகடன் விருது கிடைச்சிருக்கு. அவள் விகடன்ல ஒண்ணு. ஆனந்த விகடன்ல ஒண்ணு” என்று பெருமைப்பட்ட கையோடு தன் டிரேடுமார்க் `காலா' பன்ச்சையும் உதிர்த்தார். அவருக்கு விருது கொடுத்த விஜி சந்திரசேகர்தான் ஈஸ்வரிக்கு டப்பிங் கொடுப்பதாக இருந்ததாம். இருவரும் மேடையில் பகிர்ந்த சீக்ரெட் இது.

இது விகடன் மாஸ்!

* `குலேபகாவலி' ரேவதிக்கு `சிறந்த நகைச்சுவை நடிகை’க்கான விருதை சேரன் வழங்கினார். ``அரங்கேற்ற வேளை' படத்தில் உங்க பெயர் மாஷா, `குலேபகாவலி'யிலும் அதே பேர்தான். எப்படியிருக்கு இந்தப் பயணம்?’’ என்ற கேள்விக்கு, ``இயக்குநர் கல்யாணுக்குத்தான் என்னைவிட என்மேல் அதிக நம்பிக்கை இருந்தது. நீங்கதான் பண்ணணும்னு சொல்லி வற்புறுத்தி பண்ண வெச்சார். சிரிக்க வைக்குறது ரொம்ப கஷ்டமான விஷயம். அதை சரியா செஞ்சு அவார்டு வாங்கினதுல ரொம்ப சந்தோஷப்படுறேன். பல ஆண்டுகளுக்குப் பின் கிடைச்ச விருது இது'' என ரீவைண்ட் நினைவுகளில் மூழ்கினார் ரேவதி 2.0.

* `சிறந்த அறிமுக இயக்குந’ருக்கான விருதைப் பெற்றார் லெனின் பாரதி. மூத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் விருதை வழங்கினார். ``மேற்குத்தொடர்ச்சி மலை மாதிரியான படம் ஓடாதுன்னு ஒரு பொய்யான பிம்பம் இருந்துச்சு. அதை மேற்குத் தொடர்ச்சி மலை உடைச்சிருக்கு'’ எனப் பெருமிதத்துடன் கூறினார் லெனின். 

இது விகடன் மாஸ்!

* `சிறந்த அறிமுக நடிகை’க்கான விருதை `பியார் பிரேமா காதல்' ரைஸாவுக்கு வழங்கியது சென்ட்ராயனும் அதிதி பாலனும். ஒருபக்கம் கடந்த ஆண்டு தான் இதே விருதை வாங்கியதாக அதிதி நினைவுகூர, மறுபக்கம் விருதுக்கு நன்றி நவிலல் உரை நடத்தினார் ரைஸா. ``மூடர்கூடம் படத்துக்காக சிறந்த நகைச்சுவை நடிகர் விருது வாங்கினேன்’’ என, தன் விகடன் கனெக்ட்டைப் பகிர்ந்துகொண்டார் சென்ட்ராயன்.

* `சிறந்த அறிமுக நடிகர்’ விருதை அப்பாவின் கையால் வாங்கினார் ஆதித்யா பாஸ்கர். மேடையேறிய ஆதித்யாவை அப்பா எம்.எஸ்.பாஸ்கர் ஆரத்தழுவி முத்தமிட்டது அழகிய ஆல்பம். “இவனை இன்ஜினீயரிங் படிக்க வைக்கணும்னு நெனைச்சேன்” என எம்.எஸ்.பாஸ்கர் தொடங்க, சதீஷ், “இஞ்சினீயரிங் படிச்சா வேலை கெடைக்காதுண்ணே’’ என்று ஆறுதல் சொல்ல, “அதனாலதான் நடிக்க அனுப்பிட்டேன்” என்று கவுன்ட்டர் கொடுத்தார் எம்.எஸ். ``என் மகனே விருது வாங்கியதைப் போல உணர்கிறேன்” என்று நெகிழ்ந்தார் விருது வழங்க மேடையேறிய ரமேஷ் கண்ணா.

இது விகடன் மாஸ்!

* `சிறந்த குழந்தை நட்சத்திர’த்திற்கான விருதை `லக்‌ஷ்மி' தித்யா பாண்டேவுக்கு இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் `தெய்வமகள்' சாராவும் வழங்கினர். ``கீர்த்தி சுரேஷ், எமி ஜாக்சன்னு தமிழ் சினிமாவுக்கு ஹீரோயின்களை அறிமுகப்படுத்தியிருக்கீங்க. இவங்க இரண்டு பேரும் எப்போ ஹீரோயின் ஆவாங்க’’ என சாரா மற்றும் தித்யாவைப் பற்றி சதீஷ் கேட்க, ``சீக்கிரமே’’ எனச் சிரித்தார் ஏ.எல்.விஜய்.

* ராட்சசனை ராப்பகலாகப் பட்டைதீட்டி பயம் காட்டிய ஷான் லோகேஷ், `சிறந்த படத்தொகுப்பாளர்’ விருது பெற்றார். ``பட்டைய கிளப்பிட்டீங்க பாஸ்” என சதீஷ் பாராட்ட, “பட்டைய கிளப்பியிருக்கேனா? பயந்துபோய் இருந்தேன் பாஸ். ஸ்கிரிப்ட் படிக்கிறப்பவே அவ்ளோ பயமா இருந்தது. அந்த பயம்தான் எடிட்டிங் பக்காவா வரக் காரணம்'’ என ஷாக் கொடுத்தார் ஷான்.

இது விகடன் மாஸ்!

* `சிறந்த கதை’க்கான விருதை மாரி செல்வராஜுக்கு வழங்கினர் தனுஷும், தயாரிப்பாளர் தாணுவும். `ராம் சாரிடமிருந்த 12 வருடங்களில் 4 வருடம் வாசிப்பு, 4 வருடம் எழுத்து, 4 வருடம் சினிமா எனக் கத்துக்கிட்டேன்' என நெகிழ்ந்தார் மாரி.

* சில வாண்டுகள் தனுஷின் வெவ்வேறு பட கெட்டப்புகளில் மேடையேறி அவருடைய பட வசனங்களை அவருக்கு முன்னால் பேசிக்காட்டி அசத்த, அத்தனை பேரையும் அப்படியே பூக்களைப்போல அள்ளிக்கொண்டார் தனுஷ்.

இது விகடன் மாஸ்!

* `சிறந்த திரைக்கதை’க்கான விருதைத் தன் நாயகர்கள் தனுஷ், அமீர் கைகளிலிருந்து பெற்றுக்கொண்டார் வெற்றிமாறன். ``இதுல என்னோட உழைப்பு மட்டுமல்ல, ஒரு பெரிய டீமோட உழைப்பு இருக்கு. அவங்களுக்கும் இந்த விருது சொந்தம்' என கேப்டனின் பொறுப்புணர்ச்சியோடு பேசினார் வெற்றி.

* ‘காலா’வின் வசனங்களுக்காக இயக்குநர் பா.இரஞ்சித், மகிழ்நன் மற்றும் ஆதவன் தீட்சண்யா `சிறந்த வசனம்’ விருது பெற்றனர். ``வசனத்திற்கான விருது என்பது எப்போதுமே ஸ்பெஷல். மகிழ்நனும் ஆதவன் தீட்சண்யாவும் இல்லாமல் இது சாத்தியமாகியிருக்காது” என மகிழ்ந்தார் இரஞ்சித். “சாதி ஒழிப்பு அரசியலிலும் சமத்துவக் கொள்கையிலும் இசைவுடையவர் என்பதால், இரஞ்சித்துடன் இணைந்து பணியாற்ற முடிந்தது” எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டார் ஆதவன் தீட்சண்யா. ``என் அம்மாவுக்கு அடுத்து என்னை நம்பியவர் இரஞ்சித்” என்று நெகிழ்ந்தார் மகிழ்நன். 

இது விகடன் மாஸ்!

* `சிறந்த கலை இயக்க’த்திற்கான விருதை பாலாஜி சக்திவேல் வழங்க, `வடசென்னை' ஜாக்கி பெற்றுக்கொண்டார். ``ஃபீல்டுக்கு வந்து 15 வருஷம் ஆச்சு. எனக்கு முதல் விருது கொடுத்த விகடனுக்கு நன்றி’’ என அவர் சொன்னதும் கைத்தட்டல் அதிர்ந்தது. ``வெற்றிமாறன் என் மேல நிறைய நம்பிக்கை வெச்சார். நிறைய மேடைகள் ஏறுவீங்கன்னு அவர்தான் சொல்வார்’’ எனக் கண்களால் வெற்றிமாறனுக்கு நன்றியுரைத்தார் ஜாக்கி.

* `2.0' படத்திற்கு `சிறந்த ஒப்பனை’க்கான விருதைக் கொடுக்க மேடையேறினார் மனோபாலா. தனக்கும் விகடனுக்குமான ஆண்டாண்டுக்கால உறவையும் `சதுரங்க வேட்டை'க்காகத் தான் வாங்கிய விகடன் விருதையும் நினைவுகூர்ந்து பேசினார். பானு, லெகசி எஃப் எக்ஸ் சார்பாகவும் அப்துல் ரஸாக்கே விருதைப் பெற்றுக்கொண்டார்.

இது விகடன் மாஸ்!

* இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகி வரும் `ஜிப்ஸி’ படத்தின் டிரைலரும் விழாவில் வெளியிடப்பட்டது.

* நிகழ்வின் சஸ்பென்ஸ் என்ட்ரி விஷால். விகடன் விழா நான் இல்லாமலா என்று ஆர்வத்தோடு வந்து கலந்துகொண்டு, விருதுபெற்ற கலைஞர்களை ஊக்குவித்தார். கூடவே சிவாவும் சதிஷும் கேட்ட கிடுக்குப்பிடி அரசியல் கேள்விகளுக்கும் பளீர் பதில்கள் தந்தார்.

* நலிவுற்ற கலைஞர்கள், தயாரிப்பாளர்களின் மேம்பாட்டுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பல பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த இரு சங்கங்களுக்கும் விகடன் குழுமம் சார்பாக தலா பத்து லட்ச ரூபாய்க்கான வங்கிவரைவோலைகள் வழங்கப்பட்டன. 

இது விகடன் மாஸ்!

* விழாவில் வெவ்வேறு விதமான நடன நிகழ்ச்சிகளும் நடந்தன. சிம்ரன் தன்னுடைய கிளாஸிக் பாடல்களுக்கு சிறப்பாக நடனமாட, இந்துஜா, நிக்கிகல்ராணி, மேகா ஆகாஷ் ஆகியோர் வெரைட்டியான பர்பாமென்ஸ் கொடுத்தனர். பிக்பாஸில் கலக்கிய ஐஸ்வர்யா தத்தா-யாஷிகா ஜோடியின் ரகளையான ரோபோ டான்ஸ் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. தமிழ்சினிமா நாயகர்களை கௌரவிக்கும் பாடலில் தித்யா பாண்டே அதிவேகமாக ஆடி வியக்கவைத்தார். இவர்களுக்கெல்லாம் சவால் விடும் வகையில் மிர்ச்சி சிவாவும் தன்னுடைய அக்மார்க் பவுலிங், பேட்டிங், வாஷிங், வாழைப்பழ உரிச்சிங் நடனம் ஆடிக் கலகலப்பாக்கினார்!

* `சிறந்த சண்டைப்பயிற்சி’க்கான விருதைத் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பெற்று ஹாட்ரிக் அடித்ததற்காக குஷியானார் திலீப் சுப்பராயன். நாஞ்சில் சம்பத்தும் ஆர்ஜே பாலாஜியும் சேர்ந்து அவருக்கு விருதை வழங்கினார்கள். ``விகடன் எனக்கு முகம் தந்தது, முகவரி தந்தது'' எனக் கணீர் குரலில் அரங்கம் நிறைத்தார் நாஞ்சில் சம்பத்.

* `சிறந்த நடன இயக்க’த்திற்கான விருதை `குலேபகாவலி' ஜானிக்கு வழங்கினர் `த்ரீ ரோசஸ்' கயல் ஆனந்தி, ஆஸ்னா ஜாவேரி மற்றும் அதுல்யா. அங்கேயே, மூன்று நடிகைகளுக்கும் ஜானி மாஸ்டர் நடன வகுப்பெடுத்து அரங்கேற்றமும் பண்ண வைத்தார். அவரும் சதீஷும் தெலுங்கில் மானாவாரியாக மாட்லாடியது கலகல எபிசோட்.

இது விகடன் மாஸ்!

* செக்கச்சிவந்த வானத்தில் செம வெரைட்டி காட்டிய காஸ்ட்யூம் டிசைனர் ஏகா லகானி `சிறந்த ஆடை வடிவமைப்பாளர்’ விருதைப் பெற்றார். அவருக்கு விருதை வழங்கினார்கள் சிறுத்தை சிவாவும் பூஜா குமாரும். `மணிரத்னத்தோடு வேலை பார்ப்பது மந்திர உலகத்தில் இருப்பதைப்போல' என அவரைப் போலவே சிக்கன வார்த்தையில் சொன்னார் ஏகா.

* சிறந்த அனிமேஷன் - வி.எஃப்.எக்ஸுக்கான விருதை நாசர் மற்றும் பி.சி.ஸ்ரீராம் வழங்க, ஷங்கர் மற்றும் வி.ஸ்ரீநிவாஸ்மோகன் சார்பாக ஷங்கரே பெற்றுக்கொண்டார். ``வி.எஃப்.எக்ஸுக்காக ஒரு இயக்குநர் விருது வாங்குறது இதுதான் முதல்முறைன்னு நினைக்குறேன். நான் ஒரு படத்தை இயக்க எந்தளவு டைரக்‌ஷன் பக்கம் உழைப்பைப் போடுவேனோ, அதைவிட இந்தப் படத்தில் வி.எஃப்.எக்ஸ் பக்கம் அதிகம் போடவேண்டியது இருந்தது" என பிரமாண்ட உழைப்பைப் பற்றிய மினிபைட் கொடுத்தார் ஷங்கர். அவரின் 25 ஆண்டுக்கால வி.எஃப்.எக்ஸ் அனுபவங்கள் பற்றியும் அவருடைய திரைப்பயணம் பற்றிய சிறப்புக் காணொலிகள் திரையிடப்பட்டன.

* `சிறந்த பாடலாசிரிய’ருக்கான விருதை நலன் குமரசாமி, `96' கார்த்திக் நேத்தாவுக்கு வழங்கினார். கார்த்திக்கிடம் நா.முத்துக்குமாரைப் பற்றிக் கேட்க, கொஞ்ச நேரம் கனத்த அமைதி. ``அவர்கூட ஏழு வருஷம் இருந்தேன். `சீதக்காதி' படத்தில் வர்ற மாதிரி, நா.முத்துக்குமாரின் ஆன்மா என் பேனா முனையில் எப்பவும் இருக்கும். நான் எழுதுவதும், வாங்கும் விருதுகளும் அவருக்கானது" என்றவுடன் அரங்கம் ஆர்ப்பரித்தது.

இது விகடன் மாஸ்!

* `சிறந்த பின்னணிப் பாடக’ருக்கான விருதை `ஃபோக் மார்லே' அந்தோணி தாசனுக்கு வழங்கினார் `சின்னக்குயில்' சித்ரா. ``இந்த விருதை கலைமகள் கிட்டே இருந்து வாங்கினது ரொம்ப சந்தோஷம்’’ எனக் கண்கள் விரியப் பேசினார் அந்தோணி தாசன். ``நான் அவருக்கு ரசிகை’’ என சித்ரா சொன்னதும் அந்தோணி நெகிழ்ந்துபோனார். அவருடைய வலி நிறைந்த கடந்தகாலத்தைச் சொல்லும் ஒரு சிறப்பு வீடியோவும் திரையிடப்பட, அரங்கிலிருந்த அத்தனை கண்களிலும் நீர் துளித்தது.

* `சிறந்த பின்னணிப் பாடகி’க்கான விருதை த்ரிஷாவிடமிருந்து பெற்றுக்கொண்டார் சின்மயி. இருவரையும் ஒரே மேடையில் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது. விருதை வாங்கியபோது தான் அடைந்த மகிழ்ச்சியை, `காதலே காதலே' பாடி எல்லோருக்கும் பரப்பினார் சின்மயி. அதைக் கைதட்டி ரசித்தார் த்ரிஷா.

* அனைத்துத் தரப்பினரும் கொண்டாடிய `96’ படத்தின் படக்குழுவிற்கு விருது வழங்கினார் இயக்குநர் பாண்டிராஜ். ``பாண்டிராஜ் சாரோட முதல் படத்துக்கு நான்தான் கேமராமேன். இப்போ நான் இயக்கின படத்துக்கு அவர் கையால அவார்டு வாங்குறது பெருமையா இருக்கு’’ என பிரேம் சொல்ல, தட்டிக்கொடுத்துப் புன்னகைத்தார் பாண்டிராஜ். 

இது விகடன் மாஸ்!

* `அதிக கவனம் ஈர்த்த படம்’ விருதை `2.0’ படத்திற்காக வாங்க மேடையேறினார் ஷங்கர். அவருக்கு விருது கொடுத்தது மற்றொரு சீனியர் இயக்குநரான கே.எஸ்.ரவிக்குமார். ``நான் ஒரு படம் எடுத்து அதுக்கு இதே விருதை ஷங்கர் கையால வாங்கணும்னு ஆசைப்படுறேன்’’ என கே.எஸ்.ரவிக்குமார் கலகலப்பூட்ட, ``இதுக்கு நான் மட்டுமே காரணமில்ல, ரஜினி, அக்‌ஷய், எக்ஸ்ட்ரா பட்ஜெட் எல்லாம் ஒதுக்கி செலவு பண்ணிய தயாரிப்பாளர் எல்லோரும்தான் இதுக்குக் காரணம்’’ என உழைப்பைப் பகிர்ந்துகொண்டார் ஷங்கர்.

* கமர்ஷியல் காட்டில் கர்ஜித்த கடைக்குட்டி சிங்கம், `சிறந்த பொழுதுபோக்குத்திரைப்பட’த்துக்கான விருதை வென்றது. குணசிங்கம் குடும்பத்தார் பெருமை பொங்க மேடையேறினர். “முதன்முறையாக இப்படியொரு விருதை அறிவிச்சிருக்கு விகடன். அதை நாங்க வாங்குறது ரொம்பவே ஸ்பெஷல்” என்று மகிழ்ந்தார் இயக்குநர் பாண்டிராஜ்.

* கடந்த ஆண்டு தமிழ்சினிமாவில் நம்மைத் திரும்பிப் பார்க்க வைத்த நடிகர்களை கலர்ஃபுல்லாகக் கொண்டாடியது விகடன். `மேற்குத்தொடர்ச்சி மலை’ ஆண்டனி, `பரியேறும் பெருமாள்’ வண்ணாரப்பேட்டை தங்கராஜ், `கனா’ கீர்த்திகா, `ராட்சசன்’ வில்லன் சரவணன் ஆகியோரை விகடன் மேடையேற்றிப் பாராட்ட, இந்தப் புதுவரவுகளின் அகமகிழ் நெகிழ்வில் நிறைவடைந்தது விழா!

ப.சூரியராஜ், சக்தி தமிழ்ச்செல்வன், சக்திவேல் - படங்கள்: விகடன் டீம்