Published:Updated:

சரிகமபதநி டைரி - 2018

சரிகமபதநி டைரி - 2018
பிரீமியம் ஸ்டோரி
சரிகமபதநி டைரி - 2018

கலைகளும் வீரமும் தமிழர் முகம்

சரிகமபதநி டைரி - 2018

கலைகளும் வீரமும் தமிழர் முகம்

Published:Updated:
சரிகமபதநி டைரி - 2018
பிரீமியம் ஸ்டோரி
சரிகமபதநி டைரி - 2018
சரிகமபதநி டைரி - 2018

னைவி அமைவது மட்டுமல்ல, குரலும் கச்சேரியும் அமைவதுகூட இறைவன் கொடுத்த வரம்தான்.

`நல்ல மருத்துவர், நோய்க்கு சிகிச்சையளிக்கிறார். சிறந்த மருத்துவரோ நோயாளிக்குச் சிகிச்சையளிக்கிறார்’ என்று அண்மையில் தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார் சீனியர் மருத்துவர் கே.வி.திருவேங்கடம். ஒருவகையில் பாம்பே ஜெயஸ்ரீயும் சிறந்த மருத்துவர்தான், தன் தெய்விகக் குரலால் இசை ரசிகர்களுக்கு சிகிச்சையளிக்கும் சங்கீத டாக்டர்!

சரிகமபதநி டைரி - 2018

கங்கை நீரில் குளிப்பாட்டிவிட்டது மாதிரி படுசுத்தமான, மிக விரிவான கரகரப்ரியாவை வழங்கினார் பாம்பே ஜெயஸ்ரீ (மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ்). கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கு ராகத்தின் முப்பரிமாணங்களில் மூழ்கி முத்தெடுத்தார். ரோஜாக்கள் கலந்த பன்னீரால் சங்கதிகளைத் தெளித்தார். ஒருகட்டத்தில் கரகரப்ரியா அவரை முழுவதுமாக ஆட்கொண்டுவிட்டது. ஜெயஸ்ரீயால் வெளியே வர இயலவில்லை. கீழும் மேலுமாக சங்கதிகளைப் புரட்டியெடுத்தார். சர்தார் படேல் சிலையின் அளவுக்கு கரகரப்ரியா உயர்ந்து நின்றது. இலக்கணம் மீறாத இசை இலக்கியம் கிடைத்தது.

இவ்வளவு அடர்த்தியான, ஆழமான கரகரப்ரியாவைப் பாடிவிட்டால், கீர்த்தனைக்கு `நின்னைச் சரணடைந்தேன்...’ என்று தியாகராஜரிடம்தான் போக வேண்டும்; அவரின் `சக்கநி ராஜமார்க்க’த்தில்தான் பயணிக்க வேண்டும்; `கண்டகி சுந்தர’வில்தான் நிரவல் செய்து ஸ்வரம் பாட வேண்டும்.

ஹெச்.என்.பாஸ்கர் (வயலின்), பத்ரி சதீஷ்குமார் (மிருதங்கம்), ஸ்ரீசுந்தர்குமார் (கஞ்சிரா) மூவரும் புடைசூழ, அழகிய ராஜவீதிகளில் பவனி வந்தார் ஜெயஸ்ரீ.

சரிகமபதநி டைரி - 2018

அன்று மோகனத்தில் `மாடி மாடிகி...’ பாடியது, முழுக் கச்சேரியில் பல்லவி வரிகள் மற்றும் தில்லனா மட்டுமே தமிழில் பாடியது... எல்லாவற்றையும் அன்றைய கரகரப்ரியா மறக்கடிக்கச் செய்துவிட்டது.

ள்ளே நுழைய ஜருகண்டி க்யூவெல்லாம் கிடையாது. ஆனாலும் அரங்கின் கீழ்த்தளம் நிரம்பிவிட்டது சுதா ரகுநாதனுக்கு (மியூசிக் அகாடமி).

சுப்புடு உட்பட பலருக்கும், சுதாவின் பாட்டு பிடிக்கும். இவருக்கு, கமாஸ் ராக தாரு வர்ணம் பிடிக்கும்போல! `மாதே...’ என்று ஆரம்பித்து விட்டாலே கச்சேரி பாதி சக்சஸ். அன்றும் அப்படியே! அது என்ன மாயமோ தெரியவில்லை, சுதாவின் குரலுடன் கலந்துவிட்ட இனிமை இன்னமும் மாற்றுக் குறையாமல் அப்படியே இருக்கிறது. வாழ்க!

அதிகம் புழக்கத்தில் இல்லாத ராகத்தையும் பாட வேண்டும் என்ற ஆர்வத்தில் அகாடமியில் சுதா விரிவாக்கியது சாயாரஞ்சனி ராகம். இசை மேதை ஜி.என்.பி அறிமுகப்படுத்தியது. இந்த ராகத்தை அழகுபட விரிவுபடுத்தினார் திருமதி ரகுநாதன். இளவட்டங்கள், இதுமாதிரி சீனியர் பாடும்போது நேரில் வந்திருந்து பாட்டும் பாடமும் கற்றிருக்க வேண்டும்.

சரிகமபதநி டைரி - 2018

நாடகப்ரியாவை மெயின் - கம் - ராகம், தானம், பல்லவிக்கு எடுத்தாண்டார் சுதா. செம ஆலாபனை அது. ஒவ்வொரு ஸ்தாயியிலும் அநாயாசமாக ராக்கெட் செலுத்தினார். இந்த ராகத்தில் தோடியின் ஸ்வரங்கள் தெரியும்... ஆனால் தெரியாது! தோடிக்கு உண்டான ஸ்வரங்கள் வரும்போதெல்லாம் டக்கென நாடகப்ரியாவுக்குள் நுழைந்து ரெயின்போவின் வண்ணங்கள் தெரியச் செய்தார்.

`மத்சய கூர்ம வராக நரசிம்ம, பரசுராம...’ என்ற பல்லவி வரிகளில் பயாஸ்கோப்பில் தசாவதாரம் பார்த்த உணர்வு! வயலின் எம்பாரும், மிருதங்கப் பரிதியும் பாடகிக்கு நல்லாதரவு வழங்கினார்கள்.

னவரி முதல் தேதி, அருணா சாய்ராமுக்குத் தனது கனவு மெய்ப்பட்ட மகத்தான நாள். அன்றைய தினம் இவருக்கு `சங்கீத கலாநிதி’ வழங்கி ஆனந்தப்பட்டது மியூசிக் அகடாமி.

அதற்கு ஒரு வாரம் முன்பு பாக்ஸிங் டே அன்று (26, டிசம்பர்) அகாடமியின் தர்பார் மண்டபத்தில் பட்டத்துராணி அருணாவின் கச்சேரி. விட்டல் ராமமூர்த்தி, ஜெ.வைத்தியநாதன், கார்த்திக் மூவரும் பக்கவாத்திய சாமரம் வீசினார்கள்.

பைரவியை விரித்து போணி செய்தார் அருணா சாய்ராம். மற்ற அனைத்துப் பாடகி களிடமிருந்தும் மாறுபடும் குரல் இவருக்கு. நாபியிலிருந்து பாடும்போது சும்மா அதிரவைக்கும் வாய்ஸ்! இப்போது அந்த வீரியம் சற்று குறைந்திருக்கிறது.

முக்கியமாக, ராக ஆலாபனைகளில் அருணாவின் முத்திரை பளீரென மின்னியது. அழுத்தம் திருத்தமான சங்கதிகள். மேல்ஸ்தாயி பயணங்களில்தான் கொஞ்சம் சிரமப்படுகிறார்.

சரிகமபதநி டைரி - 2018

மெயினாகவும், ராகம் - தானம் - பல்லவிக்கும் கனமான தோடி. ஆங்காங்கே நாகஸ்வரப் பிடிகள் காதுகளைக் குளிர்வித்தன. கீழ்ஸ்தாயியில் உழன்று திரிந்தார் அருணா. சங்கதிகளில் சம்பிரதாய வாசம் துளித்துளியாக வளர்ந்து க்ளைமாக்ஸை எட்டியபோது, தோடிக்குப் புது முலாம் பூசியதுபோல் காணப்பட்டது.

`பாண்டுரங்கன் நம்பும் அடியாரைக் கைவிட மாட்டான்...’ என்பது பல்லவி வரிகள். அருணாவின் சொந்த அனுபவமும் அதில் வெளிப்பட்டது.

`கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு’ என்ற வரிகளை விருத்தமாகப் பாடிவிட்டு, `புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்...’ என்ற திருப்பாவை பாசுரத்துடன் மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கச்சேரியைத் தொடங்கினார் காயத்ரி கிரீஷ். (ஐயைந்தும், 5X5 = 25 ப்ளஸ் ஐந்தும் = 30 திருப்பாவை பாசுரங்கள் என்று பொருள்.)

சரிகமபதநி டைரி - 2018

குரல்வளமும், ஞானமும், உச்சரிப்பு சுத்தமும் மெச்சும்படி இருப்பினும், காயத்ரிக்கு மக்களை ஈர்க்கும் சக்தி இல்லை என்பது வருத்தமான விஷயம். இதில் மியூசிக் அகாடமிகூட ஒரு வருடம் வாய்ப்பு கொடுத்தால், அடுத்த வருடம் விடுப்பு என்பதைத்தான் பாலிசியாக வைத்தி ருக்கிறார்கள். கடைக்கண் வைத்திவரை ஆளம்மா...

`ஸ்ரீவிஸ்வநாதம் பஜேஹம்...’ என்று தொடங்கும் சதுர்தச ராமமாலிகை பாடலில், 14 ராகங்களைப் புகுத்தி யிருக்கிறார் முத்துசுவாமி தீட்சிதர். நம் முன்னோர்கள்(!) மரம் விட்டு மரம் தாவுவதுபோல், ஒரு ராகம் விட்டு மற்றொன்றுக்குத் தாவிச் செல்லும் இந்தப் பாடலை, காயத்ரி பாராட்டும்படியாகப் பாடினார். அன்றைய கச்சேரியின் ஹைலைட் இது!

அன்று தன்னால் இயன்றவரை பாடகிக்கு வயலினில் இடையூறு ஏற்படுத்திக்கொண்டிருந்தார் ராகவேந்திர ராவ். நெய்வேலி ஸ்கந்தசுப்ரமணியம் மிருதங்கத்தில் முடிந்தவரை டல்லடித்துக்கொண்டிருந்தார். கடத்துடன் குருபிரசாத்... பாவம், பாடகி. மேடையில் இதெல்லாம் சகஜமம்மா!

சரிகமபதநி டைரி - 2018

தொலைவிலிருந்து பார்க்கும்போது லேசாக நடிகை சரிதாவின் சாயலில் தெரிகிறார் பிருந்தா மாணிக்கவாசகன். அதே வட்ட முகம்! நாத இன்பத்துக்காக ராகசுதா ஹாலில் பாடினார். `இவ்விடம் சகாய விலையில் ராகங்கள் சாறு பிழிந்து தரப்படும்’ என்று பாடும் இடங்களில் இவர் போர்டு எழுதி வைக்கலாம்.

ஒரு மாதிரி கவர்ந்திழுக்கும் குரல் பிருந்தாவுக்கு. கைத்தட்டல்களைக் குறிவைக்காமல் தூய்மையாகப் பாடுகிறார். சந்தேகத்துக்கே இடம்கொடுக்காமல் ஒரே இழுப்பில் ராகத்தை அறிமுகப்படுத்தி விடுகிறார். சுகுணா வரதாச்சாரியின் பட்டறையில் பட்டை தீட்டிக்கொண்டு வருகிறார். பாட்டுக்கு வெளியேயும் பெரிய படிப்பாளி!

சுப்புராம தீட்சிதரின் நான்கு சரணங்கள்கொண்ட கமாஸ் ராக பத வர்ணம் ஆரம்பம். அது ரம்பமாக இருக்கவில்லை. கேட்போரை நாட்டியமாடத் தூண்டும் வகையில் ஜம்மென இருந்தது!

பேகடா வந்தது. பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை பிடித்து வைப்பது மாதிரி, பேகடா சங்கதிகளை `இந்தா பிடிங்க’ என்று அடுக்கி அழகு பார்த்தார் பிருந்தா.

சரிகமபதநி டைரி - 2018

மெயினாக தோடி. பாடத் தெரிந்த யாராலும் இந்த ராகத்தைச் சொதப்ப முடியாது. பிருந்தா, இதைச் சிறப்பாகப் பாடியதில் வியப்பேது?

பிருந்தா மேன்மேலும் வளர வேண்டும்... சபாக்கள் மேன்மேலும் வளர்க்க வேண்டும்.

மியூசிக் அகாடமியில் நிஷா ராஜகோபாலன். `நம்பிப் பணம் கட்டலாம்’ என்று குதிரை ரேஸ் ப்ரியர்கள் சொல்வதுண்டு. நிஷாவின் கச்சேரிக்கு நம்பிக்கையோடு போகலாம், ஏமாற்ற மாட்டார். அகாடமியில் அது நிரூபிக்கப்பட்டது.

`நாராயண நாமமுலநு பாராயண மொநரிஞ்சுசு...’ என்ற வரிகளை (நாரதமுனி...) நிரவலுக்கு எடுத்துக்கொண்டார் நிஷா. அதை அவர் திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டிருந்த வேளையில், நாராயணனின் திருநாமங்களைப் பாராயணம் செய்துகொண்டே கையில் தம்புராவுடன் நாரதர் அரங்கினுள் நுழைந்துவிட்ட பிரமை. பந்துவராளியின் பல்வேறு சங்கதிகளை ரப்பர் ஸ்டாம்பு மாதிரி பதித்தார் நிஷா. முன்னால் ஆலாபனையிலும் மலிவு சங்கதிகள் எதுவுமின்றி அந்த ராகத்துக்குரிய ஸ்வரங்களை சுத்தமாகப் பாடினார்.

சரிகமபதநி டைரி - 2018

பிரதானமாக, தோடி. அகாடமியின் பட்டியலின்படி இங்கு 18 பேர் தோடி பாடியிருக்கிறார்கள். லிஸ்ட் தராமல் பாடிய சீனியர்களில் எத்தனை பேர் தோடியைத் தேடிப்போனார்கள் என்பது யாமறியோம். நிஷா பாடிய தோடியில் நெய் மணந்தது.

நாட்டகுறிஞ்சி ராகத்தில், பஞ்சமுகி தாளத்தில் பல்லவி. பஞ்சமுக ஆஞ்சநேயர் மீது இயற்றப்பட்ட வரிகள். நாட்டகுறிஞ்சி, ஆரபி, ஆபோகி, சரஸ்வதி, ஸாவேரி என்று ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு ராகம். ஆஞ்சநேய தரிசனம் கிடைத்தது. பிரசாதமாக மொரமொர வடைதான் கிடைக்கவில்லை!

- டைரி புரளும்...

வீயெஸ்வி - படங்கள்: சு.குமரேசன், சொ.பாலசுப்ரமணியன், பா.காளிமுத்து, பிரியங்கா