Published:Updated:

கொம்பப் பாக்காதே... திமிலப் பாரு!

கொம்பப் பாக்காதே... திமிலப் பாரு!
பிரீமியம் ஸ்டோரி
கொம்பப் பாக்காதே... திமிலப் பாரு!

இயற்கை உணவே உன்னதம்

கொம்பப் பாக்காதே... திமிலப் பாரு!

இயற்கை உணவே உன்னதம்

Published:Updated:
கொம்பப் பாக்காதே... திமிலப் பாரு!
பிரீமியம் ஸ்டோரி
கொம்பப் பாக்காதே... திமிலப் பாரு!

``ஜல்லிக்கட்டு வெறும் பொழுதுபோக்கு மட்டுமில்ல, அதான் எங்களுக்கு வாழ்க்கை. களத்துள இறங்குனா பரிசு மட்டுமல்ல, ஒரு குத்தாச்சும் வாங்கிட்டு வந்தாதாங்க சந்தோஷமா இருக்கும். மாடுபிடி வீரனுக்கு அதுதான் தங்கப்பதக்கமே’’ என்று உடலெங்குமுள்ள  வடுக்களைச் சுட்டிக்காட்டியபடி இயல்பாகப் பேசும் முடக்கத்தான் மணி ஓர்ஆச்சர்ய மனிதர். ஜல்லிக்கட்டுக் களத்தின் சச்சின் டெண்டுல்கர். மாடுபிடி வீரர்! 

கொம்பப் பாக்காதே... திமிலப் பாரு!

மதுரை வட்டாரத்தில் மட்டுமல்ல, தமிழகம் முழுக்க முடக்கத்தான் மணியைத் தெரியாத வாடிவாசல் கிடையாது. மதுரையில் அரசுப் பதிவு பெற்ற ஜல்லிக்கட்டுப் பயிற்சி  மையத்தினையும் நடத்திவருகிறார்.

“சின்ன வயசுல எனக்கு யாரும் கத்துத்தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க. நானேதான் கஷ்டப்பட்டுக் கத்துக்கிட்டேன். அந்த நிலை யாருக்கும் வரக்கூடாதுன்னுதான் இப்போ, எல்லாருக்கும் சொல்லித் தரேன். இது மட்ட கம்ப வெச்சு வெளையாடுறது இல்ல. கரணம் தப்புனா மரணம்கிற வெளையாட்டு. பயிற்சிக்குக் காசெல்லாம் வாங்குறதில்ல. முதல்ல இருந்தே நாம நிறைய பசங்கள உருவாக்கி யிருக்கோம். இடையில ஏற்பட்ட தடைக்கு அப்புறமா நிறைய பசங்க வந்தாங்க. என்னோட அனுபவத்த வெச்சி முறையான பயிற்சிப் பாடம்  உருவாக்கியிருக்கேன். களத்துல மாட்டுக்கோ மனுசனுக்கோ காயம்படக் கூடாது. அதுக்காகத்தான் இந்தப் பயிற்சி. காளைய பாத்த உடனே ஓடக் கூடாது. பயப்படக் கூடாது. எப்போ ஒதுங்கணும், எப்போ மாட்டோட கால பின்னணும், எப்போ பின்னக் கூடாதுன்னு நிறைய நுணுக்கம் இருக்கு. இப்போ நிறைய இளந்தாரிங்க பயிற்சி எடுத்துக்கிட்டு எல்லாக் களத்துலயும் போய் ஒரு கலக்கு கலக்குறாங்க. பரிசு வாங்குற மேடையிலயே நம்ம பேரைச் சொல்லும்போது சந்தோஷம்தானுங்களே. யாரு வேணா வரலாம், சொல்லித் தர ரெடியாவே இருக்கேன்’’ என்று உற்சாகமாகச் சொல்லும் முடக்கத்தான் மணி வாடிவாசல்களில் வென்ற பரிசுகள் ஏராளம். 

கொம்பப் பாக்காதே... திமிலப் பாரு!

2 ராயல் என்பீல்டு, 200 தங்கக்காசுகள், 150 வெள்ளிக்காசுகள், 280 குத்துவிளக்குகள், 15 சைக்கிள்கள், 12 பீரோக்கள், 40 மிக்ஸிகள், 8 ஆடுகள், 3 கன்றுக்குட்டிகள், 25 அண்டாக்கள் எனப் பட்டியல் நீள்கிறது. கடந்தாண்டு அவனியாபுரத்தில் 8 மாடுகளைப் பிடித்து முதலிடம் வந்திருக்கிறார்!

“ஒண்ணாப்பு ரெண்டாப்பு படிக்கும்போதே நமக்குக் காள, கண்டுக மேல ஒரு ஆசை. கட்டிக் கிடக்குற கன்னுக்குட்டிங்க திமிலப் பிடிச்சி வெளையாடுவேன். வண்டி மாடுக திமிலப் பிடிச்சிட்டு ஓடுவேன். அப்புறம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நேர்ல பாத்ததுக்கப்புறம் நாமளும் மாடு புடிக்கணும்னு ஆசை ஏற்பட்டுச்சு. அப்போல்லாம் ஜல்லிக்கட்டுல நல்லா மாடு பிடிக்குறவங்கள ஹீரோ மாதிரி நெனைச்சுப்போம். அவங்க மாதிரி ஆகணும்னு நினைப்போம். பதினாறு வயசுல அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுல போய் நின்னேன். இப்போ இருக்குற மாதிரி கட்டுப்பாடெல்லாம் அப்போ கிடையாது. தைரியமுள்ளவங்க யாரும் களத்துல இறங்கலாம். நானும் இறங்குனேன். திமிறிக்கிட்டு வர காளைய எதிருல பாத்ததும் பயம் வந்துடுச்சு. கண்ண மூடித் தொறக்குறக்குள்ள என்னத் தூக்கிப் போட்டுட்டு போய்ருச்சு. மாடு பிடிக்கிறது எப்படீன்னு எனக்கு யாரும் கத்துத் தரல. மாடு தூக்கிப் போட்டதுல கை மணிக்கட்டு இறங்கிடுச்சு. அடுத்து சத்திரப்பட்டி போட்டிக்கு மாவுக் கட்டோட போய் நின்னேன். போன போட்டில என்ன தப்பு பண்ணோம்னு யோசிச்சுப் பார்த்தேன். களத்துல நிக்குறப்போ மாட்டோட கொம்பப் பாக்காதே... திமிலப் பாரு, அடில்லாம் படத்தான் செய்யும்... களத்துல இறங்கிட்டா பயம் இருக்கக் கூடாதுன்னு அம்மா சொன்னது நினைவுக்கு வந்துச்சு. குத்துப்பட்ட பயல்னு யாரும் சொல்லக் கூடாதுங்குற வைராக்கியத்தோட சத்திரப்பட்டில நின்னு வெளையாண்டேன். இன்ன வரைக்கும் தொடருது. அதுவே இப்போ வாழ்க்கையாகிடுச்சு’’ என்று புன்னகைக்கும்  அவருக்கு ஓர் ஆதங்கமும் இருக்கிறது. 

கொம்பப் பாக்காதே... திமிலப் பாரு!

சென்ற ஆண்டு பாலமேடு ஜல்லிக்கட்டு பார்க்க வந்த திண்டுக்கல் சாணார்பட்டியைச் சேர்ந்த 19 வயது காளிமுத்து மாடு முட்டி இறந்து போனார். மிகவும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த காளிமுத்துவின் உடலை ஊருக்குக் கொண்டு செல்லக்கூட அவர் குடும்பத்தினரிடம் பணம் இல்லை. திரைப்பட நடிகர் அபி சரவணனுடன் சேர்ந்து அந்த வாலிபரின் உடலை ஊருக்குக் கொண்டு சென்று சேர்த்திருக்கிறார். ஒரு லட்ச ரூபாய் நிதி திரட்டி அக்குடும்பத்திற்கும் கொடுத்திருக்கிறார். ‘`ஏகப்பட்ட விதிகளைப் போட்டு ஜல்லிக்கட்டை நடத்தும் அரசு, மாடு முட்டி இறந்து போறவங்களுக்கு நிதியுதவி பண்ண முன்வரலாம்’’ என்று வருத்தமாகப் பேசினார். அவரிடம் பீட்டா முன்வைக்கும் மிருகவதை குற்றச்சாட்டுகள் பற்றிக்கேட்டோம். உடனே கோபமாகச் சீறுகிறார். 

கொம்பப் பாக்காதே... திமிலப் பாரு!

``வீரர்களுக்கு மட்டுமல்ல, மாடுகளுக்கும் மூணு வருசமா பயிற்சி கொடுத்துட்டிருக்கேன்.  கிடைக்காரங்ககிட்ட நல்ல கண்டுகளாக வாங்கிட்டு வந்து படிப்படியா தயார்ப்படுத்துவோம். ஓட்டப்பயிற்சி, நீச்சல் பயிற்சின்னு பல விஷயங்கள் இருக்கு. ஜல்லிக்கட்டு பத்தித் தெரியாமலே நிறைய பேரு தப்பாப்பேசுறாங்க. எங்களப் பொறுத்தவரை மாடுகள் குலசாமி மாதிரி. இதுல வதையெல்லாம் கிடையாதுங்க. அண்ணன் தம்பி மாதிரி வீட்டுல ஒண்ணாத்தான் மாடு கண்டுக இருக்கும். செத்த பிறகும் புதச்சு சாமாதி கட்டி சாமியா கும்புடுறோம். அதை வதைப்போமா...’’ என்று சொல்லும் மணி... கருப்பு, மூலி என இரண்டு காளைகளை வளர்த்துவருகிறார். இப்போது மணியைப்போலவே அவையும் ஜல்லிக்கட்டுக்கு ரெடி. அலங்காநல்லூரில் கெத்து காட்டக் காத்திருக்கின்றன!

செ.சல்மான், இரா.அமுதினியன் - படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

கொம்பப் பாக்காதே... திமிலப் பாரு!

லங்காநல்லூர் வாடிவாசல் அருகே முடக்கத்தான் மணியின் படத்தையே வரைந்து வைத்திருக்கிறார்கள்.  ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்தின்போது அதிகமாக அந்தப் புகைப்படம்தான் பயன்படுத்தப்பட்டது. ``தீப்பெட்டி தொடங்கி, மளிகைக்கடை, நகைக்கடைன்னு எல்லா இடத்துலேயும் அந்தப் படம்தான். அலங்காநல்லூர் 2014ஆம் ஆண்டு நடந்த போட்டியில் எடுத்தது. நல்ல போட்டோ அது. இப்போ மதுரை - சிங்கப்பூர் விமான டிக்கெட்லகூட அந்தப் புகைப்படத்த போட்டிருக்காங்க. வெளிநாட்டிலுள்ள தமிழர்கள்கூட அந்தப் படத்த வெச்சிருக்காங்க’’ என்கிறார் மணி.