Published:Updated:

தூர்வாரப்படுமா குல்லூர்சந்தை அணை? 7 கிராம மக்கள் எதிர்பார்ப்பு

"அணையில் மழைநீரைவிட விருதுநகரின் பல்வேறு இடங்களிலும் இருந்துவரும் கழிவுநீர்தான் அதிகளவு உள்ளது. ஆகாயத்தாமரை மட்டுமின்றி பல அடி உயரத்துக்குச் சகதியும் தேங்கிக் காணப்படுகிறது."

தூர்வாரப்படுமா குல்லூர்சந்தை அணை? 7 கிராம மக்கள் எதிர்பார்ப்பு
தூர்வாரப்படுமா குல்லூர்சந்தை அணை? 7 கிராம மக்கள் எதிர்பார்ப்பு

விருதுநகர் அருகே குல்லூர்சந்தை கிராமத்தில் கவுசிகா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள அணையில் சாக்கடை நீர் தேங்கி, ஆகாயத் தாமரை படர்ந்திருப்பதுடன், சகதியும் நிரம்பியுள்ளதால் சுற்றுவட்டார கிராம மக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால், அந்த அணையைத் தூர்வாரி மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வைப்பாற்றின் உபரிநதியான கவுசிகா ஆற்றின் குறுக்கே அமைந்திருப்பது நீர்த்தேக்க அணையில்தான் இந்த நிலை நீடிக்கிறது. கவுசிகா ஆறு, மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள மங்கல்ரேவு கண்மாயில் தொடங்கி ஆங்காங்கே உள்ள பல்வேறு கண்மாய்களின் உபரிநீரும் சேர்ந்து வடமலைக்குறிச்சி கண்மாயைச் சென்றடைகிறது. அங்கு உபரிநீர் வெளியேறும் பகுதியில் இருந்து ஆறாக உருவாகி அர்ச்சுனா நதியில் கலந்து பின்னர் வைப்பாற்றின் குறுக்கே உள்ள இருக்கன்குடியில் சென்று சேருகிறது.

கவுசிகா ஆற்றில் வரும் தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் வகையில் அதன் குறுக்கே குல்லூர்சந்தையில் 127 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இந்தத் திட்டத்தால் ஆண்டுக்கு இரண்டுமுறை தண்ணீர் நிரம்பி, அதன்மூலம் கிடைக்கும் 254 மில்லியன் கனஅடி நீரைப் பயன்படுத்தி சுமார் 2,891 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும். 

இந்தத் திட்டத்துக்குத் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்-ரால் 1979-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கென ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 7 ஆண்டுகள் பணிகள் நடைபெற்று, நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்டது. 1986-ம் ஆண்டு எம்.ஜி.ஆர்., இந்த நீர்த்தேக்கத்தை திறந்து வைத்தார். 1987-ம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. இதன் மொத்த உயரம் 9 மீட்டர். அணை நிரம்பி வெளியேறும் உபரிநீர் மற்றும் இரண்டு பிரதானக் கால்வாய்கள் வழியாகத் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் குல்லூர்சந்தை, சூலக்கரை, மெட்டுக்குண்டு, செந்நெல்குடி, கல்லுமார்பட்டி, மருலூத்து, செட்டியாபட்டி ஆகிய ஏழு கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. 

கம்பு, சோளம், பருத்தி, கேப்பை, துவரை போன்ற மானாவாரிப் பயிர்கள் பயிரிடப்பட்டு விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் இங்குத் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மூலம் கிணறுகள் மற்றும் நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்கும்.

மழைக் காலங்களில் தண்ணீரைத் தேக்கி 95 சதவீதம் பாசனம் மற்றும் 5 சதவீதம் மீன்வளர்ப்புக்குப் பயன்படுத்தும் வகையிலேயே இந்த அணை கட்டப்பட்டது. தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் இங்கே பெரும்பாலும் நிரம்பியே இருப்பதால் கோடைக்காலங்களில் உள்ளூர் பறவைகள் மட்டுமின்றி, வெளிநாட்டுப் பறவைகளும் இங்கே வந்து செல்வது வழக்கம். இதனை உள்ளூர் பொதுமக்கள் பலரும் கண்டு ரசிப்பார்கள். ஆனால், தற்போது இந்த அணையின் பெரும்பகுதி ஆகாயத்தாமரையால் ஆக்கிரமிக்கப்பட்டுக் காட்சியளிக்கிறது.

இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் சிலர் கூறும்போது, "அணையில் மழைநீரைவிட விருதுநகரின் பல்வேறு இடங்களிலும் இருந்துவரும் கழிவுநீர்தான் அதிகளவு உள்ளது. ஆகாயத்தாமரை மட்டுமின்றி பல அடி உயரத்துக்குச் சகதியும் தேங்கிக் காணப்படுகிறது. இதன் காரணமாக, தேக்கப்படும் நீரின் அளவும் குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் அணையில் தண்ணீரைவிட சகதிதான் அதிகமாக இருக்கும். எதிர்காலத்தில் விவசாயத்துக்குப் போதிய தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். 

அவ்வப்போது, அதிகாரிகள் அணையைப் பார்வையிட்டு குறைந்த அளவு ஆகாயத்தாமரை செடிகள் இருந்தபோதே அகற்றியிருந்தால் அணை இந்த நிலைக்குச் சென்றதைத் தடுத்திருக்கலாம். ஆனால், அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. தற்போது அணையில் முக்கால்வாசிக்கு ஆகாயத் தாமரை செடி நிரம்பியுள்ளது. எனவே, அதனை அகற்றுவதுடன் உடனடியாக அணையைத் தூர்வார வேண்டும்" என்று தெரிவித்தனர்.

இதுதொடர்பாக, வைப்பாறு வடிநில வட்ட உதவி பொறியாளர் முத்துசாமியிடம் கேட்டபோது, "உபரிநீர் போக அணையில் போதிய அளவு தண்ணீர் இருக்கும்போது, விவசாயிகள் கேட்டால் செப்டம்பர் 15 முதல் டிசம்பர் 19-ம் தேதி வரை 101 மில்லியன் கன அடி தண்ணீர் பாசனத்திற்காத் திறந்துவிடப்படும். ஒரு சில இடங்களில் இருந்து இங்கே சாக்கடை நீர் வருகிறது. இதுகுறித்து நகராட்சி அலுவலர்களிடம் தெரிவித்துள்ளோம். வெளியே முளைத்திருந்த ஆகாயத்தாமரை செடிகள் மழைநீரோடு இங்கே அடித்து வரப்பட்டன. தற்போது அவை இங்கே அதிகளவில் பெருகிவிட்டன.

ஆகாயத்தாமரையை அகற்ற ஏற்கெனவே முயற்சி எடுத்தோம். ஆனால், அவற்றை முழுமையாக அகற்ற முடியவில்லை. எனவே, அரசிடம் ஒரு கோடி ரூபாய் சிறப்பு நிதி கேட்டுள்ளோம். அந்த நிதி கிடைத்தவுடன், ஆகாயத்தாமரையை முற்றிலுமாக அகற்றுவதுடன் அணையைப் பராமரிப்பதற்கான பணிகளும் விரைவில் மேற்கொள்ளப்படும்" என்றார்.