Published:Updated:

நெட்வொர்க்கில் இல்லாத மருத்துவமனை... சிகிச்சைக்கு க்ளெய்ம் கிடைக்குமா?

நெட்வொர்க்கில் இல்லாத மருத்துவமனை... சிகிச்சைக்கு க்ளெய்ம் கிடைக்குமா?
பிரீமியம் ஸ்டோரி
நெட்வொர்க்கில் இல்லாத மருத்துவமனை... சிகிச்சைக்கு க்ளெய்ம் கிடைக்குமா?

கேள்வி - பதில்

நெட்வொர்க்கில் இல்லாத மருத்துவமனை... சிகிச்சைக்கு க்ளெய்ம் கிடைக்குமா?

கேள்வி - பதில்

Published:Updated:
நெட்வொர்க்கில் இல்லாத மருத்துவமனை... சிகிச்சைக்கு க்ளெய்ம் கிடைக்குமா?
பிரீமியம் ஸ்டோரி
நெட்வொர்க்கில் இல்லாத மருத்துவமனை... சிகிச்சைக்கு க்ளெய்ம் கிடைக்குமா?

விபத்தில் சிக்கிய ஒருவர் உயிரைக் காப்பாற்ற அருகிலுள்ள ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி நெட்வொர்க்கில் இல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் க்ளெய்ம் செய்ய முடியுமா?

திவாகர், மதுரை

பி.மனோகரன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர்

“விபத்து நடந்த இடத்தின் அருகில் நெட்வொர்க்கில் இருக்கும் மருத்துவமனை இல்லாதபட்சத்தில், பட்டியலில் இல்லாத மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அது பதிவுபெற்ற மருத்துவமனையாக இருக்கவேண்டும். அங்கு கேஷ்லெஸ்-ஆக இல்லாமல், பணம் செலுத்தி, சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். சிகிச்சை முடிந்தபிறகு சிகிச்சைக்கு உண்டான செலவை ரீஇம்பர்ஸ்மென்ட்      (Reimbursement) முறைப்படி ரசீதுகளைக் கொடுத்து க்ளெய்ம் செய்யலாம். அவசரக் காலம் இல்லாத சூழலில் கூடுமானவரை நெட்வொர்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்வது க்ளெய்ம் பெற எளிதாக இருக்கும்.”

எனக்கு 2010-11-ம் ஆண்டுக்கான டி.டி.எஸ். பிடித்த தொகையிலிருந்து ரீஃபண்டாக ரூ.50,000 வரை வரவேண்டியுள்ளது. அதை எப்படிப் பெறுவது?

சுந்தர், தூத்துக்குடி

எஸ்.பாலாஜி, சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்

“உங்களுடைய டி.டி.எஸ் பிடித்தம் மற்றும் வரிக் கணக்குத் தாக்கல் செய்த விவரங்களை இணைத்து, ரீஃபண்ட் தொகையைத் தருமாறும், அப்படித் தரவில்லையென்றால் ஆம்புட்ஸ்மேன் அமைப்பில் புகாரளிப்பேன் என்றும், கடிதத்துடன்  வருமான வரித் துறைக்குப் பதிவுத் தபாலில்  அனுப்புங்கள். அதன்பின்னர் ஒரு மாத கால மாகியும் பதில் வரவில்லையென்றால், அனைத்து விவரங்களையும் பதிவுத் தபால் மூலம் ஆம்புட்ஸ்மேன் அலுவலகத்திற்கு எழுதி அனுப்புங்கள். கூடியவிரைவில் உங்களுக்கான ரீஃபண்ட் வந்துசேரும்.”

நெட்வொர்க்கில் இல்லாத மருத்துவமனை... சிகிச்சைக்கு க்ளெய்ம் கிடைக்குமா?

என் வயது 56. ஓய்வூதியப் பலனாகக் கிடைக்கும்  ரூ.20 லட்சத்தை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து, மாதந்தோறும் ரூ.20,000 பெற முடியுமா?

செந்தில்குமார், தஞ்சாவூர்

கோவர்தனன் பாபு, நிதி ஆலோசகர்

“ரூ.20 லட்சம் முதலீட்டுக்கு மாத வருமானம் ரூ.20,000 என்பது வருடத்திற்கு 12% ஆகும். வங்கி, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை சார்ந்த திட்டங்கள், அரசு அல்லது தனியார் கம்பெனி பாண்டுகளில் முதலீடு செய்து, அதன்மூலம் மாதந்தோறும் 20,000 ரூபாயை வருமானமாகத் தரும் என்று உறுதியாகக் கூற முடியாது. உங்களுடைய வயதைக் கணக்கில்கொண்டால், 12 சதவிகித வருமானத்திற்காக, அதிக ரிஸ்க் உள்ள திட்டங்களில் முதலீடு செய்வதைத் தவிர்க்கலாம். வங்கி, கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், கடன் மற்றும் ஈக்விட்டி கலந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், பாண்டுகளில் பிரித்து முதலீடு செய்யலாம். இவற்றிலிருந்து வருடத்திற்குச் சுமார் 8 - 9% வருமானத்தை எதிர்பார்க்கலாம்.” 

நம்மிடமிருந்து பொருள்களை வாங்கியபின் இறக்குமதியாளர் அதற்கான பணத்தைத் தராவிட்டால் அதனைப் பெறுவதற்கு என்ன செய்வது?

வெற்றிவேல், உடுமலைப்பேட்டை

எஸ்.சிவராமன், ஏற்றுமதி ஆலோசகர்

“இறக்குமதியாளருக்குச் சரக்குகளை அனுப்பும்முன், அவரது உண்மைத்தன்மையைப் பற்றி இ.சி.ஜி.சி (Export Guarantee Credit Corporation) நிறுவனத்திடம் விசாரித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். மேலும், இ.சி.ஜி.சி நிறுவனம் வழங்கும் கடன் காப்பீடு (கிரெடிட் ரிஸ்க் கவர்) பெற்று சரக்குகளை அனுப்பவேண்டும். அடுத்து,  இறக்குமதியாளருடன் ஏற்றுமதி ஒப்பந்தத்தை  (எக்ஸ்போர்ட் கான்ட்ராக்ட்) முறையாகச் செய்துகொள்ள வேண்டும். அந்த ஒப்பந்தத்தில் தகராறுகள் ஏதும் ஏற்பட்டால் இந்திய சட்டப்படி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், இந்திய ஆர்பிட்ரேஷன் கவுன்சிலில் (Indian Council of Arbitration) தீர்த்துக்கொள்ளவேண்டும் என  விதிமுறைகளைச் சேர்க்கவேண்டும்.

மேலும், ஏற்கெனவே ஏற்றுமதி செய்து பணம் பெற முடியாமல் இருப்பவர்கள், வெளிநாட்டு இறக்குமதியாளர்கள் மீது கூறியுள்ள புகார்களை விசாரிக்க, சென்னை வட்டார டி.ஜி.எஃப்.டி (Directorate General of Foreign Trade) அலுவலகம் தனி அலுவலரை நியமித்து உள்ளது. அவர் களிடமும் புகார் மனுவைச் சமர்ப்பிக்கலாம். மேலும், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பான ஃபியோ, எம்.ஏ.ஹெச் (இன்டர்நேஷனல்) என்ற பன்னாட்டுக் கடன் வசூல் நிறுவனத்தின் உதவியுடன் வெளிநாட்டு இறக்குமதியாளரிடமிருந்து பணத்தை வசூலிக்க முயற்சி செய்யலாம்.”

நெட்வொர்க்கில் இல்லாத மருத்துவமனை... சிகிச்சைக்கு க்ளெய்ம் கிடைக்குமா?

நான் வாங்கும் வீட்டுக்கான முதற்கட்டத்தொகையைச் சேமிப்பிலிருந்தும், மீதித் தொகையை ஐந்து ஆண்டுக்கு முன்பு வாங்கிய வீட்டை விற்றுவரும் தொகையிலிருந்தும் தரவுள்ளேன். இதற்கு எப்படி வரிக் கட்ட வேண்டும்?

நாராயணன், சென்னை 

சதீஸ்குமார், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்

“ஏற்கெனவே வருமான வரிக் கணக்கில் காட்டப்பட்ட வருமானத்திலிருந்து கிடைக்கும் சேமிப்பை முதற்கட்டத்தொகையாகத் தந்திருந்தால், அதற்கு வரி கிடையாது. மீதித் தொகையை ஐந்து ஆண்டுகளுக்குமுன் வாங்கிய வீட்டை விற்றுவரும் தொகையிலிருந்துதான் தரவுள்ளீர்கள். வருமான வரிச்சட்டப்படி, ஒரு வீட்டை வாங்கி இரண்டாண்டுகளுக்கு மேலாகி விற்றுக் கிடைக்கும் தொகையில் இன்னொரு வீடு வாங்கினால், அதற்கு வரி கிடையாது. ஆக, இந்தத் தொகைக்கும் வரி கிடையாது. மொத்தத்தில் நீங்கள் வாங்கும் புதிய வீட்டிற்கான தொகைக்கு வரிச் செலுத்தத் தேவையில்லை.”
 
நான் மூத்தக் குடிமகன். வங்கி வைப்புத் தொகை யிலிருந்து ரூ.10 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. இதனை மாதாமாதம் வருமானம் தரக்கூடிய ரிஸ்க்கில்லாத மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்புகிறேன். ஆலோசனை கூறவும்.

ஸ்ரீகாந்த் மீனாட்சி, துணை நிறுவனர், ஃபண்ட்ஸ் இந்தியா

“ரிஸ்க் இல்லாத மியூச்சுவல் ஃபண்ட் என்ற ஒன்றே கிடையாது. மிகக் குறைந்த ரிஸ்க் உடைய லிக்விட் ஃபண்டுகளை மட்டுமே நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். மாத வருமானம் என்பதற்குப் பதில் சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான் மூலம் திரும்பப் பெறலாம். இதைவிட உங்கள் தேவைக்குத் தபால் துறையின்  மூத்தக் குடிமக்கள் சேமிப்புத் திட்டம் அதிகம் பொருத்தமாக இருக்க வாய்ப்பு உண்டு. அதில் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.”

நான் (வயது 30) அரசுப் பணியில் கீழ்நிலை எழுத்தராகப் பணிபுரிந்து வருகிறேன். என் மனைவி (29 வயது) ஆரம்பப் பள்ளியில் தமிழாசிரியர். எங்கள் பெண் குழந்தையின் (1 வயது) கல்விச் செலவிற்கும்,  ஓய்வூதியம் பெறவும் ஆலோசனை கூறுங்கள். என்னால் மாதம் ரூ.6,000 முதலீடு செய்ய முடியும்.

எழில்வேந்தன், திருவாரூர்.

எஸ்.ராமலிங்கம், நிதி ஆலோசகர்

“குழந்தையின் கல்விச் செலவை எதிர்கொள்ள மாதம் ரூ.2,000 எஸ்.ஐ.பி முறையில் எஸ்.பி.ஐ ஈக்விட்டி ஹைபிரீட் ஃபண்டில் 5 வருடங்களுக்குக் குறையாமல் முதலீடு செய்யவும். குழந்தையின் உயர்கல்விச் செலவுக்காக மாதம் ரூ.2,000 வீதம் எஸ்.ஐ.பி முறையில் எல் & டி மிட்கேப் ஃபண்டில் 16-17 வருடங்கள் முதலீடு செய்யவும். உங்கள் ஓய்வூதியத்திற்காக எஸ்.ஐ.பி முறையில் மாதம் ரூ.1,000 வீதம் ரிலையன்ஸ் ரிட்டயர்மென்ட் பிளான் ஃபண்டில் முதலீடு செய்யவும்.’’

தொகுப்பு : தெ.சு.கவுதமன்

நெட்வொர்க்கில் இல்லாத மருத்துவமனை... சிகிச்சைக்கு க்ளெய்ம் கிடைக்குமா?

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

கேள்வி-பதில் பகுதி,
நாணயம் விகடன், 757,
அண்ணாசாலை, சென்னை-2.
nav@vikatan.com.