Published:Updated:

ரோஷக்கார மரம்!

ரோஷக்கார மரம்!

ன்னியாகுமரியின் கடற்கரையோரக் கிராமங்களில் ஒன்று ஆலிவிளை ரஸ்தாக்காடு. இங்கு ஓர் அதிசய வேப்ப மரம் உள்ளது. அதன் வயது 425. பல தலைமுறை கண்ட இந்த மரம், இன்று வரை பழமோ, காயோ தந்து யாரும் பார்த்தது இல்லை. வருடந்தோறும் பூத்துக் குலுங்க மறக்காத இந்த வேம்பு, இதுவரை வேப்பம் பழங்களைத் தந்தது இல்லை. அனைத்துப் பூக்களுமே பூத்து உதிர்ந்துவிடுமாம். இந்த மரத்தில் எந்தப் பறவையும் இதுவரை கூடு கட்டியதும் இல்லையாம். ''இது மட்டும் இல்லைங்க... ஒரு பறவைகூட இந்த மரக் கிளையில் உட்கார்ந்து நான் பார்த்தது இல்லை. இந்த மரத்துக்கு ரோஷம் அதிகம்.

ரோஷக்கார மரம்!

அய்யா வைகுண்டரின் கோயில் நிலத்தில் இருக்கிற இந்த மரம், அதன் எல்லையைத் தாண்டி வளர்றது இல்லை. அப்படியே அடுத்த நிலத்துக்குள் தொடுற மாதிரி கிளை வளர்ந்தா, அடுத்த நாளே கிளை முறிஞ்சுகிடக்கும். இப்படி முறிஞ்சு விழுற கிளைகளை நாங்க அடுப்பு எரிக்கப் பயன்படுத்த மாட்டோம். அப்படி சமையல் செஞ்சா, சாப்பாடு கசப்பா இருக்கும். ஏன் மரம் பூக்கலைங்கிறதுக்கு ஒரு கதையும் உண்டு. அய்யா வைகுண்டசாமி, நிழலுக்காக மரத்தின் அடியில் படுத்திருந்தாராம். அப்போ அவர் மேல பறவைங்க எச்சம் போட்டிருச்சு. அவர் பறவைகளை விட்டுட்டு மரம் மேல கோபமாகிட்டார். 'இனி மேல் பூக்கும். ஆனால் காய்க்காது!’னு மரத்துக்குச் சாபம் விட்டார். அன்றைக்கு இருந்து இது காய்க்கவே இல்லை. அதனால இந்த மரத்தைக் காயாம்பூ மரம்னு சொல்வோம்!'' என்கிறார் அந்த ஊரைச் சேர்ந்த ராஜமார்த்தாண்டன்.

ரா.ராபின் மார்லர்
படம்: ராம்குமார்

அடுத்த கட்டுரைக்கு