Published:Updated:

‘அந்த 430 பேருக்கு வெறும் பொங்கல் வாழ்த்து தான்...’ - களைக்கட்டிய ஈரோட்டின் முதல் ஜல்லிக்கட்டு!

‘அந்த 430 பேருக்கு வெறும் பொங்கல் வாழ்த்து தான்...’ - களைக்கட்டிய ஈரோட்டின் முதல் ஜல்லிக்கட்டு!
‘அந்த 430 பேருக்கு வெறும் பொங்கல் வாழ்த்து தான்...’ - களைக்கட்டிய ஈரோட்டின் முதல் ஜல்லிக்கட்டு!

ஈரோடு மாவட்டம் காங்கேயம் காளைக்குப் பெயர் பெற்றிருந்தாலும், மாநகரின் அடையாளச் சின்னமாக ரயில்வே ஜங்ஷனுக்கு அருகே காளை மாட்டுச் சிலை நிறுவப்பட்டிருந்தாலும் இதுவரை ஈரோடு மண்ணில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றதே இல்லை. முதல்முறையாக ஈரோட்டில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறப் போகிறது என்ற தகவல் வெளியானதுமே, ஈரோடு மக்கள் குஷியாகினர். அந்த வகையில், ஈரோடு மக்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜல்லிக்கட்டானது பவளத்தம்பாளையம் ஏ.இ.டி பள்ளி வளாகத்தில் நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.

அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் மற்றும் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து ஈரோட்டின் முதல் ஜல்லிக்கட்டினை துவக்கி வைத்தனர். போட்டியின் போது எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக செய்யப்பட்டிருந்தன. காளைகள் மற்றும் வீரர்களுக்கான மருத்துவ வசதி, வி.ஐ.பி - பொதுமக்கள் - பத்திரிகையாளர்களுக்கு என தனித்தனி கேலரிகள் அமைக்கப்பட்டிருந்தன. பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக 500-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டிருந்த போதிலும், ஜல்லிக்கட்டு போட்டியைக் காண ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறிப் போயினர்.

ஜல்லிக்கட்டில் 192 காளைகள் வாடிவாசல் வழியாகச் சீறிப்பாய, களத்தில் நின்ற 122 மாடுபிடி வீரர்கள் அதனை அடக்கித் தங்கக்காசு, காளைக் கன்று, செல்போன் மற்றும் பீரோ என ஏராளமான பரிசுகளை தட்டிச் சென்றனர். ஒவ்வொரு காளையும் வாடிவாசலில் இருந்து வெளியே சீறி வரும் போதெல்லாம், மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது. ‘டேய் என்னடா காளையை தடவிக்கிட்டு இருக்க, நல்லா அழுத்துப் பிடிச்சா தான் பரிசு’, ‘ஏய் யப்பா... காளைங்க எல்லாம் யூ டர்ன் அடிச்சி அதுங்க சொந்தத்தை கூட்டிட்டு வருது அலர்ட் ஆகுங்க’, ‘மாடு பிடிபட்டுருச்சி, அடக்குன அந்த 430 பேருக்கு நன்றி. ஆனா, பரிசு ஒருத்தனுக்கும் இல்லை. வெறும் பொங்கல் வாழ்த்து தான். ஒருத்தன் தான் மாட்டை பிடிக்கணும்னா எவனும் கேக்க மாட்டேங்குறாய்ங்க’, ‘டேய் தம்பி சூப்பரா மாடு புடிச்ச, இந்தா தங்கக்காசு. போட்டி முடிஞ்சதும் முதல்ல போய் முடியை வெட்டு’ என ஜல்லிக்கட்டு போட்டியினை தொகுத்து வழங்கியவர் மைக்கில் பேச பேச, பார்வையாளர்கள் விழுந்து விழுந்து சிரித்து கைதட்டி மைதானத்தை அதிர வைத்தனர். 

ஈரோடு ஜல்லிக்கட்டில் பெரும்பாலான காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மதுரையில் இருந்து தான் வந்திருந்தனர். ஈரோட்டைச் சேர்ந்த இளைஞர்கள் பலர், ‘களத்தில் இறங்கி காளையை அடக்க, எங்களையும் அனுமதியுங்கள்’ என நிகழ்ச்சி நடத்திய கமிட்டியிடம் ஆர்வமாகக் கேட்டும், காளையை அடக்கப் பயிற்சி பெறாதவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டனர். சிறந்த காளையாக உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த காளை ஒன்றும், மதுரையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் 11 காளைகளை அடக்கி சிறந்த மாடுபிடி வீரராகவும் அறிவிக்கப்பட்டார். 7 பேருக்கு லேசான காயம் ஏற்பட, ஒருவர் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எவ்வித அசம்பாவிதங்களும் இல்லாமல் சிறப்பாக ஈரோடு ஜல்லிக்கட்டு நடந்து முடிக்க, இனி ஒவ்வொரு ஆண்டும் ஈரோட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்ற அறிவிப்பினைக் கேட்டு, மக்கள் மகிழ்ச்சியில் வீடு திரும்பினர்.