Published:Updated:

‘13 தங்கக்காசு, கன்றுக்குட்டி, மொபைல் போன்’ - ஈரோடு ஜல்லிக்கட்டில் கலக்கிய மதுரை இளைஞர்!

‘13 தங்கக்காசு, கன்றுக்குட்டி, மொபைல் போன்’ - ஈரோடு ஜல்லிக்கட்டில் கலக்கிய மதுரை இளைஞர்!
‘13 தங்கக்காசு, கன்றுக்குட்டி, மொபைல் போன்’ - ஈரோடு ஜல்லிக்கட்டில் கலக்கிய மதுரை இளைஞர்!

ஈரோட்டில் நடைபெற்ற முதல் ஜல்லிக்கட்டு போட்டியில், மதுரையைச் சேர்ந்த இளைஞர் கார்த்திக் என்பவர் 11 காளைகளை அடக்கி அசத்தினார்.

காளைக்குப் பெயர் போன காங்கேயம் தொகுதி, ஒரு காலத்தில் ஈரோடு மாவட்டத்தில் தான் இருந்தது. இப்போதும் ஈரோடு மாவட்டத்தின் அடையாளச் சின்னமாக காளை மாட்டுச் சிலை தான் விளங்குகிறது. அப்படிப்பட்ட ஈரோட்டு மண்ணில் இதுவரை ஜல்லிக்கட்டு போட்டியே நடந்தது கிடையாது. முதல் முறையாக நேற்று தான் ஈரோடு பவளத்தாம்பாளையம் ஏ.இ.டி பள்ளி வளாகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி பிரமாண்டமாக நடைபெற்றது. 

192 காளைகள், 122 மாடுபிடி வீரர்கள் என ஈரோட்டின் முதல் ஜல்லிக்கட்டே மிகப் பிரமாண்டமாக இருந்தது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகள் மாடுபிடி வீரர்கள் கையில் சிக்காமல் துள்ளிக்குதித்து திமிறி ஓடியது ஒருபுறம் இருக்க, அதே காளைகள் யூ-டர்ன் அடித்து மறுபடியும் வாடி வாசலை நோக்கி ஓடி வர வீரர்கள் பம்மிப் பதுங்கினர். அந்தவகையில், வாடிவாசலில் இருந்து வெளியேறியச் சென்ற காளை ஒன்று, திரும்ப யூ-டர்ன் அடித்து வந்து ஒரு 5 நிமிடம் காட்டிய ஆட்டம் பார்வையாளர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. சீறீப்பாயும் காளைகளை அடக்க 25 வயதிற்குட்பட்ட இளம் காளையர்கள் தான் அதிகளவில் களத்தில் இருந்தனர். ‘தலையில கோடு போட்ட டிசைன்ல முடிவெட்டியிருக்கவன் தான்யா எல்லா மாட்டையும் பிடிக்க தாவுறான்’ எனப் பலரும் சொல்லிக்கொண்டிருக்க, கடைசியில் அந்த இளைஞர் தான் 11 காளைகளை அடக்கிச் சிறந்த மாடுபிடி வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிறந்த மாடுபிடி வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 19 வயது இளைஞரான கார்த்திக் என்பவர் மதுரை மாவட்டம் கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்தவர். 11 காளைகளை அடக்கியதற்காக ஒவ்வொரு காளைக்கும் தங்கக்காசு மற்றும் காளைக் கன்று ஒன்றையும் பரிசாகப் பெற்றார். மேலும், அவருக்குச் சிறந்த மாடுபிடி வீரருக்கான கேடயம், சிறப்பு பரிசாக இரண்டு தங்கக்காசு மற்றும் ஒரு மொபைல் போன் விழா கமிட்டியின் சார்பாக வழங்கப்பட்டது.

11 களைகளை அடக்கிய இளம் காளையான கார்த்திக்கிடம் பேசினோம். “நான் பி.காம் ஃபைனல் இயர் படிச்சுக்கிட்டு இருக்கேன். எங்க வீட்ல யாருமே ஜல்லிக்கட்டுல விளையாண்டதில்லை. எனக்கு சின்ன வயசுல இருந்தே மாடு புடிக்கிறதுன்னா அவ்ளோ ஆர்வம். 10 வயசுல இருந்து ஜல்லிக்கட்டுல மாடு புடிச்சிக்கிட்டு இருக்கேன். வாடிவாசல்ல இருந்து வர்ற எல்லா காளையையும் நான் பிடிக்க மாட்டேன். எந்தக் காளை பார்க்குறதுக்கு மெரட்டலா இருக்கோ, எதுக்கு அதிக பரிசு அறிவிப்பாங்களோ அதை தான் புடிப்பேன். தொட்டா பெரிய கை தான்னு வச்சிக்குங்களேன். அலங்காநல்லூர்ல நடந்த ஜல்லிக்கட்டுல ஆறு மாடு புடிச்சேன். இப்போ, ஈரோட்டுல 11 மாட்டை புடிச்சிருக்கேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றார்.