Published:Updated:

``அப்பாவை ஜெயிக்கணும்னு செஸ் ஆட ஆரம்பிச்சேன்!’’ - உலகின் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்

ஜனவரி 15-ம் தேதி நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற குகேஷ், 2,512 புள்ளிகள் பெற்று இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் ஆனார். உலகின் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையும் படைத்தார். கடந்த ஒன்றரை வருடத்தில், 243 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள குகேஷ், தரவரிசையில் படிப்படியாக முன்னேறியுள்ளார்.

``அப்பாவை ஜெயிக்கணும்னு செஸ் ஆட ஆரம்பிச்சேன்!’’ - உலகின் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்
``அப்பாவை ஜெயிக்கணும்னு செஸ் ஆட ஆரம்பிச்சேன்!’’ - உலகின் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்

சென்னையைச் சேர்ந்த 12 வயதேயான பிரக்ஞானந்தா, உலகின் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையை 2018 ஜூன் மாதம் படைத்து, தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். இந்த இளம் செஸ் ஸ்டாரைக் கொண்டாடித் தீர்ப்பதற்குள், சென்னையைச் சேர்ந்த மற்றுமொரு சுட்டி ஜீனியஸ் பிரக்ஞானந்தாவின் சாதனையை முறியடித்துள்ளார்.

சென்னை வேலம்மாள் வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த குகேஷ்.டி, உலகின் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார். 12 வருடம் 10 மாதம் வயதுடையபோது கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற பிரக்ஞானந்தாவின் சாதனையை, மூன்று மாதங்கள் முன்னதாகவே வென்று அசத்தியுள்ளார் குகேஷ். 12 வருடம் 7 மாதத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை தனதாக்கியுள்ள குகேஷ், இப்போது இந்தியாவின் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டரும்கூட!

குகேஷின் அப்பா ரஜினிகாந்த், அம்மா பத்மா இருவரும் மருத்துவர்கள். வீட்டில் செஸ் விளையாடுவதை வழக்கமாகக்கொண்ட பெற்றோரைப் பார்த்த குகேஷ், தானும் செஸ் விளையாட ஆசைப்பட்டார். ``ஒவ்வொரு முறை செஸ் விளையாடும்போதும், அப்பா ஜெயித்துவிடுவார். அவரை ஜெயிக்கணும்னுதான் தீவிரமா செஸ் விளையாடத் தொடங்கினன்” என்றார். 

7 வயதில் வீட்டில் தொடங்கிய குகேஷின் செஸ் பயணம், பள்ளியிலும் தொடர்ந்தது. படிப்பு தவிர்த்து ஏதாவது ஒரு விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று பள்ளியில் அறிவித்தபோது, மறுயோசனையின்றி செஸ்ஸைத் தேர்வுசெய்துள்ளனர் குகேஷின் பெற்றோர். போட்டியில் அப்பாவை வெல்ல வேண்டும் என செஸ் விளையாடத் தொடங்கிய இந்தக் குட்டி ஸ்டார், ஒருசில ஆண்டுகளிலேயே ரேட்டிங் போட்டிகளில் கலந்துகொள்ளும் அளவுக்கு செஸ்ஸில் கலக்கினார்.

2013-ம் ஆண்டு, பன்னாட்டுச் சதுரங்கக் கூட்டமைப்புத் தரவரிசையில் 1,291 புள்ளிகளுடன் இருந்த குகேஷ், அடுத்தடுத்த மாதங்களில் முன்னேறினார். இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டத்தை அடைய மூன்று நார்ம்களையும், கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை அடைய மூன்று நார்ம்களையும் கடக்க வேண்டும். மொத்தம் 2,500 புள்ளிகள் பெற்றால் மட்டுமே, கிராண்ட் மாஸ்டர் பட்டம் சாத்தியம். சற்று கடினமான இந்தச் சவால்களைக் கடக்க, தீவிர பயிற்சியும் சரியான திட்டமிடலும் அவசியம். 2017-18ம் ஆண்டில் நடைபெற்ற சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்ட குகேஷ், 2,400 புள்ளிகளுடன் மூன்று நார்ம்களைக் கடந்து இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டத்தை வென்றார். அடுத்த இலக்கு, செஸ் கிராண்ட் மாஸ்டர்!

1988-ம் ஆண்டு, 19 வயதில் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற விஸ்வநாதன் ஆனந்த், ஐந்து முறை செஸ் உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர். இவர், செஸ் ப்ரியர்களின் ஆல்-டைம் இன்ஸ்பிரேஷன். விஸ்வநாதன் ஆனந்தையும், பாபி ஃபிஷரையும் ரோல்மாடலாகக்கொண்ட குகேஷ், தன்னுடைய இலக்கை அடைய சில ஆண்டுகள் மட்டுமே எடுத்துக்கொண்டார். 2018-ம் ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று, கிராண்ட் மாஸ்டருக்கான முதல் நார்மைக் கடந்தார். அதே ஆண்டில், இரண்டாவது நார்மையும் கடந்த குகேஷ், உலகின் இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை அடைவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ரஷ்யாவைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் செர்ஜி கார்ஜிகன், 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றதே உலக சாதனை. இந்தச் சாதனையை முறியடிக்க, 2018 டிசம்பர் 29-ம் தேதிக்குள் மூன்றாவது கட்டத்தையும் குகேஷ் கடந்திருக்க வேண்டும். ஆனால், சன்வே சிட்ஜெஸ் இன்டர்நேஷனல் போட்டி டிராவில் முடியவே, நூலிழையில் உலக சாதனை வாய்ப்பை நழுவவிட்டார்.

குகேஷின் கிராண்ட் மாஸ்டர் பட்டம் இந்தியாவில் நடக்கும் போட்டியில்தான் கிடைக்க வேண்டும் என அவர் ஆசைப்பட்டாரோ என்னவோ, இம்மாதம் டெல்லியில் நடைபெற்ற இன்டர்நேஷனல் ஓடன் ஜி.எம் போட்டியில் வெற்றி பெற்று மூன்றாவது நார்மைக் கடந்தார். ஜனவரி 15-ம் தேதி நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற குகேஷ், 2,512 புள்ளிகள் பெற்று இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் ஆனார். உலகின் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையும் படைத்தார். கடந்த ஒன்றரை வருடத்தில், 243 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள குகேஷ், தரவரிசையில் படிப்படியாக முன்னேறியுள்ளார்.

உலக சாதனையை நழுவவிட்டபோது சற்று மனமுடைந்த குகேஷ், நம்பிக்கை இழக்கவில்லை. ``எனக்கு செஸ் விளையாட ரொம்பப் பிடிக்கும். உலக சாதனை செய்யணும்னு என்மேல அழுத்தத்தை உண்டாகிக்கல. நான் விரும்பி விளையாடுவன், அடுத்த போட்டியில ஜெயிக்கிறது மட்டும்தான் என் குறிக்கோளா இருந்தது. இப்போ கிராண்ட் மாஸ்டர் பட்டம் கிடைச்சிருக்கு” என்று சொன்னர் இந்தச் சுட்டி.

செஸ் மட்டுமின்றி கிரிக்கெட், பேட்மின்டனிலும் ஆர்வம்கொண்டுள்ள குகேஷ், ஓய்வு நேரத்தில் மற்ற விளையாட்டுகளை விரும்பி விளையாடுகிறார். மற்ற போட்டியாளர்களின் ஆட்டங்களையும், சர்வதேச சாம்பியன்களின் போட்டிகளையும் யூ டியூபில் காணும் இந்த செஸ் மாஸ்டர், அதிலிருந்தும் பல முக்கிய குறிப்புகளை எடுத்துக்கொள்வதாகச் சொன்னார்.

இன்டர்நேஷனல் மாஸ்டர், கிராண்ட் மாஸ்டர்... அடுத்த இலக்கு? ``வேர்ல்டு சாம்பியன்தான்'' என்றார் குகேஷ் நம்பிக்கையுடன்! இளம் வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ள குகேஷ், தொடர்ந்து வெற்றிகளைத் தக்கவைத்துக்கொள்வது முக்கியம் எனவும், அதற்கான பயிற்சிகளில்தான் அவர் அடுத்து ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்தார் குகேஷின் பயிற்சியாளர் விஷ்ணு பிரசன்னா.

பிரக்ஞானந்தா, குகேஷ் என செஸ்ஸில் கலக்கும் இந்தத் தமிழக சுட்டீஸ், விஸ்வநாதன் ஆனந்துக்கே டஃப் கொடுக்கக் காத்திருக்கின்றனர்!