Published:Updated:

கவனம் ஈர்த்த அரசியல் புத்தகங்கள்! #ChennaiBookFair2019

"இது மாதிரியான புத்தகங்களைத் தேடி வரும் இளைஞர்களில் அதிகப்படியானோர் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் வேலை செய்பவர்களாக உள்ளனர். அவர்களுக்கு இதுவரை சமூகம் குறித்த பெரிய அளவிலான தெளிவு இல்லை என்றாலும் அதைத் தெரிந்து கொள்வதற்கான தேடல் அவர்களிடம் உருவாகியுள்ளது."

கவனம் ஈர்த்த அரசியல் புத்தகங்கள்! #ChennaiBookFair2019
கவனம் ஈர்த்த அரசியல் புத்தகங்கள்! #ChennaiBookFair2019

ந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 42-வது சென்னை புத்தகக் கண்காட்சி, ஜனவரி 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  இது 800-க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் கோடிக்கணக்கான புத்தகங்களோடு பிரமாண்டமாகக் காட்சியளிக்கிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாசகர்கள், குடும்பத்தினருடன் சென்று திருவிழா போன்று, பதிப்பகங்களின் அரங்குகளைப் பார்வையிடுவதுடன் அவரவர்க்குத் தேவையான புத்தகங்களை வாங்கிச் செல்கிறார்கள். பொங்கல் பண்டிகை போன்ற தொடர் விடுமுறை நாள்களில் வாசகர்களின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. 

குழந்தைகளுக்குத் தேவையான புத்தகங்கள், நாவல்கள், சிறுகதைகள் தீவிர இலக்கியம் பேசும் புத்தகங்களுக்கிடையே கடந்த இரண்டு வருடங்களாக அரசியல் சார்ந்த புத்தகங்களின் விற்பனையும் அதிகரித்து, பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், பதிப்பகங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. சமூகம் சார்ந்த நேரடியான அரசியல் கருத்துகளைப் பேசும் புத்தகப் பதிப்பகங்களின் அரங்குகளில் வழக்கத்தைவிட இந்தாண்டு அதிகம்பேர் குழுமி தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கிச் சென்றனர். இதுமாதிரியான அரசியல் பேசும் புத்தக அரங்குகளுக்குக் குறிப்பாக இளைஞர்களின் வருகை அதிகரித்துள்ளது கூடுதல் சிறப்பம்சமாகப் பார்க்கப்படுகிறது. 

அரசியல் சார்ந்த புத்தகங்களுக்கான ஆதரவு குறித்து 13, 14-வது அரங்கில் இடம் பெற்றுள்ள மே 17 இயக்கத்தின் 'நிமிர்' பதிப்பகத்தைச் சேர்ந்த லேனா குமார் பேசுகையில், “புத்தகக் கண்காட்சியில் அரசியல் சார்ந்த புத்தகங்களின் மீது முதியவர்களைக் காட்டிலும் இளைஞர்கள்தான், இந்தாண்டு அதிக ஆர்வமாக உள்ளனர். எங்கள் அரங்கிற்கு வருபவர்களில் 99 சதவிகிதத்தினர் இளைஞர்களாகவே உள்ளனர்.

நிமிர் பதிப்பகத்தின் சார்பில் கடந்த புத்தகக் கண்காட்சிக்கு மே 17 இயக்கத்தின் சிறப்பிதழை வெளியிட்டிருந்தோம். இந்தப் புத்தகக் கண்காட்சியில் சர்வதேச மற்றும் தமிழ் தேசிய அரசியலைப் பேசுகின்ற 12 புத்தகங்களைப் புதிதாக வெளியிட்டிருக்கின்றோம். அதற்குப் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கின்றது. அதேபோல் கருத்தியல் ரீதியான அரசியலைப் பேசுகின்ற பெரியாரிய, மார்க்சிய புத்தகங்கள் மற்றும் புவிசார் அரசியலைப் பேசுகின்ற புத்தகங்களுக்கும் இளைஞர்களிடையே அதிகப் படியான வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோல் பொருளாதாரம் சார்ந்த மற்றும் பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய புத்தகங்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளன.

இது மாதிரியான புத்தகங்களைத் தேடி வரும் இளைஞர்களில் அதிகப்படியானோர் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் வேலை செய்பவர்களாக உள்ளனர். அவர்களுக்கு இதுவரை சமூகம் குறித்த பெரிய அளவிலான தெளிவு இல்லை என்றாலும் அதைத் தெரிந்து கொள்வதற்கான தேடல் அவர்களிடம் உருவாகியுள்ளது. சமூகநீதி குறித்தான, சாதிக்கும் நிலத்திற்குமான தொடர்புகள் சார்ந்த, சாதி ஒழிப்பின் அவசியம் குறித்தான புத்தகங்களைக் கேட்டுவாங்கிச் செல்கின்றனர். இளைஞர்கள் மனதில் அரசியல் குறித்து எழுந்துள்ள பல கேள்விகளுக்கான விடைகளை இங்குக் கிடைக்கும் புத்தகங்களின் மூலம் தேடுகின்றனர்” என்றார்.

கடந்த சில ஆண்டுகளாக அரசியல் களத்தில் விவாதிக்கப்பட்டு வருபவர்களில் முக்கியமானவர் பெரியார். இந்தப் புத்தகக் கண்காட்சியில் கவனம் பெற்ற பெரியாருடைய புத்தகங்கள் பற்றி பெரியார் சுயமரியாதை பிரசார கழக பதிப்பகத்தினரிடம் பேசுகையில், “இந்தப் புத்தகக் கண்காட்சியில் புதிதாக வெளியான திராவிடர் இயக்கத் தலைவர் கி.வீரமணியின் 'தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?’ புத்தகம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேபோல் பெரியாரின் பிறந்த நாளில் அவரின் சிலை பற்றிய சர்ச்சைகள் எழுந்த நிலையில் ‘பெரியார் வெறும் சிலை அல்ல’ என்ற புத்தகத்தையும் நிறைய இளைஞர்கள் வாங்கிச் செல்கின்றனர். பொருளாதார ரீதியாகப் பின் தங்கியவர்களுக்கு மத்திய அரசு 10% இடஒதுக்கீடு வழங்கியுள்ள நிலையில் இடஒதுக்கீடு சார்ந்த புத்தகங்களையும் நிறைய மக்கள் தேடி வருகின்றனர்” என்றார்.

புத்தகக் கண்காட்சியில் 543-வது அரங்கில் ’பெண் ஏன் அடிமையானாள்’ புத்தகத்திற்காக மட்டும் ஒரு தனி அரங்கம் அமைக்கப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே இந்தப் புத்தகத்தை மிகக் குறைந்த விலையில் பலரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், இந்தப் புத்தகக் கண்காட்சியிலும் அந்த புத்தகத்திற்கான  வரவேற்பு அதிகரித்துள்ளது.

மக்கள் தங்களின் வாழ்வியலைத் தீர்மானிக்கிற அரசியலை வாசிப்பது ஆரோக்கியமானதுதான்..!