Published:Updated:

காமமும் கற்று மற 2 - பயப்படவேண்டிய ஒன்றல்ல!

கூடற்கலை - 2

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

என் கண்கள்
உன்னைக் காண
பசித்திருப்பதில்லை
தனித்திருந்து விழித்திருக்கின்றன.

- மகுடேசுவரன்

பிரகாஷுக்கு 25 வயது. பெற்றோர் அவருடைய திருமணத்துக்கு ஏற்பாடு செய்ய, `இப்போ வேணாமே...’ என்று மறுத்திருக்கிறார். `ஏன் வேண்டாம்னு சொல்றே?’ என்று அம்மாவும், அப்பாவும், உடன்பிறந்தவர்களும் கேள்விகளால் துளைத்தெடுக்க, வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனாலும் அவருக்குள் ஒரு பதற்றம். திருமணம் என்றாலே எல்லோருக்குமே படபடப்பு வரும்தான். ஆனால், பிரகாஷுக்கு இருந்த பிரச்னை வேறு.

கார்த்திக் குணசேகரன்
கார்த்திக் குணசேகரன்

அவருக்கு சுய இன்பம் (Masturbation) அனுபவிக்கும் பழக்கம் இருந்தது. அந்தப் பழக்கத்தால், தனக்கு ஆண்மைக் குறைபாடு வந்துவிட்டதாக அவர் நம்பிக்கொண்டிருந்தார். என்னிடம் ஆலோசனைக்கு வந்தவர் சொன்னார்... "டாக்டர், ப்ளஸ் டூ படிக்கிற காலத்துல ஒரு நாளைக்கு நாலு தடவையெல்லாம் மாஸ்டர்பேஷன் செஞ்சிருக்கேன். காலேஜ் படிக்கிறப்போ ஒரு சான்ஸ் கிடைச்சுது. ஒரு பெண்ணோட படுக்கைவரைக்கும் போயிட்டு, ஒண்ணும் செய்யாம திரும்பி வந்துட்டேன். என்னால எந்தப் பெண்ணோடயும் உறவுவெச்சுக்க முடியாது. எனக்குக் குழந்தையும் பிறக்காது. நான் எப்படி டாக்டர் கல்யாணம் செஞ்சுக்கறது?’’

"சரி, உங்களுக்கு வேற என்னல்லாம் பிரச்னை இருக்கு?’’ என்று அவரிடம் விசாரித்தேன்.

"ரொம்ப சீக்கிரமே விந்து வெளியே வந்துடுது. ராத்திரி சரியா தூக்கம் வர மாட்டேங்குது. இப்போல்லாம் ஞாபகமறதி அதிகமாகிடுச்சு. நரம்புத் தளர்ச்சி வந்துடுச்சோன்னு பயமா இருக்கு. அப்பப்போ உடம்பு நடுங்குது. இந்த வயசுலயே முடி கொட்ட ஆரம்பிச்சுடுச்சு. இனிமே எனக்கு வாழ்க்கையில என்ன இருக்கு?’’ விரக்தியோடு வெளிப்பட்டது அவர் குரல்.

நான் அவரை ஒரு கணம் உற்றுப் பார்த்துவிட்டு, ``நீங்க சொன்ன எந்தப் பிரச்னையும் உங்களுக்கு இல்லை. எல்லாம் உங்களோட கற்பனை’’ என்றேன். அவர் நம்ப முடியாமல் என்னைப் பார்த்தார். அவரை நம்பவைக்க, இது தொடர்பான பல மருத்துவ ஆய்வுகளை அவருக்கு எடுத்துச் சொல்லவேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில், நான் படித்த பாடத்தை ரீவைண்ட் செய்வது போன்ற உணர்வே எனக்கு வந்துவிட்டது.

couple
couple
Representational images

இது, ஆண்களில் பலருக்கு இருக்கும் பிரச்னை. `வளரிளம் பருவம்’ எனப்படும் டீன் ஏஜில் தொடங்கும் சுய இன்பப் பழக்கம், பல்வேறு தவறான புரிந்துணர்வுகளை வளர்த்துவைத்திருக்கிறது. அதற்கு நாம் வாழும் சமூகமும் ஒரு வகையில் காரணம். `உங்களுக்கு சுய இன்பப் பழக்கம் இருக்கிறதா... அதனால் ஆண்மைக் குறைபாடு வந்துவிட்டதா... நரம்புத் தளர்ச்சி, விந்து குறைதல், நீர்த்துப் போதல் பிரச்னைகளா? அத்தனைக்கும் எங்களிடம் தீர்வு உண்டு’ என்று கூவிக் கூவி அழைக்கும் மஞ்சள் போஸ்டர்களை தமிழ்நாட்டின் எந்த ஊர்ப் பேருந்து நிலையக் கழிவறைக்குப் போனாலும் பார்க்கலாம்.

சுய இன்பம் அனுபவித்தல் குறித்த விழிப்புஉணர்வு நம்மிடம் பெரிதாக இல்லை; அதைப் பற்றிக் கற்றுத் தரவும் ஆளில்லை. இணையத்தில் தேடினால், `சுய இன்பம் தவறானது’ என்றே தகவல் கிடைக்கிறது. சுய இன்பத்தால், விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து, ஆண்மைக் குறைபாடு வந்துவிடும் என்றால், திருமணத்துக்குப் பின்னர் மனைவியுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது மட்டும், விந்தணுக்களின் எண்ணிக்கை குறையாதா? அப்படியென்றால், யாரும் திருமணமே செய்துகொள்ள மாட்டார்களே!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உண்மையில், சுய இன்பம் ஆரோக்கியமான செயல்பாடே. இதன் காரணமாக, நல்ல ஹார்மோன்கள் உற்பத்தியாகின்றன. ஒவ்வொரு முறை இதயம் துடிக்கும்போதும், 1,000 உயிரணுக்கள் உற்பத்தியாகின்றன. எனவே, தொடர்ச்சியான சுய இன்பத்தால் விந்தணுக்கள் குறைந்து, ஆண்மைக் குறைபாடு வந்துவிடும் என்பதில் உண்மையில்லை. இதை உறுதிப்படுத்தும் எந்த ஆய்வும் இல்லை.

சுய இன்பம் அனுபவிக்காதவருக்குத்தான் உறக்கத்தில் விந்து வெளியேறும். உடலில் ரத்தம் உற்பத்தியாவதுபோலத்தான் விந்தணுக்கள் உற்பத்தியும். ரத்தத்தை, உடலுக்குள்ளேயே பணிசெய்ய பணித்துவைத்திருக்கிறது இயற்கை. எனவே, அது வெளியாவதற்கு வேலை இல்லை. விந்தணுக்கள் வெளியேறவேண்டிய நிர்பந்தம் இருப்பதே, உயிர்ப் பெருக்கத்துக்கு ஆதாரம்.

Couple
Couple

ஆகவே, நாம் வெளியேற்றாதபோது, தானாக வெளியேறி விரகம் தீர்த்துக்கொள்கிறது உடல். கண்ணால் கண்ட காட்சி, படித்த புத்தகம், பிடித்த பெண், ஆழ்மன ஏக்கம்... எல்லாமுமாகச் சேர்ந்து, கனவாகி விந்து வெளியேற்றம் காண்கிறது. தொடர்ந்து மனஅழுத்தம் (Stress), உறக்கமின்மையால் (Insomnia) அவதிப்படுவோருக்குத் தீர்வு சுய இன்பத்திலிருக்கிறது. அப்போது உற்பத்தியாகும் ஹார்மோன்களால், நல்ல உணர்வும் மன அமைதியும் நிச்சயம் கிடைக்கும். ஒரு பெண்ணுடன் உறவு கொள்ளும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்குச் சற்றும் குறைவில்லாத இன்பத்தைத் தரும் இந்தப் பழக்கம்.

`தொட்டனைத்தூறும் மணற்கேணி...’ என்றார் வள்ளுவர். கேணியில் மணல் தூர்வாரும் அளவுக்கு ஏற்ப அதில் தண்ணீர் ஊறும். கல்விக்கு உவமையாகத் திருவள்ளுவர் இந்த உவமானத்தைச் சொல்லியிருந்தாலும், கலவிக்கும் இது அப்படியே பொருந்தும். அள்ள அள்ளப் பெருக்கெடுக்கும் ஊற்றுபோலத்தான் உயிரணுக்களும். எனவே, சுய இன்பம் பயப்படவேண்டிய ஒன்றல்ல என்பதை அறிவோம்!

- கற்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு