Published:Updated:

சர்க்கஸில் இருந்து வந்த பறக்கும் தட்டு !

மானா பாஸ்கரன் படங்கள்: எஸ்.தேவராஜன், ச.இரா.ஸ்ரீதர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இந்த லிங்க் மூலம் இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

''விருத்தாசலம் - கடலூர் (பழைய தென்னாற்காடு) மாவட்டத்தில்,  மணிமுத்தா நதிக் கரையில் உள்ள நகரம்! அதன் அருகில் உள்ள சாத்துக்கூடல் கிராமம்தான் நான் பிறந்து வளர்ந்த ஊர். இப்போது சாத்துக்குடல் என்று தவறாக எழுதப்படுகிறது. 'சாத்து’ என்பது உப்பு வண்டிகளைக் குறிக்கும். பல சுற்றுப்புறச் சிற்றூர்களுக்கு உப்பு விற்கச் செல்லும் வண்டிகள் இங்கே கூடி நிற்குமாம். அந்தக் காலத்தில் உப்பு மண்டி ஏதும் இருந்திருக்கலாம். அப்படி வந்த 'கூடல்’, இப்போது 'குடல்’ என்று ஆகிவிட்டது!'' திருத்தம் சொல்லி, தன் ஊரின் வரலாறு ஆரம்பிக்கிறார் வரலாற்று நாவலாசிரியர் கௌதம நீலாம்பரன்!

''விவசாயப் பெருங்குடி மக்கள் அதிக அளவில் வாழும் விவசாய பூமி எங்கள் ஊர். ஊரின் தெற்கில் திருமால் ஆலயம், கிழக்கில் சிவன் கோயில் இருந்தாலும் சுற்றுவட்டாரக் கிராம  மக்கள் விருத்தாசலம் பழமலைநாதரைத் தரிசிப்பதில்தான் மிகுந்த ஆர்வம் காட்டுவர். மிகப் பழமையான ஆலயம் இது. ராஜராஜ சோழன் தஞ்சைப் பெரிய கோயிலை எழுப்பும் முன், அவனுடைய பெரிய பாட்டி செம்பியன் மாதேவியாரால் கட்டப்பெற்ற ஆலயம்.

சர்க்கஸில் இருந்து வந்த பறக்கும் தட்டு !

விருத்தாசலம் டவுனுக்குச் செல்ல வேண்டும் என்றால் எங்கள் ஊர் மக்கள்உற்சாக மாகக் கிளம்புவார்கள். மொத்த மளிகை, ஜவுளி, நகை, விசேஷ காலங்களில் தேவைப்படும் பூ, பழம் எது வாங்கவும் இங்குதான் வர வேண்டும். பெரிய மருத்துவமனையும் இங்குதான். டவுனில் காலை 8 மணிக்கும் இரவு 8 மணிக்கும் ஒரு சங்கு ஊதப்படும். சுற்றுப்புற ஊர்கள் சுறுசுறுப்புடன் இயங்கவும், அடங்கித் துயில்கொள்ளவும் இது ஓர் அடையாளம். இப்போதைய நிலை எப்படியோ?

சர்க்கஸில் இருந்து வந்த பறக்கும் தட்டு !

நான் 1965-ம் ஆண்டு சென்னைக்கு வந்துவிட்டேன். சாத்துக்கூடலில் என் அக்கா வீடு. அங்குதான் நான் பிறந்தேன். இன்னும் உள்ளே தள்ளி, சில ஓடைகள், உளைக் காடுகள் தாண்டி உள்ள இடையூரில் என் பெற்றோர் வசித்தனர். டவுனை ஒட்டி, போக்குவரத்து வசதி உள்ள ஊர் என்பதால் அம்மா இங்கு வந்து தங்கி என்னை பெற்று இருக் கிறார். அக்காவுக்கு அப்போது குழந்தை இல்லாத நிலையில், அடுத்த 10 ஆண்டுகள் நான் அங்கேயே வளர்ந்தேன். ஆரம்பக் கல்வி அந்த ஊரில்தான். பள்ளி மாணவர்களோடு சுற்றுலா மாதிரி டவுனுக்கு வந்து சர்க்கஸ் பார்த்தது இன்னும் நினை வில் இருக்கிறது. அந்த சர்க்கஸில் ஒரு பிரமாண்ட சர்ச் லைட்கொண்டு வானில் ஒளி வெள்ளம் வீசச் செய்வார் கள். அது மக்கள் கவனம் ஈர்க்கும் விளம்பர உத்தி என்பது புரியாமல், மேகத் திட்டுகளில் வந்து விழும் அந்த அதீத ஒளியைக் கண்டு, அத்தனை கிராம மக்களும் 'பறக்கும் தட்டு’ என்று ஆச்சர்யமாகப் பேசியது இன்னும் மறக்கவில்லை.

சர்க்கஸில் இருந்து வந்த பறக்கும் தட்டு !

விருத்தாசலத்தில் அப்போது தங்கமணி பேலஸ், ராஜ ராஜேஸ்வரி என இரு தியேட்டர்கள் இருந்தன. அவற்றில்தான் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் நடித்த படங்கள் நிறையப் பார்த்தேன். 10 வயதுக்குப் பிறகு தனியாகவே டவுனுக்கு வந்து செல்வேன்.  அப்போது எல்லாம் பேருந்து வசதி இல்லாததால், டவுனுக்கு நடந்துதான் செல்வேன். புதன்கிழமை களில் வாரச் சந்தை உண்டு. அன்று அத்தனை கிராமத்து ஆட்களும் ஆஜராகிவிடுவார்கள்.

மாசி மகம் இங்கே மிகப் பிரபலம். 10 நாட்களும் ஊர் திமிலோகப்படும். டவுனில் இருந்து சேலம் ரோட்டில் ஒன்றிரண்டு கல் தொலைவில் கொளஞ்சியப்பர் கோயில் என்று ஒரு முருகன் தலம் உள்ளது. இங்கு உருவம் கிடையாது. அரு உருவம் எனப்படும் ஒரு பீடமே முருகனாக அமைந்து, அருள்பாலிக்கிறது. பங்குனி உத்திரம் 10-ம் நாள் விழா அமர்க்களப்படும். வாரியார், கே.பி.சுந்தரம்பாள், டி.எம்.எஸ். என, பக்திப் பிரபலங்கள் அத்தனை பேரையும் இங்கு நான் பார்த்திருக்கேன்.

சர்க்கஸில் இருந்து வந்த பறக்கும் தட்டு !

ஒருமுறை விருத்தாசலத்தில் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் நாடகங்கள் நடைபெற்றுக்கொண்டு இருந்தன. கறுப்பு - வெள்ளை சினிமா நாட்களில் இந்த நாடகங்கள் வண்ண விசித்திரங்களாக இருக்கும். வியப்பில் விழி விரியவைக்கும் மேடை நாடகங்கள் இவருடையவை. பெரும்பாலும் புராண நாடகங்கள்தான். வீட்டுக்குத் தெரியாமல் ஓடிப்போய், நான் இந்த கம்பெனியில் சேர்ந்து, சில மாதங்கள் நடித்துக்கொண்டு இருந்தது ஒரு மறக்க முடியாத அனுபவம். பிறகு வீட்டில் கண்டுபிடித்து அழைத்துப் போய்விட்டார்கள் என்பது வேறு கதை.

சென்னைக்கு வந்து ஆண்டுகள் பல கடந்துவிட்டாலும் இன்னமும் விருத்தாசல நினைவுகள் உள்ளுக்குள் அலையடித்துக்கொண்டேதான் இருக்கின்றன!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு