Published:Updated:

``யாருக்கும் அடங்காத எங்க வீட்டுக் காளை எனக்கு அடங்கும்!'' - ஜல்லிக்கட்டு வின்னர் ரஞ்சித்தின் அம்மா

``யாருக்கும் அடங்காத எங்க வீட்டுக் காளை எனக்கு அடங்கும்!'' - ஜல்லிக்கட்டு வின்னர்  ரஞ்சித்தின் அம்மா
``யாருக்கும் அடங்காத எங்க வீட்டுக் காளை எனக்கு அடங்கும்!'' - ஜல்லிக்கட்டு வின்னர் ரஞ்சித்தின் அம்மா

தமிழர்களின் திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளுக்குத் தான் மவுசு அதிகம். குறிப்பாக, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ்பெற்றது. இந்த ஆண்டு தை 3ம் நாள் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியானது பெரும் விறு விறுப்போடு நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாடு பிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறந்த காளைக்கும், சிறந்த மாடு பிடி வீரருக்கும் காரும் தங்க மோதிரமும் பரிசாக வழங்கப்பட்டது. அலங்காநல்லூரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் ``15 காளைகளை” அடக்கி முதல் பரிசை தட்டிச்சென்று வெற்றிக் கோப்பையினைப் பெற்றார். அதை தொடர்ந்து மறுநாள் சென்னையில் முதல்வர் கையால் ரஞ்சித்துக்கு கார் சாவி வழங்கப்பட்டது. சமூக வலைதளங்களில் ரஞ்சித்குமாருக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. இந்நிலையில் இளம் மாடு பிடி வீரர் ரஞ்சித்குமாரின் வீட்டுக்குச் சென்று அவரின் அம்மா சுந்தரியிடம் பேசினோம்.

``என் மகன் ரஞ்சித்குமார் 10 வயதிலிருந்தே மாடுபிடிப்பதில் ஆர்வமாக இருப்பான். காரணம் அவன் அப்பாவும், தாத்தாவும்தான். அவங்க ரெண்டு பேருமே பிரபலமான மாடுபிடி வீரரா இருந்தாங்க. என் மாமனார் வளர்த்த காளைதான் `படையப்பா' படத்தில் நடிச்சது. என் மாமனார் ஜல்லிக்கட்டுக் காளையை அடக்குறதுல கில்லாடி. அவரோட ரத்தமான என் கணவருக்கும் அந்தத் திறமை ஈஸியா வந்தது. பல இடத்துல மாடுபிடி போட்டியில கலந்துகிட்டுப் பரிசோட வருவார்.

எனக்கு கல்யாணம் நடந்த சில வருஷத்துல புதுக்கோட்டையில நடந்த மாடுபிடி திருவிழாவுக்குப் போயிருந்தார். அப்ப எங்க வீட்ல போன்கூட இல்ல. யாரோ அவர் மாடு முட்டி இறந்துட்டார்னு சொல்லிட்டாங்க. அதிர்ச்சியான நான் கஞ்சி தண்ணியில்லாம அழுதுட்டே இருந்தேன். ஒருநாள் பரிசோட அவர் வந்துட்டு `உன்கிட்ட யாரோ தப்பாச் சொல்லியிருக்காங்க'னு சொன்னப்பதான் உயிரே வந்துச்சு. இருந்தாலும் நான் என் பயத்தை அவர்கிட்ட காட்டிகிட்டதில்லை. அவர் போயிட்டு வர்ற வரைக்கும் ஊர்ல உள்ள எல்லா கடவுளையும் வேண்டிகிட்டே இருப்பேன்.

அவரும் எல்லா காளைகளையும் அடக்க மாட்டார். திமிரா இருக்கிற, அடங்காத காளையை மட்டும்தான் அடக்குவார். இப்ப மாதிரி அப்போ எல்லாம் கார், பைக் எல்லாம் பரிசு தர மாட்டாங்க. ஆனா என் கணவருக்குக் காளையை அடக்குறது ஒரு சந்தோஷம், சவால். போற போட்டியில அத்தனையிலேயும் ஜெயிச்சிடுவார்.

எனக்குப் பசங்க பொறந்ததுக்கு அப்புறம்தான் பொறுப்பு வந்து வேலைக்குப் போக ஆரம்பிச்சார்., எங்களுக்கு ஒரு பொண்ணு, இரண்டு பசங்க. கடைசிப் பையன்தான் ரஞ்சித்குமார். ராமு என்பது அவனுடைய செல்லப்பெயர். அவனுக்கு 20 வயசு ஆகுது. சின்னவயசிலிருந்தே மாடுபிடிப்பதில் ஆர்வத்தோட இருப்பான். அவனுக்கு நெறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. எல்லாரும் எங்க மாடுபிடி திருவிழா நடந்தாலும் போயிடுவானுக. ரஞ்சித் சின்னவயசிலிருந்தே புதுக்கோட்டை, பாலமேடு, சிவகாசி இப்படிச் சுத்துக்கட்டு எல்லா ஜல்லிக்கட்டுக்கும் போய்ட்டு வருவான். பல இடங்களில் நல்லா மாடுபிடிச்சுருக்கான் அவங்க பிரண்ட்ஸ் போனில் வீடியோ காட்டுவானுங்க. இதுவரைக்கும் என் கணவரோட மாடுபிடி திருவிழாவுக்கோ, என் மகன் கலந்துகிற மாடுபிடி போட்டிக்கோ நான் போனதேயில்லை. வேற என்ன பயம்தான் காரணம். அவங்க நல்லபடியா ஆரோக்கியமா திரும்ப வரணும்னு வீட்ல இருந்து வேண்டிட்டு இருப்பேன். போன வருஷம் புதுக்கோட்டையில நடந்த போட்டியில ஜெயிச்சுட்டு ஒரு ஆடு பரிசா வாங்கிட்டு வந்தான். இப்ப அது குட்டி போட்டிருக்கு.  

ரஞ்சித்தோட அப்பா அவனுக்கு எப்படி மாடு பிடிக்கனும், எந்த மாடு எப்படி வரும், அத எப்படித் தந்திரமாப் பிடிக்கனும், வீரம் மட்டும் போதாது விவேகமும் வேணும் இப்படி நிறைய டிப்ஸ் சொல்லுவாரு. 'மாடு பிடிக்க போகும் போது பசங்கள தடுக்காத என் பசங்க நல்லா பிடிச்சுட்டு வந்துருவாங்க'னு அவங்க அப்பா எனக்கு அட்வைஸ் பண்ணுவாரு. எங்க வீட்டுலேயும் காளை வளர்க்கிறோம். அவன் பேரு கருப்பு. 3 வருசமா கருப்பு எங்ககிட்டதான் இருக்கு. ரஞ்சித் ஜெயிக்கிற மாதிரி கருப்பும் யாருக்கும் அடங்காம ஜெயிச்சுட்டு வந்துட்டு இருக்கு. இதையும் எங்க புள்ள மாதிரிதான் வளக்குறோம்.

என்னதான் திமிராப் போக்குக் காட்டினாலும் அந்தக் காளையை என் பையன் ஈஸியா அடக்கிடுவான். ஆனா எங்க வீட்ல இருக்கிற கருப்பு கிட்ட அவனோட பாச்சா பலிக்காது. அது எனக்கு மட்டும் அடங்குற பாசக்கார புள்ள'' என்று நெகிழ்கிறார் ரஞ்சித் அம்மா.