Published:Updated:

உணர்வுகளின் சங்கமம்! - இது மனிதத்தின் திருவிழா

உணர்வுகளின் சங்கமம்! - இது மனிதத்தின் திருவிழா
பிரீமியம் ஸ்டோரி
உணர்வுகளின் சங்கமம்! - இது மனிதத்தின் திருவிழா

உணர்வுகளின் சங்கமம்! - இது மனிதத்தின் திருவிழா

உணர்வுகளின் சங்கமம்! - இது மனிதத்தின் திருவிழா

உணர்வுகளின் சங்கமம்! - இது மனிதத்தின் திருவிழா

Published:Updated:
உணர்வுகளின் சங்கமம்! - இது மனிதத்தின் திருவிழா
பிரீமியம் ஸ்டோரி
உணர்வுகளின் சங்கமம்! - இது மனிதத்தின் திருவிழா

மிழின் சிறந்த படைப்புகளை, படைப்பாளிகளைக் கொண்டாடவும், 2018-ன் டாப் 10 மனிதர்களையும் இளைஞர் களையும் அடையாளப்படுத்தவும் அங்கீகரிக்கவும் தோரணம் கட்டியது ‘ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழா.’ எழுத்தாளர்கள், திரைக்கலைஞர்கள், சமூகச் செயற் பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், ஊடகப் பிரபலங்கள் என ஏராளமான ஆளுமைகள் கலந்துகொண்ட விழாவின் சில துளிகள் இங்கே:

உணர்வுகளின் சங்கமம்! - இது மனிதத்தின் திருவிழா

இலக்கிய விருதுகளையும், டாப் டென் மனிதர்களையும் தொகுக்க முதலில் மைக் பிடித்தார்கள் ராஜ்மோகனும் வினோதினியும். டாப் டென் இளைஞர்கள் விருதுகளுக்கும், மீடியா விருதுகளுக்கும் ராஜ்மோகனோடு அனிதா சம்பத் சேர்ந்துகொள்ள, களைகட்டியது தொகுப்பாளர்களின் ஏரியா!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விகடன் முன்னெடுத்த நிவாரணப்பணிகளை விளக்கும் காணொலியோடு நிகழ்ச்சி தொடங்கியது. விகடனின் முயற்சியைக் கைதட்டி அங்கீகரித்தார்கள் பார்வையாளர்கள்.

அடுத்து ‘ஆன்ட்ராய்டு காலத்திலும் வேண்டாத சாதி, மதம்’ என்று ‘கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ குழுவினரின் ராப் இசையில் அரங்கம் அதிர்ந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உணர்வுகளின் சங்கமம்! - இது மனிதத்தின் திருவிழா

* சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான விருதை எழுத்தாளர் பாவண்ணனிடமிருந்து பெற்றுக்கொண்டார் எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி. ‘‘செவாலியே உட்பட பல விருதுகளை வாங்கியிருக்கிறேன். ஆனால், எல்லாவற்றுக்கும் மேலான விருதாக நான் கருதுவது இதைத்தான்’’ எனக் குரலில் உற்சாகம் தெறிக்கச் சொன்னார்.

* சிறந்த மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்பிற்கான விருதை சமயவேலுக்கு வழங்கியது கவிஞர்கள் கலாப்ரியாவும் ச.விஜயலட்சுமியும். இரண்டாம் உலகப்போரின் வலிகளை தமிழில் நமக்குக் கடத்திய சமயவேல், ‘விருதுக்கு நன்றி’ எனச் சுருங்கச் சொல்லி விடைபெற்றார்.

* சிறந்த வெளியீட்டிற்கான விருதை பிரமிள் படைப்புகளுக்காக பேராசிரியர் வீ.அரசுவிடமிருந்து பெற்றுக்கொண்டார் கால சுப்ரமணியம். “20 ஆண்டுகளில் நான் வாங்கும் முதல் விருது இது. இதன் மூலம் பிரமிளின் படைப்புகள் பரவலான வாசகர் வட்டத்தைச் சென்றடையும்’’ என மேடையில் நம்பிக்கை பகிர்ந்தார்.

உணர்வுகளின் சங்கமம்! - இது மனிதத்தின் திருவிழா

* சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான விருதை எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், கவிஞர் அறிவுமதி ஆகியோரிடமிருந்து பெற்றார் தமிழ்நதி. ‘‘இந்த விருதை என் அப்பாவுக்கும் எழுத்தாளர் பிரபஞ்சனுக்கும் சமர்ப்பிக்கிறேன்’’ என்ற அவரின் வார்த்தைகளில் கலந்திருந்தது நெகிழ்ச்சி. ‘‘முள்ளிவாய்க்கால் சோகத்தில் பாடல்கள் எழுதுவதை நிறுத்தினேன். இப்போது மீண்டும் இயக்குநர்கள் அழைத்தால் எழுதுவேன்’’ என மேடையில் அறிவித்தார் கவிஞர் அறிவுமதி.

* சிறந்த சிற்றிதழுக்கான விருதை வென்ற ‘இடைவெளி’ இதழின் ஆசிரியர் சிவ.செந்தில்நாதன் தன் குழுவோடு மேடையேறினார். விருதை வழங்கியது ‘ஆயிஷா’ நடராஜனும் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவும். ‘‘பாடப்புத்தகங்கள் இல்லாமலேயே சிறப்பாகப் பாடமெடுக்கமுடியும். ஆனால், நம்முடைய கல்விமுறை ஒரு வட்டத்திற்குள்ளேயே சுற்றிக்கொண்டிருக்கிறது’’ என வருத்தம் பகிர்ந்தார் ‘ஆயிஷா’ நடராஜன்.

உணர்வுகளின் சங்கமம்! - இது மனிதத்தின் திருவிழா

* சிறந்த சிறுவர் இலக்கியத்திற்கான விருதை கவிஞர் சுகிர்தராணி, எழுத்தாளர் விழியன் உமாநாத் ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொண்ட யெஸ். பாலபாரதி, ‘‘என் பையனுக்கு என்னால கதை சொல்ல முடியல. காரணம், அவனுக்கு ஆட்டிஸம். அதனால அந்தக் கதைகளை மத்த குழந்தைகளுக்குச் சொல்ல ஆரம்பிச்சேன். என்னை மாதிரி கதை சொல்லமுடியாத பெற்றோர்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்’’ எனச் சொன்னபோது அரங்கத்தில் கனத்த மெளனம் படர்ந்தது.

* சிறந்த மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பிற்காக விருது பெற்றார் வடகரை ரவிச்சந்திரன். விருதை வழங்கியது எழுத்தாளர் தமயந்தியும் இயக்குநர் நலன் குமரசாமியும். ‘‘ரஜினிக்கு எப்போ படம் பண்ணுவீங்க?’’ என ராஜ்மோகன் நலனிடம் கொக்கிபோட, ‘‘நான் கதைக்காக ஹீரோ தேடுற ஆள் சார்’’ என நழுவினார் நலன்.

உணர்வுகளின் சங்கமம்! - இது மனிதத்தின் திருவிழா

* சிறந்த கட்டுரைத்தொகுப்பிற்கான விருதை எழுத்தாளர் ஜெயராணியும் நாடகக் கலைஞர் பிரளயனும் வழங்க, பெருமிதத்தோடு பெற்றுக்கொண்டார் பா.பிரபாகரன். ‘‘என் அப்பாவோட நினைவுநாள்ல இந்த விருது கிடைச்சிருக்கு. அதனால இதை மனசுக்கு நெருக்கமா உணர்றேன்’’ என நெகிழ்ந்தார் பிரபாகரன்.

* கல்லூரி முதலாண்டு படிக்கும் மாணவரைப் போலவே இருக்கும் பெரு.விஷ்ணுகுமார் சிறந்த கவிதைத் தொகுப்பிற்கான விருதை மனுஷ்யபுத்திரனிடமிருந்தும் தொகுப்பாளர் கோபிநாத்திடமிருந்தும் பெற்றுக்கொண்டார். மனுஷிடம் எழுத்தாளர்கள் போட்டுக்கொள்ளும் சண்டை பற்றிக் கேட்க, ‘‘ஜி.நாகராஜன் சொல்வார், ‘மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்’னு. இது எழுத்தாளர்களுக்கும் பொருந்தும்’’ என சர்ச்சைக்குத் திரி கொளுத்தினார் மனுஷ்.

உணர்வுகளின் சங்கமம்! - இது மனிதத்தின் திருவிழா

* விகடன் வாசகர்களை இரண்டாண்டுக் காலம் தன் எழுத்தால் கட்டிப்போட்டிருந்த சு.வெங்கடேசன் ‘வேள்பாரி’க்காக சிறந்த நாவலுக்கான விருதைப் பெற்றுக்கொண்டார். ஆதவன் தீட்சண்யாவும் பேராசிரியர் சுப.வீரபாண்டியனும் அவருக்கு விருது வழங்கினார்கள். ‘‘இந்தத் தருணத்தில் நாம் தூக்கியெறியவேண்டியது சாதி. தூக்கிப்பிடிக்க வேண்டியது சமத்துவம்’’ என சுப.வீ சொல்ல, பலத்த கைத்தட்டல்கள் எழுந்தன. ‘‘பாரியைப் பற்றி ஒருசில வரலாற்றுக்குறிப்புகளே இருந்தன. அவற்றை வைத்து ஒரு படைப்பை உருவாக்கினேன்’’ என்ற சு.வெவின் குரலில் தென்பட்டது பிரமாண்ட உழைப்பிற்கான அறிகுறிகள்.

உணர்வுகளின் சங்கமம்! - இது மனிதத்தின் திருவிழா

* மொத்த இலக்கிய உலகமும் காத்துக்கிடந்த அந்த நிகழ்வு அடுத்ததாக மேடையில் அரங்கேறியது. தன் வாழ்நாளை நவீனத் தமிழ் இலக்கியத்திற்காக அர்ப்பணித்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியை கெளரவிக்கும் தருணமது. அவரை கெளரவிக்க ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், சு.வெங்கடேசன் என எழுத்தாளுமைகளும் நாடகக் கலைஞர் வேலு சரவணனும் வரிசையாக மேடையேறினார்கள். சுருங்கச் சொன்னால், மொத்தத் தமிழும் மேடையேறிய நிமிடம் அது. அரங்கில் இருந்தவர்கள் எழுந்து நின்று கைதட்ட, மெதுவாக மேடைக்கு வந்தார் எழுத்தாசான் இ.பா!

‘‘என் நாவலுக்கு ஒரு பிரச்னை வந்தபோது எனக்காகக் குரல்கொடுத்த என் ஆசிரியர் இவர்’’ என நெகிழ்ந்தார் சாரு. ‘‘தமிழில் பெருநகர் சார்ந்த எழுத்துகளை அறிமுகப்படுத்திய எழுத்தாளர் இவர்தான்’’ என நினைவுகூர்ந்தார் ஜெயமோகன். ‘‘வெண்மணித் துயரம் நடந்து 50 ஆண்டுகளாகின்றன. இன்றும் இவரது ‘குருதிப்புனல்’ அது தொடர்பான விவாதங்களை உயிர்ப்போடு வைத்திருக்கிறது’’ என்றார் சு.வெ. ‘‘இலக்கிய உலகத்தின் எல்லா விருதுகளுக்கும் தகுதியானவர் இவர்’’ என மகுடம் சூட்டினார் எஸ்.ரா. ‘‘இவர் ஒரு ஆலமரம். அதிலிருந்து தோன்றிய விழுதுகள் நாங்கள்’’ எனத் தழுதழுத்தார் மனுஷ். தனக்கும் தன் ஆசிரியருக்குமான நெருக்கத்தைப் பகிர்ந்துகொண்டார் வேலு சரவணன். 

உணர்வுகளின் சங்கமம்! - இது மனிதத்தின் திருவிழா

இறுதியாக இ.பா! தளர்ச்சி உடலுக்குத்தானே... தமிழுக்கேது? ‘‘இத்தனை பேர் சேர்ந்து என்னை கெளரவிப்பார்கள் எனத் தெரிந்திருந்தால் இந்த விழாவைத் தவிர்த்திருப்பேன். காரணம், இவ்வளவு பெருமைகளைப் பெற்றுக்கொள்ள கூச்சமாக இருக்கிறது. ஆனால், இந்த மேடையில் நிறைந்திருக்கும் அன்பின் நிமித்தம் கட்டுப்பட்டு நிற்கிறேன்’’ என அவர் பேச, உடனிருந்தவர்கள் மெல்லியதாகப் புன்னகைக்க, அந்தக் காட்சிகளை மொத்தமாகக் கண்களுக்கு விருந்தாக்கிக்கொண்டார்கள் பார்வையாளர்கள்.

* 2018-ன் டாப் 10 மனிதர்களுள் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு விருது வழங்கினார்கள் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல  அடிகளாரும் பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ்ஸும். அமர்நாத் ராமகிருஷ்ணா “ ‘வடநாட்டில் நடப்பதுபோல ஒரு நதிக்கரை வரலாற்றாய்வை நாமும் ஏன் முயலக் கூடாது’ என எங்களுக்குத் தோன்றியது. அந்த எண்ணம்தான் வைகைக் கரை முழுவதும் 293 இடங்களில் பழங்கால எச்சங்களைக் கண்டறிய வைத்தது’’ என, தன் அனுபவங்களைப் பகிர்ந்தார். அமர்நாத்தின் ஆய்வுப்பணிகளுக்குப் புகழாரம் சூட்டினார் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.

உணர்வுகளின் சங்கமம்! - இது மனிதத்தின் திருவிழா

* கண்ணகி நகரில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கல்விப் பயிற்சி வழங்கும் உமா வாசுதேவன் விருது பெற மேடையேறினார். அவருக்கு விருது வழங்கிய பேராசிரியர் கல்யாணி, ‘‘கல்வி தொடர்பான பகுத்தறிவு இல்லாத இருண்ட காலத்தில் இருக்கிறோம்’’ என, கவலை தொனிக்கப் பேசினார். விருதை வாங்கும்போது உமாவின் கண்களில் தளும்பியது நீர். ‘‘எனக்கு உமாங்கிறதுக்கு மட்டும்தான் இங்கிலீஷ்ல ஸ்பெல்லிங் தெரியும். பெயரின் பின்பாதி மகேஸ்வரிக்குத் தெரியாது. ஆனா, இன்னிக்கு என்னால 300 பசங்க படிக்கிறாங்க. அரசியல்வாதிங்க, போலீஸ்காரங்க எல்லாரோட தொல்லைகளையும் சமாளிச்சுதான் இந்த விஷயத்தைப் பண்ணிட்டிருக்கேன்’’ எனச் சொல்லும்போதே உடைந்தார்.

* நிகழ்வில் ஒரு பகுதியாக, பெண்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் `நிப்பான் பெய்ன்ட்’ நிறுவனத்தின் ‘NSakthi’ குறித்த காணொலி ஒன்று திரையிடப்பட்டது.

* இந்த ஆண்டிற்கான சாகித்ய விருது வென்ற எஸ்.ராமகிருஷ்ணனை கெளரவிக்க ஜெயமோகனும் சாருவும் கைகோத்தார்கள். விகடனுக்கும் தனக்குமான நெருக்கமான உறவை நினைத்துச் சிலாகித்தார் எஸ்.ரா. ஜெயமோகனும் சாருவும் இணைந்து தனக்கு விருது வழங்கிய மகிழ்ச்சி அவரது ஒவ்வொரு வார்த்தையிலும் பொதிந்திருந்தது. ‘‘நாங்கள் மூன்று பேரும் தமிழ் இலக்கியத்தின் மூன்று முக்கியப் போக்குகளை உருவாக்கியவர்கள். மூவரும் ஒரே மேடையில் நிற்பது இதுதான் முதல் முறை’’ என அவர் சொல்ல, கைதட்டி ஆமோதித்தார்கள் ஜெமோவும் சாருவும்.

உணர்வுகளின் சங்கமம்! - இது மனிதத்தின் திருவிழா

* தன் எண்ணங்களை ஒளிவுமறைவில்லாமல் எடுத்துரைக்கும் பிரகாஷ்ராஜுக்கு டாப் 10 மனிதருக்கான விருது வழங்கினார்கள் தொல்.திருமாவளவனும் இயக்குநர் பா.இரஞ்சித்தும். ‘கெளரி லங்கேஷின் அப்பா லங்கேஷ் என் ஆசான். எனக்கும் கெளரிக்கும் 30 ஆண்டுக்கால நட்பு. அவரின் படுகொலை என்னை மிகவும் பாதித்தது. அதன் வெளிப்பாடுதான் மதவாத பாசிசத்துக்கு எதிராக நான் உதிர்க்கும் கருத்துகள்’’ என உருக்கமாகச் சொன்னவரிடம் ஒரு பரபர கேள்வி-பதில் நிகழ்வை நடத்தினார்கள் தொகுப்பாளர்கள். திரையில் ஒரு படம் காட்டப்படும், அதற்கு ஒரு வரியில் பிரகாஷ்ராஜ் பதில் சொல்லவேண்டும்.

“பணமதிப்பு நீக்கம்?”

“வேலை தெரியாதவங்களை மேலே உட்கார வெச்சதோட விளைவு!”

“கலைஞர்?”

“ஐ ரியலி மிஸ் ஹிம்!”

“ஹெச்.ராஜா - சுப்பிரமணியன் சுவாமி?”

“நாங்க எல்லாம் சிங்கிள் ஆக்டிங். இவங்க நிஜத்துலயே டபுள் ஆக்ட் பண்றவங்க.”

பிரகாஷ்ராஜின் படபட பட்டாசுப் பதில்களால் அரங்கம் அதிர்ந்து அடங்கியது.

உணர்வுகளின் சங்கமம்! - இது மனிதத்தின் திருவிழா

* கால் நூற்றாண்டுக்கும் மேலாகக் களத்தில் மக்களுக்காகப் போராடும் மனித உரிமைப்போராளி பேராசிரியர் அ.மார்க்ஸுக்கு சிறந்த மனிதருக்கான விருதை வழங்கினார்கள் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பாளர் தொல்.திருமாவளவனும், பெரியார் பெருந்தொண்டர் வே.ஆனைமுத்துவும். ‘‘நாங்கள் மூவரும் பெரியாரின் வழி நிற்பவர்கள்’’ எனப் பெருமையாக உரைத்தார் ஆனைமுத்து. ‘‘விகடனின் வழியாகத்தான் எனக்கு முதன்முதலில் இலக்கியப் பரிச்சயம் ஏற்பட்டது. கருத்துரிமைக்காகப் போராடவேண்டிய தருணத்தில் இருக்கிறோம். இந்த நேரத்தில் வழங்கப்படும் இந்த விருது என்னை மேன்மேலும் சிறப்பாகச் செயல்படவைக்கும்’’ என்று நெகிழ்ந்தார்
அ.மார்க்ஸ்.

* சதுப்பு நில ஆக்ரமிப்புகளுக்கு எதிராகப் போராடும் ஈஞ்சம்பாக்கம் சேகருக்கு சிறந்த மனிதர் 2018-க்கான விருதை வழங்கினார்கள் நடிகர் நாசரும் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனும். பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் போன்ற பகுதிகளில் நடந்த சதுப்புநில ஆக்கிரமிப்புகள் தொடர்பான ஆவணங்களை மேடையில் கொண்டுவந்து காட்டினார் சேகர். அவரை உற்சாகமூட்ட அவருக்குப் பிடித்தமான சைக்கிள் ஆனந்த விகடன் சார்பில் பரிசளிக்கப்பட்டது.

உணர்வுகளின் சங்கமம்! - இது மனிதத்தின் திருவிழா

* சாந்தி அருணாசலத்துக்கு விருது வழங்க மேடையேறிய பா.ஜ.க தலைவர் தமிழிசையிடம் கேள்விகளைக் கேட்டுக் குவித்தார்கள் தொகுப்பாளர்கள். ‘சிறந்த கதாநாயகன்’ என்ற கேள்விக்கு மோடி என்றும் ‘சிறந்த வில்லன்’ என்ற கேள்விக்கு பிரகாஷ் ராஜ் என்றும் பதில் சொல்லி, தன் கோபத்தைத் தணித்துக்கொண்டார். ‘எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாங்க’ விருதைத் தனக்குத்தானே பரிசளித்துக்கொண்டார். ‘‘சில ஊடகங்கள்ல வர்றமாதிரி மனநல மருத்துவமனைகள் மோசமானதில்ல. அது ஒரு புண்ணிய பூமி. அங்கே இருப்பவர்களும் மனிதர்கள்தான்’’ என, தன் ஆதங்கத்தைப் பதிவு செய்தார் சாந்தி அருணாசலம். அவருக்கு தமிழிசை சூட்டிய ‘வெள்ளுடை தேவதை’ பட்டம் பக்கா பொருத்தம்!

* அற்புதம் அம்மாள், நாசர் கைகளால் விருது பெற்று நெகிழ்ந்தார் விஜய் சேதுபதி. ‘‘என் பையனோட வாழ்க்கை ஒரு கையெழுத்துல நிக்குது. நாங்க கொண்டாடுற ஒரே பண்டிகை பொங்கல்தான். அதையும் 28 வருஷமா கொண்டாடலை. இந்த வருஷம் என் மகனோடு கொண்டாட நினைக்கிறேன்’’ என ஏக்கப்பெருமூச்சு விட்டார் அற்புதம் அம்மாள். அரங்கம் அவரின் வருத்தத்தில் பங்கெடுத்துக்கொண்டது.

உணர்வுகளின் சங்கமம்! - இது மனிதத்தின் திருவிழா

‘‘அறவழியிலதானேங்க போராடுறாங்க. இதுக்குமேல என்ன பண்ணணும்? இதுக்கு மேலயும் சத்தமா கத்தணுமா? அம்மாக்களோட பாசம் என்னன்னு ஆளுநருக்கும் தெரியும்தானே? அற்புதம் அம்மாவோட சத்தம் கேட்காதவங்க சபிக்கப்பட்டவங்க’’ என அனல்தெறிக்கப் பேசிய விஜய் சேதுபதி அரசியல்வாதிகளுக்குத் தன் ஸ்டைலில் குட்டிக்கதை சொல்லவும் தவறவில்லை. அதன்பிறகு அவருடன் நடந்த ஓர் உரையாடல் பொழுதில், தேனிப் பகுதிகளில் மலைகளைக் குடையும், இயற்கை விரோதப்போக்கை நேரடியாகவே கண்டித்து, அதைத் தடுக்கும்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு,  வேண்டுகோள் விடுத்தபோது அரங்கத்தில் அப்ளாஸ்!

* கடந்த ஆண்டு கிரிக்கெட்டில் முத்திரை பதித்த தமிழரான தினேஷ் கார்த்திக் சார்பில் அவரின் அம்மா விருதைப் பெற்றுக்கொண்டார். ஆஸ்திரேலியாவிலிருந்து விகடனுக்கு நன்றி தெரிவித்தும் பிற விருதாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும் தினேஷ் கார்த்திக் அனுப்பிய வீடியோ மேடையில் ஒளிபரப்பப்பட்டது.

உணர்வுகளின் சங்கமம்! - இது மனிதத்தின் திருவிழா

* அன்பும் நெகிழ்ச்சியும் நிறைந்திருந்த அரங்கில் தூத்துக்குடியில் உயிரிழந்த போராளிகளின் குடும்பங்கள் மேடையேறியபோது வெறுமையும் அழுகுரல்களும் சூழ்ந்தன! உயிரிழந்தவர்கள் பற்றிய காணொலி மேடையில் ஒளிபரப்பானபோதே கீழே அமர்ந்திருந்தவர்கள் உடைந்துவிட்டிருந்தனர். மேடையேறிய மூதாட்டிகள் சிலர் கதறியழ, அனைவரின் கண்களிலும் உடைந்து கொட்டியது கண்ணீர்.

தோழர் நல்லக்கண்ணு, அவர்களுக்கு விருது வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், விருது வாங்கக் கூட அந்த எளியவர்களிடம் திராணியில்லை. துயரத்தின் சாயல் இன்னமும் அவர்களிடம் நீங்கவில்லை. ‘‘எல்லாருக்கும் இந்த மேடைல பகிர்ந்துக்க சந்தோஷம் இருந்தது. ஆனா, எங்களுக்கு பகிர்ந்துக்க கண்ணீர் மட்டும்தாங்க இருக்கு’’ என உடைந்த குரலில் ஸ்னோலினின் அம்மா சொன்னபோது ஆற்றுப்படுத்த முடியாமல் துடித்தன மனங்கள். ‘‘எங்க கண்ணீருக்குக் காரணமானவங்க நிச்சயம் பதில் சொல்லியே ஆகணும்’’ என 11 பேரின் குடும்பத்தாரும் சொன்னபோது காற்றில் கரைந்துபோனவர்களும் ஆமோதித்திருப்பார்கள். அவர்கள் மேடையிலிருந்த நிமிடங்கள் முழுதும் விஐபிகள் உட்பட அரங்கிலிருந்த பார்வையாளர்கள் மனம் உடைந்து எழுந்து நின்று மரியாதை செலுத்தியவண்ணமே இருந்தனர். மேடையிலிருந்து அனைவரும் இறங்கிய வெகுநேரத்திற்குப் பின்னும் சூழலில் உப்பு கலந்த ஈரப்பதம் தேங்கியிருந்தது.

உணர்வுகளின் சங்கமம்! - இது மனிதத்தின் திருவிழா

* கொத்தடிமை முறைக்கு எதிராகப் போராடும் அருள்தாஸ், 2018-ன் டாப் 10 இளைஞர் விருதைப் பெற்றுக்கொள்ள மேடையேறினார். அவருக்கு விருது வழங்கிய முகிலன், ‘‘ஒரு வருஷம் சிறையில இருந்ததுகூட வலிக்கல, தூத்துக்குடிப் படுகொலைகள்தான் அதைவிட ரொம்ப வலிச்சது’’ என வலிநிறைந்த குரலில் சொன்னார். ‘‘மேதா பட்கர் உள்ளிட்ட தோழர்களுக்கு நன்றி. பெரியார், அம்பேத்கர் வழியில் தொடர்ந்து பயணிப்பேன்’’ என்றார் அருள்தாஸ் உறுதியான குரலில்.

* தன் கல்லூரி சீனியரான, ஓவியர் சந்தோஷ் நாராயணனுக்கு பொன்வண்ணனுடன் இணைந்து விருது வழங்கினார் இயக்குநர் பா.இரஞ்சித். ‘‘என்னை இலக்கியத்துக்கு அறிமுகப்படுத்தியது சந்தோஷ் அண்ணன்தான். அந்த இலக்கியப் பரிச்சயம்தான் என்னை இப்போ இந்த மேடை வரை கொண்டுவந்து நிக்க வெச்சிருக்கு’’ என அண்ணன் மேல் பாசம் பொழிந்தார் தம்பி இரஞ்சித்.

உணர்வுகளின் சங்கமம்! - இது மனிதத்தின் திருவிழா

*  பன்மெய்ப்புல சவால் கொண்ட நிவேதாவுக்கு விருது வழங்கினார் செளம்யா அன்புமணி. “முதல்வர் வேட்பாளராக நின்ற அன்புமணி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிற்பாரா?” என்ற, தொகுப்பாளர் ராஜ்மோகன் கேள்விக்கு, “அவருக்கு நிச்சயம் அதற்கான தகுதியிருக்கு” என்று சாமர்த்தியமாகப் பதிலளித்தார் சௌம்யா அன்புமணி.  விருதுபெற வந்த நிவேதா, ‘‘அனைவருக்கும் வணக்கம். என் பெயர் நிவேதா. விருது வழங்கிய விகடனுக்கு நன்றி’’ எனத் தன் மொழியில் நிவேதா சொல்ல, அதை அவரின் அம்மா மொழிபெயர்க்க, மென்சோகக் கவிதை அந்தக் காட்சி! `Astra Hearing Care’ சார்பில், சாதனை புரிந்த மாற்றுத் திறனாளிகள் குறித்த ‘மாண்புமிகு திறனாளிகள்’ என்ற வீடியோவும் அப்போது வெளியிடப்பட்டது. 
 
* `ஒரசாத...’ ஒற்றைப் பாடலில் தமிழகத்தை ஆடவைத்த விவேக் - மெர்வினுக்கு விருது வழங்கினார் மால்குடி சுபா. விருது வழங்கிய கையோடு அவர் பாடிய குத்துப்பாடலுக்கு எகிறிக்குதித்து வரவேற்பளித்தார்கள் பார்வையாளர்கள்.

உணர்வுகளின் சங்கமம்! - இது மனிதத்தின் திருவிழா

* ‘96’-ல் நம் மனதைக் கொள்ளைகொண்ட கோவிந்த் வஸந்தாவிற்கு விருது வழங்கினார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். நேயர்களின், தொகுப்பாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க வயலினைக் கையிலெடுத்தார். ‘என்னவளே அடி என்னவளே’வில் தொடங்கி, ‘இளங்காத்து வீசுதே’வை வருடி, ‘தென்றல் வந்து தீண்டும்போது’வைத் தொட்டு இறுதியாக ‘காதலே காதலே’ என அவர் இறங்கியபோது சிலிர்த்துப்போய்க் கைதட்டினார்கள் பார்வையாளர்கள்.

* மண்ணுக்காக, மணலுக்காகப் போராடும் இசை என்கிற ராஜேஸ்வரிக்கு 2018-ன் டாப் 10 இளைஞர் விருதை வழங்கினார் தோழர் பாலபாரதி. ‘‘ஆணாதிக்கம்ங்கிறது வீட்டுல மட்டுமல்ல, போராட்டக்களத்துலயும் இருக்கும். ஆனா, இனி நிலைமை மாறும், பெண்கள் போராட்டத்தை முன்னெடுப்பாங்க’’ என நம்பிக்கை வார்த்தைகள் உதிர்த்தார் இசை.

* குழந்தைகளுக்கான பாரம்பர்ய விளையாட்டுலகத்தை மீள் உருவாக்கம் செய்திருக்கும் இனியனுக்கு எழுத்தாளர் பாஸ்கர் சக்தி விருது வழங்கினார். குழந்தைகள் உலகில் தன் பயணம் குறித்துப் பகிர்ந்துகொண்டார் இனியன்.

உணர்வுகளின் சங்கமம்! - இது மனிதத்தின் திருவிழா

* நக்கல் மன்னர்களான ‘பிளாக் ஷீப்’ குழுவுக்கு விருதளித்தது மீம் நாயகர்களுக்குப் பிடித்தமான நாஞ்சில் சம்பத். ஒரு கிராமமே கிளம்பிவந்ததைப் போல இருந்தது அந்தக் குழு மேடையேறியபோது. ரகளையும் அரட்டையுமாகப் பேச்சைத் தொடங்கியவர்கள் முடிக்கும்போது, மறைந்த நண்பனுக்கு விருதை சமர்ப்பிப்பதாகச் சொல்லி நெகிழ வைத்தார்கள். தொகுப்பாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தன் ஸ்டைலில் பதில் சொல்லி அசத்தினார் நாஞ்சில் சம்பத்.

* ஆயிரக்கணக்கான யாசகர்களை மறுவாழ்வை நோக்கிச் செலுத்திய நவீன் தனக்கான விருதை எழுத்தாளர் பாக்கியம் சங்கரின் கரங்களிலிருந்து பெற்றுக்கொண்டார். தன்னால் மீட்கப்பட்டவர்களோடு அவர் மேடையேறியதும், அவர்கள் தங்களின் அனுபவக்கதைகளைப் பகிர்ந்து கொண்டதும் வாஞ்சையான தருணங்கள்.

உணர்வுகளின் சங்கமம்! - இது மனிதத்தின் திருவிழா

* `Let’s Make Engineering Simple’ சேனலின் பிரேமானந்த் சேதுராஜனுக்கு விருது வழங்கினார் விகடனின் நிர்வாக இயக்குநரும் ஆனந்த விகடனின் ஆசிரியருமான பா.சீனிவாசன். “ அமெரிக்கா போனப்போ ‘ உங்க ஊரில் ஸ்கூல், காலேஜ்ல இதெல்லாம் சொல்லித்தரலையா’ங்கிற கேள்வியை அடிக்கடி எதிர்கொள்ள வேண்டியிருந்துச்சு. அதைத் தவிர்க்க திரும்ப எல்லாத்தையும் படிச்சேன். அதை இப்போ மத்தவங்களுக்குச் சொல்லிக்கொடுக்கிறேன்’’ என்றார் பிரேமானந்த்.

* சிறந்த தொகுப்பாளருக்கான விருதைத் தன் ஆருயிர் அண்ணன் கோபிநாத் கையால் பெற்றுக்கொண்டார் மா.கா.ப. ‘‘இதுக்கு முன்னாடி ஒரு தடவை ஆர்.ஜேவா விகடன் விருது வாங்கினேன். இப்போ வி.ஜேவா வாங்குறேன்’’ என ஃப்ளாஷ்பேக் ஓட்டினார் மா.கா.ப.

* சிறந்த ரியாலிட்டி ஷோவுக்கான விருதை பாடகர்கள் உன்னி கிருஷ்ணனும் அனுராதா ஸ்ரீராமும் வழங்க விஜய் டிவியின் சார்பில் பிரதீப் மில்ராய் பீட்டரும் பிரவீனும் பெற்றுக்கொள்ள, சூப்பர் சிங்கர் சார்பில் நிகழ்ச்சி இயக்குநர் ரெளஃபாவும் பிரதிமாவும் பெற்றுக்கொண்டார்கள். 

உணர்வுகளின் சங்கமம்! - இது மனிதத்தின் திருவிழா

* சிறந்த தொகுப்பாளினி விருதுபெற தன் மகளோடு மேடையேறினார் அர்ச்சனா. லிவிங்ஸ்டனும் ஃபாத்திமா பாபுவும் அவருக்கு விருதை வழங்கினார்கள். ‘‘என்னோட 18 ஆண்டுக்கால ஏக்கத்துக்குக் கிடைச்ச பரிசு இந்த விருது’’ என அர்ச்சனா சொல்ல, கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள் ரசிகர்கள்.

* டிஸ்கவரி கிட்ஸுக்கு சிறந்த தொலைக்காட்சி சேனலுக்கான விருது வழங்கப்பட்டது. ‘‘சூப்பர்ஸ்டார்கள் கொண்டாடப்படும் மேடையில் எங்களையும் கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களின் சேனல் மிகவேகமாக வளர்ந்து வருகிறது’’ எனப் பெருமையோடு பகிர்ந்துகொண்டார் சேனல் நிர்வாகி உத்தம்சிங்.

* சிறந்த நெடுந்தொடருக்கான விருதை ரக்‌ஷிதா - தினேஷ் இணையிடமிருந்து பெற்றுக்கொண்டார்கள் ‘செம்பருத்தி’ குழுவினர். ‘‘சீரியல் பண்றது அவ்வளவு ஈஸியெல்லாம் இல்லைங்க’’ என விருது வழங்கியவர்களும் வாங்கியவர்களும் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.

* சிறந்த பண்பலைத் தொகுப்பாளினிக்கான விருது பெற மேடையேறினார் மிர்ச்சி சாரு. இயக்குநர் திருச்செல்வம் அவருக்கு விருது வழங்கினார். ‘‘என் அப்பா அம்மாவுக்கும் நண்பர்களுக்கும்தான் இந்த விருது போய்ச் சேரும்’’ எனக் கலகலப்பாகச் சொன்னார் சாரு.

உணர்வுகளின் சங்கமம்! - இது மனிதத்தின் திருவிழா

* இயக்குநர் கவிதா பாரதி கையால் சிறந்த பண்பலைத் தொகுப்பாளருக்கான விருதைப் பெற்றார் ரேடியோ சிட்டியின் கார்த்திக் பாலா. ‘‘பல வருஷமா விகடன் வாசிக்கிற குடும்பம் எங்களோடது. இப்போ அந்த விகடன்ல இருந்தே எனக்கு ஒரு அங்கீகாரம்’’ என, கார்த்திக் பாலா சொல்ல, கீழே இருந்து கைதட்டி ஆமோதித்தது அவரின் குடும்பம்.

* இன்றைய தொகுப்பாளர்களின் முன்னோடியான விஜயசாரதி சிறந்த பண்பலைக்கான விருதை ரெயின்போ எஃப்.எம் குழுவிற்கு வழங்கினார். ‘‘சென்ற ஆண்டு கோடை பண்பலைக்கும், இந்த ஆண்டு எங்களுக்கும் சிறந்த பண்பலைக்கான விருதை வழங்கி அழகு பார்க்கிறது விகடன்’’ என ஒருமித்த குரலில் சொன்னார்கள் பண்பலைக் குழுவினர்.

* கலைநிகழ்ச்சிகளும் `நம்பிக்கை விருதுகள்’ விழாவுக்குப் பெரும்பலம் சேர்த்தது. சமீபத்திய ஹிட் பாடல்களுக்கு பிந்துமாதவி ஆடிய ஆட்டமும் ஹிட். ‘ஆளப்போறான் தமிழன்’, ‘தமிழன்டா’ பாடல்களுக்கு நவரசம் காட்டினார் ரம்யா நம்பீசன். அந்தோணி தாசன் இந்த விழாவுக்காகவே ‘பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் போராட்டம்...’ என்ற  பாடலை எழுதிப் பாடினார். இறுதியாக, பரியேறும் பெருமாளின் ‘எங்கும் புகழ் மணக்க’ பாடலை மாரியப்பனுடன் இணைந்து அந்தோணி தாசன் பாட, வண்ணாரப்பேட்டை தங்கராஜ் ஆட, ஆர்ப்பரித்தது அரங்கம்.

நித்திஷ் - படங்கள்: விகடன் டீம் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism