Published:Updated:

சரிகமபதநி டைரி - 2018

சரிகமபதநி டைரி - 2018
பிரீமியம் ஸ்டோரி
சரிகமபதநி டைரி - 2018

சரிகமபதநி டைரி - 2018

சரிகமபதநி டைரி - 2018

சரிகமபதநி டைரி - 2018

Published:Updated:
சரிகமபதநி டைரி - 2018
பிரீமியம் ஸ்டோரி
சரிகமபதநி டைரி - 2018
சரிகமபதநி டைரி - 2018

“மார்கழியில் நான்கு வருடத்துக்குப் பிறகு சென்னையில் பாடுகிறேன். அனைவரும் திரண்டு வாரீர்..!’’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் முன் அறிவிப்பு செய்துகொண்டார் டி.எம்.கிருஷ்ணா. இவர், எல்லா மார்கழிகளிலும் எல்லா சபாக்களிலும் பாட வேண்டும் என்பதுதான் சார்பற்ற இசைப் பிரியர்களின் விருப்பம். இவர்களுக்கு, `பேட்ட’, `விஸ்வாசம்’ இரண்டும் வேண்டும்; `சபாஷ்... சரியான போட்டி!’ என்று மகிழவேண்டும்.

சரிகமபதநி டைரி - 2018

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முத்தா வெங்கடசுப்ப ராவ் அரங்கில் கச்சேரி. கிருஷ்ண விசிறிகள், கப்பல் மாதிரியான கார்களில் வந்து இறங்கியவண்ணம் இருந்தார்கள் (அது நிதி திரட்டல் கச்சேரி). பெரிய அரங்கம் நிரம்பியவண்ணம் இருந்தது.

இரண்டு தம்புராக்கள், ஒரு வயலின் (டாக்டர் ஹேமலதா), இரண்டு மிருதங்கம் (டெல்லி சாய்ராம், பிரவீன் ஸ்பார்ஷ்), ஒரு கஞ்சிரா (புருஷோத்தமன்)... நடுவே கிருஷ்ணா. இவர் பாடினால் ஒரு மிருதங்கத்துக்கே அதிகம் வேலை இருக்காது... இரண்டு எதற்கு?

சரிகமபதநி டைரி - 2018`நலந்தாவே’ ஏற்பாடு செய்திருந்த இந்தக் கச்சேரியில், பட்டியலைத் தலைகீழாகப் புரட்டிப்போடாமல் சம்பிரதாயமாகப் பாடினார் டி.எம்.கிருஷ்ணா. வர்ணத்தை நடுவே எங்கேயும் புகுத்தவில்லை. வயலினை ஒரு ராகத்தில் தானம் வாசிக்கச் சொல்லிவிட்டு, இவர் வேறொரு ராகத்தில் கீர்த்தனையைப் பாடவில்லை. முக்கியமாக, அவரை எதிர்ப்பவர்களைச் சீண்டும்வகையில் எந்தப் பாடலும் இல்லை!

பிருந்தாவனசாரங்காவில் `ஸ்ரீரங்கபுர...’, காம்போதியில் `திருவடி சரணம்...’, முகாரியில் `க்ஷீணமை...’ எல்லாமே சவுக்க காலத்தில், அதாவது ஸ்லோ டெம்ப்போவில். இன்று காலை வண்டி ஏறினால் நாளை பகல் திருச்சி சென்றடையலாம். மிருதங்கம், கஞ்சிரா `தனி’யில் தாராளமாகக் கொடுத்துவாங்கினார்கள். `அழுதேன்... குமுறி வெடிக்க அழுதேன்..!’ என்ற பெருமாள் முருகனின் கவிதை வரிகளை விருத்தமாகப் பாடிவிட்டு, கோபாலகிருஷ்ண பாரதியின் `இரக்கம் வராமல் போனதென்ன...’ பாடலை உருக்கமாகப் பாடினார் கிருஷ்ணா.

சிலிர்க்கவைத்த க்ளைமாக்ஸ். மேடைக்கு இரு பக்கங்களும் நின்றுகொண்டு பாடிய சிறுவர்களும் சிறுமிகளும் ஏழைத்தொழிலாளர்களின் வாரிசுகள். ரவீந்திரநாத் தாகூரின் வங்கமொழிப் பாடல் உட்பட இவர்கள் பாடியது நான்கு பாடல்கள். டி.எம்.கிருஷ்ணாவும் உடன் இணைந்து பாடினார். கமாஸ் ராகத்தில் பூச்சி சீனிவாச அய்யங்கார் மற்றும் லால்குடி ஜெயராமன் இயற்றிய இரண்டு தில்லானாக்களை உரையாடும்விதமாக இவர்கள் மாறிமாறிப் பாடியது, சிகரம்!

சரிகமபதநி டைரி - 2018

நலந்தாவேயின் சென்னை Childrens’ choir-ஐ சேர்ந்த இவர்களுக்கு, ஒவ்வொரு ஞாயிறன்றும் கர்னாடக இசை சொல்லிக்கொடுத்து வருகிறார்கள், `கிடார்’ வேதாந்த் பரத்வாஜ் மற்றும் மஞ்சுளா. தன்னுடைய கச்சேரிக்காக இவர்களுடன் ஐந்து முறை பிராக்டீஸ் செய்தாராம் டி.எம்.கிருஷ்ணா. சொல்லிக்கொடுத்ததை நெருப்பு மாதிரி பிடித்துக்கொண்டு, பேப்பர் பார்க்காமல் பாடினார்கள். கேட்டுச் சிலிர்த்தார்கள் பார்வையாளர்கள்.

``இசைக்கலைஞர்கள் இருவர் இணைந்து 25 வருடகாலம் ஒரு சபாவைத் தொடர்ந்து நடத்துவது பெரிய சாதனை’’ என்று பூரித்துப்போன முத்ரா பாஸ்கர், மிருதங்க வித்வான். இவரின் மனைவி ராதா பாஸ்கர், பாடகியாகவும் இசை ஆராய்ச்சியாளராகவும் பிரபலம். அடுத்த டிசம்பரில் தடபுடல் வெள்ளிவிழாவுக்குத் தயாராகிக்கொண்டி ருக்கிறது முத்ரா.

சரிகமபதநி டைரி - 2018

நடந்துமுடிந்த சீஸனில் இங்கே சிறப்பு நிகழ்வாக, எல்.சங்கர் டபுள் வயலின், ராஜேஷ் வைத்யா வீணை. பக்கவாத்தியமாக பாடகர்கள் பலருக்கும், சகோதரர்கள் எல்.வைத்தியநாதன், எல்.சுப்ரமணியத்துடன் இணைந்தும் வயலின் வாசித்திருக்கிறார் எல்.சங்கர். பிறகு, அமெரிக்காவில் கலிபோர்னியாவுக்குப் புலம்பெயர்ந்தார். உலகளவில் புகழ்பெற்று விளங்கும் `சக்தி’ குழுவைத் தொடங்கிய இருவரில், எல்.சங்கரும் ஒருவர். சமீபகாலமாக இந்தியா திரும்பி, பாலக்காட்டிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் காட்டுக்குளம் எனும் இடத்தில் உள்ள சிவன் கோயிலில் வாசம். கோயிலை நிர்மானித்த குருஜி, திருமேனியுடன் இருக்கிறாராம்! அங்கே க்ளாஸ் எடுக்கிறார். கச்சேரி இருக்கும் சமயங்களில் மட்டும் கலிபோர்னியா பயணம்.

திரை மேலேறிக்கொண்டிருக்கும்போது அரை இருட்டில் எல்.சங்கர், மார்கழிக் குளிருக்குக் காதுகளை மூடி மப்ளர் அணிந்திருப்பதுபோலவே தோன்றியது. அது தோள் வரை நீளும் மிக நீண்ட தலைமுடி என்பது, மேடையில் முழு வெளிச்சம் பரவிய பிறகு தெரிந்தது.

சாவித்திரி ராகத்தில் ஓர் உருப்படியுடன் கச்சேரியை ஆரம்பித்தார்கள் சங்கரும் வைத்யாவும். பல சமயங்களில் டபுள் வயலின், வீணை மாதிரியும்... வீணை, டபுள் வயலின் மாதிரியும் ஒலித்தன! ரொம்ப நேரத்துக்குக் காபி ராகத்தை விரிவாக வாசித்து வித்தை காட்டினார்கள் இருவரும். அது நுரை தளும்பிய கேப்பசீனோ! சங்கர், காபியில் தானம் வாசித்துக்கொண்டிருந்தபோது, கேன்டீனிலிருந்து ஒருவர் காபி எடுத்து வந்து மேடையில் வைத்தது, பக்கா டைமிங்!

மேற்கத்திய இசைக்கருவி என்பது, வயலினுக்கு முகவரி. இதை இந்திய சாஸ்த்ரீய சங்கீதத்துக்கு சுவீகரித்துக்கொண்டு தலைமுறைகள் பல கடந்துவிட்டன. ஆனால், வயலினை ஐரோப்பிய வாசத்துடன் இன்று வரை வாசித்துவருபவர்கள், கணேஷ் - குமரேஷ் சகோதரர்கள்.

நாரதகான சபாவில் உடன்பிறப்புகளின் கச்சேரி. இருபது வயலின்கள் இணைந்துவிட்டது மாதிரியான சூழலை, இரண்டு வயலின்களில் ஏற்படுத்தி, சகோதரர்கள் வாசிக்கும் வேகம் பிரமிப்பானது!

ரசிகப்ரியாவில் சொந்தச் சரக்கை இசைத்தார்கள். நடுவே கிரகபேதமாக மாயாமாளவகெளள. ஸ்வரங்களுக்குள் புகுந்தபோது ரசிகப்ரியாவில் எதையும் மிச்சம் வைக்கவில்லை. அதேபோல், பேகடாவில் இருவரும் பங்குபோட்டு ஆலாபனை. தானம். ஸ்வர ராகமாலிகையில் தன்யாசி, ஸாவேரி, ரஞ்சனி, ரேவதி, அமிர்தவர்ஷினி என பல ராகங்களின் குடியரசு தின மார்ச் பாஸ்ட்!

வயலினில் இவர்கள் வாசிக்கும் வேகத்துக்கு சென்னை - மதுரை புதிய `தேஜஸ்’ அதிவிரைவு ரயிலால் ஈடுகொடுக்க முடியுமோ!

சரிகமபதநி டைரி - 2018

சிலபல காரணங்களால், சுயதடை விதித்துக்கொண்டு இரண்டு, மூன்று மாதங்கள் மேடையேறி வாசிக்காமலே இருந்தார் அவர். ஒப்புக்கொண்ட கச்சேரிகளை ரத்துசெய்தார். மார்கழி மாதம் 22-ம் நாள் தடையைத் தளர்த்திக்கொண்டு மதுரத்வனிக்காக ஆர்.கே.கன்வென்ஷன் மையத்தில் மேடையேறினார் சித்ரவீணை ரவிகிரண். நாகை ஸ்ரீராம், கே.வி.பிரசாத், பி.புருஷோத்தமன் என்று வலிவுமிக்க பக்கவாத்தியக் கூட்டணி.

ஒரு மாதத்துக்கு மேலாக, காட்டுக் கத்தலாகவும், நகரக் கூச்சலாகவும் கச்சேரிகள் பல கேட்டுவிட்ட காதுகளுக்கு, ஆறுதலான சுடுநீர் ஒத்தடம் ரவிகிரணின் சித்ரவீணை. கைகுலுக்கும் தொலைவில் அமர்ந்து வாசிப்பதைப் பார்த்தபோதுதான் வித்வான் கொடுக்கும் effort புரிந்தது. கன்னச் சதைகளும், தோள்கள் இரண்டும் குலுங்க, வலதுகை விரல்களும் இடதுகையும் ஓயாமல் இயங்க, தொடைகள் தாளம்போட, பிறக்கும் இசை இந்தப் பிறவிக்கலைஞனின் புகழ் பேசுகிறது!

ஸ்ரீராக வர்ணத்துக்குப் பிறகு, `யாருக்காகிலும் பயமா...’ என்ற சுப்பராம ஐயர் இயற்றிய பேகடா ராக பதம் வாசித்தார். `ஆதிசேடன்மீது பள்ளிகொண்டவனும், அகஸ்தியரைப் பாலித்தவனுமாகிய பகவான், என்னைக் காப்பாற்றட்டும்...’ என்று பொருள்படும் `பணிபதி சாயீமாம் பாது...’ ஜங்காரத்வனி ராகப் பாடல் அடுத்தபடியாக. பதமோ, பாடலோ ஏற்கெனவே வாசித்து உருப்போட்டு வைத்திருப்பவர்கள், ரவிகிரண் வாசிக்கும்போது அவற்றைக் கூடவே பாடி வர முடிவது, கலைஞனின் ஸ்பெஷாலிட்டி!

கச்சேரி முழுவதும் வயலினில் ஸ்ரீராமும், மிருதங்கத்தில் பிரசாத்தும், கஞ்சிராவில் புருஷோத்தமனும் ரவிகிரண் கூடவே பாடுவது மாதிரி வாசித்துவந்தது கிரேட்!

சித்ரவீணையில் இடதுகையால் தந்திகளைத் தள்ளித் தள்ளி வாசிக்கும் பொருளை `கட்டை’ என்கிறார்கள். கோட்டுவாத்தியம் சகாராம ராவ் இதை `கோட்டு’ என்பாராம் கேஷுவலாக! அவர் வாசித்த இசைக்கருவி `கோட்டுவாத்தியம்’ என்று அழைக்கப்பட்டதற்கும் இதுவே காரணமாம்! வழக்கமாக, கருங்காலி மரம் அல்லது காட்டு எருமையின் கொம்புதான் இந்தக் `கட்டை’ தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. 1980-களின் இறுதியில் விஞ்ஞானி ஒருவரின் அறிவுறுத்தலின்படி வெள்ளை நிற Teflon கட்டையைத்தான் ரவிகிரணும் வேறு பலரும் பயன்படுத்துகிறார்கள். தற்போது Delrin என்ற கறுப்பு நிறக் கட்டையையும் பயன்படுத்தி, நாதத்தில் வேறுபாடு காட்டிவருகிறார் ரவிகிரண்.

சண்முகப்ரியாவில் ராகமும் தானமும் வாசித்துவிட்டு சப்தஸ்வராஷர பல்லவி வாசித்தார். இதில் ஏழு ஸ்வரங்களும் ஏறுமுகமாகவே இருக்குமாம். மைக்கில் ரவிகிரண் அறிவிக்க, புரியாமலேயே புரிந்தது மாதிரி தலையாட்டிய சிலரில் yours trulyயும் உண்டு!

முடிப்பதற்கு முன்னால் வாசிக்கப்பட்ட சிந்துபைரவி ராக தில்லானா, கேட்பதற்கு வித்தியாசமாக இருந்தது. ஊத்துக்காடு வேங்கடகவி இயற்றியது இது. தில்லானா என்ற ஒன்றை முதன்முதலாக உருவாக்கியவர்களில் வேங்கடகவியும் ஒருவர். ``ஒருவேளை, தில்லானாவை முதலில் கண்டறிந்தவர் அவராகக்கூட இருக்கலாம்” என்றார் ரவிகிரண்.

சங்கீத கலாநிதி சொன்னால் சரியாகத்தான் இருக்கும்!

- டைரி புரளும்...

வீயெஸ்வி - படங்கள்: சு.குமரேசன், பா.காளிமுத்து  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism