Published:Updated:

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி-20 கிரிக்கெட் போட்டி: நெல்லையில் நாளை தொடக்கம்!

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி-20 கிரிக்கெட் போட்டி:  நெல்லையில் நாளை தொடக்கம்!
ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி-20 கிரிக்கெட் போட்டி: நெல்லையில் நாளை தொடக்கம்!

நெல்லையில் பள்ளிகளுக்கு இடையிலான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி-20 கிரிக்கெட் போட்டி நாளை தொடங்கி 26-ம் தேதி வரை நடக்கிறது. எட்டு அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் வெற்றிக் கோப்பையைக் கைப்பற்ற வீரர்கள் அனைவரும் சிறப்பான வகையில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் பள்ளிகளுக்கு இடையிலான 5-வது ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி-20 போட்டிகள் நாளை (22-ம் தேதி) முதல் 26-ம் தேதி வரை நடக்க உள்ளது. தமிழகம் முழுவதும் சென்னை மற்றும் கோவை, சேலம், திருச்சி, வேலூர், நெல்லை, மதுரை உள்ளிட்ட11 மாவட்டங்களில் பள்ளி அணிகளுக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு அதிலிருந்து 8 அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன

அந்த எட்டு அணிகளுக்கு இடையே நாளை முதல் நெல்லை சங்கர்நகரில் உள்ள இந்தியா சிமென்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்காக அனைத்து அணிகளும் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 12 லீக் போட்டிகளும் 3 நாக்-அவுட் போட்டிகளும் நடத்தப்பட இருக்கிறது. இரு குழுக்களிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குத் தகுதிபெறும். இறுதிப் போட்டியானது மின்னொளியில் நடத்தப்படும். 

இந்தப் போட்டிகளைக் காணப் பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதன்மை செயல் அதிகாரியான காசி விஸ்வநாதன் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ``கடந்த ஆண்டு நடந்த ஜூனியர் சூப்பர் கிங்ஸ் பள்ளிகளுக்கு இடையிலான சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற அணிகளிலிருந்து தேர்வான வீரர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட அணியானது, இங்கிலாந்து நாட்டுக்குச் சென்று விளையாடியது, அந்த அணி இங்கிலாந்தில் வெற்றிகளைக் கைப்பற்றித் திரும்பியது. அதனால் இந்த ஆண்டிலும் சிறந்த வீரர்களுக்கு வெளிநாடு சென்று விளையாடும் வாய்ப்புக் கிடைக்கலாம் என்பதால், அனைத்து வீரர்களுமே முழுத் திறமையையும் வெளிப்படுத்தக் காத்திருக்கிறார்கள்’’ என்றார்.