Published:Updated:

முதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை! - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்

முதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை! - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்
முதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை! - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்

``முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் தலைமைச்செயலகத்தில் ஓ.பி.எஸ் யாகம் நடத்தியிருக்கிறார். இது யாருக்காவது தெரியுமா'' என அ.ம.மு.க பொருளாளர் ரங்கசாமி கூறினார். 

அரியலூரில் வரும் 25-ம் தேதி நடைபெற உள்ள மொழிப்போர் தியாகிகள் தினத்தன்று அ.ம.மு.க சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்துகொள்கிறார். இதற்கான பந்தல் அமைக்கும் பணிக்கான பந்தக்கால் நடும் விழா இன்று நடைபெற்றது. இதில் அ.ம.மு.க பொருளாளர் ரெங்கசாமி, அமைப்புச் செயலாளர் மனோகரன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர் 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அ.ம.மு.க பொருளாளர் ரங்கசாமி, ``கொடநாடு கொலை, கொள்ளையில் முதலமைச்சருக்குத் தொடர்பு உள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயன், மனோஜ் ஆகியோர் ஆதாரபூர்வமாக தெரிவித்துள்ளனர். தெஹல்கா முன்னாள் ஆசிரியர் இதில் தமிழக முதலமைச்சருக்குத் தொடர்புள்ளதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னால் அவர் குற்றம் சாட்டிய அனைவரும் தண்டனை பெற்றுள்ளார்கள். தலைமைச் செயலகத்தில் ஓ.பி.எஸ் யாகம் செய்திருப்பது முதலமைச்சர் போட்டிக்காகவே. முதலமைச்சராக வேண்டும் என்ற கோரிக்கை மற்றும் வேண்டுதலுக்காகவே யாகம் நடைபெற்றது'' என்றார்.

கர்நாடகா சிறையில் உள்ள சசிகலா சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காகச் சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது உண்மைதான் என அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது குறித்து கேட்டபோது, ``சிறையில் உள்ள சசிகலா முறையாக வருமான வரி கட்டுபவர். அவருக்குச் சிறையில் சட்டத்துக்கு உட்பட்டு எந்தவித குறைந்தபட்ச சலுகைகள் அளிக்க வேண்டுமோ அந்தச் சலுகைகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. இதைப் பெரிதுபடுத்திச் சொல்லப்படுகிறது. இந்த அறிக்கைக்குப் பின்னால் பா.ஜ.க உள்ளது.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நடைபெறும் மோசமான ஆட்சி பா.ஜ.க ஆட்சி ஆகும். மத்திய அரசின் தன்னாட்சி பெற்ற அமைப்புகளை தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு தங்கள் இஷ்டப்படி ஆட்டுவிக்கின்ற மோசமான ஆட்சியாக இது உள்ளது. எனவே, சசிகலாவுக்கு எதிராக அளிக்கப்பட்ட அறிக்கைக்குப் பின்னால் பா.ஜ.க-வின் செயல்பாடு உள்ளது. இதனால் சசிகலா விடுதலையாவதில் பிரச்னை இருக்காது. அறிக்கையில் தெரிவித்துள்ளவாறு சசிகலாவுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டதா என்பதை நிரூபிக்க வேண்டும். அது இல்லாத நிலையில் சசிகலாவை குற்றம்சாட்ட முடியாது'' என முடித்தார்.