``எனக்கு எப்போது 18 வயதாகும்னு காத்துக்கிட்டிருக்கேன்.அதுக்கான காரணத்தைக் கடைசியில் சொல்றேன்’’ என்ற ட்விஸ்ட்டுடன் ஆரம்பித்தார், குஷி பர்மார். ஸ்கூபா டைவிங் மற்றும் நீச்சல் போட்டிகளில் தேசிய, சர்வதேச அளவில் பல சாதனைகளைப் படைத்துவரும் 16 வயதுப் பட்டாம்பூச்சி. புனே நகரில் வசிக்கும் குஷியிடம் பேசினோம்.

‘`ஐந்து வயதில் நீச்சல் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். 2014-ல் ஆறு மணி நேரத்துக்கு மேல் நீச்சலடித்து முந்தைய சாதனைகளை முறியடித்து இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்தேன். 2016-ம் ஆண்டு கோவாவில் `பெண்கள் பயமற்றவர்கள்’ (Girls are Fearless) என்ற தலைப்பில் நடந்த போட்டியில் இரண்டு மணி நேரத்துக்கு மேல் நீந்தி ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்தேன்'' என்கிறவருக்கு, வேர்ல்டு ரெக்கார்டு யுனிவர்சிட்டி, 2017-ம் ஆண்டு கௌரவ டாக்டர் பட்டம் அளித்திருக்கிறது. 2018-ல் அண்டர் வாட்டர் ஸ்போர்ட்ஸ் அசோஸியேஷன் இந்தியா நடத்திய 17 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கான நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார் குஷி.
ஸ்கூபா ஸ்கூல்ஸ் சர்வதேச அமைப்பிடமிருந்து, ஐந்தடி ஆழம் இருக்கும் நீர்நிலைகளில் தனியாகவும், மற்றொருவருடன் இணைந்தும், மூச்சுவிடுவதற்கு எந்த உபகரணங்களுமின்றி நீந்துவதற்குச் சான்றிதழ் பெற்றுள்ளார். ‘வாட்டர் கேர்ள் ஆஃப் இந்தியா’ என்று இவர் கொண்டாடப்படுவதற்கான காரணம் வேறென்ன வேண்டும்?
‘`ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்பது என் கனவு. இந்தியக் கப்பல் படையில் பணிபுரிய வேண்டும் என்பது என் வாழ்நாள் நோக்கம்’’ என்கிறவர், ‘`பதினெட்டாம் பிறந்தநாள் ரகசியம் சொல்வா? சர்வதேச விதிகளின்படி 18 வயதானவர்கள் மட்டும்தான் மற்ற வர்களுக்குப் பயிற்சி அளிக்கமுடியும். அதற்காகக் காத்திருக்கிறேன்’’ என்று புன்னகைக்கிறார் குஷி பர்மார்!
- ஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்
