Published:Updated:

``என் கைய இறுகப் புடிச்சு அழுதாங்க'- மாங்காடு ஹெச்.ஐ.வி பாதித்த பெண்ணைச் சந்தித்த கௌசல்யா

``அரசாங்கத்தால உங்களை எதுவும் பண்ண முடியாது. நீங்க உங்களோட நியாயத்துக்காகப் போராடுறீங்க. அதுக்கான பதிலை அரசு உங்களுக்குக் கொடுக்கத்தான் வேணும்னு சொன்னேன்”

``என் கைய இறுகப் புடிச்சு அழுதாங்க'- மாங்காடு ஹெச்.ஐ.வி பாதித்த பெண்ணைச் சந்தித்த கௌசல்யா
``என் கைய இறுகப் புடிச்சு அழுதாங்க'- மாங்காடு ஹெச்.ஐ.வி பாதித்த பெண்ணைச் சந்தித்த கௌசல்யா

டந்த டிசம்பர் மாதம் சாத்தூர் கர்ப்பிணிப் பெண்ணுக்குத் தவறுதலாக ஹெச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் செலுத்தியது தொடர்பான விவகாரம் தமிழகத்தையே நிலைகுலைய வைத்தது. பரபரப்பாக அந்தச் செய்தி பேசப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுக்கும் அதேபோன்று ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டதாக வந்த புகார்கள் மேற்கொண்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கைக்குழந்தையோடு போராட்டக் களம் புகுந்த அந்தத் தாயின் துயர் கண்டு அவருக்கு ஆறுதல் அளிக்க மாங்காட்டிலுள்ள அந்தப் பெண்ணின் வீட்டுக்கு நேரில் சென்று வந்திருக்கிறார் `பாசிட்டிவ் வுமன் நெட்வொர்க்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கௌசல்யா.

``நான் அந்த வீட்டுக்குள்ள போனதுமே அந்த அம்மா என்னை மிரட்சியோடு பார்த்தாங்க. அவங்களோட பார்வையில் ஒரு வலி தெரிஞ்சது. ஏற்கெனவே ஆஸ்பத்திரிக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் நியாயம் கேட்டுப் போராடிட்டு அலுப்பா இருக்கிறவங்ககிட்ட நாம என்ன பேசுறதுன்னு ஒரு நிமிஷம் யோசிச்சிட்டு இருந்தேன். முதல்ல எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல எந்தப் பேச்சுமே இல்ல. அவங்ககிட்ட நீங்க நல்லா இருக்கீங்களாம்மான்னுகூட என்னால கேட்க முடியலை. பக்கத்துல அவங்களோட பேபி படுத்திருந்தது. ஆனாலும், அந்த அம்மாவுக்கும் பேபிக்கும் நடுவுல கொஞ்சம் இடைவெளி இருந்ததைப் பார்த்து எனக்கு வருத்தமா இருந்தது. அதை மறைச்சிக்கிட்டு நான்தான் முதல்ல பேச்சை ஆரம்பிச்சேன்.

நான் யாரோன்னு நினைச்சு நீங்க பயப்பட வேண்டாம். நானும் உங்களை மாதிரி எச்.ஐ.வி பாசிட்டிவ்தான். என் கணவரோட தவறுதலால இந்த நோயைச் சுமந்துக்கிட்டு இருக்கிறேன். இப்போ எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட பெண்களுக்காக ஒரு அமைப்பை நடத்திட்டு இருக்கிறேன். நிச்சயமா நான் உங்களை வேதனைப்படுத்த மாட்டேன். உங்களுக்கு உதவி செய்யுறதுக்குத்தான் வந்திருக்கிறேன்னு சொன்னதும் அவங்க சட்டுன்னு என் கைய இறுகப் புடிச்சு அழ ஆரம்பிச்சிட்டாங்க. 

`எனக்கும் என் கணவருக்கும் சுத்தி இருக்கிறவங்களைப் பார்த்து பயம் இல்லைங்க. இவங்க யாரும் எங்களைத் தொந்தரவு செய்யுறதுகூட இல்ல. ஆனா, ரெண்டு பேருக்குமே ஆஸ்பத்திரியையும் அரசாங்கத்தையும் நெனைச்சாத்தான் கொஞ்சம் பயமா இருக்குது. எப்போ என்ன நடக்குமோன்னு நினைச்சு வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கிறோம்' என்று அவர் சொல்ல, ``அரசாங்கத்தால உங்களை எதுவும் பண்ண முடியாது. நீங்க உங்களோட நியாயத்துக்காகப் போராடுறீங்க. அதுக்கான பதிலை அரசு உங்களுக்குக் கொடுக்கத்தான் வேணும்னு சொன்னேன். நான் இப்படிப் பேசப் பேச அவங்க ரெண்டு பேருக்குமே எம்மேல ஒரு நம்பிக்கை வந்துடுச்சு. 

உண்மையச் சொல்லணும்னா அவங்க ரொம்பவே கஷ்டப்பட்ட குடும்பம். முதல்ல மளிகைக்கடை வெச்சு பிழைப்பை நடத்தி இருக்காங்க. அதுல சரியான வருமானம் இல்லாததால காய்கறி வியாபாரம் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. அந்த டைம்லதான் ரெண்டாவதா பிரெக்னன்ஸி ஆனதும் மாங்காடு PHC (Primary Health Center) யில காட்டியிருக்காங்க. அங்கே டெஸ்ட் எடுக்கிறதுக்காகப் பக்கத்தில் இருக்கிற தனியார் மெடிக்கல் காலேஜூக்கு அனுப்பியிருக்காங்க. மாங்காடு PHC சின்னதுதான். ஆனா, பக்கத்துலயே இருக்கிற பூந்தமல்லி PHC யும் போரூர் PHC யிலயும் அனைத்து வசதிகளுமே இருக்குது. அங்கே அனுப்பாம தனியார் மெடிக்கல் காலேஜூக்கு எதுக்காக அனுப்பணும். அங்கேகூட ஏதாவது அசம்பாவிதம் நடந்துருக்குமோன்னு எனக்குத் தோணுது. இந்த விஷயத்தை அரசு சீரியஸா கவனத்துல எடுத்து விசாரிக்கணும். அதுமட்டுமல்ல, கர்ப்பமா இருக்கிற பெண்களுக்கு அரசு மருத்துவமனைகளில் ஒவ்வொரு வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகள்லயும் டெஸ்ட் எடுத்துப் பார்ப்பாங்க. அங்கே பிரெக்னன்ஸி  குறித்த ஆலோசனைகளும் கொடுப்பாங்க. அப்போ பரிசோதனை செய்ய விருப்பமான்னு தாய்மார்கள்கிட்ட கேட்கணும். அதுகுறித்த விழிப்புஉணர்வுகளை கொடுக்கணும். ஆனா, இது எதுவுமே தெரியாம பாதிக்கப்பட்ட அந்த அம்மா அப்பாவியா இருந்திருக்காங்க. அவங்களுக்கு எப்படி முன்னெச்சரிக்கையா இருக்கணும்ங்கிற ஆலோசனைகளும் வழங்கப்படவே இல்ல. ஆனா, விஷயம் தெரிஞ்சதும் மருத்துவமனையில போய் விவரம் கேட்டதுக்கு உன் புருஷன் அப்படி இப்படி இருந்திருப்பான். அதனாலதான் உனக்கும் வியாதி தொத்திக்கிடுச்சுன்னு சொல்லி அவங்க மனசைக் கஷ்டப்படுத்தியிருக்காங்க. ஆனாலும், குழந்தை பிறக்கிற வரை அமைதியா இருக்கலாம்னு உறவினர்கள் சொன்னதை வெச்சு வேற எந்த ஸ்டெப்பும் எடுக்காம இருந்திருக்காங்க. அதுக்குள்ள சாத்தூர் கர்ப்பிணி விஷயம் வெளியே தெரியவர இவங்களும் துணிஞ்சு நியாயம் கேட்க ஆரம்பிச்சிருக்காங்க” என்றவர் இறுதியாக, 

``நான் இங்க வந்து அவங்களைப் பார்க்கிற வரை எங்கே எல்லோரும் அந்த அம்மாவைத் தனியா ஒதுக்கி வெச்சிடுவாங்களோன்னு பயந்தேன். ஆனா, அவரோட கணவரும் சரி அக்கம் பக்கத்து வீடுகள்ல இருக்கிறவங்களும் சரி பாதிக்கப்பட்ட அந்த அம்மாவுக்கு ஆறுதலா இருக்கிறாங்க. அவங்களோட கம்யூனிட்டியில இருந்துகூட சப்போர்ட் பண்றாங்க. இது வரவேற்கப்பட வேண்டிய செயல். நானும் கணவன் மனைவி இருவரையும் என்னோட ஆபீஸுக்கு அழைச்சிட்டுப் போனேன். இப்போ எந்த உதவி வேணும்னாலும் தயங்காம என்னை கான்டாக்ட் பண்றாங்க. தைரியமா இருக்கிறாங்க. இதே வேகத்தோடு இந்த கேஸ் தொடர்பான அனைத்து விவரங்களையும் திரட்டிட்டு இருக்கிறேன். சீக்கிரமே அந்த அம்மாவுக்கு நியாயம் வாங்கிக் கொடுத்துடுவேன்னு நம்புறேன்” நம்பிக்கையோடு பேசுகிறார் கௌசல்யா

தன்னைப் போல எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கலங்கரை விளக்கமாய் நின்று ஒளிகாட்டும் கௌசல்யா போன்றவர்கள் நம்பிக்கையின் ஒளிக்கீற்று.