Published:Updated:

ஜீரோ வேஸ்ட் திருமணம்

ஜீரோ வேஸ்ட் திருமணம்
ஜீரோ வேஸ்ட் திருமணம்

ஜீரோ வேஸ்ட் திருமணம்

ந்தியாவில் வேறெந்த விஷயத்துக்கும் இல்லாத வகையில் திருமணத்துக்கே பெரும் தொகையைச் செலவு செய்கிறார்கள். அத்தனை காலம் சேர்த்துவைத்த பெரும் பொருளை இதற்காகவே வெளியில் எடுக்கின்றனர். சொல்லப்போனால் இதற்காகத்தான் சேர்த்தே வைக்கின்றனர்.

இவ்வுலகில் இருமனங்கள் சேர்கின்றன என்பதையும் தாண்டி இரு குடும்பங்கள் இணையும்  வைபவமே திருமணம். சொந்தங்கள் சேரும் பெரும் விழா. இது இப்போதெல்லாம் கோடிகள் புரளும் இடமாக மாறிவிட்டது. மருதாணி போட, நிச்சயம் செய்ய, வரவேற்பு நிகழ்ச்சி என்று திருமணக் கொண்டாட்டங்கள் நீண்டுகொண்டே செல்கின்றன. முன்னால் பெரிய ஃபிளக்ஸ் தொடங்கி, இரவா, பகலா என்று யோசிக்கவைக்கும் அளவு மின்விளக்குகள், தோரணங்கள், பரிசுகள், விருந்தில் இலை போட்டுப் பரிமாறும் பந்தி, பஃபே என்று இரண்டு நாள்கள் விழா நடத்திவிட்டு இரண்டு டிரக் அளவு குப்பையை விட்டுச்செல்வர். அதை அள்ளிப்போடவே ஒரு நாள் ஆகும். கல்யாண வேலையைவிட இதுதான் பெரும் வேலையாக இருக்கும். இதே காலத்தில், இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு, கைவீசிக்கொண்டு ஒரு திருமணம் நடந்தது என்று சொன்னால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியுமா?

ஜீரோ வேஸ்ட் திருமணம்

ஆம். இவர்கள் திருமணத்தில் மொத்த குப்பையே அரை வாளி கூட வரவில்லையாம். `ஜீரோ வேஸ்ட் திருமணம்’ என்று ஒரு புது புரட்சியே செய்துவிட்டனர். இது நடந்தது வேறு மாநிலத்திலோ, வேறு நாட்டிலோ இல்லை. நம் தமிழ்நாட்டில்... அதுவும் சென்னையில்தான். வீணாவும் சுதர்சனாவும் சென்னையில் உள்ள நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியில் படித்தவர்கள். பல ஆண்டுகளாக நாம் எல்லோரும் பேசிக்கொண்டும், உச்சுக்கொட்டியும் கடந்துபோகும் குப்பைகளைப் பற்றி இவர்கள் நின்று யோசித்தனர். அன்றுதான் உதயமானது இந்த ஐடியா.

“வளர்ந்து வரும் உலகத்தைவிட அதிவேகமாக பெருகிவரும் குப்பையை எப்படிச் சமாளிப்பது? வரும் குப்பையை என்ன செய்யலாம் என்பதைவிட குப்பை வருவதை எப்படி தடுக்கலாம் என்றே நாங்கள் சிந்திக்கத்தொடங்கினோம். ஒரு பொருளை அதன் இறுதி நிமிடம் வரை பயன்படுத்த முயன்றோம். பயன்படுத்தி எரியும் பொருள்களைவிட நீண்டநாள் பயன்படுத்தக்கூடிய, எளிதில் மக்கும் தன்மையுள்ள பொருள்களைப் பயன்படுத்தப் பழகினோம். இரண்டு வருடங்களாக அதை தினசரி வாழ்வில் கொண்டு வந்தோம். அதைப் பலருக்கும் எடுத்துச்செல்ல முயன்று கொண்டிருந்தபோது வீணாவின் திருமணம் வந்தது. அதிலிருந்து தொடங்கலாம் என்று நினைத்தோம். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறோம்” என்கின்றனர் இருவரும்.

அழைப்பிதழ் தொடங்கி தாம்பூலம் வரை அமர்க்களம்!

மின் அழைப்புகள்

``யாருக்கும் தாளில் அடித்த பத்திரிகை வைக்கவில்லை. எல்லாருக்கும் அவர்களது மெயில், வாட்ஸ்அப்களுக்கு பத்திரிகை அனுப்பினோம். நேரில் சென்றும் போனில் அழைத்தும் அழைப்புகள் விடுத்தோம். இந்த மின் அழைப்புகள் காகிதக் குப்பைகளைக் குறைத்தன.

ஜீரோ வேஸ்ட் திருமணம்

பரிசுகள்

பரிசுகள் என்று எடுத்துக்கொண்டால் அதை வைக்க ஒரு பெட்டி, சுற்றி ஒட்டும் காகிதம் என்று குப்பை சேரும். அதனால் அழைப்பிதழிலேயே உறையிலிடப்பட்ட பரிசுகளை யாரும் தர வேண்டாம். பரிசு தர விரும்புபவர்கள் பணமாகவோ, பொருளாகவோ எங்களுக்குத் தெரிந்த சில சேவை அமைப்புகளுக்குக் கொடுக்கச் செய்தோம்.

திருமணம்

எங்கள் குடும்ப வழக்கப்படி மூன்று நாள்கள் விழா நடக்கும். அதுவே குப்பைகள் சேர முதல் காரணம். எனவே, கல்யாண விழா அரை நாளில் முடியும்படி திட்டமிட்டோம்.

இடம்

திருமணம் என்று எடுத்துக்கொண்டால் பெரிய மண்டபம். அதை அலங்கரிக்க தோரணங்கள் என்று ஏகப்பட்டது வீணாகும். வீண் செலவும்கூட. அதை வேறு விதமாகவும் பயன்படுத்த முடியாது. அதனால் இயற்கை எழில் சூழ்ந்த இடமாகத் தேடினோம். பசுமை சூழ்ந்த இடமாக இருந்தால். அதுவே அழகு. கொஞ்சமே கொஞ்சம் அலங்காரம் போதும்.

எங்கள் திருமணம் ஈ.சி.ஆர் பக்கம் நடந்தது. குளிர்ச்சியான மரங்கள் சூழ்ந்த இடத்தில் மலர்களே கூடுதல்  அழகைச் சேர்ந்தது. ஜூனில் திருமணம் நடந்தது. அப்போது நம் ஊரில் விளையும் சாமந்திப்பூவை உள்ளூர் விவசாயிகளிடம் சொல்லி வைத்து, பையில் வாங்கி வந்தோம். கோத்து தோரணம் கட்டினோம். முடிந்ததும் அதை Restore என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்தோம். அதில் நன்றாக உள்ளதை மறுபயன்பாட்டுக்கு அவர்கள் எடுத்துக்கொள்வார்கள். மற்றதை மக்கச் செய்துவிடுவர்.

ஜீரோ வேஸ்ட் திருமணம்

வருகைப்பலகை

ஃபிளக்ஸ், பேனர் எல்லாம் வைக்காமல் ஒரு கரும்பலகை வாங்கி அதில் எங்கள் அழைப்பை சாக்பீஸில் எழுதினோம். பின்பு அதை ஒரு பள்ளிக்குத் தானமாகக் கொடுத்தோம்.

இருக்கைகள்

பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க எண்ணினோம். அதனால் விருந்தினர்கள் அமர மெத்தைகள், நில விரிப்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்தினோம். அதை மீண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லவா? பெரியவர்கள், கீழே உட்கார முடியாதவர்களுக்காக மிகவும் சொற்ப எண்ணிக்கையிலான நாற்காலிகள் மட்டும் போட்டோம்.
 
திருமண அலங்காரம்

ஒரே ஒருநாள் அணிவதற்காக ஆயிரங்கள் செலவழித்து ஓர் ஆடை எடுப்போம். அடுத்து அதை என்றும் அணிய முடியாது. ஓர் ஆடை செய்ய 3,000 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. இப்படி அணியமாலே வைக்க ஓர் ஆடை வாங்கி எதற்கு? அதனால் என் பாட்டி அவர் திருமணத்தில் அணிந்திருந்த பட்டுப்புடவையை நான் என் திருமணத்துக்குக் கட்டினேன். என் கணவரும் தினசரி அணியக்கூடிய ஒரு சட்டையும், ஏற்கெனவே இருந்த வேட்டியை யும் அணிந்தார். என் பெற்றோரும் அவர் பெற்றோரும்கூட அவர்களிடம் இருந்த ஆடைகளையே அணிந்தனர்.

பசுமை விருந்து

திருமண விழாவில் அதிக குப்பைகள் இங்குதான் குவியும். ரோலிங் பேப்பர், இலை, தண்ணீர் கப், பாயச கப் என்று பிளாஸ்டிக்கும் பேப்பரும் கழிவுகளாகப் போகும். அதைக் குறைக்க எண்ணினோம். தண்ணீருக்கு சில்வர் டம்ளர்களையே பயன்படுத்தினோம். கேட்கும் அளவு மட்டும் உணவு வைத்தோம். உணவு வீணாகாமல் பார்த்துக்கொண்டோம். மீதம் இருந்த உணவுகளுடன் மேலும் கொஞ்சம் சேர்த்து ROBINHOOD ARMY என்கிற தன்னார்வ அமைப்பினர்  மூலம் குழந்தைகள் காப்பகத்துக்கு வழங்கினோம்.

கழிவு மேலாண்மை

சமையலறையில் இருந்த காய்கறி குப்பைகளையும், வாழையிலைகளையும் அரைத்து அருகில் இருந்த இயற்கை உர நிறுவனங்களிடம் ஒப்படைத்தோம். காகிதக் குப்பைகளையும் தன்னார்வ நிறுவனங்களிடம் ஒப்படைத்தோம். அதை அவர்கள் தரம்பிரித்து பயன்படுத்தினார்கள்.

தாம்பூலம்

திருமணத்துக்கு வரும் அனைவருக்கும் தாம்பூலம் தருவது நமது வழக்கம். வெறும் மிட்டாயும் குங்குமமும் கொடுக்காமல், அது புதிதாகவும் இயற்கைக்குப் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணினோம். மக்கும் தாள்களில் விதைகளை வைத்து அதைத் தாம்பூலமாகத் தந்தோம். அந்தத் தாள்களுடனே புதைக்கலாம். அதுவும் மக்கி மண்ணுடன் சேர்ந்து விடும்.
 
இப்படி ஒவ்வொன்றிலும் பார்த்துப் பார்த்துத் திருமணங்களில் வரும் குப்பையைக் குறைத்து, நாங்கள் கிளம்பும்போது அரை வாளிக்கும் குறைவான குப்பையே கையில் இருந்தது. அதுவும் வீணாகாமல் மறு பயன்பாட்டுக்கும் மண்ணுக்கும் போய் சேர்ந்தது. எங்கள் வாழ்வு சேரும் நேரம், இயற்கைக்கு எந்தத் தீங்கும் தரவில்லை என்கிற மனநிம்மதி எங்களுக்கு இருக்கிறது.

குடும்ப ஒத்துழைப்பு

புதிதாக ஏதாவது செய்ய நினைக்கும்   ஒவ்வொருவருக்கும் முதலில் சவாலாக இருப்பது குடும்பம்தான். அவர்களை எப்படி சமாதானம் செய்வது  பெரிய பிரச்மஒ. அந்த விதத்தில் எனக்குக் கொஞ்சம் சிரமம் குறைவுதான். ஏற்கெனவே நான் கழிவுகள் குறைக்கும் வழிகளை வீட்டில் பழகிவந்தேன். திருமணத்தால் இவ்வளவு கழிவு வரும், இப்படியெல்லாம் தவிர்க்கலாம், இவ்வளவு சேமிக்கலாம், அந்தச் சேமிப்பில் இவ்வளவு நல்லது செய்யலாம் என்று டேட்டா காட்டி சமாதானம் செய்ததால், இரு வீடுகளிலும் ஒப்புதல் அளித்தார்கள். என் கணவரும் முழு ஒத்துழைப்பும் உதவியும் செய்தார். இதனால்தான் சூழல் திருமணத்தைக் குறையின்றி செய்ய முடிந்தது.

இதைப் பார்த்துவிட்டுச் சிலர் வந்து எங்களிடம் உதவி கேட்டனர்.  மகிழ்ச்சியோடு ஆலோசனைகளும் உதவிகளும் செய்து வருகிறோம்’’ என்கிறார் வீணா.

``நானும் வீணாவும் நிலையாக நீண்ட நாள்கள் பயன்படுத்தும் அன்றாட  இயற்கை பயன்பாட்டுப் பொருள்களை Two’s Company India என்ற நிறுவனம் நடத்தி மக்களிடம் சேர்க்க முயன்று வருகிறோம். மூங்கிலால் ஆன கைப்பிடியும், பிரிசில்ஸ்ஸும் கொண்ட பல் துலக்கி, இயற்கை பொருள்களால் ஆன சோப், க்ரீம், மேக் அப் பொருட்கள் என்று ரசாயனம் அற்ற இயற்கைக்குக் கேடுகளற்ற பொருள்களை விற்கிறோம். இதில் உள்ள 90% பொருள்கள் நாங்களே தயாரித்தவை. இந்த ஆண்டு இறுதியில் இ-மார்க்கெட்டிங் தொடங்க உள்ளோம்’’ என்கிறார் சுதர்சனா.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்கின்றனர். அதை இப்படி கழிவுகளைக் குறைத்து செய்தால் இயற்கையான பூமியே நமக்கு சொர்க்கம்தானே!

- இலக்கியா

அடுத்த கட்டுரைக்கு