Published:Updated:

`என் ஊரு... எண்ணூரு!’ - சூழலியல் சுரண்டலைக் கதைக்கும் சென்னைத் தெருவிழா

`என் ஊரு எண்ணூரு’ என்ற அந்தப் பாடல் சொன்ன செய்திகள் பல. தங்கள் வாழ்வாதாரத்தை தங்கள் வளத்தைப் பாதுகாக்க, இழந்ததை மீட்க, வருவதைத் தடுக்க என்று அனைத்து வகையிலும் சுற்றி நிற்கும் பிரச்னைகளைப் பேசியது.

`என் ஊரு... எண்ணூரு!’ - சூழலியல் சுரண்டலைக் கதைக்கும் சென்னைத் தெருவிழா
`என் ஊரு... எண்ணூரு!’ - சூழலியல் சுரண்டலைக் கதைக்கும் சென்னைத் தெருவிழா

லை ஓர் ஆயுதம். துக்கம், ஆசை, அதிருப்தி, இன்பம், கோபம், வலி, வேதனை, வெறுப்பு, விரக்தி என்று அனைத்தையுமே வெளிப்படுத்தும் ஓர் ஆயுதம். பல சமூக மாற்றங்களில் ஆணிவேராக, ஆரம்பப் புள்ளியாகத் திகழ்ந்த பெருமைகள் பல கலையையே சேரும். அத்தகைய கலை பொழுதுபோக்காக, தனிமனிதப் போற்றுதலாக மட்டுமே இருக்கும்போது வழக்கமான கலையாகத்தான் பார்க்கப்படும். அதுவே மக்களின் வாழ்வியலை, வாழ்வியல் சிக்கல்களை, அன்றாட வலிகளை, எதிர்கொண்ட ஏமாற்றங்களை, ஏமாற்றங்கள் தந்த வேதனை, எதிர்நோக்கிய ஒடுக்குமுறை, சந்தித்த அடக்குமுறைகளைப் பேசும்போது, அதே கலை புரட்சியாக உருவெடுக்கிறது. அத்தகைய புரட்சிதான் தற்போது நடந்துகொண்டிருக்கும் சென்னை கலைத் தெருவிழா.

பல பரிமாணங்களில் வடசென்னை மக்களின் வாழ்வியலைப் பதிவுசெய்கிறது இந்தத் தெருவிழா. சுத்தமான காற்றும் குடிநீரும்  சுகாதாரமான வாழ்விடமும் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே சொந்தமில்லை. சமூகம் எப்படிச் சமத்துவப் பண்போடு அனைத்து மக்களும் ஒன்றிணைந்து வாழும் அமைப்பாக இருக்க வேண்டுமோ அதேபோல் வளங்களைப் பகிர்ந்துகொள்வதிலும் சமத்துவம் வேண்டும். அந்தச் சமத்துவமின்றிக் குறிப்பிட்ட சிலரின் வளர்ச்சிக்காகச் செய்யப்பட்ட செய்யப்படும் சுரண்டல்களால் தொடர்ச்சியாகப் பாதிக்கப்படுகிறார்கள் வடசென்னை மக்கள். பல்வேறு கலாசாரங்கள் குடியிருக்கும் அந்தப் பகுதி மக்களின் ஒற்றுமையைப் பறைசாற்றியது கடந்த 13-ம் தேதி நடந்த தண்டையார்பேட்டை ஒளிப்பட நடை. தண்டையார்பேட்டை - நாம் நம் சுயநலங்களுக்காக நரகமாக்கிக் கொண்டிருக்கும் வடசென்னையின் ஒருபகுதிதான் அதுவும். 

வடசென்னை என்றாலே புழுதிபடர்ந்த குடிசைகளும், அதில் நிறைந்திருக்கும் மரியாதையற்ற பேச்சுகளும், அப்பகுதி வாழ்வியலில் கலந்துவிட்ட வன்முறைகளுமே பெருவாரியானவர்களால் காட்டப்படுகின்றன. ஆம், அது புழுதிபடர்ந்த பகுதிதான். உங்கள் அடுக்குமாடிகளுக்கும் அழகான வில்லாக்களுக்கும் வழிவிட்டுத் தொழிற்சாலைகளுக்காகத் தங்கள் நிலத்தைத் தியாகம் செய்துவிட்டதால் உருவான நச்சுப் புழுதிகள் நிறைந்த பகுதி. அங்கிருப்பது குடிசைகள்தான். அந்தக் குடிசைவாசிகளின் உழைப்பால்தான் இன்று சென்னை தலைநிமிர்ந்து நிற்கின்றது. 

"சாதிவெறி மதவெறியைப் போகித் தீயில் எரிப்போம்...
தமிழராய் பொங்கலிட்டு சமத்துவம் படைப்போம்!’’

எவ்வளவு ஆழமான எழுத்துகள். சென்னை கலைத் தெருவிழாவின் முதல் பகுதியாகக் கடந்த 13-ம் தேதியன்று நடந்த ஒளிப்பட நடைக்காகச் சென்றிருந்தபோது பார்த்தேன். அந்த எழுத்துகள் எடுத்துரைக்கும் ஒற்றுமையைச் சொல்லில் மட்டுமன்றிச் செயலிலும் காட்டுபவர்கள். தங்கள் வளங்களைத் திருடும் பன்னாட்டு நிறுவனங்களிடமும் அரசுகளிடமும் போராடிப் போராடி நெஞ்சில் வலுவேறி நிற்கும் அவர்களிடம் வேற்றுமைகள் இல்லை. அவர்களின் அந்த ஒற்றுமைதான் கொற்றலையில் கொட்டப்படும் சாம்பல் கழிவுகளை எதிர்த்துப் போராடி வெற்றிபெற வைத்தது. அந்த ஒற்றுமைதான் தங்களுக்கான நீதியைப் போராடிப் பெற வைத்தது. அதே ஒற்றுமைதான் இன்னும் இருக்கும் சுரண்டல்களை, சூழலியல் சிக்கல்களை எதிர்த்துப் போராட இனியும் உதவும். சமத்துவம் பொங்கும் அந்தப் பகுதி மக்களின் சமத்துவப் பொங்கலில் தொடங்கியது சென்னைக் கலைத் தெருவிழா.

ஒளிப்படக் கருவிகளோடு நுழைந்தவர்களைப் பற்றிய கேள்விகளால் அறிமுகமானார்கள் மக்கள். கேள்விகள் கேட்க வேண்டும். யாரோ வருகிறார்கள், ஏதோ செய்கிறார்கள், எங்கோ போகிறார்கள் என்று இருந்துவிட முடியாது. எப்போதும் பாதுகாப்பு உணர்வோடு யாருக்கும் அஞ்சாமல் நிற்க வேண்டும். யாராயினும் கேள்வி கேட்க வேண்டும். பல துரோக வடுக்களை நெஞ்சில் சுமந்தவாறு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள். இது புதிதல்ல. ஆனால், இனியும் அப்படி நடந்துவிடக் கூடாதென்பதில் தெளிவாகிவிட்டார்கள். அவர்கள் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டார்கள். இனி தங்கள் நிலத்துக்குள் யார் வந்தாலும் கேள்வி கேட்பார்கள். அரசே வந்தாலும் கேள்வி கேட்பார்கள்.

அதேசமயம் அன்பு. அதையும் காட்ட வேண்டும். இவருக்குத்தான் காட்ட வேண்டுமென்று இல்லை. யாராயினும் அன்பு செலுத்த வேண்டும். நான் வடசென்னையைக் காதலிக்கக் காரணமே அந்தக் கபடமற்ற அன்புதான். அத்தகைய அன்புடனே அன்றும் வரவேற்றார்கள். ஒளிப்படம் எடுப்பதைவிடப் பெரும்பாலான நிமிடங்கள் அவர்களின் அன்பான பேச்சுக்கும் உரிமையோடு பழகிய பண்புக்கும் அடிமையாகத்தான் வெளியேறினோம். உடல்தான் வெளியேறியது. மனம் அவர்களுடனே லயித்துவிட்டது.

அதன் தொடர்ச்சியாக மயிலாப்பூரில் 19, 20-ம் தேதிகளில் நடந்த `மயிலாப்பூரில் வடசென்னை' நிகழ்ச்சியிலும் அதே நிலைதான். ஆரம்பமே அசத்தலான வில்லுப்பாட்டு. அதுவும் வடசென்னைச் சிறுவர்களுடைய வில்லுப்பாட்டு. எண்ணூர் மக்களின் சூழலியல் பிரச்னைகளைப் பேசும் வில்லுப்பாட்டு. தன் நிலத்தைப் பற்றித் தெரியாதவனால் தன் நிலத்தைப் பாதுகாக்க முடியாது. தம் சுற்றுச்சூழலை, காட்டை, காற்றை, நீரை அடுத்த தலைமுறைக்குப் பாதுகாப்பாகக் கொடுக்க நினைப்பவர்கள் செய்ய வேண்டிய முதல் வேலை என்ன? குழந்தைகளிடம் அவர்களின் நிலத்திலுள்ள சூழலியல் பிரச்னைகளை அது உருவாக்கிய சமூகப் பிரச்னைகளைப் புரிய வைப்பதே. அந்தப் புரிதல் இல்லாததே இன்றைய சமூகச் சூழலியல் பிரச்னைகள் பலவற்றுக்கும் காரணம். அதேநிலை இன்றைய குழந்தைகளுக்கும் வந்துவிடக் கூடாதென்பதில் தெளிவாகிவிட்டார்கள் வடசென்னை மக்கள். அந்தப் புரிதலின் வெளிப்பாடாகவே அன்றைய வில்லுப்பாட்டைப் பார்த்தேன். ஆம், எண்ணூரின் எதிர்காலம் சிறக்கத் தொடங்கிவிட்டது.

`என் ஊரு எண்ணூரு’ என்ற அந்தப் பாடல் சொன்ன செய்திகள் பல. தங்கள் வாழ்வாதாரத்தை தங்கள் வளத்தைப் பாதுகாக்க, இழந்ததை மீட்க, வருவதைத் தடுக்க என்று அனைத்து வகையிலும் சுற்றி நிற்கும் பிரச்னைகளைப் பேசியது. கொற்றலை ஆற்றுக்கு நடக்கும் கொடுமைகளை, ஆற்றையே தொலைத்த அதிகாரிகளின் மெத்தனத்தை நகைச்சுவையாகச் சொல்லிச் சென்ற சிறுவர்களின் திறன் அபாரம். அதைத்தொடர்ந்து வந்தது வியாசர்பாடி முனியம்மா பாட்டியின் கானா பாடல்கள்.

பல இழப்புகளைச் சந்தித்த மக்களின் வலிகளைப் பாடிக்கொண்டிருக்கும்போதே அவர் கண்களில் கண்ணீர். அது வெறும் கண்ணீரல்ல. பல்லாண்டுகளாகச் சென்னையின் ஒருபகுதி நலனுக்காக, இந்த மாநிலத்தின் நலனுக்காக என்பது போன்ற மேற்பூச்சுகளுக்கு அடியில் சிக்கிச் சிலரின் லாபத்துக்காகவும் அந்தச் சிலரின் முன்னேற்றத்துக்காகவும் காவு கொடுக்கப்பட்ட பெரும்பான்மை உழைக்கும் வர்க்கத்தின் வலிகளுக்குச் சாட்சியாக நிற்பவரின் வாக்குமூலம். அந்த வாக்குமூலம் வார்த்தைகளால் ஆனதல்ல. அதை வார்த்தைகளால் விவரிக்கவும் முடியாது. அவர்களின் நிலத்தைப் பிடுங்கி தொழிற்சாலைகளை அமைத்துள்ளார்கள். அதில் அவர்களுக்கே வேலையில்லை. அவர்களின் வாழ்வுக்கே அதில் வழி ஏற்படுத்தப்படவில்லை. இந்தச் செயலுக்குத் துரோகம் என்ற சொல்லைத் தவிர வேறெதுவும் பொருந்துமென்று தோன்றவில்லை. அந்தத் துரோகங்களில் வீழ்ந்து மீண்டும் எழுந்து நிற்பவர்களின் கொண்டாட்டம் இது. 'நாங்கள் மீண்டெழவும் எங்கள் நிலத்தைக் காப்பாற்றவும் எங்கள் சமத்துவமே துணைபுரியும்' என்பதைப் பறைசாற்றும் சமூகத்தின் அனைத்துத் தட்டு மக்களுக்கும் உரக்கக் கூறும் கொண்டாட்டம்.

அதன் பிறகு, நடந்த கொம்பை அன்வரின் `கர்நாடக இசையில் இஸ்லாமிய சூஃபி பாடல்களு’மாகக் களைக்கட்டிய `மயிலாப்பூரில் வடசென்னை.’ அதன் இரண்டாம் நாள் (20.01.2019) கொருக்குப்பேட்டை இளைஞர்களோடு தொடங்கியது. வடசென்னையைச் சேர்ந்த பல்வேறு துறைகளைச் சார்ந்த சாதனையாளர்களோடு இயக்குநர் பா.இரஞ்சித் கலந்துரையாடினார். இறுதியில் வடசென்னையைச் சேர்ந்த ஆங்கிலோ இந்திய மக்களின் மேற்கத்திய இசைக் கச்சேரியோடு வந்திருந்தவர்களை இன்புற்றிருக்க வைத்தது மயிலாப்பூரில் வடசென்னை.

சென்னை கலைத் தெருவிழாவையொட்டி அடுத்து நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

அது உழைக்கும் வர்க்கங்களின் சொர்க்கம். அந்தச் சொர்க்கத்தை நரகமாக்கத் துடிப்பவர்களை எதிர்க்கும் போராட்டங்களை வெற்றிப்பாதையில் கொண்டுசெல்வது அவர்களின் ஒற்றுமையே. எந்த வேற்றுமைகளும் இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்த பல மதத்தவர்களில் தெரிந்தது ஜனநாயகம். அதே நிலையைத் தங்கள் திருவிழாவிலும் காட்டியதில் தெரிந்தது மக்களாட்சி. இது சாதிகளற்று, மதங்களற்று நடப்பது. மக்களின் ஒற்றுமையை ஏற்றத்தாழ்வுகளற்ற சமூகத்தை சமத்துவத்தைக் கொண்டாடுகிறது சென்னை கலைத் தெருவிழா. சென்னையின் பூர்வகுடிகளின், சென்னையின் சொந்தக்காரர்களின் கொண்டாட்டம் அடுத்த பிப்ரவரி 10-ம் தேதி வரை தொடர்கிறது. இம்மண்ணின் மக்களைக் கொண்டாடுவோம். அதுவே சென்னையைத் தலைநிமிர வைத்தவர்களுக்கு நாம் செய்யும் கௌரவம்.