Election bannerElection banner
Published:Updated:

ஆரோக்கிய திருமணம்!

ஆரோக்கிய திருமணம்
ஆரோக்கிய திருமணம்

ஆரோக்கிய திருமணம்

திருமணப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியதுமே மணமக்களின் மனதில் கனவுகள் மொட்டு விடத் தொடங்கிவிடும். வாழ்க்கைப் புத்தகத்தில் புதிய அத்தியாயத்தைத் திருமண உறவுகள் தொடங்கிவைக்கின்றன. அவை நலமுடனும் வளமுடனும் அமைய, மனநலத்தோடு உடல்நலமும் பேணி இருக்க வேண்டியது அவசியம். மணமக்கள் இருவர் வீட்டிலும் திருமணப் பொருத்தம் தொடங்கி பொருளாதாரம், குடும்பப் பின்னணி என எல்லா பொருத்தங்களையும் அவதானித்து முடிவெடுக்கிறார்கள். ஆனால், அடிப்படையான ஒரு விஷயத்தைக் கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள். அதுதான், மணமக்கள் உடல்நலன் சார்ந்த மருத்துவ வரலாறு. மணமக்கள் இருவரும் மனதளவிலும் உடலளவிலும் நலம் பெற்றவர்களாக இருக்கிறார்களா என்பதையும் அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். திருமண வாழ்வில் தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்கவும் நிலைத்த மகிழ்வான, திருமண வாழ்வை உறுதி செய்யவும் திருமணத்துக்கு முன்பாக சில மருத்துவப் பரிசோதனைகள் செய்வது அவசியம். குடும்பநலம் சார்ந்த பல வழக்குகளில் நீதிபதிகளே, ‘திருமணத்துக்கு முன்பு மணமக்கள் கட்டாயம் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்’ என அறிவுறுத்தியிருக்கிறார்கள். 

ஆரோக்கிய திருமணம்!

“திருமணத்துக்கு முன்பு செய்யவேண்டிய பரிசோதனைகளை, ஒரு கெளரவ குறைவாகப் பார்ப்பதைத் தவிர்த்து ஆரோக்கியமான முன்னெடுப்பாகவும் ஓர் அரிய வாய்ப்பாகவும் பார்க்க வேண்டும். ஏனெனில், திருமணத்துக்கு முந்தைய பரிசோதனை மணமக்களுக்கு மட்டுமல்லாமல், அவர்களின் சந்ததிகளின் எதிர்காலத்துக்கும் நல்லது” என்கிறார் குடும்பநல மருத்துவர் ஜீனத் பேகம். மேலும், என்னென்ன பரிசோதனைகள் செய்ய வேண்டும், அது ஏன் அவசியம் என்பது பற்றியும் விளக்கினார்.

அடிப்படை பரிசோதனைகள்

ரத்தத்தில் பொதுவாக இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று பாசிட்டிவ்,  மற்றொன்று நெகட்டிவ். ஒரே வகை ரத்தப் பிரிவினரிடையே திருமணம் செய்து கொள்வதே நல்லது. வெவ்வேறு வகை ரத்தப் பிரிவினர் திருமணம் செய்து கொண்டால் இரண்டாவது பிறக்க கூடிய குழந்தை ஏதேனும் குறைபாட்டுடன் பிறக்க வாய்ப்பிருப்பதாக சில ஆராய்ச்சிகள் சொல்கின்றன. எனவே, ரத்தப் பிரிவு மற்றும் ரத்த வகையைக் கண்டறிய வேண்டியது அடிப்படையான பரிசோதனை. நவீன மருத்துவத்தில் மாறுபட்ட ரத்தப்பிரிவைச் சார்ந்தவர்களும் திருமணம் செய்துகொண்டு வாழவும் தீர்வு இருக்கிறது. அதனால், தவிர்க்கமுடியாத காரணங்களால், வெவ்வேறு வகை ரத்தப் பிரிவினர் திருமணம் செய்துகொண்டாலும், மருத்துவரின் பரிந்துரைப்படி தடுப்பூசி போட்டுக்கொண்டு அதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.  

ஆரோக்கிய திருமணம்!

திருமணத்துக்குப் பிறகு பெரும் பாலானோர் விவாகரத்துக்கு முக்கியக் காரணமாக இருப்பது மலட்டுத்தன்மை. பரிசோதனையின் மூலம் தாம்பத்தியத்தில் இருக்கும் எல்லாக் குறைபாடுகளையும் கண்டறிய முடியாது. ஆனால், குறைந்தபட்சம் குழந்தை பெற்றுக்கொள்ளத் தகுதியானவரா என்பதைக் கண்டறிந்துவிடலாம். ஆணின் விந்தணுப் பரிசோதனை மூலம் விந்தணுக்கள் எண்ணிக்கை, அவற்றின் ஊர்ந்துசெல்லும் திறன் உள்ளிட்டவை பரிசோதிக்க முடியும். இதன்மூலம் ஒரு ஆணுக்குக் குழந்தை பெற்றுக்கொள்ளும் தகுதி இருக்கிறதா என்பதை உறுதி செய்ய முடியும். அதேபோல பெண்களுக்கு பெல்விக் அல்டராசவுண்டு (Pelvic Ultrasound) பரிசோதனை செய்ய வேண்டும். பெண் உறுப்பு, கருப்பை வாய், கருப்பை, மலக்குடல் மற்றும் இடுப்பு போன்றவை கருவுறுவதற்கும் குழந்தைப்பேற்றுக்கும் ஏற்ப உள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம். அதோடு கர்ப்பப்பை கட்டிகள் இருந்தாலும் கண்டறிந்து சிகிச்சை செய்யலாம்.

பரவும் நோய்கள்
 
ரத்தம் மற்றும் பாலியல் உறவு மூலம் பரவும் நோய்களான ஹெபடைட்டிஸ் (Hepatitis) வைரஸ் பரிசோதனை, ஹெச்.ஐ.வி, பால்வினை நோய்களைப் பற்றிய பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இதன் மூலம் ஒருவரிடமிருந்து இந்த நோய்கள் மற்றவருக்குப் பரவுவதைத் தவிர்க்க முடியும்.

சந்ததியைப் பாதிக்கும் பிரச்னை

ஹைப்போ தைராய்டு இருந்தால் குழந்தைகளுக்கும் தைராய்டு பாதிப்பு வரலாம். அதனால், T3, T3RU, T4, TSH ஆகிய தைராய்டு கண்டறியும் எளியப் பரிசோதனைகள் மூலம் தைராய்டு பாதிப்பை முன்னரே தெரிந்துகொண்டு, மரபு வழியாகப் பிறக்கப்போகும் குழந்தைக்கும் தைராய்டு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

இந்தியாவில் வளரிளம் பருவ பெண்கள் அதிகம் எதிர்கொள்ளும் பிரச்னை ரத்தச்சோகை. இந்தப் பாதிப்பு இருப்பவர்களுக்கு குறைப்பிரசவத்தில் குழந்தை பிறக்க அதிக வாய்ப்பிருக்கிறது. திருமணத்துக்கு முன்பும், கருவுறும்போதும் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதை ‘ரத்த அணுக்கள் எண்ணிக்கைப் பரிசோதனை’ (Complete Blood Count - CBC) என்னும் அடிப்படை ரத்தப் பரிசோதனையிலேயே தெரிந்துகொள்ளலாம்.  தகுந்த மருத்துவ சிகிச்சை, மருந்து மாத்திரைகள் மூலம் பிரசவத்துக்கு முன்பே ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்பதால் பிற்காலத்தில் ஏற்படும் தேவையற்ற மருத்துவச் சிக்கல்களைத் தவிர்க்க இயலும்.

ஆரோக்கிய திருமணம்!

குடும்பத்தில் ஏற்கெனவே மரபணு சார்ந்த நோய்கள் இருக்கிறவர்கள், மரபணுத் தன்மை பரிசோதனை (Genetic screen) செய்துகொள்ள வேண்டும். இதன் மூலம் மரபு வழியாக வரக்கூடிய நோய்களைக் கண்டறிந்து, அவை குழந்தைகளுக்கு வராமல் தடுக்க முடியும். இருவருக்கும் மரபணு சார்ந்த குணப்படுத்த முடியாத நோய்களாக இருந்தால், கண்டிப்பாகத் திருமணத்தைத் தவிர்த்து விடுவது நல்லது.

திருமணத்துக்கு முன்பாக, சர்க்கரை நோய், கொலாஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றையும் பரிசோதனை செய்து, அதற்கான உரிய மருத்துவ ஆலோசனையின்படி உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்.

இந்தப் பரிசோதனைகளில் பலவும் முழு உடல் பரிசோதனையிலேயே தெரிந்துவிடும். அதோடு மருத்துவ ஆலோசனையும் கிடைத்துவிடும். எனவே, தவறாமல் மணமக்கள் இருவரும் திருமணத்துக்கு முன்பு முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்” என்கிறார் ஜீனத் பேகம்.

ஜி.லட்சுமணன்.

ஆரோக்கிய திருமணம்!

ரத்த உறவுக்குள் திருமணமா?

லசீமியா என்பது மரபு வழியில் வரும் ரத்தக் குறைபாடு. இதன் தீவிரத்தன்மையைப் பொறுத்து தலசீமியா மேஜர் (Thalassemia Major), தலசீமியா மைனர் (Thalassemia Minor) என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. இதில் தலசீமியா மேஜர் ஒரு தீவிர நிலை. நோயின் தாக்கத்துக்கேற்ப, அவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் ரத்தம் ஏற்ற வேண்டிய நிலைகூட ஏற்படலாம். ரத்த சொந்தத்துக்குள் திருமணம் செய்வது, இதற்கு முக்கியக் காரணம். தலசீமியா மைனர் குறைபாடுள்ள ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொண்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு தலசீமியா மேஜர் ஏற்பட வாய்ப்புள்ளது. துபாய் போன்ற அரபு நாடுகளில் மைனர் தலசீமியாவா இருக்கிற இருவர் திருமணம் செய்துகொள்ள அனுமதியில்லை. அதை உறுதி செய்த பிறகே திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள். திருமணத்துக்கு முன்பே இந்தப் பரிசோதனையை செய்வதன் மூலம் நல்ல ஆரோக்கியமான வாரிசுகளை மணமக்கள் பெற்று மகிழ்வோடு வாழலாம்.

ஆரோக்கிய திருமணம்!

பெரியவர்களுக்கு!

தி
ருமணம் முடியும்வரை மணமக்களைவிட வீட்டில் உள்ள பெரியவர்களுக்குத்தான் அதிக வேலைகள் இருக்கும். அந்தப் பரபரப்பில் நேரத்துக்குச் சாப்பிட மாட்டார்கள். தூக்கமின்மை, மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் மிகுதியாக இருக்கும். முக்கியமாகச் சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்காமல், அந்த நேரத்தில் மயக்கம் ஏற்பட்டு விழும் சம்பவங்களும் பார்த்திருப்போம். அதேபோல, ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பவர்கள் அவற்றைக் கட்டுக்குள் வைக்கத் தவறிவிடுவார்கள். எனவே, வீட்டில் உள்ள பெரியவர்கள் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், சிறுநீரகச் செயல்பாட்டை அறியும் பரிசோதனை உள்ளிட்டவற்றைச் செய்துகொள்ள வேண்டும். நாள்பட்ட சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்கள் சிறுநீரகப் பரிசோதனை செய்துகொள்வதும் நல்லது. மரபு வழியில் குடும்பத்தில் யாருக்காவது இதயநோய் இருந்தாலோ, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருந்தாலோ இதயநோய் பாதிப்புகளை முன்னரே அறிய உதவும் இ.சி.ஜி. பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.   

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு