Published:Updated:

ஜாதி, மத, அரசியல் இல்லை... மனிதம் மட்டுமே அவரை 111 ஆண்டுகள் வாழ வைத்தது!

எம்.குமரேசன்
ஜாதி, மத, அரசியல் இல்லை... மனிதம் மட்டுமே அவரை 111 ஆண்டுகள் வாழ வைத்தது!
ஜாதி, மத, அரசியல் இல்லை... மனிதம் மட்டுமே அவரை 111 ஆண்டுகள் வாழ வைத்தது!

ர்நாடக மாநிலம் தும்கூரில் உள்ள சித்தகங்கா மடத்தின் பீடாதிபதி சிவக்குமார ஸ்வாமிகள் 111 வயதில் நேற்று மரணம் அடைந்தார். இந்த மடத்தில் 89 ஆண்டுகள் பீடாதிபதியாக சிவக்குமார ஸ்வாமிகள் இருந்து வந்தார். 15-ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட சித்தகங்கா மடம் சிவக்குமார ஸ்வாமிகள் காலத்தில் ஏழைக் குழந்தைகள் நலனுக்காக அதிகளவில் பாடுபட்டது. குறிப்பாகக் குழந்தைகளின் கல்வியில் சிவக்குமார ஸ்வாமிகள் அதிக அக்கறை காட்டினார். 

முதலில் 500 குழந்தைகள் சித்தகங்கா மடத்தில் உதவியால் படித்தனர். தற்போது வரை 7.5 லட்சம் பேர் சித்தகங்கா மடத்தின் உதவியால் படித்து முடித்துள்ளனர். மருத்துவர்கள், இன்ஜினீயர்கள், வழக்கறிஞர்கள் என உலகம் முழுக்க சித்தகங்கா மடத்தின் உதவியால் படித்தவர்கள் பரவிக் கிடக்கின்றனர். ஜாதி, மதம், இனம், மொழி என எந்தப் பாகுபாடும் பார்க்காமல் சிவக்குமார ஸ்வாமிகளின் உதவிக் கரம் நீண்டது. மனம் முழுக்க  நிரம்பிக் கிடந்த மனிதநேயம் மட்டுமே சிவக்குமார ஸ்வாமிகளை 111 வயது வரை ஆரோக்கியத்துடன் வாழ வைத்ததாக மடத்தின் பக்தர்கள் கூறுகிறார்கள். 

சித்தகங்கா மடம் நடத்தும் கல்வி நிலையங்களில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 9,000 மாணவ- மாணவிகள் பட்டம் பெற்றுச் செல்கிறார்கள். உணவில் இருந்து விடுதிச் செலவு வரை அனைத்துமே மடத்திலிருந்து செய்யப்படும். மடத்தைச் சுற்றிலும் உள்ள 3,000 கிராமங்களிலிருந்தும் விடுதிகளுக்குத் தேவையான உணவுப் பொருள்களைப் பெற்று மாணவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை கொண்டு வந்தார் சிவக்குமார ஸ்வாமிகள். ஒவ்வொரு நாள் காலையும் 3 கிராமங்களிலிருந்து காய்கறிகள், அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவை சமையல் அறைக்கு வந்து இறங்கி விடும். ரொட்டினாக அனைத்துக் கிராமத்தினரும் இதைச் செய்து வந்தனர். அனைத்து மதத்தைச் சேர்ந்த மக்களுமே இந்தப் பணியில் ஈடுபட வைத்ததுதான் சிவக்குமார ஸ்வாமிகளின் வெற்றி அடங்கியிருந்தது. 

சிவக்குமார ஸ்வாமிகளின் ஒரு நாள் வாழ்க்கை அதிகாலை 4 மணிக்குத் தொடங்கி விடும். உள்ளங்கையில் சிறிய சிவலிங்கத்தை வைத்து பூஜையில் ஈடுபடுவார். மடத்தினுள் 12-க்கும் மேற்பட்ட கோயில்கள் இருந்தாலும் இந்த சிவலிங்கத்தை பூஜை செய்வதுதான் சிவக்குமார ஸ்வாமிகளின் வழக்கம்.  கடவுளுக்கும் பக்தர்களுக்கும் இடையே அர்ச்சகர் இருப்பதைக்கூட விரும்பாத மடாதிபதியாக சிவக்குமார ஸ்வாமிகள் விளங்கினார். 25 வயதில் துறவறத்தை ஏற்ற சிவக்குமார ஸ்வாமிகள் கடைசி வரை அடித்தட்டு மக்களுக்காகவே வாழ்ந்தார்... மறைந்தார்!