Published:Updated:

ஓட ஓட விரட்டப்பட்டவள்... ஓடி ஓடி உழைக்கிறேன்! - சௌபர்ணிகா

ஓட ஓட விரட்டப்பட்டவள்... ஓடி ஓடி உழைக்கிறேன்! - சௌபர்ணிகா
பிரீமியம் ஸ்டோரி
ஓட ஓட விரட்டப்பட்டவள்... ஓடி ஓடி உழைக்கிறேன்! - சௌபர்ணிகா

நம்பிக்கை

ஓட ஓட விரட்டப்பட்டவள்... ஓடி ஓடி உழைக்கிறேன்! - சௌபர்ணிகா

நம்பிக்கை

Published:Updated:
ஓட ஓட விரட்டப்பட்டவள்... ஓடி ஓடி உழைக்கிறேன்! - சௌபர்ணிகா
பிரீமியம் ஸ்டோரி
ஓட ஓட விரட்டப்பட்டவள்... ஓடி ஓடி உழைக்கிறேன்! - சௌபர்ணிகா

கோயம்புத்தூர் டு கோலிவுட். இது சௌபர்ணிகா என்கிற தனி மனுஷியின் தன்னம்பிக்கைப் பயணக்கதை!

படிப்பாலும் பட்டங்களாலும் சாத்திய மாகாத அந்தஸ்தை இவருக்குப் பெற்றுத் தந்திருப்பவை ஆர்வமும் முயற்சியும் மட்டுமே.  அவரது கதையை வைத்து ‘கனா - பார்ட் 2' எடுக்கலாம். அத்தனை போராட்டங்கள்... அவற்றை மீறிய சாதனைகள்.

``பூர்வீகம் கோயம்புத்தூர். அம்மா, அப்பா, ரெண்டு தம்பிகள், நான்... வசதியா வாழ்ந்த குடும்பம். கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு எங்க குடும்பத்தையே உலுக்கிடுச்சு. சொந்த வீட்டையும் சொத்துகளையும் இழந்தோம்.  தம்பிங்க ரெண்டு பேரும் அஞ்சாவதோடு படிப்பை நிறுத்தினாங்க. குடும்பச்சூழல் மாறினதால் நான் கார்ப்பரேஷன் ஸ்கூல்ல படிக்கவேண்டிய சூழல் உண்டானது.   புத்தகம், யூனிஃபார்ம் எல்லாம் வாங்கித் தந்து டீச்சர்ஸ்தான் ஹெல்ப் பண்ணினாங்க. ஸ்கூல்ல சத்துணவு சாப்பிட்டுக்கிட்டும், ஃப்ரெண்ட்ஸ்கிட்ட ஷேர் பண்ணிக்கிட்டும் என் வயிறு நிறைஞ்சது. பத்தாவது பப்ளிக் எக்ஸாம்கூட எழுதாம முடியாம படிப்பைப் பாதியோடு நிறுத்திட்டு வெளியில வந்தேன்.

14  வயசுலேயே  சேல்ஸ் கேர்ளா முதல் வேலையில சேர்ந்தேன். 750 ரூபாய் சம்பளம். அப்புறம் ஒரு வருஷம், ஒன்றரை வருஷ இடைவெளியில நிறைய வேலைகள் மாறியிருக்கேன். பெரிசா சாதிக்கலாம்னு 17 வயசுல சென்னை வந்தேன். கால்சென்டர்ல வேலை கிடைச்சது. இங்கிலீஷ் பேசத் தெரியலை, டிகிரி இல்லை, ரெண்டுக்குமேல டிரஸ் இல்லைனு நான் சந்திச்சது அவமானங்களை மட்டும்தான். ஆனாலும், நான் உடைஞ்சுபோயிடலை.

ஓட ஓட விரட்டப்பட்டவள்... ஓடி ஓடி உழைக்கிறேன்! - சௌபர்ணிகா

தினமும் காலையில இங்கிலீஷ் பேப்பர் வாங்கிப் படிக்கிறது, இங்கிலீஷ் படங்கள் பார்க்கிறதுனு என் மொழியை வளர்த்துக் கிட்டேன். சேல்ஸ் அண்டு மார்க்கெட்டிங்கில் என் அறிவை வளர்த்துக்கிட்டேன். வீட்டுக் கஷ்டம் கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிச்சது. மறுபடி எங்க குடும்பம் தலையெடுத்துடும்னு நினைச்சிட்டிருந்தபோது அம்மாவும் அப்பாவும் பிரிஞ்சிட்டாங்க. தம்பிங்க அவங்க வழியைப் பார்த்துட்டுப் போயிட்டாங்க. குடும்பமே சிதைஞ்சுபோனது. அன்பு காட்டவோ, அக்கறையா பேசவோ ஆளில்லாத தனிமை வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டேன். அதுல நான் காணாமப் போயிடக்கூடாதுனு என்னை நானே மோட்டிவேட் பண்ணிக்கிட்டேன்.

ஆறு வருஷங்களுக்குப் பிறகு மறுபடி கோயம்புத்தூர் போனேன். இனிமே யார்கிட்டயும் வேலை பார்க்க வேண்டாம்னு முடிவெடுத்தேன். கையில இருந்த 350  ரூபாய்க்கு விசிட்டிங் கார்டு பிரின்ட் பண்ணி, கோயம்புத்தூர்ல கம்பெனி கம்பெனியா ஏறிக் கொடுத்துட்டு வந்தேன். திடீர்னு ஒரு ஸ்கூல்லேருந்து அழைப்பு... ‘எங்களுக்கும் இதே மாதிரி பிசினஸ் கார்டு பண்ணித்தர முடியுமா’னு கேட்டாங்க. பண்ணிக்கொடுத்தேன். அவங்க மூலமா இன்னும் நிறைய கான்டாக்ட்ஸ் கிடைச்சது. என் முதல் பிசினஸான அட்வர்டைசிங் ஏஜென்சிக்கான முதலீடு அந்த 350 ரூபாய்தான்...’’ - ‘சாண் ஏறினால் முழம் சறுக்கும்’ என்பதே சௌபர்ணிகாவின் வாழ்க்கையில் தொடர்ந்திருக்கிறது. கரியரில் முன்னேற ஆரம்பித்தவருக்கு, பர்சனல் வாழ்க்கையில் அடுத்தடுத்த சறுக்கல்கள்...

‘`ஃப்ரெண்டு மூலமா ஒருத்தர் அறிமுகமானார். ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருந்தது.  நான் இந்து, அவர் கிறிஸ்தவர்.  கல்யாணம் பண்ணிக்கிட்டோம். கல்யாணத்துக்குப் பிறகு மதம் மாறணும்னு கட்டாயப்படுத்தப்பட்டேன். அதுல எனக்கு உடன்பாடில்லை. ‘உன்னைப் பார்த்தா எனக்கு லவ்வே வரலை’னு சொன்னார். போகப்போக சரியாயிடும்னு சகிச்சுக்கிட்டேன். குழந்தை பிறந்தால் எல்லாம் மாறிடும்னு எனக்கொரு நம்பிக்கை. கர்ப்பமானேன். வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம்னு எல்லா கர்ப்பிணிகளுக்கும் வரும் ‘மார்னிங் சிக்னெஸ்’ எனக்குக் கொஞ்சம் அதிகமா இருந்தது. பார்த்துக்கவும் ஆளில்லை. இந்த நிலைமையில என் ஏஜென்சியை கவனிக்க முடியலை. டெலிவரி முடிஞ்சதும் பார்த்துக்கலாம்னு வீட்டிலேயே இருந்தேன். வேலை, வேலைனு ஓடின எனக்கு வீட்டுல சும்மா இருக்க முடியலை.  பிறக்கப் போறது பெண் குழந்தைனு மனசளவுல முடிவு பண்ணியிருந்தேன். பொழுதுபோக்கா அவளுக்காக டிரஸ் டிசைன் பண்ண ஆரம்பிச்சேன். எனக்குத் தையல் தெரியாது. சின்னதா ஒரு மெஷின் வாங்கி, குட்டிக்குட்டியா பெட், தலையணை, டிரஸ் எல்லாம் தைக்க ஆரம்பிச்சேன். கர்ப்பமா இருந்ததால என்னால டெய்லரிங் கிளாஸுக்கோ, ஃபேஷன் டிசைனிங் கோர்ஸுக்கோ போக முடியலை. இன்டர்நெட்டிலும் யுடியூப்பிலும்  நானாவே தேடித்தேடி தையல்கலை தொடர்பான விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். டிசைனிங் சம்பந்தப்பட்ட புத்தகங்களை வாங்கிப் படிச்சேன். தினம் தினம் என்னை அப்டேட் பண்ணிக்கிட்டே இருந்தேன். ‘எல்லாம் தைக்கிறேன். பிளவுஸ் மட்டும் சரியா வர மாட்டேங்குது’னு நிறைய பெண்கள் சொல்றதைக் கேட்டிருக்கேன். எனக்கும் பிளவுஸ் தைக்கணும்னு ஆசை வந்தது. ஒருசிலர்கிட்ட கேட்டபோது, பேஸிக்லேருந்து கத்துக்கிட்டாதான் பிளவுஸ் கட்டிங் சொல்லிக் கொடுப்போம்னு மறுத்துட்டாங்க. என்னுடைய பிளவுஸ் ஒண்ணை எடுத்து முழுக்கப் பிரிச்சேன். அதை அப்படியே பேப்பர் மேல வெச்சு வெட்டிப் பார்த்தேன்.  அதே அளவுகளை வெச்சு வேற ஒரு துணியில் தைச்சுப் பார்த்தேன். நிறைய தப்பு பண்ணினேன். ஏன் சரியா வரலை, எங்கே கோளாறுனு மறுபடி நானே ஆராய்ந்து பார்த்து சரி பண்ணிக்கிட்டேன். இப்படியே சல்வார் உட்பட எல்லா டிரஸ்ஸையும் பிரிச்சு, பேப்பர் கட்டிங் எடுத்துத் தைக்கப் பழகினேன். கர்ப்பமா இருந்த ஒன்பது மாசங்களும் இப்படித்தான் போச்சு. அடுத்தகட்டமா அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்களுக்குத் தைச்சுக்கொடுக்க ஆரம்பிச்சேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அட்வர்டைசிங் ஏஜென்சி வேலையில நான் கிளையன்ட்ஸைத் தேடிப் போய் பார்த்துப் பேசி ஆர்டர் பிடிக்க வேண்டியிருந்தது. ஸ்டிச்சிங்ல கஸ்டமர்ஸ் என்னைத் தேடி வராங்க. அதனால முழு நேரமும் தையலில் இறங்கினேன்.  நான் ஆசைப்பட்டது போல எனக்கு ஆண்ட்ரியா பிறந்தாள். கோயம்புத்தூர், பேரூர்ல சின்னதா ஒரு டெய்லரிங் யூனிட் ஆரம்பிச்சேன். அது கிராமப்பகுதிங்கிறதால லாபம் இல்லைனாலும் பரவாயில்லைனு ரொம்பக் கம்மியான பணத்துக்குத் தான் தைச்சுக்கொடுத்திட்டிருந்தேன். கஸ்டமர்ஸ்கிட்ட ரொம்ப நல்ல பெயர் கிடைச்சது. அந்த நம்பிக்கையில பிசினஸை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுபோகணும்னு கடையை இன்னும் கொஞ்சம் விரிவாக்கினேன். குழந்தைங்களுக்கும் பெரியவங்களுக்குமான கவுன்ஸ் டிசைன் பண்ண ஆரம்பிச்சேன். டைரக்டர் ஷங்கரின் ‘ஜீன்ஸ்’ படம்தான் அதுக்கான இன்ஸ்பிரேஷன்னு சொன்னா நம்ப மாட்டீங்க. அந்தப் படத்துல ஐஸ்வர்யா ராய் போட்டுக்கிட்டு வரும் அத்தனை கவுன்ஸுமே அவ்வளவு அழகா இருக்கும். என்னை அறியாமலேயே அது என் மண்டைக்குள்ளே போய் உட்கார்ந்திருக்கு.  நிறைய டிசைனர்ஸ் இருக்காங்க, டெய்லர்ஸ் இருக்காங்க... அவங்ககிட்டருந்து என்னை நான் எப்படித் தனிச்சுக் காட்டிக்கப்போறேன்னு யோசிச்சேன். கவுன் டிசைனராகலாம்னு முடிவெடுத்தேன். 

வேலையில அடுத்தடுத்த முன்னேற்றங்களை நோக்கி நகர ஆரம்பிச்சிருந்த அதே நேரம், குடும்பத்துக்குள்ள மறுபடி சண்டை, சச்சரவு, மனஸ்தாபங்கள். ஆண்ட்ரியாவின் அப்பா என்னைவிட்டுப் பிரியறதுனு முடிவெடுத்தாங்க. நானும் குழந்தையும் வீட்டைவிட்டு வெளியேறினோம். அடுத்து என்ன பண்ணப்போறோம்னு தெரியாத நிலையில நிர்க்கதியா நின்னோம். உடல்ரீதியா, மனரீதியான வன்முறைகளை சந்திச்சிருந்த டைம் அது. டிப்ரெஷனின் உச்சத்தில் இருந்தேன். புருஷன் விட்டுட்டுப் போயிட்டார்... கையில குழந்தை... டெய்லரிங் வேலையை நம்பி நாங்க பிழைச்சிட முடியுமா, ஊர், உலகம் என்ன பேசப்போகுதுனு  பயமா இருந்தது.

ஓட ஓட விரட்டப்பட்டவள்... ஓடி ஓடி உழைக்கிறேன்! - சௌபர்ணிகா

ரிஸ்க் எடுத்து அதிக வட்டிக்குப் பணம் வாங்கி, கோயம்புத்தூர், ஆர்.எஸ். புரத்துல ஒரு ரெடிமேடு கடை ஆரம்பிச்சேன். கடையில டிஸ்ப்ளே பண்ணிவெச்சிருந்த கவுன்களைப் பார்த்துட்டு மக்கள் உள்ளே வர ஆரம்பிச்சாங்க. ஆனா, அந்தக் கடையில நாலு பேருக்கு மேல நிற்க முடியாது. பிசினஸ் நல்லா போகுது, கடையை விரிவுப்படுத்தலாமேனு மறுபடி பர்னசல் லோன் வாங்கி, கடையைப் பெரிசாக்கினேன். இன்னிக்கு கோயம்புத்தூர்ல கவுன் விற்பனைக்குப் பெயர்போன கடையா வளர்ந்து நிற்குது...’’ - சௌபர்ணிகாவின் வாழ்க்கை, வீழ்ச்சியிலிருந்து வளர்ச்சியை நோக்கி  நகர ஆரம்பித்தது இங்கிருந்துதான்.

‘`சினிமாவுக்கு காஸ்ட்யூம் டிசைன் பண்ணினா, என்னை நான் அடுத்த  லெவலுக்கு வளர்த்துக்க முடியும்னு தோணுச்சு. ஆசை இருந்ததே தவிர அதுக்கு யாரை, எப்படி அணுகணும்னு  தெரியலை.  ஃபேஸ்புக் மூலமா சில நடிகர், நடிகைகளைத் தொடர்பு கொண்டேன். அவங்களுக்கு மெசேஜ் அனுப்பினேன். அதைப் பார்த்துட்டுதான் விஜய் ஆன்டனிகிட்டருந்து அழைப்பு வந்தது. சந்திச்சேன். எடுத்ததுமே எனக்கு டிசைனர் வாய்ப்பு கிடைக்கலைனாலும், அதுக்கு முன்னாடி ‘கொலைகாரன்’ படத்துக்கு `இன்ஃபிலிம் பிராண்டிங்' பண்ற வாய்ப்பு வந்தது.

இன்ஃபிலிம் பிராண்டிங்னா, ஒரு படத்துல ஏதோ ஒரு கடையில ஷாப்பிங் பண்ற மாதிரி ஒரு சீன் வருதுனு வெச்சுப்போம். பிரபலமான ஒரு கடையிலேயே அதை ஷூட் பண்ணுவாங்க. சம்பந்தப்பட்ட அந்தக் கடை அதிபர் அதுக்கு பணம் கொடுப்பார். அது அவங்களுக்கொரு விளம்பரம் மாதிரி அமையும். மார்க்கெட்டிங் துறையில அனுபவம் இருந்ததால இந்த வேலையை என்னால ஈஸியா பண்ண முடிஞ்சது.

அப்புறம் ‘திமிரு பிடிச்சவன்’ படத்துல விஜய் ஆன்டனிக்கும் நிவேதா பெத்துராஜுக்கும் காஸ்ட்யூம் டிசைனரா வொர்க் பண்ற வாய்ப்பைக் கொடுத்தார். விஜய் ஆன்டனியே அம்மா கிரியேஷன்ஸுக்கு என்னை அறிமுகப்படுத்தி வெச்சார். அவங்களுடைய ‘அக்னிச் சிறகுகள்’னு படத்துல டிசைனரா வாய்ப்பு கொடுத்தாங்க. விஜய் ஆன்டனி, ஷாலினி பாண்டே, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜகபதி பாபுனு அத்தனை பேருக்கும் வித்தியாசமான ட்ரான்ஸ்ஃபர்மேஷன் (தோற்ற மாற்றம்) கொடுக்கற சவாலான வேலையைப் பண்ணிட்டிருக்கேன். இவங்களுக்கு காஸ்ட்யூமோடு, ஸ்டைலிங்கும் மேக்கப்பும்கூட பண்றேன்.

என்ன பின்னணி இருக்கு, எத்தனை படங்களில் வொர்க் பண்ணியிருக்கீங்கனு கேட்டு என்னை ரிஜெக்ட் பண்ணவங்களுக்கெல்லாம், என் திறமையால பதில் சொல்லிட்டிருக்கேன்.

என் மூணு வயசு மகள் ஆண்ட்ரியாவை என் பாட்டிதான் பார்த்துக்கிறாங்க. இந்த வயசுல அவளுக்கு என் அரவணைப்பும் அருகாமையும் தேவை. ஆனா, வேலை பிரஷர் காரணமா அவளை ரொம்ப மிஸ் பண்றேன். என் வேலையைப் புரிஞ்சுக்கிட்டு அவளும் நிறைய தியாகங்கள் பண்றா. விதியால் ஓட ஓட விரட்டப்பட்ட நான் இன்னிக்கு ஓடி ஓடி உழைச்சிட்டிருக்கேன். ராத்திரி, பகல், நாள், கிழமை பார்க்காம வெறித்தனமா உழைக்கிறேன். என்னைமாதிரி ஒரு காஸ்ட்யூம் டிசைனர்கிட்ட ‘உங்க இலக்கு என்ன’னு கேட்டா, இன்னும் பெரிய ஸ்டார்ஸுக்கு டிசைன் பண்ணணும், பாலிவுட்ல வொர்க் பண்ணணும்னு சொல்வாங்க. என் கனவு வேறு. 

அதை நீங்க ‘ஓவர் கான்ஃபிடன்ஸ்’னு நினைச்சாலும் பரவாயில்லை. சூப்பர் ஹீரோக்களை உருவாக்கும் மார்வெல் ஸ்டுடியோஸுக்கு வொர்க் பண்ணணும். சூப்பர் ஹீரோஸுக்கு நான் டிசைன் பண்ணணும். அது சாமானிய காரியமில்லைங்கிறதும் எனக்குத் தெரியும். அதுக்காக நான் இன்னும் கடுமையா உழைக்கணும். நிறைய கத்துக்கணும்.  ஒருநாள் என் கனவு நனவாகும்’’ - நெஞ்சு நிமிர்த்திச் சொல்கிறவர், நிச்சயம் ஜெயிப்பார்தானே?

- ஆர்.வைதேகி,  படம் : சொ.பாலசுப்பிரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism