Published:Updated:

அழகுக்கலையில் அசத்தும் இலங்கேஸ்வரி!

பொண்ணு பார்க்க வந்தவங்கள்ல பலரும் பொண்ணை வேற வேலை பார்க்கச் சொல்லுங்க. அதுக்கப்பறம் பார்க்கலாம்னு சொல்ல ஆரம்பிச்சாங்க. ஆனா, நான் என் வேலைய விட்டுக்கொடுக்காம உறுதியா இருந்தேன்

அழகுக்கலையில் அசத்தும் இலங்கேஸ்வரி!
அழகுக்கலையில் அசத்தும் இலங்கேஸ்வரி!

“அப்போது அவருக்குப் 10 வயதே நிரம்பியிருந்தது. அந்த வயதிலேயே தான் ஓர் அழகுக்கலை நிபுணராக வர வேண்டும் என்பதைக் கனவாக வைத்திருந்தார். தன் பாதை இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தவர், அந்தக் கனவை அடைய முற்பட்டபோது ஒரேயொரு கண்ணாடியை மட்டுமே அவருடைய பெற்றோரால் வாங்கித் தர முடிந்திருந்தது. அதுபோக, பழைய பொருள்கள் விற்கும் கடையில் சேர் ஒன்றை வாங்கி அதை வைத்துக்கொண்டு வீட்டின் மாடியிலேயே சிறிய அளவில் பார்லர் தொடங்கியிருக்கிறார். சென்னை முகப்பேரைச் சேர்ந்த இலங்கேஸ்வரி முருகனின் ஆரம்பகட்ட வாழ்வு இப்படிப் போராட்டமாக அமைந்திருந்தாலும் இவரின் திறமைக்குச் சான்றாக இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பெற்றுள்ள இவரின் சாதனையை முறியடிக்க இன்னும் எவரும் முன் வரவில்லை. தான் கடந்து வந்த வெற்றிப்பாதையை இனி அவரே நம்மிடம் பகிர்கிறார். 

“எனக்குச் சின்ன வயசுல இருந்தே பியூட்டிஷியனா ஆகுறதுலதான் இன்ட்ரெஸ்ட். வீட்டுல சொன்னப்போ அம்மா முதல்ல விரும்பவே இல்ல. ஆனாலும், நான் விடாப்பிடியா இதுதான் வேணும், வேற எந்த வேலையும் பார்க்க மாட்டேன்னு சொன்னதால சரி உன்னோட விருப்பம். ஆனா, நீ எனக்காக காலேஜ் படிக்கணும்னு சொல்லி அன்புக்கட்டளை போட்டு சம்மதிச்சாங்க. அம்மாவுக்காக பி.எஸ்ஸி தாவரவியல் படிச்சேன். மதியம் வரை காலேஜ் போயிட்டு மதியத்துக்கு மேல பியூட்டிஷியன் கோர்ஸ் படிச்சேன். ஆறு மாத கோர்ஸ் முடிஞ்சதும் பார்லர்ல பார்ட் டைம் ஜாப் போயிட்டேன். ஒருபக்கம் படிப்பு இன்னொரு பக்கம் வேலைனு ஓடிக்கிட்டு இருந்த காலம் அது. படிப்பு முடிஞ்சதும் 18 வயசுலயே சொந்தமா ஒரு பார்லர் வைக்கணும்னு முடிவு பண்ணி வீட்டுல சொன்னேன். அப்போ பார்லருக்கெல்லாம் அவ்வளவா யாரும் கவனம் கொடுக்க மாட்டாங்க. அதோட, பியூட்டிஷியன்னு சொன்னா கல்யாணம் பண்ணிக்கக்கூட தயங்குவாங்க. எனக்கும்கூட அதுதான் பெரிய பிரச்னையா இருந்தது. பொண்ணு பார்க்க வந்தவங்கள்ல பலரும் பொண்ணை வேற வேலை பார்க்கச் சொல்லுங்க. அதுக்கப்பறம் பார்க்கலாம்னு சொல்ல ஆரம்பிச்சாங்க. ஆனா, நான் என் வேலையை விட்டுக்கொடுக்காம உறுதியா இருந்தேன். அம்மாவும் அந்த விஷயத்துல எனக்கு ஃபுல் சப்போர்ட்” என்றவருக்கு 29 வயதில்தான் திருமணம் நடந்திருக்கிறது. 

“இப்போ சமீபமாதாங்க பொண்ணுங்கள்லாம் லேட் மேரேஜ் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. ஆனா, என்னைப் பொறுத்தவரை கல்யாணத்துக்காக நிறைய கேள்விகளை எதிர்கொள்ள வேண்டி இருந்துச்சு. ஆனாலும், என் வேலைக்காக எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டேன். ரொம்பவே தாமதமா கல்யாணம் ஆகியிருந்தாலும் என் கணவர் சத்தியநாராயணன் என்னைப் புரிஞ்சி நடந்துக்கிட்டாரு. என் வேலைக்கான எல்லா உதவிகளையும் செய்து கொடுத்தாரு. அவர் என் வாழ்க்கையில் வந்த பிறகுதான் நான் அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர ஆரம்பிச்சேன். வழக்கம்போல எல்லாரையும் மாதிரி நாமளும் பியூட்டி பார்லர் நடத்துறதுல என்ன இருக்கு. கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது ட்ரை பண்ணலாம்னு முடிவு பண்ணினப்போதான் க்ரியேட்டிவ் மேக் அப் பண்ண ஆரம்பிச்சேன். க்ரியேட்டிவ் மேக் அப்பைப் பொறுத்தவரை பெரிய பெரிய பார்லர்கள்லதான் பண்ணுவாங்க. ஆனா, நான் அதைச் சாதாரணமா என் பார்லர்ல பண்ண ஆரம்பிச்சதும் பெண்கள்கிட்ட நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பிச்சிடுச்சு. அதுல இருந்தே சில புதுமையான விஷயங்களைச் செய்ய ஆரம்பிச்சேன்.

மூணு வருஷத்துக்கு முன்னாடி சவுரியில 200 அடிக்கு 2 மணி நேரம் 43 நிமிஷத்துல ஜடை பின்னி தமிழ்நாடு புக் ஆஃப் ரெக்கார்டுல இடம் பிடிச்சேன். அதுக்கப்பறம் கண்ணை மூடிக்கிட்டு ஐம்பது பேருக்கு 1 மணி நேரம் 43 நிமிஷத்துல ஹேர் ஸ்டைல் பண்ணினேன். அது இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டுல இடம் பிடிச்சது. இப்போ வரை அந்த ரெக்கார்டை பண்ண வேற யாரும் ட்ரை பண்ணவே இல்லை. அதுமட்டுமல்ல, கண்ணை மூடிக்கிட்டே ஃப்ரெஞ்ச் ப்ளாட் பின்னினேன். அதை அவ்வளவு ஈஸியா யாராலயும் பண்ணிட முடியாது. இது எல்லாத்துக்குமே என் கணவர்தான் சப்போர்ட் பண்ணினாரு. நான் அடிக்கடி வொர்க் ஷாப், செமினார், காம்படிஷன்னு கிளம்பிடுவேன். அப்போதெல்லாம் முகம் சுளிக்காம என்னையும் வழியனுப்பி வெச்சிட்டு என் பிள்ளைங்க ரெண்டு பேரையும் பார்த்துக்குவாரு” என்கிறார் புன்னகையோடு. 

ஆரம்பத்தில் முகப்பேரில் உள்ள தனது வீட்டின் மாடியில் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட பியூட்டி பார்லரை இன்று அண்ணாநகர், அம்பத்தூர், கொரட்டூர் எனச் சென்னையின் பல இடங்களுக்கு விரிவுபடுத்தியிருக்கிறார். அழகுப் பெண்களை பதுமைப் பெண்களாக மெருகூட்டும் இந்தப் புதுமை மனுஷிக்கு வாழ்த்துகள்.