பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“நான் 98 சதவிகிதம் போராளி!”

“நான் 98 சதவிகிதம் போராளி!”
பிரீமியம் ஸ்டோரி
News
“நான் 98 சதவிகிதம் போராளி!”

“நான் 98 சதவிகிதம் போராளி!”

‘தேர்தலில் போட்டியிடுகிறார் ஜிக்னேஷ் மேவானி’ எனத் தெரிந்தவுடன், காங்கிரஸும், ஆம் ஆத்மியும் தங்கள் கட்சிகள் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தன. பா.ஜ.க-வுடன் போட்டியிட்ட ஜிக்னேஷ், கிட்டத்தட்ட 20,000 ஓட்டுகள் வித்தியாசத்தில், பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்்தில் வாகை சூடினார். சில வாரங்களுக்கு முன் சென்னை வந்திருந்த ஜிக்னேஷ் மேவானியைச் சந்தித்தேன். உரையாட வாய்த்த நேரம் சிறிது. எனினும் ஆழமும் அகலமும் நிறைந்த உரையாடல் அது.

“நான் 98 சதவிகிதம் போராளி!”

“உனா எழுச்சி தொடங்கி பல்வேறு போராட்டங்களை நடத்திக்காட்டுகிறீர்கள்.  தற்போது நீங்கள் ஈடுபட்டிருக்கும் தேர்தல் பாதை போராட்டங்களுக்கான வீரியத்தைக் குறைக்க வாய்ப்பிருக்கிறதா?”

“இல்லை. நிச்சயமாக அப்படி நடக்க வாய்ப்பில்லை. தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, மக்கள் மத்தியில் எனக்கான செல்வாக்கு கூடியுள்ளது. மக்களுக்கான இந்த இயக்கத்தில் பலர் தங்களை இணைத்துள் ளனர். இன்னும் பல மக்கள் இணைவதற்கு வாய்ப்புகள் அதிகம் என எண்ணுகிறேன். இன்னும் அதிகமான மக்களின் ஆதரவு கிடைத்தால், நான் முன்னெடுக்க விரும்பும் போராட்டங்களில் மக்களை அதிகம் பங்கேற்கச் செய்வேன்.”

“யாருக்கு சுதந்திரம் அதிகம், சட்டமன்ற உறுப்பினரான ஜிக்னேஷுக்கா, போராளி ஜிக்னேஷுக்கா?”

“(சிரிக்கிறார்) சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் எனக்குப் புகழ்போதை வரவில்லை. நான் முன்பு இருந்ததைப்போலவே, அப்படியே இருக்கிறேன். என்னைச் சுற்றி இருப்பவர்களிடம் தேர்தலுக்கான பிரசாரத்தை மேற்கொள்ளும்போது, ‘நான் இரண்டு சதவிகிதம் அரசியல்வாதியாகவும், தொண்ணூற்றெட்டு சதவிகிதம் போராளியாகவும்தான் இருந்திருக்கிறேன்’ எனச் சொல்வதுண்டு. போராளியாக இருப்பதுதான் எனக்குப் பொருத்தமாக இருக்கிறது. நான் பங்கேற்கும் போராட்டங்களையே மக்கள் நினைவுகொள்ள வேண்டும் என விரும்புகிறேன்; நான் போட்டியிட்ட தேர்தல்களை அல்ல.”

``ராம்விலாஸ் பஸ்வான், ராமதாஸ் அதாவ்லே போன்ற தீவிரமாக இயங்கிவந்த தலித் இயக்கங்களின் தலைமைகள், பா.ஜ.க பக்கம் சென்றிருக்கின்றன. மும்பையில் `பீம் சக்தி, சிவ் சக்தி’ போன்ற முழக்கங்களோடு சிவசேனையோடு கூட்டணி அமைத்த தலித் இயக்கங்களின் போக்கை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“நான் 98 சதவிகிதம் போராளி!”

``சில தலித் தலைவர்கள், `பாபாசாகேப் அம்பேத்கர், காங்கிரஸைத்தான் எதிர்த்தார்; பா.ஜ.க-வை அல்ல’ என்று மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அம்பேத்கர், காங்கிரஸை எதிர்த்தார்தான். ஆனால், அதைவிட நூறு மடங்கு அதிகமாக ஆர்.எஸ்.எஸ்-ஸின் பாசிசக் கருத்துகளை எதிர்த்தார்; இந்துத்துவ மதவாதிகளை எதிர்த்தார். இதை அந்த மோசடிப் பேர்வழிகள், திட்டமிட்டுத் தங்களுடைய குறுகிய அரசியல் லாபத்துக்காகவும் சுயநலத்துக்காகவும் மறைக்கிறார்கள். தலித்துகளை வேறு யாரைவிடவும் அதிகமாக ஏமாற்றியது போலி தலித் தலைமைகள்தான். அவர்கள், தலித்துகளின் நலனை வெளிப்படுத்தும் அசலான பிரதிநிதிகள் அல்லர்.’’

``தலித்துகளின் நிஜமான லட்சியங்கள் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?’’

``ஒடுக்கப்படும் வேறெந்தச் சமூகத்தையும் போலவே, தலித்துகளின் லட்சியமும்கூட அடிமைத்தளையிலிருந்து விடுபடுவதுதான். ஆனால் பிரச்னை என்னவென்றால், தலித் இயக்கங்களின் பெரும்பான்மைப் போக்கை, நடுத்தரவர்க்க, உயர் நடுத்தரவர்க்க தலித்துகள் கைப்பற்றிவைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு, உழைக்கும் வர்க்கக் கண்ணோட்டம் கிடையாது. அவர்களது செயல்பாடுகள் என்பது, பெரும்பாலும் இட ஒதுக்கீடு, பதவி உயர்வு பற்றிய கருத்தரங்குகளை நடத்துவதுதான்.  எப்போதாவது கொடூரமான தலித் ஒடுக்குமுறை நிகழ்ந்தால் மட்டும் வீதிக்கு வருகிறார்கள். மற்றபடி, டிசம்பர் 6 மற்றும் ஏப்ரல் 14 கொண்டாடுவதைச் சுற்றியேதான் சுழல்கிறது.

``உங்கள்மீது வைக்கப்படும் `காங்கிரஸ் கைக்கூலி’ என்னும் குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் பார்த்தால், நான் அம்பேத்கரியவாதிதான். அம்பேத்கர் ஒரு நடைமுறைவாதி. நானும் அப்படியே இருக்கிறேன். நான் இடதுசாரி அரசியலின் மீது மிகுந்த நாட்டம்கொண்ட அம்பேத்கரிஸ்ட். கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்வதில்லை. ஒருவன் தன்னைத்தானே கம்யூனிஸ்ட் என்று அறிவித்துக்கொள்வதற்கு முற்றிலும் வேறான தத்துவார்த்த அர்ப்பணிப்பு உணர்வு தேவை. எனக்கு அது போதுமான அளவு இல்லை என நானே ஒப்புக்கொள்கிறேன். ஆனால், நான் கம்யூனிச விரோதி அல்லன்.”

“நான் 98 சதவிகிதம் போராளி!”

``நீங்கள் மக்களின் வெறுப்பு உணர்வைத் தூண்டும் வகையில் பேசுவதாகக் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’

``நான் மக்களின் வெறுப்பு உணர்வுகளைத் தூண்டுவதில்லை. நான் அவர்களுக்கு ஊக்கமளிக்கிறேன். சமத்துவத்துக்கான ஊக்கம் அது.’’

``பத்திரிகையாளர் ஜிக்னேஷ் மேவானி, சக பத்திரிகையாளர்களுக்குச் சொல்ல விரும்பும் செய்தி என்ன?’’

``ரவீஷ் குமார்கள் உருவாக வேண்டும். அர்னாப்களாக மாறுவது உங்களுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களுக்கும் சேர்த்தே கேடு விளைவிக்கும். சிறந்த பத்திரிகையாளனாக மாற நினைக்கும் எவருக்கும் பல கனவுகள் இருக்கும். ஒற்றைப் பேனாவால் எல்லாவற்றையும் புரட்டிப்போட நினைத்தால், நமக்கு மோசமான அனுபவங்கள் கிடைக்கலாம். அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். மக்களுடன் நில்லுங்கள். அதைத் தவிர நல்ல பத்திரிகையாளனாக மாறுவதற்கு வேறு மாற்று வழியே இல்லை.’’

``தமிழக மக்களுக்கு ஜிக்னேஷ் மேவானியின் செய்தி என்ன?’’

``தமிழகம், பெரியாரின் மண்ணாகவே இருக்க வேண்டும். சாவர்க்கரையும், சங் பரிவாரையும், பா.ஜ.க-வையும் அனுமதிப்பதைவிட தமிழ்நாட்டுக்குக் கெடுதல் இருக்க முடியாது. பா.ஜ.க வளைத்துக்கொண்டிருக்கும் அ.தி.மு.க-வை மறுபடியும் தேர்ந்தெடுத்தால், அது தற்கொலை முயற்சியாக அமைந்துவிடும்.”

ம.குணவதி - படங்கள்: இ.லோகேஸ்வரி