
சேமிப்பு ஸ்பெஷல்

வருமானம் ஈட்டும் அனை வருக்கும் ஆயுள் காப்பீடு மிகவும் அவசியம். ஏனெனில், அந்தக் குடும்பத்தின் நிதிநிலை, வருமானம் ஈட்டும் நபரையே சார்ந்திருப்பதால் அவரின் உயிரிழப்பு குடும்பத்தின் நிதிநிலைமையைத் தலைகீழாக்கிவிடும். இத்தருணத்தில் அவரது இழப்பை ஈடுசெய்யும் வகையில் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பது முக்கியமாகும்.
டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பது இருசக்கர வாகனத்திற்கு எடுக்கும் இன்ஷூரன்ஸ் போன்றது. ஏதேனும் விபத்து ஏற்பட்டால் மட்டுமே க்ளைம் செய்ய முடியும். எந்த விபரீதமும் நடக்காத தருணத்தில் பாலிசிதாரர் கட்டிய பணம் திரும்பக் கிடைக்காது.
இந்த பாலிசியில் அதிக கவரேஜிற்கு குறைந்த பிரீமியம்தான். உதாரணத்துக்கு, 35 வயது மதிக்கத் தக்க ஒருவருக்கு 25 ஆண்டு களுக்கு ரூ. 50 லட்சம் காப்பீட்டுத்தொகைக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.6,000 பிரீமியமாகக் கட்டவேண்டும். இதே 6,000 ரூபாய்க்கு என்டோன்மென்ட் பாலிசி எடுத்தால் சுமார் ரூ. 1.5 லட்சமே காப்பீட்டுத் தொகையாக இருக்கும். வருமானம் ஈட்டும் நபர் இறக்கும் தறுவாயில் அவரது குடும்பத்திற்கு 1.5 லட்சம் எந்தவொரு விதத்திலும் பயனாக இருக்காது. பொதுவாக, தனி நபரின் ஆண்டு வருமானத்தில் குறைந்தபட்சமாக 10 மடங்கு முதல் அதிக பட்சமாக 20 மடங்கு வரை டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துகொள்வது நல்லது.

டேர்ம் இன்ஷூரன்ஸ் போல மருத்துவக் காப்பீடும் முக்கியமான ஒன்று. டெங்குவோ, மலேரியா காய்ச்சலோ, ஒரு நல்ல மருத்துவமனையில் மருத்துவம் பார்ப்பதற்கே குறைந்தபட்சம் ரூ. 50,000 முதல் 1,00,000 வரை செலவாகிறது. ஆகவே ஒவ்வொரு குடும்பத்திற்கும் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் அவசியம்.
கணவன், மனைவி, 2 குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி எடுத்துக்கொள்வது நல்லது. குறைந்தபட்சம் ரூ. 2 லட்சமாவது கவரேஜ் இருக்க வேண்டும். 35 வயது கணவன், 32 வயது மனைவி, 2 குழந்தைகள் கொண்ட குடும்பத்துக்கு ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி ரூ. 2 லட்சத்துக்கு ஆண்டு பிரீமியம் சுமார் ரூ. 9,000 ஆகும்.
பொதுவாக லைஃப் அல்லது மெடிக்கல் இன்ஷூரன்ஸைத் தேர்ந்தெடுக்கும்போது, அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் திறமை, எத்தனை ஆண்டுகளாக அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனம் இருக்கிறது, அந்த நிறுவனத்தின் முதன்மைத் தொழில் என்ன ஆகியவற்றைப் பார்க்க வேண்டும். ஆயுள் காப்பீட்டைப் பொறுத்தவரை, கடந்த 5 ஆண்டிற்கான க்ளைம் செட்டில்மென்ட் விகிதம் மற்றும் பிரீமியம் தொகையை வைத்து நிர்ணயம் செய்துகொள்ளலாம்.
மெடிக்கல் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, க்ளைம் செட்டில்மென்ட், காத்திருக்கும் கால அவகாசம், இணைக்கட்டணம், துணைக்கட்டணம், நெட்வொர்க் மருத்துவமனைகள் மற்றும் பிரீமியம் தொகை போன்றவற்றை கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கலாம்.
லைஃப் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, வருமான வரிச்சட்டம் 80சி பிரிவின் படி ரூ. 1.5 லட்சம் வரை வரிச்சலுகை பெறலாம். மெடிக்ளைம் இன்ஷூரன்ஸின் பிரீமியம் கட்டினால் வருமான வரிச்சட்டம் 80டி பிரிவின்படி வரிச் சலுகை பெறலாம். அதிகபட்சமாக ரூ.25,000 வரை இதன்மூலம் வரிச் சலுகை பெறலாம்.
எஸ்.ஸ்ரீதரன்