Published:Updated:

“நாகராஜா இவ்விட இருந்து போ. சமயம் ஆகி வா” பாம்புக்கு உத்தரவு போடும் விநோதப் பெண்!

இந்த ஸ்தலத்திலே நாகராஜா உண்டு, பைரவா உண்டு, நந்தி உண்டு. சனங்க எல்லாரும் வர்ற நேரம்ங்கிறதால நாகராஜாவ மறைஞ்சி இருக்கச் சொன்னேன். கால பைரவா பின்னாடி இருக்கு. மூணு வருஷம் முன்னதான் அது மறைஞ்சு. ஆனாலும், இங்கேதான் சுத்திட்டே இருக்கும்.

“நாகராஜா இவ்விட இருந்து போ. சமயம் ஆகி வா” பாம்புக்கு உத்தரவு போடும் விநோதப் பெண்!
“நாகராஜா இவ்விட இருந்து போ. சமயம் ஆகி வா” பாம்புக்கு உத்தரவு போடும் விநோதப் பெண்!

கேரள மாநிலத்தின் எருமேலியிலிருந்து 30 நிமிட தூரத்தில் உள்ளது காளகட்டு எனும் பகுதி. வனாந்திரப் பிரதேசமான அந்தப் பகுதியில் எங்குத் திரும்பினாலும் காடும் காடு சார்ந்த இடமும் மட்டுமே. பச்சை போர்த்திய மரங்களுக்கு நடுவே சிறு சிறு வீடுகள். தேநீர்க் கடைகள். தூரத்தில் சல சலவென ஓடிக்கொண்டிருக்கும் அழுதா நதி. அதன் கரையையொட்டியவாறு அமைந்திருக்கிறது ஒரு நந்தவனம். பூத்துக் குலுங்கும் பல வண்ணப் பூக்கள், அன்னாசிப் பழங்கள், மிளகுச் செடி, உயர்ந்து வளர்ந்திருந்த ரப்பர் மரங்கள் என இவற்றுக்கு மத்தியில் ஒரு வீடு. அந்த வீட்டின் வாசலில் கோயில் போன்ற அமைப்பில் இருந்த கூடாரத்திற்குள்ளிருந்து தொடர்ச்சியாக மணி சத்தம். கூடாரத்திற்குள் கட்டப்பட்டிருக்கும் மணி காற்றில் அசைந்து ஒலிக்கிறது என்று முதலில் நினைத்தோம். ஆனால், திடீரென மணியின் சத்தம் நின்றும் பின் ஓங்கி ஒலிப்பதுமாக இருந்ததைக் கண்டு மனதிற்குள் லேசான கிலி. நந்தவனத்தின் அந்தப் பேரமைதியும் மணியின் சத்தமும் ஏதோ ஒரு ரம்மியமான சூழலுக்குள் நம்மை ஆழ்த்துகிறது. சரியாக அப்போது மாலை 6 மணி இருக்கும். திடீரென எங்கிருந்தோ பெண்களும் குழந்தைகளும் வரிசை வரிசையாக அங்கே வர ஆரம்பித்தார்கள். என்னவாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள நாமும் அவர்களைப் பின் தொடர்ந்தோம். 

அந்த வீட்டுக்கு அருகே நாங்கள் சென்றதும் வீட்டின் உள்ளிருந்து ஒரு பெண் வருகிறார். அப்போது பக்கத்திலிருந்த புல் வெளியில் சரசரவென சத்தம். எல்லோரும் ஓர் அடி பின் வைத்து நகர, ``லோக இரட்சகா, நாகராஜா... இது நந்தி பூஜை சமயம். இப்போ இங்கிருந்து போயி. சமயம் கழிச்சு வா” என்று அந்த அம்மா குரல்கொடுக்க சத்தம் அடங்கியது. என்னது நாகராஜாவா? தப்பிச்சு ஓடிர்றா சாமி என்றபடியே அங்கிருந்து ஓட முற்பட்டோம். ஆனாலும், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற ஆர்வம் நம்மை அங்கிருந்து நகரவிடவில்லை. 

``நாகராஜா போயி. நீங்க உள்ளே பிரவேசிக்கலாம்“ என்றதும் அங்கிருந்த பெண்களும் குழந்தைகளும் ஆர்வத்தோடு அந்தக் கோயிலுக்குள் நுழைகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவராய் உள்ளே நுழைந்தபோது அந்த மணியின் சத்தம் அதிகமாகக் கேட்டது. சட்டென அங்கிருந்த துவாரத்தின் வழியாக ஒரு பசு தலையை நீட்டி வேக வேகமா தலையை அசைக்க ஒவ்வொருவராக அதன் முன் கைகூப்பி நிற்கிறார்கள். பக்தர்கள் பணிவோடு தன் முன் நின்றதும் பசு தலையைத் தூக்கி ஆசீர்வாதம் செய்கிறது. நாக்கால் அவர்களின் முகத்தை வாஞ்சையோடு துடைக்கிறது. பின் வரிசையில் நின்றுகொண்டிருந்த நமக்கு இந்தக் காட்சியைப் பார்த்து ஆச்சர்யம். வந்திருக்கும் ஒவ்வொருவரும் பசுவின் முன் நின்று ஏதேதோ வேண்டுதல்களை முன் வைக்க, மொழி புரியாவிட்டாலும் அங்கு நடப்பதை நம்மால் உணர முடிந்தது. சிறிது நேரம் அங்கேயே இருந்து கூட்டம் குறைந்ததும் பசுவை வளர்க்கும் அந்த அம்மாவிடம் சென்று பேசினோம். 

``எம்பேரு சுலோச்சனா. ஆனா, இவ்விட எல்லோரும் மணியம்மைன்னு சொன்னாதான் அறியும். பிறந்தது வளர்ந்தது எல்லாமே இக் காளகட்டுலதான். ஒரு பொண்ணு ஒரு பையன். பொண்ணைக் கல்யாணம் கட்டிக் கொடுத்துட்டேன். பையன் பி.ஜி கழிச்சு. சமயம் கிடைக்கும்போது ரெண்டு பேரும் இங்கே வரும். இந்த ஸ்தலத்திலே நாகராஜா உண்டு, பைரவா உண்டு, நந்தி உண்டு. சனங்க எல்லாரும் வர்ற நேரம்ங்கிறதால நாகராஜாவ மறைஞ்சி இருக்கச் சொன்னேன். கால பைரவா பின்னாடி இருக்கு. மூணு வருஷம் முன்னதான் அது மறைஞ்சு. ஆனாலும், இங்கேதான் சுத்திட்டே இருக்கும். இதோ, நந்தி இவ்விட கண்டு. இது இங்கே வந்து பத்து வருஷம் கழிஞ்சு. எனக்குச் சின்ன வயசுல இருந்தே தூக்கத்தில் சொப்பனம் வந்து போயிட்டே இருக்கும். அது ஏதுன்னு நான் அறியேன். காலம் ஆகிட்டு பத்து வருஷத்துக்கு முன்னே ஒருநாள் சொப்பனத்தில் சிவலிங்கா தரிசனம் கிட்டி. பகவான் அவதாரம் செஞ்சு இங்கே வரும்னு அசரீரி கேட்டு நான் விழிச்சுப் போயி. பின்னே ஒருநாள் நான் செங்கனூர் போயி இந்த நந்தியை வாங்கிட்டு வந்தேன். 

நான் முதல்ல நந்தியை அறியலை. அதுதான் என்னை அறிஞ்சு என் சேலையை இழுத்துச்சு. சிவபெருமான் கனவுல சொன்ன அவதாரம் எனக்கு அடையாளம் காட்டியதால அவருக்கு நன்றி சொல்லி அழைச்சுட்டு வந்தேன். நந்தி இவ்விட வந்த பிறகு நிறைய மாற்றம் நடந்துச்சு. நான் பகவானுக்கு சேவை பண்ண என்னை அர்ப்பணிச்சுட்டேன். ஆனா, என் கணவர் மட்டும் போதையை நிறுத்தலை. பின்னே ஒருநாள் நான் நந்தி வந்த இடம் புண்ணிய ஸ்தலம் ஆயி. நீ இவ்விட இருந்து போ என்று பறைஞ்சி அவர் வெளியே போயிட்டார்.  பகவானுடைய சேவைக்காக என் கணவரை விட்டு இவ்விட தனியே இருக்கேன். காளகட்டி எனும் இந்த ஸ்தலத்திற்கு இந்த நந்தி வந்ததுக்குப் பிறகு நிறைய சனங்கள் வந்து புண்ணியம் செஞ்சுட்டுப் போறாங்க. அதேபோல என் கணவரும் புண்ணியவானாய் மாறி இங்கே வருவார்” என்கிறார் மணியம்மை. 

தனியொரு ஆளாக நின்று பத்து வருடங்களாக நந்திக்கு சேவை செய்துகொண்டிருக்கிறார் மணியம்மை. ஆன்மிகத்திற்கும் அப்பால் அந்த இடத்தில் நிரம்பியிருந்த அமானுஷ்யங்கள் நம்மை மெய் சிலிர்க்க வைத்தன. தனியே இருக்கும் வீட்டில் நாய் ஒன்றை வளர்த்திருக்கிறார். ஆனால், அது மூன்று வருடங்களுக்கு முன்னே இறந்தபோது அதைக் கால பைரவா என்று சொல்லி வீட்டின் பின்புறம் அடக்கம் செய்திருக்கிறார். நம் கண் முன்னே ஊர்ந்து சென்ற பாம்பை அங்கிருந்து நகரச் சொல்கிறார். பசு முன் சென்று நின்றதும் அது யானை தும்பிக்கையைத் தூக்கி ஆசீர்வாதம் செய்வது போல தலையைத் தூக்கி ஆசீர்வாதம் செய்கிறது. 

``இவ்விடம் எந்த மாயமும் கிடையாது. மந்திரமும் கிடையாது. இந்தக் கலியுக காலத்திலே லோக இரட்சகனான மகாதேவன் அவதாரம் கொண்டு இங்கே வந்திருக்கார். அவர் வந்ததிலிருந்தே ஏது சமயம் பக்தர்கள் வந்து போயிட்டே இருக்கும். தினமும் அதிகாலை 4 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்திலே ஔஷதங்களை எல்லாம் வைத்து முப்பது வகையான மலர்களோடு லோக நன்மைக்காக நந்திக்கு பூஜை செய்வேன். அந்தச் சமயம் சபரிமலையிலிருந்து ஐயப்பனும் பகவான் விஷ்ணுவும் இவ்விட வந்து தரிசனம் செய்யும். பிறகு நந்தி பகவானுக்குச் சாப்பிட புல்லும் சுடு தண்ணீரில் வெல்லமும் கலந்து கொடுப்பேன். உச்சி வேளையிலே கோதுமைத் தவிடும் சுடு வெல்லமும் சாப்பிடும்” என்று அவர் பேசிக்கொண்டிருக்கையிலே மீண்டும் தூரத்திலுள்ள புல்வெளியில் சரசரவென சத்தம். ``சமயமாயிட்டுல்லே நாகராஜா அது ஸ்தலத்துக்குப் போகிற வழியில நாம நிக்கிறோம். வாங்க அவ்விட போயிடலாம்” என்று அவர் சொல்ல அவ்வளவுதான் நமக்கு உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. நாகராஜா வருவதற்குள் நாம் அங்கிருந்து கிளம்பிவிட வேண்டும் என்று முடிவெடுத்து ஓடி வந்துவிட்டோம். 

என்னதான் ஆன்மிகம் என்று சொன்னாலும்கூட அந்த இடத்தில் இருக்கக்கூடிய அமானுஷ்யங்களுக்கு மத்தியில் அந்த அம்மா தனியே பசுவோடு பத்து வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வருவது விநோதமாகத்தான் இருக்கிறது.