Published:Updated:

`வலிகளிலிருந்து நிவாரணமளிக்கும் யோகா!’ மதுரை மாணவனின் சாதனை

எல்லாத்துக்கும் மாத்திரை எடுத்துக்க வேண்டாம் நோய்கள இப்படியும் விரட்டலாம் அசத்தும் மதுரை மாணவன்

`வலிகளிலிருந்து நிவாரணமளிக்கும் யோகா!’ மதுரை மாணவனின் சாதனை
`வலிகளிலிருந்து நிவாரணமளிக்கும் யோகா!’ மதுரை மாணவனின் சாதனை

`நோய் நாடி... நோய் முதல் நாடி' என்பதுதான் நம் முன்னோர் வகுத்த மருத்துவத் தத்துவம். நோய் வந்தபிறகு சிகிச்சையளிப்பதைவிட, வராமல் தற்காத்துக்கொள்ள ஏராளமான வழிமுறைகளை நம் முன்னோர் வகுத்து வைத்திருக்கிறார்கள். அப்படியான வழிமுறைகளில் ஒன்றுதான் யோகா. மனதையும் உடலையும் சீராக வைத்துக்கொள்ளும் இந்த அரிய கலை இன்று இந்தியாவின் அடையாளமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. 

இந்தக் கலையில் மாநில அளவிலும் தேசிய அளவிலும் பல்வேறு பரிசுகளைப் பெற்று சாதித்திருக்கிறார் மதுரையைச் சேர்ந்த 14 வயதுச் சிறுவன் அசாருதீன். அண்மையில், பாண்டிச்சேரியில் நடைபெற்ற இண்டர்நேஷனல் யோகா போட்டியில் `எக்ஸலென்ட் விருது' பெற்றுச் சாதித்திருக்கும் அசாருதீன், மதுரை வில்லாபுரம் பகுதியில் வசித்துவருகிறார். 

3 ம் வகுப்புப் படிக்கும்போது யோகா கற்கத் தொடங்கிய அசாருதீன், தற்போது 9-ம் வகுப்பு படிக்கிறார். பல்வேறு சர்வதேசப் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் இவர், 2020-ம் ஆண்டு இங்கிலாந்து, மலேசியா, தாய்லாந்து, சீனா உள்ளிட்ட நாடுகளில் நடைபெறவிருக்கும் போட்டிகளில் பங்கேற்கத் தயாராகி வருகிறார். தவிர, யோகாவை ஏராளமானோருக்குக் கற்பித்தும் வருகிறார். 

சர்க்கரை நோய்க்கு அர்த்தசலபாசனம், முதுகு வலிக்கு சர்வாங்காசனம் என்று தனது உறவினர்களுக்கு யோகாசனத்தின் முக்கியத்துவம் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்த அசாருதீனை அவரது இல்லத்தில் சந்தித்தோம். 

அசாருதீனின் சாதனைகள் பற்றி அவரது தந்தை ஜமஸ்கான் நம்மிடம் பேசினார்.

``எனக்கு 3 குழந்தைங்க. மூத்தது பொண்ணு, காலேஜ்ல படிக்குறா. அவளுக்கு டென்னிஸ்ல ஆர்வம். அடுத்தது சல்மான், அசாருதீன்னு ரெண்டு பிள்ளைகள். அவங்க ரெண்டுபேருக்கும் யோகா ரொம்பப் பிடிக்கும். சல்மானுக்கு சின்ன வயசுல சைனஸ் பிரச்னை இருந்திச்சு. அதுக்கு மருந்து, மாத்திரை நிறைய எடுத்தும் சரியாகல. கடைசியில சித்தா டாக்டர்கிட்ட போனோம்; அப்போ யோகாதான் நல்ல தீர்வுன்னு அவர் சொன்னார். உடனே மதுரை வில்லாபுரத்துல உள்ள யோகா மாஸ்டர் பாலசுப்பிரமணிகிட்ட சல்மானை அழைச்சிட்டுப் போய் பயிற்சி எடுக்க வெச்சேன். அப்போ, ``அசாருதீனும் யோகா கத்துக்க ஆசையா இருக்கு"னு சொன்னான். அவனையும் சேர்த்துவிட்டேன். அண்ணன் தம்பி ரெண்டுபேரும் பயிற்சி எடுத்தாங்க.

யோகா செஞ்சதால சல்மானுக்கு சைனஸ் தொல்லை குணமாச்சு. ஆனாலும் பசங்க ரெண்டுபேரும் தொடர்ந்து யோகா கத்துக்கிட்டாங்க. மாஸ்டர் அவங்க ரெண்டுபேரையும் நிறைய போட்டிகள்ல கலந்துக்க அனுப்பி வெச்சாரு. மதுரை காந்தி மியூசியத்தில நடந்த போட்டியில என் பசங்க யோகா செஞ்சதை வெளிநாட்டுப் பயணிகளும், யோகா ஆர்வலர்களும் பார்த்துப் பாராட்டுனாங்க. பார்வையாளர்கள் எழுப்பின கரகோஷம் என் கண்ணுல தண்ணி வரவெச்சுது. அப்போதான் எனக்கு யோகாவோட முக்கியத்துவம் புரிய ஆரம்பிச்சது. 

என் பசங்களுக்கு யோகா செய்யறதுல ஆர்வம் வந்ததால அதை மேம்படுத்தணும்னு முடிவு பண்ணினேன். சின்னச் சின்ன போட்டிகளுக்குக்கூட அழைச்சுட்டுப் போனேன். அதோட விளைவு, மதுரா கல்லூரியில நடந்த தென்மண்டல அளவிலான யோகா போட்டியில அசாருதீனுக்குத் தங்கப் பதக்கம் கிடைச்சுது. 2007-ம் வருஷம் விழுப்புரத்துல நடந்த மாநிலப் போட்டியில ஓவர் ஆல் சாம்பியன் ஆனான். அதேபோல மதுரை மன்னர் கல்லூரியில நடந்த போட்டியில முதல்பரிசு கிடைச்சது. கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூகிட்ட தங்க மெடல் வாங்கினான். 

2013-ம் வருஷம் சென்னை நேரு ஸ்டேடியத்தில தேசிய அளவிலான யோகா போட்டி நடந்தது. அதுல தங்கம் கிடைச்சது. 2015-ம் வருஷம் புதுக்கோட்டையில நடந்த மாநில அளவிலான போட்டியில முதல்பரிசு வாங்கினான். அழகப்பா பல்கலைக்கழகத்தில `அப்புச்சி விருது' கிடைச்சது. இப்படி அசாருதீனுக்கு நிறைய விருதுகள் கிடைச்சுது. இந்தியாவுக்குப் பெருமைசேர்க்குற விதமா அவன் வெளிநாடுகளுக்குப் போய் நிறைய விருதுகள் வாங்கணும்னு விரும்புறேன். இதுக்கு அவன் தொடர்ந்து முயற்சி பண்றதோட பயிற்சியும் எடுத்துட்டு வர்றான். காலை, மாலைன்னு நேரம் ஒதுக்கித் தொடர்ந்து யோகாசனம் செய்றான். சாதனை படைக்கணும்கிறதுக்காக ஹெல்மெட், கொட்டாங்குச்சி, ஆணித்தட்டுலயும்கூட யோகா செய்துட்டு வர்றான். 

அவன் கத்துக்கிட்ட யோகா மத்தவங்களுக்கும் பயன்படணும்கிறதுக்காக மாநகராட்சிப் பள்ளிக்கூடத்துல 72 மாணவர்களுக்கு இலவசமா யோகா சொல்லிக்கொடுக்கிறான். அதோட எங்க வீட்டுல உள்ளவங்க, சொந்தக்காரங்க, பக்கத்துக்கு வீட்டுக்காரங்க, நண்பர்கள்னு பலருக்கும் நோய்கள் வந்தா அதைக் குணப்படுத்துறவிதமான சில யோகாசனங்களைச் சொல்லிக்கொடுக்கிறான். எனக்கு தலைவலி, வயிறுவலி வந்தா மாத்திரை எடுத்துக்க மாட்டேன்; என் மகன் சொல்லிக்கொடுக்குற ஆசனங்களைச் செஞ்சே வலிகள்ல இருந்து குணம் பெற்றிருவேன். அசாருதீனைப்போல சல்மானும் நிறைய பரிசு வாங்கியிருக்கான். அவனுக்கு யோகா மாஸ்டர் ஆகணும்கிறது குறிக்கோள்'' என்றார். 

தான் கற்ற யோகாவையும் அதன்மூலம் கிடைக்கும் மருத்துவ நன்மைகளையும் இந்த இளம்வயதில் மற்றவர்களுக்கும் கொண்டு சேர்க்கும் அசாருதீனுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.