பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

நடுக்கடலில் சில சாகசங்கள்!

நடுக்கடலில் சில சாகசங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
நடுக்கடலில் சில சாகசங்கள்!

நடுக்கடலில் சில சாகசங்கள்!

ந்திய கடலோரக் காவற்படை முதல் முறையாகச் செயல்பாட்டிற்கு வந்த நாள் பிப்ரவரி 1.  அதைக் கொண்டாடும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 1-ஆம் தேதி மக்களை கப்பலில் அழைத்துச் சென்று அவர்களின் பணியை பற்றி செயல்முறை விளக்கம் கொடுப்பது வழக்கம். இதற்கான முன்னோட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்க, ‘சாகர்’ கப்பலில் நம் விகடன் குழுவும் ஒரு ‘ரைடு’ சென்றோம். துறைமுகத்தை அடைந்த போது, பெரிய துப்பாக்கிகளை ஏந்தியபடி கப்பல்கள் கம்பீரமாக நின்று கொண்டிருந்தன. கரையில் நின்று பார்க்கும்போது கப்பல் சின்னதாக இருக்கிறதே எனத் தோன்றியது. ஆனால், கப்பலில் ஏறிப் பார்த்தால் ஏராளமானோர் உட்காரும் அளவு இடம் ஏற்பாடு செய்திருந்தார்கள். நாங்கள் சென்ற சாகர் கப்பலில் மட்டும் அன்று 15 அதிகாரிகளும், 105 மாலுமிகளும் இருந்தார்கள்.

நடுக்கடலில் சில சாகசங்கள்!

மொத்தம் 8 கப்பல்கள் சென்னை துறைமுகத்தி லிருந்து அணிவகுத்துக் கிளம்பின. அனைத்தும் ஒரே திசையில், ஒரே வேகத்தில் ஆழ் கடலை நோக்கி பயணத்தைத் தொடங்கின. மிதமான வேகத்தில் 20 கி.மீ தொலைவு கடலுக்குள் சென்று கப்பல் நிற்கும்போது,  வானமும் கடலும் மட்டுமே கண்முன் தெரிந்தன.   நடுக்கடலில் நிற்கும் உணர்வு. திடீரென கப்பல்கள் வட்டம் போட்டு நின்றன. சிறிய படகில் இரண்டு நபர்கள் எங்கிருந்தோ வட்டத்தின் நடுவே வந்தார்கள். கமாண்டோ சிலர் அவர்களைப் பின்தொடர்ந்து பெரிய படகு ஒன்றில் வந்து அவர்களை இழுத்துச் சென்றார்கள். கடற்கொள்ளையர்களையும், கடத்தல்காரர் களையும் பிடிப்பதற்கான டெமோ அது என அப்போதுதான் தெரிந்தது. 

நடுக்கடலில் சில சாகசங்கள்!

வட்டம் கலைந்ததும், சின்ன கப்பலில் இருந்து ஒருவர் கடலில் திடீரென குதித்துவிட்டார். அந்தச் சிறிய கப்பலிலிருந்து எதையோ சுட,   அது கடலில் விழுந்தது. அதிலிருந்து சிவப்பு  ஒளியும், புகையும் வந்து கொண்டிருந்தது. அந்த இடத்தை அடையாளம் கண்டு வந்த ஹெலிகாப்டர், கடலில் இருந்தவரை ஏணி போட்டு மீட்டது.  கடலில் தத்தளிப்போரைக் காப்பாற்றும் முறை இது. தரையில் இருந்து வரும் தபால்களை ஹெலிகாப்டர் மூலம் கப்பலுக்கு டெலிவரி செய்கிறார்கள். கப்பல் நகர்ந்து கொண்டிருக்க, ஹெலிகாப்டரும் கப்பலின் வேகத்திலேயே நகர்ந்து லாகவமாகக் கடிதங்களை இறக்கும் முறையை அன்று செய்து காட்டினர். 

கப்பலில் இருந்து கடலுக்குள் துப்பாக்கி சுடுவதை ஹாலிவுட் படங்களில் பார்த்திருப்போம். அதை நேரடியாகப் பார்க்கும்போது அவ்வளவு விறுவிறுப்பு; கொஞ்சம் படபடப்பு. சுடப் பட்டவை ஒவ்வொன்றும் டம்மி புல்லட்டுகள்தான் என்றாலும், அதைச் சுடும்போது கப்பலில் உணரமுடிந்த அதிர்வுகள்  துப்பாக்கியின் பலத்தைக் காட்டின. 

நடுக்கடலில் சில சாகசங்கள்!

‘இடதுபக்கம் பாருங்கள்’ என ரேடியோவில் ஒரு குரல். ஒரே நேரத்தில் 8 கப்பல்களிலும் ஒன்றாக ‘கார்ல் குஸ்தாவ்’ ராக்கெட் லான்ச்சர் வான்நோக்கி சுட்டபோது பயத்தை விஞ்சியது ஆச்சர்யம். கடைசியாக, 7 கப்பல்கள் ஒரே திசையில் நின்று மரியாதை செலுத்த ‘சமுத்ரா’ எனும் தலைமை கப்பல் மட்டும் எதிர்த்திசையில் வந்து மரியாதையை ஏற்றுக்கொண்டது. கேப்டன் முதல், கடைநிலை மாலுமி வரை எல்லோரும் தங்கள் தொப்பியைக் கையில் ஏந்தியபடி, ‘ஜெய் ஹிந்த்’ என மூன்று முறை முழக்கமிட்டு முடித்தபோது தேசிய கீதம் மனதில் ஓடத் தொடங்கியது.

ரஞ்சித் ரூஸோ - படங்கள்: தே.அசோக்குமார்