Published:Updated:

`நிஜமாகவே ஹேக் செய்யப்பட்டனவா வாக்கு இயந்திரங்கள்?’ - டெக்னிக்கல் ரிப்போர்ட்

இந்தியா மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் எனத் தெரிவிக்கும் அமெரிக்கா வாழ் இந்திய நிபுணர் கூறும் டெக்னிக்கல் விளக்கம் என்ன? வாக்கு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை நிரூபிக்காமல் எப்படி மொத்த இந்தியாவும் அதில் வாக்களிக்கும் என எதிர்பார்ப்பது?

`நிஜமாகவே ஹேக் செய்யப்பட்டனவா வாக்கு இயந்திரங்கள்?’ - டெக்னிக்கல் ரிப்போர்ட்
`நிஜமாகவே ஹேக் செய்யப்பட்டனவா வாக்கு இயந்திரங்கள்?’ - டெக்னிக்கல் ரிப்போர்ட்

2014 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கிப் பின்வந்த தேர்தல்கள் அனைத்திலும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டு வாக்குகள் மாற்றப்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளார் சையது சுஜா என்னும் இந்தியத்  தொழில்நுட்ப வல்லுநர். தற்போது அமெரிக்காவில் தஞ்சம் புகுந்திருக்கும் இவர், எப்படி மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும்? இதன்பின் இருக்கும் அரசியல் என்ன? போன்ற பல விஷயங்களை லண்டனில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். அவை என்ன?

ஹேக்கிங் நடைபெற்றது எப்படி என்ற கேள்விக்குச் செல்லும்முன், தான் யார் என்பதைப் பற்றி சையது சுஜா கூறிய தகவல்களைப் பார்ப்போம். அவர் ECIL (Electronics Corporation of India Limited) எனப்படும் பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் பணியாற்றியிருக்கிறார். இஸ்ரோ தொடங்கிப் பல அரசு நிறுவனங்களுக்கு எலெக்ட்ரானிக் இயந்திரங்களைத் தயாரித்துக்கொடுக்கும் இந்த நிறுவனம், தேர்தல் ஆணையத்துக்காக இந்த மின்னணு வாக்கு இயந்திரங்களையும் (EVM) தயாரித்துத்தருகிறது. 2013-ம் ஆண்டு, சுஜா அங்கு பணிபுரிந்துகொண்டிருக்கும்போது, அவரையும் சில நபர்களையும் கொண்ட ஒரு குழுவுக்கு, அப்போது இருந்த மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியுமா எனப் பலவிதத்தில் சோதனை செய்யும் பணி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துதருவதாகவும் ECIL கூறியுள்ளது. அந்தச் சோதனையின்போதுதான், இந்த இயந்திரத்தில் இருக்கும் ஓட்டைகளைக் கண்டுபிடித்து, அதைவைத்து எப்படி வாக்குகளை மாற்றியமைக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளது இவரின் குழு. இதற்குப் பின் இந்த ஓட்டைகளையும் சரிசெய்து, எந்த ஒரு முறையிலும் ஹேக் செய்ய முடியாத மின்னணு வாக்கு இயந்திரங்களை வடிவமைத்துத் தந்திருக்கிறது இந்தக் குழு. 

ஸ்கைப் மூலம் சையது சுஜா பேசிய லண்டன் பத்திரிகையாளர் சந்திப்பு

இவர்கள் எப்படி வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்தனர்?

அவர் கூறுவதை வைத்துப் பார்க்கையில், இந்த EVM-களை Wi-fi மூலமோ, ப்ளூடூத் மூலமோ ஹேக் செய்ய முடியாது. அப்படிச் சொன்னால், அது கண்டிப்பாகப் பொய்யாகத்தான் இருக்கும் எனத் தீர்மானித்துவிடலாம். ஏனென்றால், EVM-களில் அதற்கான வசதிகள் எதுவுமே கிடையாது. இதில் இருக்கும் PCB-யை (printed-circuit board) பார்க்கையில், இந்த இயந்திரங்களில் இருப்பது மிகவும் பழைமையான ஒரு சிப்-செட். இது வடிவமைக்கப்பட்ட காலத்தில், மேலே குறிப்பிடப்பட்ட தொழில்நுட்பங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவே இல்லை. ஆனால், இந்த சிப்-செட்டில் ASK பிரிவு ஒன்றும் FSK பிரிவு ஒன்றும் இருந்திருக்கிறது. ASK என்றால் Amplitude Shift Keying, FSK என்றால் Frequency Shift Keying. இதனால் ஒரே நேரத்தில் டிரான்ஸ்மீட்டராகவும், ரிசீவராகவும் இந்த சிப் -செட்டால் இயங்கமுடியும். அதாவது 7Hz மற்றும் 390 Hz இடையிலான குறைவான ரேடியோ அதிர்வெண்ணில் (Frequency)  இதனால் தகவல் அனுப்பவும் பெறவும் முடியும். இது, நீர்முழ்கிக் கப்பல்கள் போன்ற ராணுவ பயன்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படும் அதிர்வெண் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிர்வெண் எந்த அளவு குறைவென்றால், FM ரேடியோ சேனல்கள் ஒளிபரப்பிற்கு 30-300 Mhz வரையிலான அதிர்வெண்களைப் பயன்படுத்தும். ஆனால், ஹேக் செய்ய இது மட்டும் போதாது. அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. இதில் தகவல் அனுப்பி, EVM-ல் இருக்கும் வாக்குத் தகவல்களை மாற்ற இதனுள் இருக்கும் kernel சிஸ்டத்தைக் கடந்துசெல்லவேண்டியது அவசியம்.

ஒரு புரிதலுக்கு, இந்த kernel-ஐ கணினிகளில் இருக்கும் ஓ.எஸ் என்பதுபோல கற்பனை செய்துகொள்ளுங்கள். இதைக் கடந்துசெல்ல சையது சுஜாவின் குழு ஒரு ப்ரோக்ராமை வடிவமைத்துள்ளது. இறுதியாக PCB-யில் சிறிய க்ராப்ஃபைட் டிரான்ஸ்மிட்டர் ஒன்றை மட்டும் சேர்த்தால் போதும். மின்னணு வாக்கு இயந்திரத்தை ஹேக் செய்துவிடலாம். இதைப் போன்ற லட்சக்கணக்கான PCB-களுடன்தான் 2014 நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றதாகத் தெரிவிக்கிறார் அவர். குறைந்த அதிர்வெண்களில் தகவலை இவற்றுக்கு ஒரு GNU modulator மூலம் அனுப்பமுடியும். ஒரு பட்டனில் இருந்து இன்னொரு பட்டனுக்கு வாக்கை இதன்மூலம் மாற்றலாம். 42 GNU modulator-கள் ஒரு பிரபல தனியார் நிறுவனத்திடம் இருப்பதாகவும், அவற்றைக்கொண்டுதான் பா.ஜ.க வாக்குகளைத் தங்களுக்குச் சாதமாக மாற்றிக்கொள்கிறது என்றும் கூறினார் அவர். இதைத் தங்கள் நிறுவனத்திடம் தெரிவிக்கும்போது, இதனால் என்ன நடக்கவிருந்தது என்பது இந்தக் குழுவினருக்குத் தெரியவில்லை. தவறு சரிசெய்யப்படும் என்ற நம்பிக்கையில்தான் இந்த ஹேக்கிங் பணியைச் செய்துள்ளனர்.

இதைத் தவறான முறையில் வாக்குகளில் மோசடி செய்யப் பயன்படுத்தியதை ஹைதராபாத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும்போதுதான் கண்டறிந்துள்ளனர். சோதனையின்போது தயாரிக்கப்பட்ட 'Modulator' ஒன்று இவர்களிடம் அந்தச் சமயத்தில் இருந்திருக்கிறது. அது, திடீரென தகவல்கள் பெறத்தொடங்கியுள்ளது. முதலில் எதோ கோளாறுதான் போல என்று நினைத்த அவர்கள், சீராக வரத்தொடங்கிய சிக்னல்களைவைத்து, ஏதோ தவறு நடந்துகொண்டிருக்கிறது என்று உறுதிசெய்துள்ளனர். நீண்ட யோசனைக்குப் பின்பு, இந்தத் தகவலைவைத்து பணம் சம்பாதிக்கலாம் என முடிவெடுத்து, அமைச்சர் ஒருவரைத் தொடர்புகொண்டு இந்த மோசடியை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துவிடுவோம் என மிரட்டியுள்ளது இந்தக் குழு. அமைச்சரும், 'இதைப்பற்றி நேரில் பேசலாம்' என அவர்களை ஒரு இடத்திற்கு வரச் சொல்லி, பேசத்தொடங்கும் முன்னே துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டுள்ளார். இதில், சையது சுஜா தவிர மற்ற அனைவரும் உயிரிழந்துள்ளனர். குண்டடிபட்ட சுஜா, பிணங்கள் ஏற்றப்பட்ட வேனில் இருந்து திடீரென எழுந்து ஓடியதால் மட்டுமே தப்பித்திருக்கிறார். இதற்கு மேல் இந்தியாவில் இருப்பது ஆபத்தென, அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ளார். இந்த துப்பாக்கிச்சூடு நடந்த அடுத்த நாள், ஹைதராபாத் அருகில் உள்ள ஒரு ஊரில் கலவரத்தை இவர்களே ஏற்படுத்தி, அதில் இவரின் குழுவினர் கொல்லப்பட்டதாகக் கணக்குக்காட்டியுள்ளனர். 

இந்த மோசடியைப் பற்றி ஏற்கெனவே அறிந்திருந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே, கட்சியுடன் இருந்த ஒரு கருத்து மோதலின் காரணமாக இதை வெளியுலகத்திற்குக் கொண்டுவர முற்பட, அவரும் கொல்லப்பட்டுள்ளார். இது, கார் விபத்தாக அறிவிக்கப்பட்டது.

இவர்கள் கூறுவது உண்மைதானா?

இதுவரை மேலே பார்த்த அனைத்துமே சையது சுஜா கூறியவைதான். இது உண்மையாக இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. ஏனென்றால், இந்த அளவு பயங்கரமான குற்றச்சாட்டுகளை வைக்கும் அவர், அவற்றை நிரூபிக்க ஒரு சிறிய ஆதாரத்தைக்கூட காட்டவில்லை. முதலில், இந்த லண்டன் பத்திரிகையாளர் சந்திப்பே, நேரடியாக அவர் வந்து மின்னணு வாக்கு இயந்திரத்தை ஹேக் செய்துகாட்டப் போகிறார் என்று கூறியே கூட்டப்பட்டது. ஆனால், நேர்காணல் நடந்ததோ ஸ்கைப்பில்தான் (அதிலும் இருட்டான அறையில் பாதிமுகம் மறைக்கப்பட்டிருந்தது). அமெரிக்காவிலிருந்து விமானம் ஏறச் செல்கையில், தான் தாக்கப்பட்டதாகவும் அதனால் அவரால் வரமுடியவில்லை என்றும் காரணத்தை இதற்கு அவர் கூறினார். EVM இயந்திரம் ஒன்றை லண்டனுக்கு எடுத்துவரவேண்டிய, தனக்கு வேண்டப்பட்ட சிலர் பணத்திற்காகத் தன்னை காட்டிக்கொடுத்துவிட்டதாகவும் கூறினார் சையது. இதனால், எந்த ஒரு டெமோவும் அங்குக் கொடுக்கப்படவில்லை. இதனால் தேர்தல் நடக்கவுள்ள இந்த நேரத்தில் இவர் சொல்லுவது, ஒரு டெக்னிக்கல் கட்டுக்கதையாகக் கூட இருக்கலாம் எனப் பெரிதும் சந்தேகிக்கப்படுகிறது . தேர்தல் ஆணையமும், இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு, EVM-களில் வாயர்லெஸ் தொடர்புக்கான எந்த வசதியும் இல்லை. எனவே, தொலைவில் இருந்து இதை ஹேக் செய்வதெல்லாம் நடக்காத காரியம் என இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

மேலும், 2009-2014 வரையிலான காலத்தில், சையது சுஜா ECIL நிறுவனத்தில் பணிபுரிந்ததற்கான எந்தப் பதிவும் இல்லையென்றும், அப்படி ஒருவர் EVM-களின் வடிவமைப்பில் ஈடுபடவே இல்லை என்று ECIL நிறுவனமும் இந்த விவகாரம்குறித்து மறுப்பு தெரிவித்துள்ளது. 

அடுக்கப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்

முன்னணி பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், இந்த விஷயத்தை வெளியுலகிற்குக் கொண்டுவர முயன்றதால்தான் கொல்லப்பட்டார் என்றும் இந்த சந்திப்பில் கூறியிருந்தார் சையது சுஜா. இந்தக் கொலையை விசாரிக்கும் குழு, இப்படி ஒரு தொடர்பு இருப்பதாக இதுவரை எதையும் கண்டுபிடிக்கவில்லை. மேலும், பல முக்கிய பத்திரிகையாளர்கள் தன்னை சந்தித்ததாகவும் அவர் கூறுகிறார். இது சுஜாவின் மற்றுமொரு கட்டுக்கதையாக இருக்குமோ என்ற சந்தேகத்தையே எழுப்புகிறது. இதே போன்றுதான், '2014-ல் அமைச்சர் கோபிநாத் முண்டே மரணம் கொலை' என இவர் கூறும் தகவலும். இவர் கூறுவதில் இருக்கும் இன்னொரு முக்கியமான முரண்பாடு, 2014 நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும்போது, மத்தியில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸின் UPA அரசு. அப்புறம் எப்படி இதற்கான அதிகாரம் பா.ஜ.க கைகளுக்குச் சென்றிருக்கும் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

இவர் முன்வைக்கும் விஷயங்கள் இத்துடன் முடியவில்லை. இவர் கூறும் சில விஷயங்களை எவராலும் அவ்வளவு எளிதில் நம்ப முடியவில்லை. அதில் ஒன்று, 2015 டெல்லி சட்டமன்றத் தேர்தலில், தானும் சில நண்பர்களும் குறுக்கிட்டதால்தான் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் 70-ல் 67 தொகுதிகள் வென்று வரலாற்று சாதனை படைத்தது என்றும் கூறினார் அவர். பா.ஜ.க தனக்கு மாற்றிக்கொள்ள விரும்பிய வாக்குகள் எல்லாம் ஆம் ஆத்மிக்குச் சென்றது. தங்களிடம் போதிய பொருளும், அதிகாரமும் இல்லாததால் மட்டுமே மற்ற தேர்தல்களில் இதைப் பெரிதாகச் செய்ய முடியவில்லை என்கிறார் அவர். 

இன்னொரு குற்றச்சாட்டு, மேலே குறிப்பிட்ட GNU modulator-களை வைத்திருப்பது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்தான் என்றும், அதன் ஊழியர்களுக்கே தாங்கள் வாக்குகளை மாற்றும் சிக்னல்களை அனுப்புகிறோம் என்றும் தெரியாது. ஏதோ டேட்டா என்ட்ரி வேலையென எண்ணியே அதை அவர்கள் செய்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். பத்திரிகையாளர் ஒருவர் குறுக்கிட்டு, ஜியோதான் அப்போது தொடங்கப்படவே இல்லையே என்று கேள்வி எழுப்ப, அது தனக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால், அது முகேஷ் அம்பானி நிறுவனம்தான் என்றார். இதற்கும் அவர் எந்த ஆதாரத்தையும் தரவோ, தெரிவிக்கவோ இல்லை.

அடுத்து சந்தேகத்தை ஏற்படுத்துவது, இவர் அமெரிக்கா சென்ற கதை. உயிர்பிழைத்த இவர், உடனடியாக நண்பர்கள் சிலர் உதவியுடன் அமெரிக்கா புறப்பட்டுள்ளார். இந்தியாவில் அதிகாரிகளுக்கு 1000 டாலர்கள் லஞ்சமாகச் செலுத்தியே தான் அமெரிக்கா வந்ததாகக் கூறுகிறார். அமெரிக்கா சென்றவுடன் போலி ஆவணங்களுக்காகப் பிடிபட்ட இவர், தன் கதையை விளக்கி, ஆதாரங்களைச் சமர்ப்பித்ததால்தான் அமெரிக்க அரசு இவருக்கு 'Political Asylum' (அரசியல் காரணங்களுக்காக அடைக்கலம்) கொடுத்துள்ளது என்கிறார். அமெரிக்கா இவ்வளவு எளிதிலா  'Political Asylum' தருகிறது?

இவர் அடுக்கும் குற்றச்சாட்டுகளில் அடுத்தது, ஒரு பிரபல ஊடகவியலாளரின் மேல். தனது கதையை உலகத்திற்குத் தெரியவைப்பேன் என்று கூறி, அதற்காகத் தான் பணிபுரிந்த தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந்து வெளிவந்து புதிய சேனல் தொடங்கினார் ஒருவர். ஆனால், அதற்குப்பின் அவர் இந்தக் கதையை அவர் கண்டுகொள்ளவே இல்லை. ஏன் என்று பார்த்தால், அந்தப் புதிய சேனல் பா.ஜ.க பணத்தில் இயங்குகிறது என்றார் சுஜா. இந்த ஊடகவியலாளர்  யார் என்று குறிப்பிடவில்லையென்றாலும், இவர் தினமும் தேசியத் தொலைக்காட்சியில் சத்தம் போட்டுக்கொண்டே இருப்பவர் என்றார். பத்திரிகையாளர்கள் மட்டுமல்லாமல் கட்சிகள் பலவும் தன்னைத் தொடர்புகொண்டதாகவும் தெரிவித்தார். இதற்கு, குறிப்பிட்ட  சில கட்சிகள் மறுப்பு தெரிவித்துள்ளன. 

VVPAT-ல் கூடவா மோசடி?

தேர்தல் ஆணையம் சார்பில், சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு, 'எங்கள் மின்னணு வாக்கு இயந்திரங்களை முடிந்தால் ஹேக் செய்யுங்கள்' என ஒரு ஹேக்கதான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி உட்பட சவால்விட்ட எந்தக் கட்சியும் பங்குபெறவில்லை. தங்களை இயந்திரங்களின் மேல் கை வைக்கவே விடவில்லை, இது தேர்தல் ஆணையம் நடத்திய நாடகம் என்றது ஆம் ஆத்மி கட்சி. ஆனால், தேர்தல் ஆணையத்தின் டெமோ திருப்தியளிப்பதாகவே பெரும்பாலான கட்சிகள் தெரிவித்தனர். இன்னொரு பக்கம் ஆம் ஆத்மி, தாங்கள் செய்துவைத்திருக்கும் EVM மாதிரியை வைத்துக்கொண்டு EVM-களை ஹேக் செய்யமுடியும் என்று தெரிவித்துக்கொண்டிருந்தது. இவர்களே ஒரு கணிப்பில் செய்த மாதிரி கருவிதான் என்பதால், இதற்கு யாரும் செவி சாய்க்கவில்லை. இந்த நிகழ்ச்சியில், கூடுதல் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படும் VVPAT (Voter Verifiable Paper Audit Trail) முறையைப் பற்றியும் விளக்கம் அளித்தது. இது, வாக்களிக்கும்போது ஒவ்வொருவருக்கும் தேர்ந்தெடுத்த கட்சியின் சின்னத்துடன் ஒரு சீட் தானாக வாக்குப்பெட்டியில் விழும். 

இதற்குத் தேர்தல் ஆணையம் செய்யும் சூட்சுமம் என்னவென்பதையும் சையது சுஜா கூறியிருந்தார். சோதனைக்கு வைக்கப்படும் EVM-கள் அனைத்தும் தவறுகளைத் திருத்தி தாங்கள் வடிவமைத்தது. அதை யாராலும் ஹேக் செய்ய முடியாது. ஆனால், தேர்தல்களில் பயன்படுத்தப்படுவது இது இல்லை என்றார். VVPAT பற்றிக் கூறுகையில், மக்கள் தேர்ந்தெடுக்கும் சின்னம் 'thermal' பேப்பரில் ப்ரின்ட் செய்யப்படுகிறது. இதற்கு இரு பக்கங்கள் இருக்கும். ஒரு பக்கத்தில் பிரின்ட் செய்யப்படும் சின்னம் ஒளியில் சிறிய நேரத்திற்கு மட்டுமே இருக்கும்; பின்பு மறைந்துவிடும். பின்பக்கத்தில், ஏற்கெனவே ஒரு சின்னம் பிரின்ட் ஆகியிருக்கும் என்கிறார்.

இவரின் இந்தக் குற்றச்சாட்டுகள் காங்கிரஸின் சதிச் செயல் எனக் கொதிக்கிறது பா.ஜ.க. காங்கிரஸின் மூத்த தலைவர் கபில் சிபல், இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பங்குகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இந்தச் செயல், பா.ஜ.க-வினர் இடையே பெரும் கண்டனத்தைப் பெற்றுள்ளது.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் கபில் சிபில்

இப்படி நம் கற்பனையை மிஞ்சும் குற்றச்சாட்டுகள் பல முன்வைக்கப்பட்டாலும், ஆதாரங்கள் ஏதேனும் சமர்ப்பிக்கும்வரை இவர் சொல்வதில் எதுவும் உண்மை என்று நம்புவது சரியாகாது. தேர்தல் ஆணையமும் மிகவும் கடுமையான முறையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. சையது சுஜா மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது. ஆனால் அதே சமயம், சுஜா வைக்கும் குற்றச்சாட்டுகள் தவறானவை என்று ஆதாரத்துடன் அரசும், தேர்தல் ஆணையமும் நிரூபிக்கவேண்டியதும் அவசியம். உண்மையில், பிரச்னைகள் எதுவும் இல்லையென்றால் இது எளிதான விஷயமும்கூட. இல்லையெனில், மக்களிடையே தேவையில்லாத குழப்பம் இருக்கவே செய்யும். வாக்கு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை நிரூபிக்காமல் எப்படி மொத்த இந்தியாவும் அதில் வாக்களிக்கும் என எதிர்பார்ப்பது?