Published:Updated:

`கையை மீறிப் போய்விட்டது!’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சைகுறித்து கரண் ஜோஹர்

`கையை மீறிப் போய்விட்டது!’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சைகுறித்து கரண் ஜோஹர்
`கையை மீறிப் போய்விட்டது!’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சைகுறித்து கரண் ஜோஹர்

காபி வித் கரண் நிகழ்ச்சி சர்ச்சை குறித்து அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கரண் ஜோஹர் மனம் திறந்திருக்கிறார். 

பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், தனியார் சேனல் ஒன்றில் `காபி வித் கரண்’ என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை நடத்திவருகிறார். இதில், பல்வேறு துறை பிரபலங்களும் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பது வழக்கம். இந்த நிகழ்ச்சியில், இந்திய வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் பாண்ட்யா ஆகியோர் கலந்துகொண்டனர். கிரிக்கெட் மட்டுமல்லாது, பெர்சனல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவர்கள் பகிர்ந்துகொண்டிருக்கின்றனர். அந்த நிகழ்ச்சியின்போது, பெண்கள்குறித்து பாண்ட்யா பேசியது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதனால், ஆஸ்திரேலியத் தொடரிலிருந்து பாதியில் இருவரும் திரும்ப அழைக்கப்பட்டனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமிக்கும் விசாரணை அதிகாரி விசாரிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்துக்குப் பின்னர் பாண்ட்யா, வீட்டைவிட்டு வெளியேறாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதாக அவரின் தந்தை தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் இருவரும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், சர்ச்சைகள்குறித்து அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கரண் ஜோஹர் மனம்திறந்திருக்கிறார். இதுதொடர்பாக இடி நௌ ஆங்கில ஊடகத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ``அது நான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி. அது என்னுடைய பிளாட்பாரம். அங்கு நடந்த நிகழ்ச்சிகளுக்கு நான்தான் பொறுப்பு. அவர்கள் இருவரையும் நான்தான் நிகழ்ச்சிக்கு விருந்தினர்களாக அழைத்தேன். 
இதனால், அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளைச் சரிசெய்வது குறித்து பல நேரங்களில் நான் சிந்தித்ததுண்டு. அந்தச் சம்பவம் பல இரவுகளில் எனது தூக்கத்தைப் பறித்திருக்கிறது. அதனால், பாண்ட்யா மற்றும் ராகுல் ஆகியோருக்கு ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்ய முடியுமா என்று நான் யோசித்திருக்கிறேன். ஆனால், இப்போது அந்த விவகாரம் என் கட்டுப்பாட்டை மீறி சென்றுவிட்டது’’ என்று கூறியிருக்கிறார். 

சர்ச்சைகளுக்குப் பின்னர் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் கலந்துகொண்ட காபி வித் கரண் எபிசோடை ஆன்லைன் மற்றும் சமூக வலைதளங்களிலிருந்து நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் நீக்கிவிட்டனர். காபி வித் கரண் நிகழ்ச்சி 6 வது சீஸன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் சில எபிசோடுகளுடன் இந்த சீஸன் நிறைவுக்கு வர உள்ளது.