Published:Updated:

காட்டன் புடவை, போட் நெக் பிளவுஸ்,ஆக்ஸிடைஸ்டு அக்சசரீஸ் - திருமணம்' இந்துமதியின் ஃபேஷன் பக்கங்கள்

சீரியலில் தான் நான் வில்லி ,இயல்பில் ரொம்ப  மென்மையான பொண்ணு - இந்துமதி

காட்டன் புடவை, போட் நெக் பிளவுஸ்,ஆக்ஸிடைஸ்டு அக்சசரீஸ் - திருமணம்'  இந்துமதியின் ஃபேஷன் பக்கங்கள்
காட்டன் புடவை, போட் நெக் பிளவுஸ்,ஆக்ஸிடைஸ்டு அக்சசரீஸ் - திருமணம்' இந்துமதியின் ஃபேஷன் பக்கங்கள்

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் `திருமணம்’ சீரியலில் மாயா என்ற வில்லி ரோலில் கெத்து காட்டுபவர் இந்துமதி. இயல்பான நடிப்பின் மூலம் வில்லி ரோலிலும் க்ளாப்ஸ் அள்ளும் இந்துமதியின் ஆடைத்தேர்வுகளுக்கு ரசிகைகள் அதிகம். தன்னுடைய நடிப்பு மற்றும் ஆடைத்தேர்வு பற்றிய தகவல்களை நம்மிடம் பகிர்கிறார்.

``எனக்குச் சொந்த ஊர் கோயம்புத்தூர். படித்தது இளங்கலை பொருளாதாரம். திருமணத்துக்குப் பின் கணவரோடு இணைந்து பிஸினஸ் பண்ணிட்டு இருந்தேன். என்னுடைய கணவரின் நண்பர் மூலமாகக் குறும்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு மாறுபட்ட அனுபவம் கிடைக்கும் என்பதால் குறும்படங்களில் நடிக்கத் தொடங்கினேன். நடிப்பு எனக்கு புதியதுறை என்பதால் ஒவ்வொரு காட்சிக்கும் நிறைய மெனக்கிடுவேன். ஒன்றுக்கு மூன்று முறை கண்ணாடியில் ரிகர்சல் பார்த்த பின்தான் கேமரா முன் நிற்பேன்.
குறும்படங்களில் நடித்ததன் மூலமாக விளம்பரங்களில் மாடலிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் யாக்கை, மாவீரன் கிட்டு போன்ற படங்களில் சின்ன ரோல்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆரம்பத்தில் சினிமாத்துறையில் கால் எடுத்து வைக்க நிறைய தயங்கினேன். ஆனால், என் கணவர் 'இது உன் திறமைக்கான வாய்ப்பு' என ஊக்கப்படுத்தினார். கணவர் கொடுத்த நம்பிக்கையில் கிடைத்த வாய்ப்பில் முழு திறமையையும் வெளிப்படுத்தி நடித்தேன். என்னுடைய நடிப்பைப் பார்த்து இயக்குநர் பாண்டியராஜ் சார்  'கடைக்குட்டி சிங்கம்'  படத்தில் கார்த்திக் சாருக்கு அக்காவாக நடிக்கும் வாய்ப்பு கொடுத்தார். அந்தத் திரைப்படத்தில் வாய் பேச முடியாத பெண்ணாக நான் நடித்தாலும் என் கேரக்டர் நிறைய பேசப்பட்டது. நிறைய சீனியர் ஆர்டிஸ்ட்களுடன்  நடிக்கும்போது கொஞ்சம் படபடப்பு இருந்தது. ஆனால், நிறைய கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. கடைக்குட்டி சிங்கம் என்னுடைய வாழ்க்கையின் திருப்புமுனை என்றுகூட சொல்லலாம்.

கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்துக்குப் பின் `திருமணம்’ சீரியலில் நெகட்டிவ் ரோலுக்கான வாய்ப்பு கிடைத்தது. வில்லியாக நடிக்க நிறைய யோசித்தேன். வில்லி ரோலில் நடித்தாலும் மக்களின் அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மாயாவாகக் களமிறங்கினேன். நெகட்டிவ் ரோல் என்றதும் பளபளக்கும் பட்டு சேலை கிராண்டான நகைதான் நினைவுக்கு வரும். அந்த நினைப்பில் மாற்றத்தைக் கொண்டு வர நினைத்தேன்.என்னுடையது டஸ்கி ஸ்கின் டோன். அதனால் சிறுவயதில் இருந்தே எப்போதும் என்னுடைய நிறத்துக்குப் பொருந்திப்போகும் ஆடைகளை ரொம்ப கவனமாகத் தேர்வு செய்து அணிவேன். நிறைய பேர் என்னுடைய டிரஸ்ஸிங் சிம்பிள் அண்ட் நீட் எனப் பாராட்டி இருக்காங்க. அதனால், சீரியலிலும் சிம்பிள் லுக்கையே ஃபாலோ செய்யலாம் என இயக்குநரிடம் என் கருத்தைத் தெரிவித்தேன். அவரும் ஓ.கே சொல்லிட்டார். என்னுடைய அவுட்லுக்குக்கு நானே எதிர்பார்க்காத அளவுக்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

குர்தி- ஜீன்ஸ்தான் எப்போதும் என்னுடைய ஃபேவரைட். ஆனால், சீரியலில் புடவைதான் காஸ்டியூம் என்றதும் நிறைய புடவைகளை டிரையல் செய்தேன். என்னுடைய ஸ்கின் டோனுக்கு பேஸ்டல், டார்க் நிறப்புடவைகள் அணிந்து அதற்கு கான்ட்ராஸ்டான நிறத்தில் போட் நெக் பிளவுஸ் அணிந்தால் நிச்சயம் நெகட்டிவ் ரோலிலும் தனித்துவமாக இருக்கும் என என் காஸ்டியூம் டிசைனர் ஐடியா கொடுக்க, சிம்பிளான காட்டன் புடவைகளைத் தேர்வு செய்து சில எபிசோடுகள் டிரையல் செய்தோம். ஆனால், அந்த அவுட்ஃபிட் ஸ்கிரீனில் எனக்கு போல்ட் லுக் கொடுத்தது. "மாயா கட்டிவரும் புடவைகள் எல்லாமே சூப்பரா இருக்கே" என மக்களிடம் இருந்து பாசிட்டிவ் கமெண்ட்ஸ் வர, எனக்கான அடையாளமாகக் காட்டன் புடவையையும் போட் நெக் ப்ளவுஸ்களை ஃபிக்ஸ் செய்துகொண்டேன். வெவ்வேறு நிறம் என்றாலும் ஓரே மாதிரியான புடவையென்றால் மக்களுக்குச் சீக்கிரமே போர் அடித்துவிடும் என்பதால் ஒவ்வொரு எபிசோடுக்கும் என்னுடைய புடவையை தனித்துக்காட்ட நிறைய மெனக்கிடுகிறேன். சீரியலுக்கான ஷூட்டிங் சென்னையில் நடக்கிறது ,அதனால் ஷூட்டிங் இல்லாத நாட்களில் என் சொந்த ஊரான கோயம்புத்தூரில் அடுத்த 20 எபிசோடுக்கு தேவையான வெரைட்டியான புடவைகளை ஷாப்பிங் செய்துவிடுவேன். ஷாபிங்கை பொறுத்தவரை என் பொண்ணு நிவேதாதான் என் கம்பேனியன். ஆடைத்தேர்வில் நிறைய ஐடியாக்கள் கொடுப்பா, இப்போது என்ன டிரெண்ட் என்பதை அவளிடமிருந்துதான் கற்றுக்கொள்கிறேன்'' என்றவரிடம் சீரியலில் அணிந்து வரும் ஃபேன்ஸி நகைகள் பற்றிக்கேட்டோம்.

``புடவைகளைப் பொறுத்தவரை அதுக்கு பொருந்திப் போற சிம்பிள் பேன்ஸி நகைகள், ஆக்ஸிடைஸ்டு நகைகள், போல்கி டைப் நகைகள் போன்றவற்றை நானே மிக்ஸ் மேட்ச் செய்துகொள்வேன். ஆக்ஸிடைஸ்டு நகையில் சில்க் திரெட் வேலைப்பாடுகள், சலங்கை வேலைப்பாடுகள் எனப் புதுவிதமான முயற்சிகளையும் எடுக்கிறேன். இந்த மெனக்கிடல்கள்தான் எனக்கான ரசிகைகளைக் கொடுத்திருக்கிறது. உண்மையைச் சொல்லணும்னா  மக்களுக்கு மாயாவைவிட மாயாவின் காஸ்டியூம்களை ரொம்ப பிடிச்சு போச்சு. மக்களின் இந்த வரவேற்பு இன்னும் ஸ்பெஷலான ஆடைகளைத் தேடும் ஆர்வத்தைக் கொடுத்திருக்கிறது" என்கிறார் புன்னகையுடன்.