Published:Updated:

30 ஆயிரம் நோட்டு புத்தகங்களை கஜா தாக்கிய பள்ளிகளுக்குத் தந்த ஆசிரியர்கள்! #Gajacyclone

30 ஆயிரம் நோட்டு புத்தகங்களை கஜா தாக்கிய பள்ளிகளுக்குத் தந்த ஆசிரியர்கள்! #Gajacyclone
30 ஆயிரம் நோட்டு புத்தகங்களை கஜா தாக்கிய பள்ளிகளுக்குத் தந்த ஆசிரியர்கள்! #Gajacyclone

 2018 நவம்பரில் வீசிய கஜா புயல் காவிரி டெல்டா மாவட்டங்களைப் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கிவிட்டது. வேதாரண்யம் தொடங்கி, தஞ்சை வரையில் ஏராளமான மரங்கள் புயலால் வீழ்த்தப்பட்டன. ஏராளமானவர்களின் வீடுகள் இடிந்துவிழுந்ததும், அவர்கள் பள்ளிக்கூடம், கல்யாண மண்டபம், கோயில் எனப் பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டு, நிலைமை சீரானதும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்பகுதி பள்ளிகளும் சேதத்திலிருந்து தப்பவில்லை. வாரக்கணக்கில் விடுமுறை அளித்து, பள்ளிகளைச் சீரமைத்தது அரசு. தன்னார்வலர்கள் பலரும் அங்கு, இன்றும் தங்களால் முடிந்த பணிகளைச் செய்துவருகின்றனர். கட்டடங்களைச் சீரமைப்பது தொடங்கி, மாணவர்களின் மனநலப் பயிற்சி அளிப்பது வரை அவர்களின் சேவை தொடர்ந்துவருகிறது. கஜா புயல் பாதிப்பிலிருந்து பள்ளிகளை மீட்பதற்கு, அரசுப் பள்ளி ஆசிரியர்களும் களம் இறங்கினர். ஏராளமான ஆசிரியர்கள், அர்ப்பணிப்போடு களத்தில் உதவிகளைச் செய்துவந்தனர். அவர்களில் பலர் இன்றும் அந்தப் பணியைத் தொடர்ந்துவருகின்றனர். அவர்களில் திருவாரூர், மேலராதாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் மணிமாறன் மற்றும் வேதாரண்யம், கரும்புலம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் பாலாஜியும் முக்கியமான பணிகளைச் செய்துவருகின்றனர். ஆசிரியர் மணிமாறனிடம் பேசினேன். 

``கஜா புயல் பாதித்த வீடுகளில் வசிக்கும் மாணவர்களின் புத்தகங்கள், நோட்டுகள் பயன்படுத்த முடியாத அளவு சேதமாகிவிட்டன. குறிப்பாக, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நோட் புக் மிக அவசியம். அதனால், பள்ளிகளுக்கு நோட் புக்ஸ் வாங்கித் தருவதை முதன்மைப் பணியாக்கிக் கொண்டோம். நான், திருவாரூர் மாவட்டத்தின் கோட்டூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ஆகிய ஒன்றியங்களிலும் பாலாஜி, நாகை மாவட்டத்தின் வேதாரண்யம், கீழையூர், தலைஞாயிறு ஆகிய மூன்று ஒன்றியங்களிலும் பள்ளிகளுக்குச் சென்று, நோட்டு புத்தகங்களைத் தந்துவருகிறோம். 

இதுவரை சுமார் 11.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 30,000-க்கும் அதிகமான நோட் புத்தகங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறோம். ஒரு பள்ளிக்குச் சென்றால், 10. 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் எத்தனை மாணவர்கள் இருக்கிறார்கள் என்று பார்த்துவிட்டு, ஒவ்வொரு மாணவருக்கு தலா மூன்று நோட்டுகளை, நாங்களே நேரடியாகத் தந்தோம். இந்த வேலையை நாங்கள் சென்ற ஆண்டு டிசம்பரிலிருந்தே செய்துவருவதால், அரையாண்டுத் தேர்வு விடுமுறை, பொங்கல் விடுமுறை நாள்களில் தேர்வுக்கு அவர்கள் எழுதிப் பார்க்கவும், சிறப்பு வகுப்புகளில் பயன்படுத்தவும் ரொம்பவே உதவியாக இருந்ததைக் கண்கூடாகப் பார்த்தோம். பொதுத்தேர்வு இன்னும் நெருங்கி வந்துகொண்டிருக்கும் இந்தச் சூழலில் இது மிக முக்கியமானது எனக் கருதுகிறோம். 

சமூக வலைதளங்கள் மூலம் கிடைத்த நண்பர்கள் அனுப்பிய உதவி இவை. ஒரு சிலரைத் தவிர்த்து மற்றவர்களிடம் பணமாக வாங்காமல், நோட்டுப் புத்தகங்களாகவே வாங்கிக்கொள்கிறோம். சென்னையிலிருந்து இனியன் மூலமாக 35 நோட்டுகள், ஆதம் மைதீன் 2,000 நோட்டுகள், பெங்களூர் நண்பர்கள் 800 நோட்டுகள், பிரபு மோகன், உமாநாத் ஆகியோரின் நண்பர்கள் வழியே 500 நோட்டுகள், ஆரோக்கியம் நலவாழ்வு குழுவினரின் 5,000 நோட்டுகள், வாழை அமைப்பு 2,000 நோட்டுகள், ஷாஜஹான் வழியாக 1,500 நோட்டுகளும் அஞ்சல் துறை ஓழியர் ஒருவர் மூலமாக 600 நோட்டுகள் என்பதாக உதவியவர்களின் பட்டியல் நீண்டது. (விரிவாகச் செல்லும் என்பதால் தவிர்க்கப்பட்டது) எனது தனிப்பட்ட பங்களிப்பாக 1,000 நோட்டுகளும், பாலாஜி சாரின் மூலமாக 1,000 நோட்டுகளும் வாங்கினோம். ஒரு நோட்டு 26.50 ரூபாய் என்று வாங்கிக்கொண்டிருந்தோம். பின், அவர்களே 24 ரூபாய்க்குத் தந்தார்கள். 

நோட் புத்தகங்கள் சென்னையிலிருந்து திருவாரூர் வந்ததும் லாரியிலிருந்து, வீட்டுக்கு எடுத்துவந்து, பார்சல் பிரித்து, பள்ளி வாரியாக அடுக்கி எடுத்துச் சென்று கொடுப்பது என்பது கடும் உழைப்பைக் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனாலும், மாணவர்களுக்கு இவை தரும் உதவியை நினைக்கும்போது சோர்வு நெருங்குவதில்லை" என்கிறார் சிரித்தவாறே. 

நல்ல விஷயங்களை முன்னெடுக்கும் ஆசிரியர்களை வாழ்த்திப் பாராட்டுவோம்.