பிரீமியம் ஸ்டோரி

ஜார்ஜ் லொரன்ஸோ, மும்முறை மோட்டோ ஜீபி சாம்பியன் பட்டம் வென்ற முதல் ஸ்பானிஷ் ரேஸர். பார்சிலோனாவில் தான் சொந்தமாக வாங்கிய பெரிய மாளிகை வீட்டில் அந்த மூன்று கோப்பைகளுடன்தான் தூங்குவாராம். ஜெகனைப் பார்க்கும்போதெல்லாம் லொரன்ஸோவின் ஞாபகம்தான் வரும். சில ஆண்டுகளுக்கு முன் ‘ஜெகன் நேஷனல் சாம்பியன்’ என்று அவரது எண்ணை என் மொபைலில் சேமித்திருந்தேன். இடைப்பட்ட காலத்தில் எண் மாறியிருந்தாலும் `சாம்பியன்’ என்கிற பட்டத்தில் மாற்றமில்லை. 

வேகம் + விவேகம் = ஜெகன்

இந்தியாவில் பைக் ரேஸின் உச்சபட்சப் போட்டியான சூப்பர் ஸ்டாக் 165 போட்டியில், கடந்த ஏழாண்டுகளாக நேஷனல் சாம்பியன் பட்டத்தைத் தன் வசப்படுத்தி அசத்திவருகிறார் ஜெகன். சென்னைப் பட்டினப்பாக்கத்தின் குட்டிக் குட்டிச் சந்துகளில் அவர் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்துச் சென்றேன். வீடு முழுவதும் விருதுகள்தாம். அத்தனையையும் தரையில் வைத்தால் படுக்க இடம் இருக்காது. 2011-ம் ஆண்டு ஜெகன் வாங்கிய முதல் டிராஃபி துருப்பிடித்திருக்க, 2018-ம் ஆண்டின் கோப்பை பளபளத்துக்கொண்டிருந்தது. 

வேகம் + விவேகம் = ஜெகன்

 “ப்ளஸ் டூ படிக்கும்போது மெரினா பீச்சில் ஏரியா பசங்களுடன் சேர்ந்து சைக்கிள் ஸ்டன்ட் செய்வோம். இருங்காட்டுக்கோட்டையில பைக் ரேஸ் நடக்குதுன்னு கேள்விப்பட்டு சைக்கிள்லேயே ரேஸ் பார்க்கப் போனோம். அப்பவே, பைக் ரேஸ் மேலே ஆசை வந்துடுச்சு. ஒரு வருஷம், நண்பர்களிடம் பைக் வாங்கி ஓட்டிப்பழகினேன். 18 வயசு முடிஞ்சதும் முதல் வேலையா லைசன்ஸ் வாங்கிட்டு ரேஸ் ட்ராக்குக்குப் போனேன்” என்று உற்சாகமாய்த் தொடங்கும் ஜெகனின் அப்பா சென்ட்ரிங் வேலை செய்பவர். இப்போது ஆட்டோ ஓட்டுகிறார். ஜெகன், வீடுகளில் நியூஸ் பேப்பர் போட்டு அதில் வரும் வருமானத்தில் தனது முதல் சைக்கிளை வாங்கியிருக்கிறார். அந்த சைக்கிள்தான் ஜெகனின் பைக் ஆர்வத்திற்குக் காரணமாம்.

வேகம் + விவேகம் = ஜெகன்

கல்லூரி சமயத்தில் கூரியர் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து பணம் சேர்த்துவைத்து 8,500 ரூபாய்க்குத் தனது முதல் பைக்கை வாங்கியிருக்கிறார். ரைடிங் ஜாக்கெட், பூட்ஸ் இருந்தால்தான் ரேஸுக்குப் போகமுடியும் என்பதால், ஆட்டோ சீட் தைக்கும் துணியில் ரைடிங் ஜாக்கெட் தைத்துப் போட்டுக்கொண்டு, தெருவில் செருப்பு தைப்பவர்களிடம் பூட்ஸ் வாங்கி தன்னுடைய கரியரை ஆரம்பித்தவர், தன்னுடைய முதல் ரேஸை 6-வது இடத்தில் முடித்திருக்கிறார்.

“கஷ்டப்பட்டு வந்தேன். ஆனா, ரேஸ்ல ஜெயிக்க முடியலையேன்னு எனக்குப் பெரிய ஏமாற்றம். அதுமட்டுமில்லை, இரண்டு நாள் ட்ராக்ல பைக் ஓட்டணும்னா 750 ரூபாய் கட்டணும். அதனால ரேஸ் போகவேயில்லை. ட்ராக் போனேன், எல்லா ரேஸையும் பார்த்தேன். பிராக்டீஸ் மட்டும் எடுத்தேன். பொறுமையா ரேஸ் ட்ராக் பத்தி நல்லா கத்துக்கிட்டேன். ஒன்பது மாசம் கழிச்சி திரும்பவும் ரேஸ் ஓட்ட ஆரம்பிச்சேன்” என்கிறார்.

வேகம் + விவேகம் = ஜெகன்

தன்னுடைய முதல் சீஸனிலேயே அப்போதைய சாம்பியன்களுக்கு டஃப் கொடுத்ததால் டிவிஎஸ் ரேஸிங் இவரை அழைத்து ஒன் மேக் சாம்பியன்ஷிப்பில் வாய்ப்பு கொடுத்தார்கள். முதல் வாய்ப்பிலேயே ஒன் மேக் வென்றுவிட்டார். தொடர்ச்சியாக இந்தியாவில் என்னென்ன ரேஸ்கள் உள்ளனவோ அவற்றிலெல்லாம் சாம்பியன்ஷிப் வாங்கிவிட்டார். அடுத்து என்ன, வாலன்டினோ ராஸி மாதிரி மோட்டோ ஜீபி கனவுதானே என்று கேட்டேன்... 

வேகம் + விவேகம் = ஜெகன்

கொஞ்சமும் யோசிக்காமல், “நம்ம ஊர்ல மோட்டார் ஸ்போர்ட்ஸை இன்னும் ஸ்போர்ட்ஸ் கேட்டகரியிலேயே சேர்க்கலை. ஸ்பெயின், ஆஸ்திரேலியா, இத்தாலியில் 8 வயசு பசங்க எடுக்குற பயிற்சியை நான் 18 வயசில் எடுத்தேன். ஹோண்டா, யமஹா மாதிரி முக்கியமான ரேஸ் டீம் கூட இந்தியாவில முழுசா செயல்படுறதில்லை. ஒரு சிலர் மட்டும்தான் பைக் ரேஸர்களுக்கு மாதச் சம்பளம் கொடுக்கிறாங்க. இப்படியிருக்கிறப்போ, மோட்டோ ஜீபி கனவெல்லாம் வேலைக்காவாது. ஏஷியா கப் ஜெயிக்கணும். அதுதான் என் அடுத்த இலக்கு. பிறகு ஒரு ரேஸ் அகாடமி வச்சு திறமையான பல ரேஸர்களை உருவாக்கணும்” என்கிறார் ஜெகன் நிதானமாக.

வார்த்தைகளில் நிதானம், பந்தயத்தில் வேகம். வாழ்த்துகள் ஜெகன்!

ரஞ்சித் ரூஸோ   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு