Published:Updated:

அச்சப்படும் அளவுக்கு ஆபத்தானதா ஃபேஸ்புக்கின் #10YearChallenge... உண்மை என்ன?

பலரும் அச்சப்படும் அளவுக்கு ஆபத்தானதா இந்த சேலஞ்ச்?

அச்சப்படும் அளவுக்கு ஆபத்தானதா ஃபேஸ்புக்கின் #10YearChallenge... உண்மை என்ன?
அச்சப்படும் அளவுக்கு ஆபத்தானதா ஃபேஸ்புக்கின் #10YearChallenge... உண்மை என்ன?

மூக வலைதளங்களில், அவ்வப்போது ஏதாவது ஒரு விஷயம் ட்ரெண்டிங்கில் இருந்துகொண்டே இருக்கும். அதுபோல, கடந்த வாரம் உலகம் முழுவதும் தாறுமாறாக வைரலானது #10yearchallenge. இது, சமீபத்தில் வந்த சேலஞ்ச்களில் கொஞ்சம் வித்தியாசமானதும்கூட. எப்போதும் இதுபோன்ற விஷயங்களில் ஒருவர் ஏதாவது ஒன்றைச் செய்துகாட்டி,  மற்றவர்களும் அதைப்போல செய்ய வேண்டும் என சவால் விடுவார். எடுத்துக்காட்டாக, சமீபத்தில் பேர்ட் பாக்ஸ் சேலஞ்ச், கடந்த வருடத்தில் கிகி சேலஞ்ச், அதற்கு முன்னர் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றில் சில சவால்கள் ஆபத்தானவையாகவும் இருப்பதுண்டு. ஆனால், 10 இயர் சேலஞ்ச் அப்படியெல்லாம் கிடையாது. மேலும், இது செய்வதற்கு மிகவும் எளிமையான சவாலாகவும் இருந்தது. இதில் போட்டோதான் முக்கியமான விஷயம். இன்றிலிருந்து பத்து வருடங்களுக்கு முன்னால் நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்பதை உலகுக்குக் காட்ட வேண்டும். அதாவது, 2009-ல் எடுக்கப்பட்ட போட்டோவையும், 2019-ல் எடுத்த போட்டோவையும் ஒன்றாக இணைத்து,அதைப் பதிவிட்டால் அவ்வளவுதான்; இந்தச் சவால் முடிந்தது. இதுபோன்ற சவால்கள் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிவிடுவது வழக்கம். அதற்கு 10 இயர் சேலஞ்சும் விதி விலக்கில்லை. 

ஃபேஸ்புக் விரித்த வலையா இந்த 10 இயர் சேலஞ்ச் ? 

முதன் முதலில் இந்தச் சவாலை யார் ஆரம்பித்து வைத்தார்கள் எனத் தெரியவில்லை. ஆனால், பல பிரபலங்களும் மக்களும் இதில் ஆர்வம் காட்டியதால், உலகம் முழுவதும் வேகமாகப் பரவியது. பழைய நினைவுகளை அசைபோடுவதற்கு யாருக்குத்தான் ஆசை இருக்காது. கூடவே, 10 வருடங்களுக்கு முன்னால் எடுத்த போட்டோவும் கையில் இருந்தால்தான் போதுமே. எனவே, பெரும்பாலானோர் இந்தச் சவாலை ஏற்றுக்கொண்டார்கள். எல்லாமே நல்ல படியாகத்தான் போய்க்கொண்டிருந்தது, கேட் ஓ நெய்ல் (Kate O'Neill) என்பவர், அவரது கருத்தைத் தெரிவிக்கும் வரைக்கும். எழுத்தாளரான இவர், Tech Humanist, Pixels and Places உட்பட சில புத்தகங்களை எழுதியிருக்கிறார். இந்நிலையில், 10 இயர் சேலஞ்ச் தொடர்பாக Wired என்ற இதழின் இணையதளப் பக்கத்தில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில், ஃபேஸ்புக் நிறுவனமே இந்த 10 இயர் சேலஞ்ச்சை உருவாக்கியதாகவும், அதன் facial recognition தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக இதைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது எனவும் கருத்து தெரிவித்திருந்தார்.

" உங்களிடம் இருக்கும் ஒரு முகத்தைக் கண்டறியும் அமைப்பு ஒன்றுக்குப் பயிற்சி தர விரும்புகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். குறிப்பாக ஒருவரின் வயதாகும் தன்மையைப் பரிசோதிக்க விரும்பினால், அதற்கு இதைவிடச் சிறப்பான ஒன்று தேவைப்படுமா" என்று யோசித்துப் பாருங்கள் எனக் கேட்டிருந்தார் கேட் ஓ நெய்ல். மேலும், இதன் மூலமாகச் சேகரிக்கப்படும் தரவுகளை ஃபேஸ்புக் வியாபார நோக்கில் பயன்படுத்தக் கூடும் எனவும், அவரது சந்தேகத்தைத் தெரிவித்திருந்தார். இந்தக் கட்டுரை வெளியான பின்னர், இந்த 10 இயர் சேலஞ்ச் விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. ஒரு சாதாரண போட்டோவுக்குப் பின்னால் இப்படி ஒரு விஷயம் இருக்கலாம் என மக்களுக்கு அப்போதுதான் தெரியவந்தது. எனவே, உடனடியாக ஃபேஸ்புக்கின் இந்தச் சூழ்ச்சியை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த விரும்பினார்கள். இந்தத் தகவலை ஃபேஸ்புக்கில் பதிவிட்டும், வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்தும் மற்றவர்களை எச்சரிக்கைசெய்யத் தொடங்கினார்கள்.

'இதுக்கும் எனக்கும் கொஞ்சம்கூட சம்பந்தம் கிடையாது' - மறுத்த ஃபேஸ்புக் 

சமூக வலைதளம் என்று எடுத்துக் கொண்டால், சமீப காலத்தில் அதிகமாக அடி வாங்கியது ஃபேஸ்புக்காகத்தான் இருக்கும். கடந்த வருட தொடக்கத்தில், கேம்பிரிட்ஜ் அனலிடிகா விவாகரத்தில் தொடங்கியது ஃபேஸ்புக்கின் சறுக்கல். கடந்த சில வருடங்களில் ஃபேஸ்புக்கிற்கு கெட்ட பெயரை வாங்கிக்கொடுத்த அதன் தாக்கம், இன்று வரை நீடிக்கிறது. அந்த சம்பவத்துக்குப் பிறகு, பாதுகாப்பு தொடர்பாக எந்தப் பிரச்னை எழுந்தாலும் ஃபேஸ்புக்கிற்கும் அதில் சம்பந்தம் இருக்குமோ என நினைக்கத் தவறவில்லை உலகம். இதற்கு முன்பு இப்படி குற்றச்சாட்டுகள் வைக்கப்படும்போதெல்லாம் கொஞ்சம் அடக்கியே வாசித்த ஃபேஸ்புக், இந்த முறை அப்படி இருக்கவில்லை. "இது, பயனாளர்களால் உருவாக்கப்பட்டது, அவர்களால்தான் வைரல் ஆனது. ஃபேஸ்புக், இந்த ட்ரெண்டைத் தொடங்கி வைக்கவில்லை. இதில் பயன்படுத்தப்படும் போட்டோக்கள் ஃபேஸ்புக்கில் ஏற்கெனவே இருப்பவைதான். மேலும் facial recognition தொழில்நுட்பத்தை தேவைப்பட்டால் செயல்பாட்டிலும் அல்லது நிறுத்திவைக்கவும் கொடுக்கப்பட்டுள்ள வசதியை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதை நினைவுபடுத்துகிறோம் " என்று ஃபேஸ்புக் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்குப் பின்னால் சூழ்ச்சி ஏதும் இருக்கிறதா ? 

இந்த விஷயத்தில் ஃபேஸ்புக், முன்னெப்போதும் இல்லாத வகையில் கோபப்படுவதற்கும் காரணம் இருக்கிறது. ஏனென்றால், இந்த facial recognition தொழில்நுட்பத்தை ஃபேஸ்புக் மட்டுமே பயன்படுத்தவில்லை. கூகுள் உட்பட பல முன்னணி நிறுவனங்கள் பல்வேறு பயன்பாட்டிற்காக இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. ஃபேஸ்புக் தவிர்த்து மற்ற சமூக வலைதளங்களிலும் இந்தத் தொழில்நுட்பம் பயன்பாட்டில்தான் இருக்கிறது. இந்த 10 இயர் சேலஞ்ச், ​​​​​​ஃபேஸ்புக்கில் மட்டுமின்றி ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்திலும்  வைரல் ஆனது. எனவே, இந்த10 இயர் சேலஞ்ச்சைப் பொறுத்தவரை தங்களை மட்டுமே குற்றம் சாட்டுவது சரியாக இருக்காது என நினைக்கிறது ஃபேஸ்புக். கிட்டத்தட்ட அதுதான் உண்மை நிலையும்கூட. எடுத்துக்காட்டாக, ஸ்மார்ட்போனில் இருக்கும் பேஸ் அனலாக் வசதிகூட ஒரு வகை முகத்தைக் கண்டறியும் தொழில்நுட்பம்தான். கூகுள்கூட போட்டோக்களை ஒருங்கிணைக்க ஸ்மார்ட்போன்களில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திவருகிறது. எனவே, சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்கள் facial recognition தொழில்நுட்பத்தை முற்றிலுமாகத் தவிர்ப்பது என்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லாத ஒன்று.

ஒரு வேளை, ஃபேஸ்புக் உங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து, அதை வியாபார நோக்கத்திற்காகப் பயன்படுத்தும் என்று நீங்கள் நினைத்தால், அது மற்ற சமூக வலைதளங்களுக்கும் பொருந்தக்கூடியதாகவே இருக்கும். எனவே, இந்தச் சவாலில் விருப்பப்பட்டால் பங்குபெறலாம். இல்லையென்றால் ஒதுங்கிக்கொள்ளலாம். ஆனால், பலர் கூறுவதைப் போல இதற்குப் பின்னால் பயப்படும் அளவுக்குக் காரணங்களோ எதுவும் கிடையாது. இதைத் தகவல் திருட்டு என்று நினைத்து அதைத் தவிர்க்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், அதற்கான வழி ஒன்றுதான். அதற்கு, தொடக்கத்தில் இருந்தே சமூக வலைதளங்களின் பக்கமே எட்டிக்கூட பார்க்காதவர்களாக இருந்தால் மட்டுமே அதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. இதுவரை உலகம் முழுவதும் பலர் இந்த சேலஞ்ச்சில் கலந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு வாரத்தைக் கடந்த பிறகும்கூட, வெவ்வேறு வடிவங்களில் இந்த 10 இயர் சேலஞ்ச் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஃபேஸ்புக், உங்களுக்குத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ உங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்துக்கொண்டுதான் இருக்கிறது என்பது உண்மை. இதில் பங்கேற்காதவர்கள்கூட ஃபேஸ்புக்கில் போட்டோக்களை அப்லோட் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். எப்படி இருந்தாலும் ஃபேஸ்புக்கிடம் உங்களது போட்டோவை நீங்கள்தான் அளிக்கிறீர்களே தவிர, ஃபேஸ்புக் வற்புறுத்தி வாங்குவதில்லை. ஒரு வேளை உங்களது தனியுரிமை பாதிக்கப்படும் என நீங்கள் சந்தேகப்படலாம். அப்படி இருந்தால், ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறப்போகிறீர்களா அல்லது அது தெரிந்தும் அங்கேயே இருக்கப்போகிறீர்களா என்பதுதான் உங்களுக்கு முன்னால் வைக்கப்படும் நிஜமான சவால்!