Published:Updated:

மூடுபனியில் உறைந்த மூணாறு... மிஸ் பண்ணக்கூடாத சீசன் மக்களே!

`தென்னகத்து காஷ்மீர்’ என்று அழைக்கப்படும் மூணாறு, பெயருக்கு ஏற்றார் போல தற்போது உறைபனியால் மூடப்பட்டுள்ளது.

மூடுபனியில் உறைந்த மூணாறு... மிஸ் பண்ணக்கூடாத சீசன் மக்களே!
மூடுபனியில் உறைந்த மூணாறு... மிஸ் பண்ணக்கூடாத சீசன் மக்களே!

லை, பனி இவற்றைக் காண வேண்டும் என்றால் வட மாநிலங்களான ஹிமாச்சல், ஜம்மு - காஷ்மீர் எனச் செல்ல வேண்டாம், தமிழகக் கேரள எல்லையில் அமைந்திருக்கும் அழகிய மூணாறுக்குச் சென்றால் போதும். `தென்னகத்து காஷ்மீர்’ என்று அழைக்கப்படும் மூணாறு, பெயருக்கு ஏற்றார் போல தற்போது உறைபனியால் மூடப்பட்டுள்ளது. அதன் அழகைக் காண லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மூணாறுக்குப் படையெடுத்துவருகிறார்கள்.

மைனஸ் 1 டிகிரி 

ஊட்டி, கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் இடம் என்றால் அது மூணாறுதான். அதன் அழகிய தோற்றமும், நிலப்பரப்பும், அதற்கு ஏற்றார்போல சில்லென்ற சூழலும் சுற்றுலாப் பயணிகளை இன்றுவரை ஈர்த்துவருகிறது. எப்போதும் சில்லென்ற சூழலுக்குப் பஞ்சமில்லா மூணாறின் தட்பவெப்பநிலை, கடந்த 11ம் தேதி இரவு மைனஸ் 1 டிகிரியைத் தொட்டது. குறிப்பாக, மூணாறு நகர்ப் பகுதி, நல்லதண்ணி எஸ்டேட், மாட்டுப்பட்டி ஆகிய இடங்களில் மைனஸ் 1 டிகிரி பதிவானது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். அன்று முதல் இன்றுவரை மூணாறின் தட்பவெப்பநிலை மைனஸ் டிகிரியிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.

மைனஸ் 4 டிகிரி 

மைனஸ் 1 டிகிரியைத் தொட்ட மூணாறின் தட்பவெப்பநிலை, தொடர்ச்சியாகக் குறைந்து, தற்போது மைனஸ் 4 டிகிரியை அடைந்துள்ளது. மாட்டுப்பட்டி, சிவன்மலை, பெரியவாரை, கன்னிமலை ஆகிய பகுதிகளில் மைனஸ் 4 டிகிரி பதிவாகியுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு இதே போல மைனஸ் டிகிரியைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. அது சிவன்மலைப் பகுதியில் பதிவு செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. எது எப்படியோ, மைனஸ் 4 டிகிரியால் மூணாறே பனி போர்த்தியுள்ளது போல காட்சியளிக்கிறது.

கருகிய தேயிலை 

மூணாறு சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமல்லாது பல நூறு ஏக்கர் பரந்து விரிந்திருக்கும் தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தோட்டத்தொழிலாளர்களுக்கும் சொந்தமானதுதான். தற்போது நிலவிவரும் கடும் உறைபனி சூழலில், தேயிலை செடி கருகி வருகிறது. இதனால் பெரும் நஷ்டத்தை தேயிலை தோட்ட நிர்வாகம் சந்தித்துவருகிறது. தேயிலை தோட்ட தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். எனவே, அவர்களுக்கான வாழ்வாதாரம் என்பது தற்போது கேள்விக் குறியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குவியும் சுற்றுலாப் பயணிகள் 

கடந்து ஒரு வாரத்திற்கு மேலாக மூணாறின் தட்ப வெப்பநிலை மைனஸ் டிகிரியை அடைந்த செய்தி கேள்விப்பட்டு, கேரளா மட்டுமல்லாது, அதன் அண்டை மாநிலங்கள் மட்டுமல்லாது இந்தியா முழுவதிலுமிருந்து பல ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் மூணாறுக்குப் படையெடுத்துவருகிறார்கள். தரையில் படர்ந்திருக்கும் பனியைக் கண்டு ரசிக்கத் தினம் 80 ஆயிரம் முதல் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மூணாறுக்கு வருவதாகச் சுற்றுலாத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மூணாறில் தங்கும் அனைவரும், அதிகாலையில் எழுந்து மாட்டுப்பட்டி, சிவன்மலை ஆகிய பகுதிகளில் உள்ள புல்வெளிகளில் படர்ந்திருக்கும் உறைபனியைக் கண்டு ரசித்துவருகிறார்கள்.

வெள்ளத்திலிருந்து மீண்டது மூணாறு

கடந்த ஆண்டு பருவமழை பெருவெடிப்பு காரணமாக பெரும் சேதத்தை சந்தித்தது மூணாறு. சுற்றுலாத்தலமாக இருக்கும் மூணாறில் உள்ள ஹோட்டல்கள், கடைகள் என அனைத்தும் வெள்ளத்திற்குப் பலியாகின. அந்தப் பெரும் வீழ்ச்சியிலிருந்து மெள்ள மீண்டு கொண்டிருந்த மூணாறு, தற்போதைய உறைபனி காரணமாக முழுவதுமாக மீண்டிருக்கிறது என்றே சொல்லலாம். குவியும் சுற்றுலாப் பயணிகளால் தனது பொலிவை மீண்டும் பெற்றுவருகிறது மூணாறு.

வார விடுமுறையில் அப்படியே மூணாறுக்குச் சென்று உறைபனியில் கால்வைத்துவிட்டு வரலாமே!