Published:Updated:

பிளாஸ்டிக்குக்கு மாற்றாக வரும் `பயோபிளாஸ்டிக்'... பலன் அளிக்குமா..?  

பயோபிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி பைகள் செய்யலாம். இந்தப் பைகள் ஓரிரு நாள்களிலேயே கரைந்துவிடும் தன்மை உடையது. ஆகவேதான் இதை `100 சதவிகிதம் மக்கும் தன்மையுடையது' என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

பிளாஸ்டிக்குக்கு மாற்றாக வரும் `பயோபிளாஸ்டிக்'... பலன் அளிக்குமா..?  
பிளாஸ்டிக்குக்கு மாற்றாக வரும் `பயோபிளாஸ்டிக்'... பலன் அளிக்குமா..?  

லகை அச்சுறுத்தும் பிரச்னைகளில் பிரதானமானது பிளாஸ்டிக். பிளாஸ்டிக் ஆபத்தைக் களையும்விதமாக தன்னார்வ அமைப்புகளும் சமூகச் செயற்பாட்டாளர்களும் களத்தில் இறங்கி பல்வேறு செயல்பாடுகளில் இறங்கியுள்ளனர். தமிழக அரசு, கடந்த ஜனவரி 1-ம்தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதித்துள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதேநேரத்தில் பயோபிளாஸ்டிக் மீதான விழிப்புஉணர்வும் அதிகரித்துள்ளது.

பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றான `பயோபிளாஸ்டிக்'  (Bioplastic) பலன் தருமா, அது உடலுக்கு ஆரோக்கியமானதா, பிளாஸ்டிக்குக்கு மாற்றாக வேறு எதையெல்லாம் பயன்படுத்தலாம்? 

``பிளாஸ்டிக் பொருள்களை எரிக்கும்போது அதிலிருந்து வெளியாகும் `ஸ்டைரின் வாயு' (Styrene Gas காற்றில் கலக்கும். இது சருமம் மற்றும் நுரையீரல் வழியாக ரத்தத்தில் கலந்து நுரையீரல் பிரச்னைக்கு வழிவகுக்கும். பிளாஸ்டிக்கை எரிப்பதால் வெளிப்படும் `டையாக்ஸின்' (Dioxin) புற்றுநோயில் தொடங்கி ஹார்மோன் மாற்றங்கள் வரை பல்வேறு நோய்களை உருவாக்கும். பிளாஸ்டிக் தட்டில் சூடான உணவுப் பொருள்களை வைத்துச் சாப்பிடுவதால் பிளாஸ்டிக்கில் உள்ள நுண்துகள்கள் உடலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தும். நம்மையும் அறியாமல் பிளாஸ்டிக் எப்படிச் சூழ்ந்துள்ளதோ, அதேபோல புதுப்புது நோய்களும் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன. இதற்கு மாற்றாக வந்துள்ள `பயோபிளாஸ்டிக் ' நோயில்லா உலகத்துக்கு நம்மை இட்டுச்செல்லும்..." என்கிறார் சித்த மருத்துவர் விக்ரம்குமார். 

பயோ பிளாஸ்டிக் பற்றியும் விரிவாகப் பேசினார் அவர். 

``மரவள்ளிக் கிழங்கு, மக்காச்சோளம், சோயா ஆகியவற்றைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் `பயோ பிளாஸ்டிக்' நீரிலும், நிலத்திலும் கரைந்துவிடும். தோராயமாக இரண்டிலிருந்து மூன்று மாதங்களுக்குள் கரைந்துவிடும் என்பதே இதன் சிறப்பம்சம்.  

பயோபிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி பைகள் செய்யலாம். இந்தப் பைகள் ஓரிரு நாள்களிலேயே கரைந்துவிடும் தன்மை உடையது. ஆகவேதான் இதை `100 சதவிகிதம் மக்கும் தன்மையுடையது' என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இயற்கையில் விளையும் காய்கறிகளைக் கொண்டு உருவாக்கப்படுவதால், இதைக் குழந்தைகள் மற்றும் விலங்குகள் சாப்பிட்டாலும் உடலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது. எனவே, மக்காச்சோளத்தில் டீ கப் உருவாக்கி, அதைப் பயன்படுத்துவதால் உடலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. `பயோபிளாஸ்டிக்' குறித்த விழிப்புஉணர்வு அரசின் சார்பில் தற்போதுதான் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல, பிளாஸ்டிக்குக்கு மாற்றாக வாழை இலையைப் பயன்படுத்தலாம். எளிதாகக் கிடைக்கும் பொருள் என்பதால், அலுவலகம் செல்பவர்கள் மதிய வேளையைத் தவிர்த்து, காலை, இரவு வேளைகளில் வாழை இலையில் சாப்பிடும் பழக்கத்தைக் கடைப்பிடிக்கலாம். `வாழை இலையில் சாப்பிட்டால் உடலுக்குப் பொன் நிறம் கிடைக்கும்’ என்று சித்த மருத்துவத்தில் கூறப்படுகிறது. வாழை இலையிலுள்ள ஆன்டிஆக்ஸிடென்ட்டுகள் சருமம் சார்ந்த பிரச்னைகளிலிருந்து நம்மைக் காக்கும். அதேநேரத்தில் மூளைக்குப் புத்துணர்வும் அளிக்கும்.

வாழை இலையைத் தவிர்த்து மந்தாரை இலை, தேக்கு இலை, பாக்குமட்டைத் தட்டு போன்றவற்றையும் பயன்படுத்தலாம். தின்பண்டங்களை வாழை அல்லது மந்தாரை இலைகளில் வைத்து உண்ணக் கொடுக்கலாம். தாமரை இலையைப் பயன்படுத்தும் வழக்கமும் முற்காலத்தில் இருந்தது. ஆனால், தாமரை இலைக்கு சில நோய்களை உருவாக்கும் தன்மை உண்டு என்று சித்த மருத்துவம் கூறுவதால் அதைத் தவிர்த்துவிடலாம். இதுதவிர, பனை ஓலை, கற்றாழை நார், சணல் போன்றவற்றிலிருந்து பைகள் தயாரித்துப் பயன்படுத்துவதால் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தவிர்க்கலாம். இது சிறுதொழில்முனைவோருக்கும் நல்ல வாய்ப்பாக அமையும்.

தடை செய்யப்பட்ட பிறகு, பொது இடங்களில் பிளாஸ்டிக்குகளை அதிகம் பார்க்கமுடியவில்லை. இதனால் ஆரோக்கியமான சூழல் காணப்படுகிறது. திருமணம் மற்றும் விழாக்களுக்குச் சென்றால் இயற்கையில் விளையும் பொருள்களையே பரிசாகக் கொடுக்கும் பழக்கத்தைக் காணமுடிகிறது. டீக்கடைகளில்கூட செம்பு, சில்வர் டம்ளர்களில் டீயை ஊற்றிக் கொடுக்கும் பழக்கம் திரும்பியிருக்கிறது.

ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் முன்பெல்லாம் திரும்பும் பக்கமெல்லாம் பாலித்தீன் கவர்கள் பறந்துகொண்டிருக்கும். ஆனால், தற்போது அந்த இடங்களில் எல்லாம் பிளாஸ்டிக்குகளை மிகக் குறைவாகவே காணமுடிகிறது. மெள்ள மெள்ள பிளாஸ்டிக் பழக்கத்திலிருந்து விடுபட்டால் எதிர்வரும் சந்ததியினருக்கு ஆரோக்கியத்தைப் பெற்றுத்தருவது சாத்தியமாகும்!” என்கிறார் விக்ரம்குமார்.