Published:Updated:

மக்கள்தொகைப் பெருக்கம் பற்றிய கருத்து: சர்ச்சையில் சிக்கிய பாபா ராம்தேவ்?

யோகா குருவான பாபா ராம்தேவும் சர்ச்சைக்குரிய கருத்தைப் பேசியிருக்கிறார்.

மக்கள்தொகைப் பெருக்கம் பற்றிய கருத்து: சர்ச்சையில் சிக்கிய பாபா ராம்தேவ்?
மக்கள்தொகைப் பெருக்கம் பற்றிய கருத்து: சர்ச்சையில் சிக்கிய பாபா ராம்தேவ்?

ப்போதெல்லாம் சில அரசியல்வாதிகள் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி பிரபலமாகிவருகின்றனர். அதில் குறிப்பாக, பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்களே முதலிடத்தில் உள்ளனர். இந்த விஷயத்தில், உத்தரப் பிரதேச மாநில பி.ஜே.பி. எம்.எல்.ஏ-க்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுவது மட்டுமன்றி, சர்ச்சைக்குரிய செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழகத்தைப் பொறுத்தவரை பி.ஜே.பி. தேசியச் செயலாளரான ஹெச்.ராஜா, அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுச் சிக்கலில் மாட்டிக்கொள்வார். கடந்த ஆண்டு, பெரியார் சிலை, காஷ்மீர் சிறுமி, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, நீதிமன்றம் மற்றும் காவல் துறை உள்ளிட்டவை குறித்து தவறாகப் பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். பின்னர், அதற்காக வருத்தம் தெரிவித்த நிகழ்வுகளும் உண்டு. 

தமிழகத்தைச் சேர்ந்த பி.ஜே.பி. பிரபலங்கள்தாம் இப்படியென்றால், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பி.ஜே.பி. எம்.எல்.ஏ-க்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்களில் பலர், கடந்த ஆண்டு மட்டும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டிருந்தனர். இப்படி, அவர்கள் தொடர்ந்து பேசி வந்ததையடுத்து, கட்சிக்கும் ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுவதாக டெல்லி மேலிடத்தில் புகார் வாசிக்கப்பட்டது. இதையடுத்து, பி.ஜே.பி-யினர் பேசும் சர்ச்சை கருத்துகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, தன் கட்சி எம்.பி., எம்.எல்.ஏ-க்களுடன் செல்போன் செயலி வழியாகக் கலந்துரையாடினார். அப்போது அவர், ``பயங்கரவாதம், பாலியல் வன்கொடுமை என்று எந்தப் பிரச்னையாக இருந்தாலும் நாம் வாய் தவறி கூறும் வார்த்தைகள் ஊடகங்களில் பெரிதாக்கப்படுகின்றன. இதுபற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் நாம், நமது கருத்துகளைத் தொடர்ந்து கூறி வருகிறோம். இதனால் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் உருவாகிவருகிறது. எனவே, பொறுப்பற்ற முறையில் அர்த்தமற்ற கருத்துகள் தெரிவிப்பதையும், ஆர்வக்கோளாறில் கருத்துகள் கூறுவதையும் உடனடியாக நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். 

ஆனாலும், பி.ஜே.பி-யினர் அதை விடுவதாக இல்லை. இந்த நிலையில், திருச்சியில் நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற தேசம் காப்போம் மாநாடு பற்றி, ஹெச்.ராஜா சர்ச்சைக்குரிய கருத்துகளை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதுதொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவொன்றில், ``தமிழகத்தை வெடிகுண்டு காடாக்கப் பயங்கரவாதிகள் கூடுகின்றனர்" என்று பதிவிட்டிருந்தார். அதேபோல உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸாபர் நகர்த் தொகுதி எம்.எல்.ஏ விக்ரம் சைனி, ``இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்று கூறுபவர்களை வெடிகுண்டு வீசிக் கொல்ல வேண்டும்" என்று சமீபத்தில் பேசியிருந்தார். இதுதொடர்பாக மேலும் அவர், ``இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்பவர்கள் அனைவரும் துரோகிகள், அவர்கள் சட்டப்படி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்று கூறுபவர்களை வெடிகுண்டு வீசிக் கொல்ல வேண்டும். இந்தியாவின் மதிப்பீடுகளை அவர்கள் மதிக்கவில்லை என்றால், அவர்கள் தாராளமாக இந்நாட்டைவிட்டு வெளியேறி வேறு நாட்டுக்குக் குடியேறலாம். இப்படிப் பாதுகாப்பற்ற மக்கள்மீது குண்டுவீசி தாக்குவதற்கு உத்தரப்பிரதேச அரசு எனக்குத் தனியாக ஓர் அமைச்சரவையை ஒதுக்கவேண்டும். அப்படிச் செய்தால், அவர்கள் யாரும் என்னிடமிருந்து தப்பிக்க முடியாது" என்று தெரிவித்திருந்தார். அவருடைய பேச்சு, நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், யோகா குருவான பாபா ராம்தேவும் சர்ச்சைக்குரிய கருத்தைப் பேசியிருக்கிறார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பாபா ராம்தேவ், ``நாட்டில் மக்கள்தொகைப் பெருக்கம் அதிகரித்துவருகிறது. இதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பல்வேறு கூட்டங்களில் நான் வலியுறுத்தி வருகிறேன். அதிகரித்துவரும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது அவசியமாகும். நாட்டில் முஸ்லிம் - இந்து என எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றிருந்தால், அவர்களிடமிருந்து வாக்குரிமையைப் பறிக்க வேண்டும். அது மட்டுமன்றி, அரசின் சலுகைகள் அனைத்தையும் பறிக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் மக்கள்தொகைப் பெருக்கம் குறையும். மேலும், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களைத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது; அவர்களின் குழந்தைகளுக்கு அரசுப் பள்ளிகளில் படிக்க இடமளிக்கக் கூடாது. அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுவதைத் தடை செய்ய வேண்டும். அரசுப் பணியும் வழங்கக் கூடாது. இவ்வாறு செய்தால்தான் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்" என்றார்.

இது, நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இதுகுறித்து பாபா ராம்தேவ் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

'சர்ச்சை'யாகப் பேசுபவர்களே பிரபலமாகி வருவது இயல்பாகிவிட்டது.