Published:Updated:

``பெண் குழந்தையைப் பெற்றால் பாராட்டுச் சான்றிதழ்!'' - மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்-ஸின் முயற்சி

`மகளோற்சவம்’ நிகழ்வில் `என் மகள் - என் மகத்துவம்’ என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு 700 பேர் மாரத்தானில் பங்கேற்று பெண் குழந்தை பாதுகாப்பில் எங்களுடன் கைகோத்தனர். 3,000 பேர் இணைந்து மனிதச் சங்கிலி அமைத்து பெண்மையின் மகத்துவத்தைச் சமூகத்துக்கு உணர்த்தினர்.

``பெண் குழந்தையைப் பெற்றால் பாராட்டுச் சான்றிதழ்!'' - மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்-ஸின் முயற்சி
``பெண் குழந்தையைப் பெற்றால் பாராட்டுச் சான்றிதழ்!'' - மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்-ஸின் முயற்சி

பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடனும் அவர்களின் கல்வியறிவை அதிகரிக்கச் செய்யவும், திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட சமூகநலத்துறை சார்பாக `மகளோற்சவம்' என்ற விழிப்பு உணர்வு நிகழ்வு நேற்று நடைபெற்றது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.ஏஸ்-ஸிடம் பேசினேன்.

``அறிவியல் வளர்ச்சி நிறைந்த இந்தக் காலகட்டத்தில், பெண்களின் பங்களிப்பு எல்லாத் துறைகளிலும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. பெண் என்பதற்காகவே ஒரு சில வாய்ப்புகளை இழக்க நிர்பந்திக்கப்பட்டாலும் துணிச்சலும் தன்னம்பிக்கையும் மிகுந்த செயல்பாடுகள் மூலமாக ஒவ்வொரு பெண்ணும் தனக்கான அடையாளத்தைத் தானே உருவாக்கிக்கொள்கிறார் என்பது பெருமைப்பட வேண்டிய ஒன்று. எனினும், பெண் கருக்கொலை, சிசுக்கொலை போன்ற செயல்களால் இந்தியாவில் பெண்களின் பாலின விகிதம் ஆண்களின் பாலின விகிதத்தைவிடக் குறைவாகவே உள்ளது.

1961-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி சிறுவர் - சிறுமியரின் பாலின விகிதம் 1000 : 978; 2001-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 1000 : 927. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 1000 ஆண் குழந்தைகளுக்கு 914 பெண் குழந்தைகள் என்ற விகிதத்தில் உள்ளது. பத்தாண்டு இடைவெளியில் எடுக்கப்படும் ஒவ்வொரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்துகொண்டே வருகிறது.

இந்தியாவில் ஆண் - பெண் பாலின விகிதத்தில் நிலவும் இடைவெளியைக் குறைத்து சமநிலைக்குக் கொண்டுவரவும், பெண்களுக்குக் கல்வி அளித்து அவர்களைச் சம வாய்ப்பு பெறச் செய்யவும், பிரதமர் அவர்களால் `பேட்டி பச்சாவோ - பேட்டி படாவோ (பெண் குழந்தைகளைக் காப்போம் - பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்)' என்ற திட்டம் 2015-ம் ஆண்டு ஹரியானாவில் அறிமுகப்படுத்தப்பட்டு, நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பெண் கருக்கொலை, சிசுக்கொலைகளைத் தடுத்தல், பெண்களின் கல்வி அறிவை அதிகரிக்கச் செய்தல் போன்றவற்றுக்காக நாடு முழுவதும் விழிப்புஉணர்வு பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

திருவள்ளூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு சராசரி மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. சட்டங்கள் மூலம் பெண் கருக்கொலை, சிசுக்கொலை போன்றவற்றைத் தவிர்க்க முடியும் என்றாலும், பெண் குழந்தைகள் குறித்த மன மாற்றத்தை மக்களிடம் கொண்டு வருவதன் மூலமாகத்தான் முழுமையான மாற்றத்தை அடைய முடியும் என எண்ணினேன். அதனால் மாவட்டச் சமூக நலத்துறையுடன் இணைந்து நிறைய புதுப்புதுத் திட்டங்களை உருவாக்கினோம். சட்டவிரோதமாகக் கருவின் பாலினத்தைத் தெரிவிக்கும் பல ஸ்கேன் சென்டர்களுக்கு சீல் வைத்தோம். திருவள்ளூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு, பாராட்டுச் சான்றிதழ், பரிசுப்பொருள்கள் அளித்து பெண் குழந்தைப் பிறப்பு விகிதத்தை ஊக்கப்படுத்தினோம். மேலும், பள்ளிகளில் வேறுபட்ட விழிப்பு உணர்வு நிகழ்வுகள் மூலம் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறோம். இதன் ஒரு பகுதியாக பெண் குழந்தைகளுக்காக `மகளோற்சவம்’ என்ற நிகழ்ச்சி நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் நடத்தப்பட்டது.

`மகளோற்சவம்’ நிகழ்வில் `என் மகள் - என் மகத்துவம்’ என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு 700 பேர் மாரத்தானில் பங்கேற்று பெண் குழந்தை பாதுகாப்பில் எங்களுடன் கைகோத்தனர். 3,000 பேர் இணைந்து மனிதச் சங்கிலி அமைத்து பெண்மையின் மகத்துவத்தைச் சமூகத்துக்கு உணர்த்தினர். இத்துடன் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஒரு விழிப்பு உணர்வு கேலண்டரும் வெளியிடப்பட்டது. மேலும், சில மேடை நிகழ்ச்சிகள் நடத்தியும் 5,000 சிவப்பு பலூன்கள் பறக்கவிட்டும்  விழிப்புஉணர்வை ஏற்படுத்தினோம். இதுபோன்ற தொடர்ச்சியான விழிப்பு உணர்வு நிகழ்வுகள் மூலமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் 2017-2018-ம் ஆண்டில் 1000 : 928 ஆக இருந்த பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை, 2018-19-ம் ஆண்டில் (டிசம்பர் வரை) 982 ஆக உயர்த்தியுள்ளோம். இன்னும் நிறைய புது முயற்சிகளுக்கான திட்டங்களும் இருக்கின்றன. பெண் குழந்தைகளைக் காப்போம், ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டமைப்போம்`` என்றார் உறுதியுடன்.