Published:Updated:

"தாமரையின் தண்டுகூட முளைக்காது!" - திருமுருகன் காந்தி

"இந்தியாவில் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள மக்களில் பெரும்பாலானோர் பட்டியலினத்தோரும் பிற்படுத்தப்பட்டோரும்தான். இந்த நிலையில், எப்படி உயர்சாதி மக்கள் ஏழைகளாக உள்ளார்கள் என்ற கருத்து உருவாக முடியும்?"

"தாமரையின் தண்டுகூட முளைக்காது!" -  திருமுருகன் காந்தி
"தாமரையின் தண்டுகூட முளைக்காது!" - திருமுருகன் காந்தி

பொதுப்பிரிவினரில் பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகித இடஒதுக்கீடு, `சரியா... தவறா' எனத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விவாத மேடைகள் அனல்பறக்கத் தொடங்கியுள்ளன. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மோடி அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதாவால், நாடெங்கும் கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் பெற்றுவருகிறது, பி.ஜே.பி. அரசு. இந்த நிலையில், மதுரையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, இடஒதுக்கீடு குறித்து பொரிந்து தள்ளியுள்ளார்.

இதுகுறித்து அந்தக் கருத்தரங்கில் பேசிய திருமுருகன் காந்தி, `` `உயர்சாதிகளுக்கு இடஒதுக்கீடு என்றாலே, இடஒதுக்கீட்டை இல்லாமல் செய்வதற்காகத்தான் இந்தத் திட்டம் வந்திருப்பதாகப் புரிந்துகொள்ள வேண்டும்' என்கிறார் பொருளாதார மேதை அமர்த்தியா சென். அதாவது, இந்த நாட்டிலே எதற்காக இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டதோ, அதைத் தகர்க்கும் ஒரு கருத்தியல் ஆயுதமாகத்தான் இந்தப் பொருளாதாரரீதியான இடஒதுக்கீட்டை இப்போது கொண்டுவந்திருக்கிறார்கள். வருகிற தேர்தலில் உயர்சாதி மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவே இந்த முன்னேற்பாடு. நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களில் மத்தியப் பிரதேசமும் ராஜஸ்தானும் மோடி அரசுக்குப் பாடம் புகட்டியுள்ளது. `தலித்களுக்கு ஆதரவாக இருப்பதைப் போன்று செயல்படுகிற பி.ஜே.பி-க்கு வாக்களிக்காமல் நாங்கள் நோட்டாவுக்கு வாக்களிக்கிறோம்' என்று 5,40,000 உயர்சாதி மக்கள் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். ஒட்டுமொத்த பதிவான வாக்குகளில் இதன் சதவிகிதமானது 1.5 ஆகும். இது கிட்டத்தட்ட 22 தொகுதிகளில் பி.ஜே.பி-யின் தோல்வியை உறுதிசெய்திருக்கிறது. ஆனால், வெறும் 0.5 சதவிகித வாக்கு வித்தியாசத்தில் இப்போது காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளார்கள். உயர்சாதி மக்களுக்கு ஆதரவான செயல்பாட்டை பி.ஜே.பி. முன்னெடுக்குமானால், வரும் தேர்தலில் நிச்சயம் ஆட்சி அமைத்துவிடலாம் என்ற அடிப்படையில்தான் இந்த 10 சதவிகித இடஒதுக்கீடு மசோதா பொருளாதாரரீதியில் கொண்டுவரப்பட்டுள்ளது.

இடஒதுக்கீடு பொருளாதாரரீதியாகக் கொண்டுவரப்பட்டதாக அரசியல் சாசனத்தில் இல்லை. உச்ச நீதிமன்றத்திலும் அப்படியான தீர்ப்புகள் வழங்கப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தில் பொருளாதாரரீதியான இடஒதுக்கீடு மசோதா தகர்க்கப்படும் என்று பி.ஜே.பி-க்கு நன்றாகவே தெரியும். எனினும், அந்தக் குறுகிய காலகட்டத்துக்குள் உயர்சாதிகளின் வாக்குகளையும் நம்பிக்கையையும் பெறும் பொருட்டே இந்த முயற்சி. யாரேனும் நீதிமன்றத்துக்குச் சென்று இந்த மசோதாவுக்கு எதிரான தீர்ப்பை வாங்கிவிட்டாலும் சபரிமலை விவகாரத்தைப்போல் இதிலும் பி.ஜே.பி. கலவரத்தை ஏற்படுத்த முடியும். கலவரத்தினால் மட்டுமே ஆட்சி அமைக்கக்கூடிய கட்சி பி.ஜே.பி.

இந்திய அளவிலே பொருளாதாரரீதியாக வறுமைக்கோட்டுக்குக் கீழே ஆட்பட்ட மக்கள்தொகையில் 50 சதவிகிதம் பேர் பட்டியலினத்தவர்களாகவும், பிற்படுத்தப்பட்ட மக்களாகவும்தான் இருக்கிறார்கள். இவர்கள் ஏன் வறுமைக்கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதுதான் முக்கியமான கேள்வி? ஏனென்றால், அவர்கள் உடல் உழைப்பு அல்லாத வேலைகளுக்கு அனுமதிக்கப்படவில்லை. அப்படியான வேலைகளைப் பெற்றுக்கொள்வதற்கான கல்வி வாய்ப்புகளுக்கும் அனுமதிக்கப்படவில்லை. கல்வியும் வேலைவாய்ப்பும் முழுவதுமாக மறுக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள மக்களில் பெரும்பாலானோர் பட்டியலினத்தோரும் பிற்படுத்தப்பட்டோரும்தான். இந்த நிலையில், எப்படி உயர்சாதி மக்கள் ஏழைகளாக உள்ளார்கள் என்ற கருத்து உருவாக முடியும்? ஆதிக்கச் சாதியினருக்கு இந்த மசோதாவின்மூலம் அதிக கல்வி வாய்ப்பு கிடைக்கும் பட்சத்திலே, இன்னும் அதிகமாகப் பிற்படுத்தப்பட்டோருக்கான வாய்ப்பு குறுக்கப்படுகிறது.

மேலும், மூன்று வருடங்களாகத் தனியார் நிறுவனங்களில் படிக்கக்கூடிய பட்டியலினச் சமூகத்தைச் சார்ந்த மாணவர்களுக்குக் கொடுக்கப்படுகிற மத்திய அரசின் நிதியுதவி நிறுத்தப்பட்டிருக்கிறது. 50 சதவிகித பொதுப் பிரிவில், 10 சதவிகிதம் பொருளாதாரரீதியான ஒதுக்கீட்டை உயர்ந்த சாதிகளுக்கு அவர்கள் வழங்கினால், மீதியுள்ள 40 சதவிகித இடஒதுக்கீட்டை பட்டியலின மக்களுக்கும், இதரப் பிற்படுத்த சமூகத்தினருக்கும், பொருளாதாரரீதியாக பின்தங்கிய மக்களுக்கும் வழங்கச் சொன்னால் வழங்குவார்களா? இவ்வளவு தூரம் நுணுக்கமாக இயங்கி வன்முறை அரசியலைப் புகுத்துவார்கள் என்றால், தமிழர்களும் அதே அளவுக்கு எதிர்வினையாற்றத் தயார் என்பதைத்தான் நாம் இங்குப் பதிவுசெய்ய வேண்டும்.

ஒவ்வொரு வருடமும் மத்திய அரசாங்கத்தின் வேலைவாய்ப்புப் பட்டியலில் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் நிறுத்தப்படுகின்றன. இவ்வாறு நிரப்பப்படாத இடங்கள் அடிமட்ட கடைக்கோடி ஊழியர்களின் வேலைவாய்ப்புகளாய்தான் உள்ளது. இவர்களை, தனியார் நிறுவனங்களுக்கு கான்ட்ராக்ட் ஊழியர்களாகத்தான் இந்த அரசாங்கம் வைத்துள்ளது. ஆகவே, நமக்கான வாய்ப்புகள் மேலும்மேலும் குறுக்கப்படும் பட்சத்தில், தனியார் நிறுவனங்களிலும் நமக்கான இடஒதுக்கீட்டினை நாம் கேட்கவேண்டும். ஒட்டுமொத்தமா தமிழகத்திற்கு இதுவரை கேட்கப்பட்ட நிவாரண தொகையின் அளவு  கிட்டத்தட்ட 77 ஆயிரம் ரூபாய் கோடி. ஆனால் அதிலிருந்து மோடி அரசு, தமிழ்நாட்டுக்கு வழங்கிய நிவாரண நிதி 5 சதவிகிதத்துக்கும் கீழ்தான்.  கஜா புயலுக்கு வராத மோடி, ஜனவரி 27-ம் தேதி அரசாங்க வேலை நிமித்தமாகக் கூறிக்கொண்டு தேர்தல் பிரசாரத்துக்காக வருகிறார். அவருக்கு கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பினைத் தெரிவிக்க பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. அதில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பங்கேற்று, தமிழ்நாட்டில் தாமரையின் தண்டுகூட முளைக்காது என்று புரியவைத்து பதில்கூற வேண்டியது நம் கடமை" என்றார்.

இடஒதுக்கீட்டுக்கான போராட்டம் தொடங்கிவிட்டது.