Published:Updated:

“தை பிறந்தது... வழி பிறக்கவில்லை!”

“தை பிறந்தது... வழி பிறக்கவில்லை!”

கஜா நிவாரணம் கிடைக்காமல் கதறும் டெல்டா மக்கள்

“தை பிறந்தது... வழி பிறக்கவில்லை!”

கஜா நிவாரணம் கிடைக்காமல் கதறும் டெல்டா மக்கள்

Published:Updated:
“தை பிறந்தது... வழி பிறக்கவில்லை!”

டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் குலைத்துப்போட்ட மக்களின் வாழ்க்கை இன்னும் சீரடையவில்லை. புயலின் கொடூரத் தாக்குதலில் வீடு வாசல், கால்நடைகள், தோட்டங்கள் என மொத்தத்தையும் இழந்த மக்கள், இந்த நிமிடம்வரை நாதியற்றுக் கிடக்கிறார்கள். புயல் பாதித்த சில தினங்களில் மட்டும் ஏரியாவில் சுற்றித்திரிந்த அமைச்சர்களும் அதிகாரிகளும், அதன் பிறகு எட்டிக்கூடப் பார்க்கவில்லை. புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நிவாரணம் கிடைத்துவிட்டதா என்பதை அறிவதற்காக தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் விசிட் செய்தோம். பெரும்பாலான ஊர்கள் களையிழந்து காணப்பட்டன. குறிப்பாக, பொங்கல் பண்டிகையின்போது பல வீடுகளில் பொங்கல் வைக்கவில்லை. நாம் சந்தித்த அனைவருமே, “ஊர் உலகத்துக்கே சோறு போட்ட எங்க நிலைமையைப் பார்த்தீங்களா...” என்று கண்கலங்கிப் பேசினார்கள்.

புளியமரத்தடிதான் வீடு!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆண்டிக்காடு கிராமத்தில் சாந்தியும் அவரின் மகளும் புளிய மரத்தடியில் வசித்துவருகிறார்கள். “புயல்ல எங்க குடிசை வீடு இடிஞ்சுபோச்சு. என் கணவருக்கும், மகனுக்கும் வேலை கிடைக்கல. வருமானத்துக்கும் வழியில்லை. என் பொண்ணு காலேஜ்ல படிக்குது. வயசுக்கு வந்த பொம்பளைப் புள்ளைய வெச்சுக்கிட்டு, வெட்டவெளியில படாதபாடு படுறேன். பொங்கலே வைக்க வேணாம்னுதான் இருந்தேன். ஆனா, ‘பொம்பளப் புள்ளைய வெச்சிருக்கே. பொங்க வைக்காம இருக்கக் கூடாது’ன்னு சொன்னதால பொங்கல் வச்சேன். நிவாரணத்தொகைக்குக் கணக்கெடுத்த அதிகாரிங்க என் வங்கிக் கணக்கைத் தவறா எழுதிக்கொடுத்துட்டாங்க. திரும்பவும் வங்கிக் கணக்கு எண்ணைச் சரியா எழுதிக்கொடுத்தேன். ஆனா, இன்னும் பதினைஞ்சாயிரம் ரூபாய் கைக்கு வரலை. எங்களுக்கு சமையல், படுக்கை, குளியல் எல்லாமே இந்தப் புளியமரத்தடிதான். எங்களை மாதிரி எத்தனையோ குடும்பங்கள் சீரழியுது. ஏன்னு கேட்கக்கூட நாதியில்லை. அதிகாரிங்க, அமைச்சருங்க யாரும் இந்தப் பக்கம் எட்டிக்கூட பார்க்கலைங்க...” என்றார் வேதனையுடன்.

“தை பிறந்தது... வழி பிறக்கவில்லை!”

எட்டிவயல் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், “என்னோட கேபிள் டி.வி தொழிலை நம்பித்தான், என் குடும்பமே இருந்துச்சு. புயல்ல, கேபிள் ஒயர்கள் எல்லாம் அந்துப்போச்சு. அதைச் சரிசெய்ய என்கிட்ட பணமில்ல. இப்போ, வருமானம் இல்லாம ரொம்பக் கஷ்டத்துல இருக்கோம். ஒரு கை இல்லாத மாற்றுத்திறனாளியான என்னால வேற வேலைக்கும் போக முடியல. எல்லாத்தையும் இழந்து நிற்கிற எங்களை, ஒரு தாயைப்போல இருந்து தூக்கிவிட வேண்டிய அரசு, கண்டுக்கவே இல்ல. அரசு அறிவிச்ச 27 நிவாரணப் பொருள்களும் இன்னும் எங்க ஊருக்கு வரல. பல குடும்பங்கள் துக்கவீடு மாதிரிதான் இருக்கு. ‘விவசாயிகளுக்கு  நாம் ஒன்றுமே செய்யவில்லை. அதனால், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்’ன்னு எங்க தொகுதி எம்.எல்.ஏ சி.வி.சேகர் கடந்த மாசம் ஒரு நிகழ்ச்சியில சொன்னார். அவரு ராஜினாமாவும் செய்யல. எங்களுக்கும் எதுவும் செய்யல” என்றார் கோபமாக.

அமைச்சர் பழிவாங்குறார்?

திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கும் அரசு அறிவித்த நிவாரணப் பொருள்கள் முழுமையாகச் சென்றடையவில்லை. இதுகுறித்துப் பேசிய பருத்திச்சேரியைச் சேர்ந்த ராஜா, ‘‘புயல் பாதிச்சு இத்தனை நாள்களாகியும் அமைச்சரோ, அதிகாரிகளோ எங்களை வந்து பார்க்கல. வீடுகளை இழந்த குடும்பங்களுக்கும் அரசின் 27 வகையான நிவாரணப் பொருள்களை முழுமையாக் கொடுக்கல. ஆனா, எந்தப் பாதிப்புமே இல்லாத, மாடி வீட்டு ஆளுங்கட்சிக்காரங்களுக்கு மட்டும் நிவாரணப் பொருள்களைக் கொடுத்திருக்காங்க. வீடுகளை இழந்தக் குடும்பங்களுக்கு அரசு அறிவிச்ச ஐயாயிரம் ரூபாயும்கூட, உண்மையிலே பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கல. புயல் பாதிச்சப்போ, எங்க பகுதியில அரசு சார்பாக நிவாரண முகாமே அமைக்கல. தனியார் கல்லூரியிலதான் தங்கினோம். அமைச்சர் காமராஜை வழிமறிச்சு எங்க ஊர் மக்கள் ஆவேசமாக நியாயம் கேட்டாங்க. அதனால, அவர் எங்களைப் பழிவாங்குறார்போல. சாய்ந்த தென்னை மரங்களைக் கணக்கெடுத்துட்டுப் போனாங்க. ஆனா, இழப்பீடு தரலை. பாதிக்கப்பட்ட கூரை வீடுகள், ஓட்டு வீடுகள் மறுசீரமைப்புப் பணிகளும் நடக்கலை” என்றார் சோகமாக.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“தை பிறந்தது... வழி பிறக்கவில்லை!”

கைகொடுக்கும் நூறு நாள் திட்டம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கைகாட்டி, புளிச்சங்காடு, அணவயல், குளமங்கலம், கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் அறிவித்த நிவாரண உதவிகள் முழுமையாக வழங்கப்படவில்லை. அங்கும் ஆளுங்கட்சியினருக்கு மட்டுமே நிவாரண உதவிகள் சென்றதாக மக்கள் கொந்தளிக் கிறார்கள். புளிச்சங்காட்டைச் சேர்ந்த பொன்னையன், “என்னோட தோப்பு வீட்டுல இருந்த தென்னை, மா, பலா உட்படப் பத்து மரங்கள் புயல்ல விழுந்துருச்சு. அதுக்கான நிவாரணத்தை இன்னும் தரலை. ஆனா, ஆளும்கட்சிக்காரங்களுக்கு மட்டும் முழுமையா நிவாரணம் கொடுத்துட்டாங்க. எல்லோரும்தானே பாதிக்கப்பட்டோம். இதுல ஏன் பாரபட்சம் காட்டுறாங்க?

சேதமடைமஞ்ச குடிசை வீட்டுக்கு நஷ்டஈடாக ரூ.4,100 அறிவிச்சாங்க. அதுவும் தரலை. விவசாய வேலைகளும் இல்லை. எந்த வருமானமும் இல்லை. நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம்தான் கொஞ்சம் கைகொடுக்குது. அதுல வர்ற காசுலதான் இப்போ வாழ்க்கை ஓடுது. வழக்கமா எங்க பகுதியில ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே பொங்கல் விழா களைக்கட்ட ஆரம்பிச்சுடும். வீட்டுல சமைச்சு சாப்பிடறதுக்கு சரியான பண்டப் பாத்திரம் கூட இல்லை. நான் எல்லாம் இந்த வயசுல யார்கிட்டயும் கையேந்துனது இல்லை. என் புள்ளைங்களுக்கும் அதைத்தான் சொல்லிக்கொடுத்திருக்கேன். ஆனா, இன்னைக்கு அன்னாட செலவுக்கு பிச்சைக்காரங்களை மாதிரி கையேந்த வெச்சிட்டாங்க. இதுக்காகவா நாங்க ஓட்டுப் போட்டோம். தை பிறந்துடுச்சு, ஆனா, எங்களுக்கு வழிதான் பிறக்கலை. துயரம் துரத்துது” என்றார் விரக்தியுடன்.

“தை பிறந்தது... வழி பிறக்கவில்லை!”

“பட்டினி கிடக்குறோம்!”

அணவயலைச் சேர்ந்த மாறன், ‘‘புயல்ல சாய்ஞ்ச தென்னை மரங்களை அதிகாரிகள் சரியாக் கணக்கெடுக்கலை. தலைப்பகுதி முழுவதுமாக ஒடிஞ்சுவிழுந்த மரங்களைக் கணக்குல சேர்க்கலை. கணக்கெடுத்த மரத்துக்கும் முழுமையான நிவாரணம் வந்துசேரலை. கருகின பயிர்களுக்கு இழப்பீடு வழங்கலை. புயலடிச்சு ஒரு மாசத்துக்கு அப்புறம்தான், அமைச்சர் விஜயபாஸ்கர் எங்கள் பகுதியில ஒருவாரம் சுத்திவந்தார். சில கோரிக்கைகளை நிறைவேற்றித் தர்றதா சொன்னார். ரெண்டு மாசத்துக்கு மேலாகுது. இதுவரை அவரைக் காணலை. வாக்குறுதியும் நிறைவேற்றலை. உள்ளூர் பிரமுகர்களோட சிபாரிசுல, பாதிக்கப்படாதவங்களுக்கு நிவாரண உதவிகள் கிடைச்சிருக்கு. அரசாங்கம் நியாயமாக நடந்துகொள்ள வேணாமா?” என்று ஆவேசப்பட்டார்.

புயலில் பெரிதும் பாதிக்கப்பட்ட புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த குணவதி, “பொங்கப் பண்டிகையை விடுங்க... இங்க தினமும் சோறு பொங்கவே வழியில்லை. வாரத்துல ரெண்டொரு நாள் பட்டினி கிடக்க வேண்டியிருக்கு. எப்பவுமே எங்க வீட்டுல ஒரு மூட்டைக்கும் குறையாம அரிசி இருக்கும். வீட்டுக்கு யார் வந்தாலும் தாராளமா பொங்கிப்போடுவோம். ஆனா, இன்னைக்கு கூலி வேலைக்குப் போய், சாயந்திரம் கூலி கைக்கு வந்தாதான் காசு. அதை வெச்சு கால் கிலோ... அரை கிலோ அரிசி வாங்கி பொங்குறோம். புள்ளைங்க அரை வயிறு சாப்பிட்டு, பசியில எங்களைப் பார்க்கும்போது தாங்க முடியலை...” என்றபோது குபுக்கென அழுதுவிட்டார்.

விடுதலைச் சிறுத்தைகள் தொழிலாளர் அணியின் மாவட்ட அமைப்பாளர் செந்தில், “மருதூர் வடக்கு மற்றும் தெற்கு, ஆயக்காரன்புலம் ஆகிய பகுதிகள் புயலால் முற்றிலும் பாதிப்படைந்துள்ளன. ஓர் ஓலைக் குடிசை கட்டவேண்டுமென்றால், ஐம்பதாயிரம் ரூபாய் தேவை. ஆனால், ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்தனர். குடிசைவாசிகள் பெரும்பாலும் கோயில் மற்றும் அரசுப் புறம்போக்கு நிலங்களில்தான் தங்கிவருகிறார்கள். அவர்களுக்குப் புதிதாக வீடு கட்டித்தர வேண்டுமென்றால், பட்டா வேண்டும் என்கிறார்கள். புயலடித்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொழிலாளர்களுக்கு எந்த ஒரு வேலைவாய்ப்பும் இல்லை. வருமானமும் இல்லை. இதற்கு அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை” என்றார் வேதனையுடன்.

“தை பிறந்தது... வழி பிறக்கவில்லை!”

நாகை மாவட்டத்தில் கஜா புயல் நிவாரணப் பணிகளுக்கான சிறப்பு அதிகாரி பிரதீப் குமாரிடம் பேசினோம். “முடிந்தவரை வேகமாகச் செயல்பட்டுவருகிறோம். வீடுகளின் சேதத்துக்கு ஏற்பப் பாதிக்கப்பட்டவர் களுக்கு நிவாரணம் வழங்கப் பட்டுள்ளது. இந்தப் பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. அரசுப் புறம்போக்கு, கோயில் மற்றும் மடத்துக்குச் சொந்தமான இடங்களில் குடியிருப்பவர்களுக்குச் சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து இடங்களை வாங்கி, அனைவருக்கும் பட்டா வழங்க ஏற்பாடு செய்துவருகிறோம். இன்னும் சில தினங்களில் அனைவருக்கும் பட்டா வழங்கிய பிறகு, மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 300 சதுர அடியில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். இதில், பயனாளிகள் ரூ.90,000 செலுத்தினால், அரசுத் தரப்பிலிருந்து ரூ. இரண்டு லட்சத்து 10 ஆயிரம் செலுத்தி ரூ.மூன்று லட்சம் மதிப்பில் வீடு கட்டித் தரப்படும். தென்னை மரங்கள் முறிந்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இந்த மாத இறுதிக்குள் தென்னங்கன்று வழங்கப்படும். மக்கள் துயர் துடைக்கும் பணியில் அரசு முழுமையாக ஈடுபட்டு வருகிறது” என்றார்.

அரசுத் தரப்பு இப்படிக் கூறினாலும், நிவாரணம் கிடைக்காத மக்கள் போராட்டம் நடத்துவது ஆங்காங்கே தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. வாழ வழியற்ற, வசிக்க வீடற்ற நிலையில் நிவாரணம் கேட்டு வீதிகளில் நிற்கும் மக்களிடம், ‘90,000 ரூபாய் கொடுத்தால் வீடுகட்ட உதவி செய்வோம்’ என்று கேட்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை. புயல் ஓய்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. இன்னும் மக்களின் துயரம் தீரவில்லை. தமிழக அரசின் மிகப்பெரிய தோல்வி இது!

- கு.ராமகிருஷ்ணன், மு.இராகவன், கே.குணசீலன், இரா.மணிமாறன்
படங்கள்: ம.அரவிந்த், ஆர்.வெங்கடேஷ், பா.பிரசன்னா,    ர.கண்ணன்