Published:Updated:

``புறக்கணிப்புகளே என் கிரீடம்!'' - ரம்யா கிறிஸ்டினா

``புறக்கணிப்புகளே என் கிரீடம்!'' - ரம்யா கிறிஸ்டினா
``புறக்கணிப்புகளே என் கிரீடம்!'' - ரம்யா கிறிஸ்டினா

``அழகுக்கு இந்தச் சமூகம் கொடுத்திருக்கிற இலக்கணங்கள் ரொம்பவும் அருவருப்பானது. உங்களுடைய இயல்பையும், சுய நேசிப்பையும் எங்காவது அடகு வெச்சுட்டு உங்களுக்குக் கிடைக்கிற அன்பு பேரம் இனிமே வேண்டாம்” - எனத் தொடங்குகிறார் இன்னொரு மேடைப்பேச்சை..

``அந்தப் பொண்ணுகூட மட்டும் ஃப்ரெண்டாக வேண்டாம், தொடாம உக்காந்துக்கோ... சரியா?” - தன் சக வகுப்பு மாணவர்களின் பெற்றோர், ரம்யா கிறிஸ்டினாவின் முகத்துக்கு முன்னர் சொல்லிவிட்டுச் சென்ற வார்த்தைகள்தான், அவருக்கு இன்னும்கூட வலித்துக்கொண்டிருக்கிறது. குழந்தைப் பருவம் என்ற ஒன்று முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டு, சராசரி வாழ்வுக்கே போராடியவர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? புறக்கணித்ததற்கான காரணத்தையே தனது கிரீடமாக மாற்றிக்கொண்ட ரம்யாவின் தன்னம்பிக்கையிலும், அவர் வரையும் ஓவியங்களிலும் அத்தனை வண்ணம். 

இரண்டு குழந்தைகளும் பெண்களாய்ப் பிறந்துவிட்டதால் வீட்டைவிட்டு வெளியேறி, வேறு வாழ்க்கைக்குப் போய்விட்ட அப்பாவைப் பற்றிப் பேசுவதற்கு அவரிடம் எதுவுமில்லை. ``அம்மாவும் அப்பாவும் நெருங்கிய சொந்தக்காரங்க. நானும் எனக்குப் பிறகு ஒரு தங்கையும்தான். 5 வயசாகும்போது, கொஞ்சமா காரமோ, அசைவ உணவோ சாப்பிட்டாகூட கொப்புளங்கள் வரத் தொடங்கிடும். அலர்ஜிதான் காரணமா இருக்கும்னு நினைச்சு ஹாஸ்பிட்டல் போனேன். அலர்ஜிக்காகக் கொடுக்கப்பட்ட மருந்துகள் ஓவர் டோஸா இருந்ததால வந்ததுதான் இந்த மெலனின் குறைபாடு. இது மெலனின் குறைபாடுதான்னு நான் எத்தனை பேருக்குச் சொல்லிக்கிட்டே இருக்க முடியும்? பஸ்லயோ டிரெயின்லயோ போனா, எனக்குத் தொழுநோய் இருக்குன்னு எல்லாரும் விலகுவாங்க. பெண்கள் தங்களோட துணிகளை வெச்சு முழுசா கவர் பண்ணிட்டுத்தான் என் பக்கத்துல உட்காருவாங்க” என்கிறார் ரம்யா.

``மருத்துவத் தவறுதான் இந்த மெலனின் குறைபாட்டுக்குக் காரணம்னு புரியவெச்சு ஸ்கூல்ல சேர்ந்ததே ஒரு போராட்டம்தான். என்னை அணுகத் தெரியாத, கேலிப்பொருளாப் பார்த்த ஆசிரியர்களும் மாணவர்களும்தான் எனக்குப் பெரிய சவால். ஸ்கூலுக்குப் போய்ப் படிச்சேனோ இல்லையோ, ஒருத்தரை எப்படியெல்லாம் காயப்படுத்த முடியுமோ அது அத்தனையும் அனுபவச்சிருக்கேன். எல்லாவிதமான நெகட்டிவ் வார்த்தைகளையும் கேட்டிருக்கேன்” என்கிறார் ரம்யா.

இவருக்குப் பள்ளி நண்பர்கள், தோழிகள் என எவரும் இல்லை. 5 வயதில் தொடங்கி 20 வயது வரை விதவிதமான மருந்துகளை எடுத்துக்கொண்டிருந்தவர், தனது இயல்பே அழகு என ஏற்றுக்கொண்ட அந்தக் கணம்தான், வாழ்க்கையை மாற்றியிருக்கிறது ரம்யாவுக்கு. `மாப்பிள்ளை வீட்டுக்காரங்க முன்னாடி ரம்யா வர வேண்டாம். அதனால, என் மகளோட கல்யாணத்துல ஏதாவது பிரச்னை வரலாம்’ என்று சொன்ன பெரியப்பாவின் வார்த்தைகளால் உடைந்திருக்கிறார்கள் ரம்யாவும் அவரது அம்மாவும். அன்று ரம்யா தனக்காக எடுத்துக்கொண்ட சிகிச்சைதான் அவருடைய வைராக்கியம். மேலும் மேலும் துன்புறுத்தும் இந்த நிற மாற்றத்துக்கான மாத்திரைகளை நிறுத்திக்கொண்டு, தன்னைப்போலவே மெலனின் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பலருக்காக மேடைகள் ஏறிப் பேசிக்கொண்டிருக்கும் ரம்யா, இன்று பலருக்கும் நிவாரணி. 

தன்னம்பிக்கை பேச்சாளர், ஓவியர், மாடல், உதவி இயக்குநர் என இப்போது பல தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் ரம்யாவிடம், பார்ப்பவர்கள் எல்லோரும் கொஞ்சம் எனர்ஜியை எடுத்துக்கொள்ளலாம். ``வேலை இல்லாமல், கனவுகள் இல்லாமல் இருக்கும்போது மட்டும்தான் அடுத்தவங்களைப் பற்றி யோசிக்கிறேன். இந்த உழைப்பு நல்லாயிருக்கு. நீங்க வேணாப் பாருங்களேன், கொஞ்ச நாளைக்கு அப்புறம் ரொம்பவும் விரும்பப்படுற மாடலா நான் மாறியிருப்பேன்” என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் ரம்யா. 

தொனித்த அத்தனை நம்பிக்கை வார்த்தைகளில், அவருக்கு அவர் மீதிருக்கும் அத்தனை ஆதூரத்தில் கொஞ்சம்கூட தயக்கங்களே இல்லை. ``மாத்திரைகளால் தலைமுடி உதிர்ந்தபோது எலிவால் மாதிரி இருக்கு என்ற கிண்டல் பேச்சும், தொழு நோயாளி என்ற புறக்கணிப்பும்தான் நான் தினமும் சந்தித்த யதார்த்தம். ஒரு டீச்சர் என்னிடம் தண்ணீர் வாங்கிக் குடித்தால் பாவம் என்றார். ஒன்பதாம் வகுப்புப் படித்தபோது கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றேன். பரிசு வாங்குவதற்காகச் சென்றபோது `உனக்கெல்லாம் பரிசு தர முடியாது!' என அவர்கள் சொன்னபோது, அந்த பிரேயர் ஹாலில் நின்றிருந்தவர்கள் மூன்றாயிரம் பேர். இவ்வளவும் கடந்த பிறகும் கண்ணாடியை வைத்துப் பார்க்கிறேன். நான் பேரழகிதான்” என்கிறார். 

பாலினப் பாகுபாடுகளை, சாதி, மத, வர்க்க பேதத்தைக் கேள்வி கேட்கும் எந்த நிகழ்விலும், கூட்டத்தில் தனியாக, இன்னும் அழகாகத் தெரிகிறார் ரம்யா. 

``அழகுக்கு இந்தச் சமூகம் கொடுத்திருக்கிற இலக்கணங்கள் ரொம்பவும் அருவருப்பானது. உங்களுடைய இயல்பையும், சுய நேசிப்பையும் எங்கேயாவது அடகு வைத்துவிட்டு உங்களுக்குக் கிடைக்கிற அன்பு இனிமே வேண்டாம்” - எனத் தொடங்குகிறார் இன்னொரு மேடைப் பேச்சை.

அடுத்த கட்டுரைக்கு