நீதிமன்றங்களையும் அலி சன்ஸையும் பிரித்துப் பார்க்க முடியாது. சென்னை பாரிமுனையில் உயர் நீதிமன்றத்தை ஒட்டி அமைந்து உள்ள 'அலி சன்ஸ்’ கோட் கடை, முக்கால் நூற்றாண்டு வரலாறு கொண்டது. இந்தியாவின் உயர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் பலர், அலி சன்ஸின் வாடிக்கையாளர்களே. நான்காவது தலைமுறையாக அலி சன்ஸ்-ஐ நடத்திவரும் ஷாஜித் அலியைச் சந்தித்தேன். இவரும் சட்டப் படிப்பு முடித்தவரே.

கோர்ட்டுக்கு கோட்!
##~##
''கோட், அங்கி செய்யும் நுணுக்கத்தை ஆங்கிலேயர்களிடம் இருந்து கற்ற எங்கள் தாத்தா தொடங்கிய கடை இது. பிறகு என் அப்பா அப்பாஸ் அலியின் நேர்த்தியான உழைப்பால் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் வாடிக்கையாளர்கள் ஆனாங்க. சென்னை உயர் நீதிமன்ற அனைத்து நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு நாங்களே கோட், அதன் மேல் அணியும் கவுனையும் தைத்துத் தருகிறோம். இதைத் தவிர 30 ஆண்டுகளாக கர்நாடக மாநில நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு எங்கள் கடையில் இருந்துதான் கோட், கவுன்களை அனுப்புகிறோம். கேரள, ஆந்திர மாநில நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பலரும் எங்களின் வாடிக்கையாளர்களே. சிங்கப்பூர், மலேசிய நீதித் துறையிலும் இந்திய டைப் கோட், கவுன் இருப்பதால் அங்கும் எங்கள் வாடிக்கையாளர்கள் உள்ளனர். மாவட்ட நீதிபதிகள் தொடங்கி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வரை கோட், அங்கி பொதுவான வடிவம் உடையவை. வழக்கறிஞர்களுக்கு இந்த வடிவம் மாறுபடும். சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒய்.எஸ்.இக்பால், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் என, எங்கள் வி.ஐ.பி. வாடிக்கையாளர்கள் பட்டியல் நீளும். தமிழகத்தைச் சேர்ந்த வெளிமாநில உயர் நீதிமன்ற நீதிபதிகளும் எங்கள் வாடிக்கையாளர்களே. முன்பு எல்லாம் வழக்கறிஞர்கள், 'இது ராசியான கோட்’ எனப் பழைய கோட்டை மாற்றவே மாட்டார்கள். ஆனால், இப்போது அந்த நம்பிக்கைகள் குறைந்து இருப்பதும், வழக்கறிஞர் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் எங்கள் தொழில் பெருக முக்கியக் காரணம். தரம் உள்ள துணி வகை, சிக்கல் இன்றி அணியக்கூடிய வடிவமைப்பே எங்களின் வெற்றிக்கான முக்கியக் காரணம்'' எனச் சிரிக்கிறார் ஷாஜித் அலி.

பொ.ச.கீதன்,
படம்: அ.ரஞ்சித்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு