தொடர்கள்
Published:Updated:

நான் என்ன செய்கிறேன்?

நான் என்ன செய்கிறேன்?
பிரீமியம் ஸ்டோரி
News
நான் என்ன செய்கிறேன்?

நான் என்ன செய்கிறேன்?

ருடம் ஞாபகமில்லை. நான் சிறுவனாக இருந்தபோது நடந்த சம்பவம். என்னுடைய இரண்டாவது அண்ணர் கே.பி. சுந்தராம்பாள் நடித்த படம் ஒன்றை வீட்டுக்குத் தெரியாமல் போய் பார்த்துவிட்டுத் திரும்பினார். ‘பக்த நந்தனார்’ என்று நினைக்கிறேன். அதிலே கே.பி.எஸ் 30 பாடல்கள் பாடியிருக்கிறார்.

நான் என்ன செய்கிறேன்?

அண்ணர் 15 வயது துணிச்சலில் ஏதாவது செய்வாரே ஒழிய, அவருக்குக் கள்ளம் செய்யத் தெரியாது. கறுப்புத் தலைமயிர் சரிந்து நெற்றியோடு ஒட்டிக்கிடக்க,  கைகளை நெஞ்சுக்குக் கிட்ட தூக்கிப் பிடித்தபடி நடப்பார். முதல் இரண்டு நிமிடத்தில் பிடிபட்டுப்போவார்.

அன்று நல்ல அடி கிடைத்தது. அழும்போது மூச்சை உள்ளே இழுத்துவிடுவார். அதை மீட்டு எடுக்கும்போது இன்னொரு அடி விழும். அன்று இரவு அழுதபடி, கைவிளக்கைக் கொளுத்திவைத்து  நெடுநேரம் ஏதோ எழுதினார். அடுத்த நாள் காலை அவர் கே.பி.சுந்தராம்பாளுக்கு நீண்ட கடிதம் ஒன்று எழுதியிருக்கிறார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டிலே போட்டி போட்டுக்கொண்டு அந்தக் கடிதத்தைப் படித்து கேலி செய்தார்கள். அவர் கே.பி.எஸ்-ன் நடிப்பையும் பாடல்களையும் அப்படித் தலைகால் தெரியாமல்  பாராட்டினார். இசைராணி, இசைக்குயில், இசை சக்கரவர்த்தினி என்று பலவிதமான பட்டங்களைச் சூட்டியிருந்தார். ‘உங்கள் இசை என் உடம்பினுள் புகுந்து என் ஆத்மாவுடன் கலந்து என்னைப் பரவசத்தின் உச்சிக்கே கொண்டுபோனது’ என்பதுபோல எழுதி முடித்திருந்தார். பரிதாபம் என்னவென்றால், அடி வாங்கி, இரண்டு மணி நேரம் செலவழித்து எழுதிய கடிதம் தபால்பெட்டியினுள் போடப்படவே இல்லை.

நான் என்ன செய்கிறேன்?

அண்ணர் சமீபத்தில் இறந்துபோனார். எத்தனை புதிய பாடகர்கள் வந்தாலும் போனாலும் சுந்தராம்பாள் மேல் அவர் வைத்த பற்று மாறவில்லை. சில நாள்களுக்கு முன்னர் கே.பி.சுந்தராம்பாளுடைய வரலாறு புத்தகமாக வந்திருக்கிறது என அறிந்து, ஒரு நல்ல நண்பர் மூலம் அதைத் தருவித்துப் படித்தேன். புத்தகத்தை வாசித்தபோது பல இடங்களில் என் அண்ணரை நினைத்துக்கொண்டேன். அவருக்காகவே இது.

கே.பி.எஸ் ஏழைக்குடும்பத்தில் பிறந்தார். சாப்பாட்டுக்கே வழியில்லை. ஆனால், இசையில் அளவுகடந்த ஆர்வம். யாராவது பாடினால் அதை எளிதில் வாங்கி அப்படியே திருப்பிப் பாடும் திறமை அவருக்குச் சிறு வயதிலேயே வந்துவிட்டது. தாயாருக்கு மூன்று பிள்ளைகள். அதில் இவர்தான் மூத்தவர். வீட்டிலே சாப்பிட உணவில்லை. ஒருநாள் தாயார் மூன்று குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு ஆற்றுக்குப்போனார். குழந்தை கேட்டாள். “ஏன் அம்மா போகிறோம். ஆற்றில் குளிக்கவா?” தாயார் உடைந்துபோய் உண்மையைச் சொன்னார். “உங்களை ஆற்றிலே தள்ளி நானும் குதித்துச் சாகப்போகிறேன்.” அம்மாவைத் தடுத்துநிறுத்தி வீட்டுக்குக் கூட்டிவந்துவிட்டார் சிறுமி சுந்தராம்பாள்.

சிறுமியின் பாடும் திறமையைக் கேள்விப்பட்ட ஜமீன்தார், அவரை அழைத்து ஒரு நாள் பாடச் சொன்னார்.  கந்தல் பாவாடை, வாரிச் சொருகிய கூந்தலுடன் சிறுமி, ஜமீன்தார் முன் நின்று பாடினாள். அவருக்கு அளவில்லாத மகிழ்ச்சி.  ஒன்பது சவரன்களைச் சபையோர் முன்னிலையில் வழங்கியதுடன் புதுப்பாவாடை, நகைகளையும் பரிசாக அளித்தார். ஜமீன்தாரிடம் பரிசு பெற்றதால் கிராமத்தில் அவருடைய மதிப்பு உயர்ந்தது. நாடகத்தில் நடிக்க அழைப்பு வந்தது. ‘நல்லதங்காள்’ நாடகத்தில் மூத்த பிள்ளையான ஞானசேகரன் வேடத்தில் நடித்தார். ‘பசிக்குதே, வயிறு பசிக்குதே’ என்ற பாட்டைப் பாடியவுடன் ரசிகர்களின் கைதட்டல் கிளம்பும்; உற்சாகமடைவார்.  அதைத் தொடர்ந்து, ‘கண்டி ராஜா’ நாடகத்தில் உரலில் இடிபடும் குழந்தையின் பாத்திரத்தை ஏற்று நடித்து பிரபல்யம் அடைந்தார். நாடகத்தில் கிடைத்த புகழால் அவரிடம் நாடக ஆசை ஒட்டிக்கொண்டு விட்டது.

நாயுடு என்பவர் ஐந்து ரூபாய் பணத்தை அவர் கையிலே ரகசியமாகக் கொடுத்து, நாடகத்தில் நடிக்க சென்னைக்கு வந்துவிடும்படி ஆசை காட்டினார். சிறுமிக்கு எட்டு வயதுகூட ஆகவில்லை. ஆனால், அசாத்திய துணிச்சல்காரி. ஒருவருக்கும் சொல்லாமல் தனியாக ரயில் ஏறிவிட்டார். நாயுடு வீட்டில் சம்பளம் இல்லாத வேலைக்காரியாகச் சிறுமியின் வாழ்க்கை மாறியது.  நாயுடு வேடம்கட்டும் நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிட்டி, அதனால் புகழ் கிடைத்தது; நாயுடுவுக்கு பணமும் சேர்ந்தது. ஒரு வருடம் இப்படி ஓடிவிட்டது. மகள் இறந்துபோய்விட்டார் என்றே தாயார் எண்ணியிருந்தார். அவர் உயிருடன் இருக்கும் செய்தி கிடைத்ததும் தாயார் வந்து அவரை அழைத்துப்போனார்.

சிறுமி சுந்தராம்பாளுக்கு 9 வயது நடந்தபோது, அவர் கொழும்புக்குப் பயணப்பட்டார். சம்பளம் மாதம் 40 ரூபாய். கொழும்பு, யாழ்ப்பாணம், திரிகோணமலை, மட்டக்களப்பு, கண்டி என்று பல இடங்களிலும் நாடகம் நடந்தது. இவர் ஓர் ஊருக்குப் போகும் முன்னரே இவரின் புகழ் அங்கே போய்விடும். பல நாடகங்களில் நடித்தார். அதேசமயம் சிறுவன் கிட்டப்பாவும் இலங்கையில் நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தான். ஆனால், இருவரும் சந்தித்ததே கிடையாது. நல்ல அனுபவம்பெற்ற நாடக நடிகையாக கே.பி.எஸ் இந்தியா திரும்பினார்.

நான் என்ன செய்கிறேன்?

சுந்தராம்பாள் அதுமுதல் தமிழகத்தின் முன்னணி நாடகக் குழுக்கள் பலவற்றிலும் நடிக்கத் தொடங்கினார். ‘வள்ளி திருமணம்’,  ‘நந்தனார்’, ‘கோவலன்’, ‘பவளக்கொடி’ என்று பல நாடகங்கள். 15 வயதுக்குள்ளாகவே ஸ்திரீபார்ட்டுக்கு வந்துவிட்டார். அதாவது கதாநாயகி அந்தஸ்து. அந்தக் காலங்களில் ஸ்பெஷல் நாடகங்கள் போடுவார்கள். வெவ்வேறு நடிகர்கள் ஒரு நாடகத்துக்காக ஒன்றுசேர்ந்து நடிப்பது; நாடகம் முடிந்தவுடன் கலைந்துவிடுவது. எல்லா நடிகர்களுக்கும் அருணாசலக் கவிராயர், கோபால கிருஷ்ண பாரதியார், சங்கரதாஸ் சுவாமிகள், உடுமலை நாராயணகவி, பம்மல் சம்பந்தனார் போன்றவர்களின் நாடக வசனங்கள் பாடம் என்பதால், ஒத்திகை கிடையாது. கூத்து ஆடுபவர்கள் பொதுஇடங்களில் சில காட்சிகளை நடித்துக்காட்டி நாடகத்தைப் பார்க்க வரும்படி விளம்பரம் செய்வார்கள்.

இரண்டாம் தடவையாக கே.பி.எஸ், கொழும்பு நாடகத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். மாதச் சம்பளம்  1,200 ரூபாய். நாலரை கட்டை சுருதியில் இவர் அனாயாசமாகப் பாட, சபையோர் மெய்மறந்து கேட்பர். இவருக்குச் சமமாகப் பாடக்கூடிய ராஜபார்ட் கிடைக்கவில்லை. எங்கேயோ தேடி ராஜபார்ட்டை கொண்டுவந்தால், சபையோர் ‘உள்ளே போ’ என்று கத்துவார்கள். பல ராஜபார்ட்டுகள் வருவதும் பாதியில் ஓடுவதும் வழக்கமாகிவிட்டது. இந்தச் சமயத்தில்தான் கிட்டப்பாவை ஒப்பந்தம் செய்தார்கள்.  கிட்டப்பாவிடம் கொழும்பு போய் சுந்தராம்பாளிடம் மாட்டிக்கொள்ள வேண்டாம், அவமானமாகிவிடும் எனச் சிலர் ஆலோசனை கூறினார்கள்.  ‘சுந்தராம்பாளின் ராச்சியம் முடிந்தது’ எனச் சிலர் சுந்தராம்பாள் காதுபடவே பேசிக்கொண்டார்கள்.

நாடகம் நடக்கும் முன்னரே கிட்டப்பா, சுந்தராம்பாளைச் சந்திக்க விரும்பினார். சுந்தராம்பாள் கட்டிலில் படுத்திருந்தார். அவருடைய தாயார் வந்து, “ராஜா மாதிரி ஒருத்தர் உன்னைப் பார்க்க வந்திருக்கிறார்” என்று சொன்னார். நல்ல ‘முதல் அபிப்பிராய’த்தை இரண்டாவது தடவை சந்திக்கும்போது உண்டாக்க முடியாது. அவசர அவசரமாக சுந்தராம்பாள்  தயாராகும் முன்னரே கிட்டப்பா உள்ளே  நுழைந்துவிட்டார். அவர் கம்பீரமாக ஒரு கந்தர்வன்போலவே இருந்தார். நாடகத்துக்கு ஒத்திக்கை வேண்டும் என்றார் கிட்டப்பா. சுந்தராம்பாள் மறுத்துவிட்டார். ‘நீ ஏமாந்துபோவாய்’ என்றார் அவர்.  ‘பின்னாலே பார்ப்போம்’ என்று சுந்தராம்பாளும் ராங்கியாகப் பதில் கூறினார். எல்லோருக்குமே நாடக வசனங்கள் மனப்பாடம் என்பதால், அதில் ஒருவிதப் பிரச்னையும் சுந்தராம்பாளுக்குத் தெரியவில்லை. ஆனால், கிட்டப்பாவின் முகத்தை அந்தச் சந்திப்பில் தான் விழுங்கிக்கொண்டிருந்ததாகப் பின்னாள் பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.

கிடப்பாவும் சுந்தராம்பாளும் நடித்த  ‘வள்ளி திருமணம்’ முதன்முதல் கொழும்பு மேடையில் அரங்கேறியது. ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கவில்லை. குரல் இணைந்தது; ரசிகர்கள் பாராட்டினார்கள். அப்படி ஒரு சோடி அமைந்தது அதிர்ஷ்டம் எனப் புகழ்ந்தார்கள். இருவரும் இந்தியா திரும்பிய பின்னரும் நாடகங்களில் சோடியாக நடிக்கத் தொடங்கினர். அந்தக் காலத்தில் ஆண், பெண் வேடம்போடுவதும் பெண், ஆண் வேடம் இடுவதும் சர்வ சாதாரணம். காரைக்குடியில் ‘வள்ளித் திருமணம்’ நாடகம் போட்டார்கள். முதல் வாரம் கிட்டப்பா வேலனாகவும் சுந்தராம்பாள் வள்ளியாகவும் நடித்தனர். அடுத்த வாரம் சுந்தராம்பாள் வேலனாகவும் கிட்டப்பா வள்ளியாகவும் நடித்தார்கள். ரசிகர்கள் பாடு எவ்வளவு கொண்டாட்டமாக இருந்திருக்கும்.

நான் என்ன செய்கிறேன்?

சுந்தராம்பாள் நாவல்பழம்போன்ற கரிய நிறம். அந்த நிறத்துக்கே உரிய தனிப்பட்ட அழகு. கிட்டப்பாவோ சிவப்பு. நந்தனார் நாடகத்தில் இருவரும் நடிக்கவேண்டிய சந்தர்ப்பம் அமைந்தது. முதன்முதலாக வேதியராக நடிப்பதற்கு சுந்தராம்பாளை அணுகினார்கள். அவரும் சம்மதித்தார். அந்தப் பாத்திரத்துக்குரிய பாடலை சொல்லிக் கொடுப்பதற்கு கிட்டப்பா அடிக்கடி சுந்தராம்பாள் வீட்டுக்கு வந்துபோவார். ஒரு நாள் பாடம் நடந்தபோது, கிட்டப்பா முகத்தில் கள்ளம் இருந்ததை சுந்தராம்பாள் கவனித்துவிட்டார். அவர் ஒன்றுமே பேசாவிட்டாலும்  சுந்தராம்பாளுக்குப் புரிந்துவிட்டது; காதல் வயப்பட்டார்கள். கடைசி வரை கைவிடமாட்டார் என உறுதிமொழி  பெற்ற பின்னர், திருமணம் எளிய முறையில் நடந்தது. கிட்டப்பா ஏற்கெனவே மணமானவர். ஜென்மாந்திரத் தொடர்பு என்று தங்கள் திருமணத்தை சுந்தராம்பாள் வர்ணிப்பார்.

40,000 ரூபாய் ஒப்பந்தத்தில் பர்மாவில் நாடகம்போட அழைத்தார்கள். சுந்தராம்பாள் தன்னுடன் துணை நடிகையான ராதாவையும் அழைத்துச் சென்றார். கப்பலைவிட்டு இறங்கியதும் சிவப்பு நிறமான ராதாவுக்கு மாலை அணிவித்து அவரைத் தடபுடலாக வரவேற்றார்கள். கறுப்பு நிறப் பெண்தான் சுந்தராம்பாள் எனத் தெரிந்ததும் ஒப்பந்தக்காரர் இடிவிழுந்ததுபோல உடைந்துபோய்விட்டார். ஆனால், நாடகம் பெரும் வெற்றிபெற்றது. சுந்தராம்பாளையும்  கிட்டப்பாவையும் சாரட் வண்டியில் உட்கார்த்தி ரங்கூன் தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் சென்று தங்கள் பேராதரவை ரங்கூன் மக்கள் காட்டினார்கள்.

அந்தக் காலத்து நாடக நடிகர்களுக்குச் சகல பாத்திர வசனங்களும் பாடல்களும் பாடம். யாராவது வராவிட்டால் இன்னொருவரை உடனேயே தயாராகி நடிக்கும்படி செய்ய முடியும். அவரவர் தங்கள் திறமையை மக்களுக்குக் காட்டுவதிலே குறியாக இருப்பார்கள். போட்டாபோட்டியில் மற்ற நடிகரை மட்டம்தட்ட சமயம் பார்ப்பதும் நடக்கும். ராஜாபார்ட்டும் ஸ்திரீபார்ட்டும் போட்டிபோடும். ஆர்மோனியக்காரருக்கும் நாடக நடிகருக்குமிடையிலும் சிலசமயம் போட்டி வந்துவிடும். சபையோரும் உற்சாகப்படுத்துவார்கள். யாராவது ஒன்ஸ்மோர் கேட்டால், அதே பாடலை இன்னொருமுறை பாடவேண்டும். ஒருசமயம், சுந்தராம்பாள் ‘தூக்குத்தூக்கி’ நாடகத்தில் சேட் வேடத்தில் வந்த கிட்டப்பாவைப் பார்த்து, “என்ன சேட், நீங்கள் தமிழில் இவ்வளவு சுத்தமாகப் பேசுகிறீர்களே?” என்றார். இதை எதிர்பார்க்காத கிட்டப்பா உடனே பதில் கூறிச் சமாளித்தார்:   “உன்னோடு இவ்வளவு நெருங்கி சம்பந்தம் வைத்துக்கொண்டதால் ஏற்பட்ட பலன் இது. என் பாஷையைக்கூட மறக்கும்படியாகப் போய்விட்டது.”

சுந்தராம்பாளுக்கு காங்கிரஸ் கொள்கையில் பிடிப்பு ஏற்பட்டு நூல் நூற்பதை வழக்கமாக வைத்திருந்தார். வெளிநாட்டுத் துணிகளைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டு, கதர் உடுக்க ஆரம்பித்தார். உப்புச் சத்தியாக்கிரகத்தில் காந்திஜி கைதானபோது,  ‘காந்தியோ பரம ஏழை’ என்ற பாடலை மதுரகவி பாஸ்கரதாஸ் இயற்றினார்.  சுந்தராம்பாள் குரலில் அது இசைத்தட்டாக வெளிவந்து நாடெங்கும் பரவியது. மோதிலால் நேரு இறந்தபோது, அதற்கும் ஓர் அனுதாபப் பாடலை சுந்தராம்பாள் பாடினார். ‘பண்டித மோதிலால் நேருவைப் பறிகொடுத்தோமே’ என்ற இசைத்தட்டு என்றுமில்லாத அளவு விற்பனை கண்டது. இலங்கையில் நான் வசித்த கிராமத்து தேநீர்க்கடையில் திருப்பித் திருப்பிப் போடப்பட்டது. என்னுடைய அண்ணர் அங்கேயே பழியாகக் கிடந்து கேட்டார். தமிழ்நாட்டில் அதிக அளவில் விற்ற முதல் இசைத்தட்டு என்று இதைச் சொல்வார்கள். இந்தத் துக்கப்பாட்டை எங்களூர் கல்யாண வீடுகளில்கூட அந்தக் காலத்தில் போட்டுக் கேட்டார்கள்.

நான் என்ன செய்கிறேன்?

கிட்டப்பா ஏற்கெனவே மணமானவர். மெள்ள மெள்ள தம்பதிகளுக்கிடையில்  விரிசல் ஏற்படத் தொடங்கியது. சுந்தராம்பாள் கர்ப்பமாக இருந்தபோது, கிட்டப்பா தன் வளைகாப்புக்கு வர வேண்டும் என அவர் பெரிதும் எதிர்பார்த்தார். கிட்டப்பா வரவே இல்லை. கடிதத்தில் ‘வளைகாப்பு இடவேண்டும் என்று சொன்னேன். தங்கள் அண்ணாவிடமும் சொன்னேன். ஒருவரும் கவனிக்கவில்லை. என்னைப் பற்றிக் கவனிக்க நான் ஏதாவது கொடுத்து வைத்திருக்கிறேனா?’ என்று சுந்தராம்பாள் உருக்கமாக எழுதுகிறார். இன்னோர்  இடத்தில் ‘நீங்கள் இல்லாததால் ஒவ்வொருவரும் நீ என்ன இருந்தாலும் நாடகக்காரிதானே. அவர் உன்னை விட்டுப் போய்விட்டாரே. நீயேன் அவரையே நினைத்திருக்க வேண்டும்’ இப்படியெல்லாம் கேட்கிறார்கள் என்று எழுதினார்.

வளைகாப்புக்கு கிட்டப்பா வராத துயரத்தை சுந்தராம்பாளினால் ஆற்றவே முடியவில்லை. ஆனால், அவருக்கு  ஆண் குழந்தை பிறந்ததும் கிட்டப்பா ஓடோடி வந்து பார்த்தார். குழந்தை சில மாதங்களில் இறந்துபோனது. ஆறு மாதங்கள் நடிக்காமல் இருந்துவிட்டு, மறுபடியும் சுந்தராம்பாள் நடிக்கத் தொடங்கினார். கிட்டப்பா, சுந்தராம்பாள் இல்லாமல் வேறு நடிகைகளை அமர்த்தி நாடகம் நடத்த ஆரம்பித்தார். சுந்தராம்பாளும் போட்டியாக வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்தார். கிட்டப்பா குடிப்பழக்கத்துக்கு ஆளாகி, தீராத வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்றார். ஒரு துணியால் முகத்தை மூடிக்கொண்டு கிட்டப்பா இறந்துபோனபோது, அந்த  துணியை அகற்றாமல் அவரை அப்படியே தகனம் செய்தார்கள்.

நான் என்ன செய்கிறேன்?

திருமணம் செய்து ஏழே ஆண்டுகளில் விதவையானபோது, சுந்தராம்பாளுக்கு வயது 25 தான். அந்த இளம் வயதிலேயே வெள்ளை சேலையுடுத்தி விதவைகோலம் பூண்டார். நகை அணிவதில்லை; பிற ஆடவருடன் நடிப்பதில்லை என முடிவெடுத்தார். சுந்தராம்பாளின் தேசபக்தியை அறிந்த காந்திஜி, அவரை  சுதந்திரத்துக்காகப் பாடும்படி சொன்னபோது, ‘கணவரைப் பிரிந்த சோகத்தில் இருக்கிறேன். நான் வெளியே போவதில்லை’ என்றார். காந்தி சொன்னார்:  “நீங்கள் வீட்டிலேயே இருப்பதால் சாவித்திரி போல உங்கள் கணவர் உயிரை மீட்டுவிடுவீர்களா?” அந்த வார்த்தைகளால் மாற்றமடைந்து, தேசத்துக்காக உழைக்க ஆரம்பித்தார். ஒருமுறை சத்தியமூர்த்தியும் காந்தியும் இவர் வீட்டுக்கு வந்தபோது, காந்திக்கு தங்கத் தட்டில் உணவு பரிமாறினார். காந்தி, “உணவு மட்டுமா? தட்டும் எனக்கா?” என்று கேட்க தங்கத் தட்டை அவரிடம் கொடுத்துவிட்டார். காந்தி உடனே அதை ஏலம்விட்டு காசாக்கினார்.

அவருடைய 27-வது வயதில் ‘நந்தனார்’ படத்தில் நந்தனாராக ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தில் நடித்தார். வேதியராக நடித்த விஸ்வநாதய்யருக்கு ரூ.3,000 சம்பளம். அந்தப் படத்தில் கே.பி.எஸ் 19 பாடல்கள் பாடினார். ‘நந்தனார்’ படம் பணத்தை அள்ளிக் கொட்டியது.  அதைத் தொடர்ந்து, ஒளவையார் படம் அவருக்கு உலகளாவிய புகழைத் தந்தது. அவருடைய இசைத்தட்டுகள் விற்றுத் தள்ளின. ‘ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை’ என்ற பாடலை இசைத்தட்டுக்காகப் பாடியபோது, வயலின் சிறிது சுருதி விலகிய சமயம் இவர் ‘இம்’ என மிரட்டுவது அப்படியே கேட்கிறது என அவர் சரிதையை எழுதிய ஆசிரியர் பதிவுசெய்திருக்கிறார்.  இறந்துபோன என் அண்ணர் பல தடவை இந்தப் பாட்டைக் கேட்டு மதிமயங்கியது நினைவுக்கு வருகிறது. இளம் வயதில் அவர் சுந்தராம்பாளுக்கு எழுதிய கடிதத்தை அனுப்பியிருக்கலாமே என இப்போது எனக்குத் தோன்றுகிறது.

நான் என்ன செய்கிறேன்?

அண்ணர் எழுதிய கடிதம் ஒருவிதம் என்றால், கொடுமுடி கோகிலம்  சுந்தராம்பாள் எழுதிய கடிதங்கள் இன்னொரு வகை. அவர் கிட்டப்பாவுக்கு எழுதிய கடிதங்களை இப்படித்தான் முடிப்பார்.

‘தங்கள் அன்பை என்றும் மறவாத காதலி.’
‘தங்கள் அன்பை ஆயுள் பரியந்தமும் மறவாத’
’தங்கள் அன்பையே ஆபரணமாகக் கொண்ட அடியாள்.’

மணமுடித்த ஆரம்ப நாள்களில் ஓரளவு பித்துப் பிடித்ததுபோலவே அவர் கடிதங்கள் இருக்கும். ஒரு கடிதத்தை இப்படி முடித்திருப்பார்.

‘அடிக்கடி வெளியில் சுத்தவேண்டாம். தூக்கம் முழிக்க வேண்டாம். காலா காலத்தில் சாப்பிடவும். அனாவஸ்ய விஷயங்களில் புத்தியை செலவுசெய்ய வேண்டாம். நானும் அப்படியே நடக்கிறேன். மாதமும் ஆய்விட்டது. தங்களுக்குத் தெரியாத விஷயமல்ல. அவ்வளவுதான் நான் எழுதலாம். நேரில் வாருங்கள். உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள்.’

என்ன செய்திருப்பார்?

[நன்றி: கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள் வரலாறு  –ப.சோழநாடன்]

- அ.முத்துலிங்கம், படங்கள் : ஞானம்