Published:Updated:

2019-ல் உலகை அச்சுறுத்தும் 10 நோய்கள்..! உலகச் சுகாதார நிறுவனப் பட்டியல்

ஒவ்வொரு ஆண்டு நிறைவடையும்போது அதன் முக்கிய நிகழ்வுகளைத் திரும்பிப் பார்த்தோம் என்றால், அதில் ஏதாவது நோய்களின் தாக்கம், தொற்றுநோய்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் போன்ற சம்பவங்கள் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.

2019-ல் உலகை அச்சுறுத்தும் 10 நோய்கள்..!  உலகச் சுகாதார நிறுவனப் பட்டியல்
2019-ல் உலகை அச்சுறுத்தும் 10 நோய்கள்..! உலகச் சுகாதார நிறுவனப் பட்டியல்

வ்வொரு ஆண்டு நிறைவடையும்போது அதன் முக்கிய நிகழ்வுகளைத் திரும்பிப் பார்த்தோம் என்றால், அதில் ஏதாவது நோய்கள் தாக்கம், தொற்றுநோய்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் போன்ற சம்பவங்கள் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். அந்தந்த காலநிலை மற்றும் சூழலுக்கேற்ப ஏதாவது ஒரு நோய் பரவுவதும் அதனால் பாதிப்புகள் உண்டாவதும் தவிர்க்க முடியாததாகிவிட்டது.

அந்த வகையில் கடந்த ஆண்டு டெங்கு, பன்றிக்காய்ச்சல், எபோலா, நிபா வைரஸ் என உலகைப் புரட்டிப் போட்ட தொற்றுநோய்கள் ஏராளம். மறுபுறம் சர்க்கரை நோய், புற்றுநோய் என்று தொற்றாநோய்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. 

இந்நிலையில் 2019-ம் ஆண்டு உலக அளவில் என்னென்ன நோய்களால் அதிக பாதிப்புகள் ஏற்படும் என்பதைக் கணித்து உலகச் சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு உலகை அச்சுறுத்தக்கூடிய 10 முக்கியமான பாதிப்புகள் இங்குத் தொகுக்கப்பட்டுள்ளன.

* காற்று மாசுபாடு - சுகாதாரச் சீர்கேடுகளில் ஒன்றான காற்று மாசுபாடு, இந்த ஆண்டு மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நுண்ணிய மாசுகள் மூச்சுக்குழாய் மற்றும் ரத்தஓட்டத்தில் மிக எளிதாக ஊடுருவி நுரையீரல், இதயம் மற்றும் மூளையைப் பாதித்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். நுண்ணிய மாசுகள் வாகனப் புகை, ஆலைக் கழிவுகள், எரிபொருள் கழிவுகளிலிருந்து வெளியாகின்றன. கடந்த வருடங்களில், இவை காரணமாகவே பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நாடுகளில், 90 சதவிகித இறப்புகள் ஏற்பட்டுள்ளன என்கின்றன ஆய்வுகள்.

* தொற்றா நோய்கள் - சர்க்கரைநோய், புற்றுநோய், இதயநோய் போன்ற தொற்றாநோய்கள்தாம் உலகளவில் 70 சதவிகித இறப்புக்குக் காரணமாக அமைகின்றன. இந்த ஆண்டும் அவற்றின் தாக்கம் அதிகமாகக் காணப்படும். தொற்றாநோய்களுக்கான முக்கியக் காரணங்கள், புகைப்பழக்கம், மதுப்பழக்கம், உடல் இயக்கம் இல்லாமை, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், காற்று மாசுபாடு போன்றவை. 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மனநலம் சார்ந்த பிரச்னைகள் அதிகரிக்கக்கூடும். மனநலப் பிரச்னைகளின் சதவிகிதம், இந்த ஆண்டு மேலும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

* சளி, காய்ச்சல் தொற்று - எப்படியான சூழ்நிலையில், எதன் காரணமாக சளி, காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படும் என்பதைக் கணிக்க முடியாது. இந்த இரண்டு பிரச்னைகளும் திடீரென வீரியம் பெறத் தொடங்கி, பிரச்னையை அதிகரிக்கக்கூடும். அப்படியான பாதிப்புகள் இந்த வருடம் அதிகமாக ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

* வாழும் சூழலால் ஏற்படும் ஆரோக்கியமின்மை - உலகளவில் 22 சதவிகித மக்கள், சுமார் 160 கோடி பேர் ஆரோக்கியமற்ற சூழலில்தான் வாழ்கின்றனர். அதாவது வறட்சி, பஞ்சம், போர் மற்றும் போதுமான மருத்துவச் சேவைகள் கிடைக்காமை ஆகிய காரணங்களால் உணவு கிடைக்காத, பாதுகாப்பில்லாத, நெரிசல்மிக்க பகுதிகளில் மக்கள் வாழ்கின்றனர். இந்தச் சூழலில் வாழ்ந்து வருபவர்களுக்குச் சுகாதாரச் சீர்கேட்டால் ஏற்படும் நோய்கள் அதிகமாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* ஆன்டிபயாடிக் மருந்துகள் - நவீன மருத்துவத்தின் மிகப்பெரிய வளர்ச்சியாகக் கருதப்படுபவை, ஆன்டிபயாடிக், ஆன்டி-வைரல், ஆன்டி-மைக்ரோபியல் போன்ற நோய்த்தடுப்பு மருந்துகள், மாத்திரைகள். தற்போது இவையே பிரச்னைகளாகி வருகின்றன. சில தடுப்பு மருந்துகள் உடலில் இயற்கையாகவே செயல்படும் எதிர்ப்புத் திறனைத் தடுக்கிறது. நிமோனியா, காசநோய் போன்றவற்றை எளிதாக அழிக்க முடியாததின் காரணமும் இதுதான். 

* எபோலா - கடந்த ஆண்டு பல்வேறு நாடுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது எபோலா வைரஸ் பாதிப்பு. குறிப்பாக காங்கோவில் இரண்டு வகையான எபோலா காய்ச்சல் ஏற்பட்டு 10 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். எபோலாவைப் போன்றே உடலின் உள்ளுறுப்புகளில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும் ஜிகா, நிபா போன்ற காய்ச்சல் வகைகள் மற்றும் சுவாசக் குழாய் பாதிப்புகள் இந்த ஆண்டும் ஏற்படக்கூடும்.

* முதன்மையான ஆரோக்கியப் பராமரிப்பு: குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை முழுஉடல் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். அப்போதுதான் எந்தவொரு நோய் பாதிப்பையும் ஆரம்பநிலையிலேயே சரிசெய்ய முடியும். ஆனால் பல நாடுகளில் மக்களுக்குத் தேவையான முதன்மை ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கு போதுமான வசதிகள் இல்லை. பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு, இப்படியான வசதிகள் அவசியத் தேவை. இல்லாதபட்சத்தில், அதனால் பல்வேறு நோய்த்தொற்று, சுகாதாரச் சீர்கேட்டால் பாதிப்புகள் ஏற்படும்.

* தடுப்பூசி - ஒவ்வோர் ஆண்டும், முப்பது முதல் நாற்பது கோடி இறப்புகள் சரியான நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் தடுக்கப்படுகிறது. உலக மக்கள் தொகையில் அனைவரும் தடுப்பூசியைச் சரியாகப் போட்டுக்கொண்டால், இந்த எண்ணிக்கையில் கூடுதலாக ஒரு கோடியே ஐம்பது லட்சம் பேரைக் காப்பாற்ற முடியும். ஆனால் தடுப்பூசி மீதான அவநம்பிக்கை அல்லது தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மீதான பயம் காரணமாகப் பலரும் அதைத் தவிர்க்கின்றனர்.

* டெங்கு - கடந்த இரண்டு வருடங்களில், தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய காய்ச்சல் டெங்கு. இந்தியா மற்றும் வங்கதேசத்தைப் பொறுத்தவரையில், மழைக்காலத்தில்தான் அதிக இடங்களில் பாதிப்பு ஏற்படுவது தெரியவந்துள்ளது. காலநிலை மாற்றத்தால், வங்கதேசத்தில் மழைக்காலம் அதிகரித்து வருவதால், அங்குக் கூடுதலான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

* ஹெச்.ஐ.வி. - ஹெச்.ஐ.வி. பாதிப்பு குறித்த விழிப்புஉணர்வுகள், முன்பைவிட தற்போது அதிகரித்து வருகிறது. எனினும், தொற்றுநோய் பாதிப்பான இதை முழுவதுமாகக் குணப்படுத்தவோ, தடுக்கவோ முடியவில்லை. ஒவ்வோர் ஆண்டும், ஏறத்தாழ 10 லட்சம் பேர் ஹெச்.ஐ.வி.யால் உயிரிழக்கின்றனர். உலகம் முழுவதும் 3 கோடியே 7 லட்சம் ஹெச்.ஐ.வி. நோயாளிகள் வாழ்கின்றனர்.

`விழிப்புஉணர்வை அதிகப்படுத்தினால் மட்டுமே, பாதிப்பு அதிகரிப்பதைத் தடுக்க முடியும். குறிப்பாக, பாலியல் தொழிலாளர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள், 15 முதல் 24 வயதுக்குட்பட்ட பெண்கள் மத்தியிலான விழிப்புஉணர்வை அதிகப்படுத்த வேண்டியுள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளது உலகச் சுகாதார நிறுவனம்.

இந்தப் பட்டியலோடு சேர்த்து, பாதிப்பைத் தடுப்பதற்கான உலகச் சுகாதார நிறுவனத்தின் நடவடிக்கைகளையும் பட்டியலிட்டுள்ளது.

அதன்படி, ஆண்டுதோறும் அந்தக் காலநிலையில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் காய்ச்சல் பாதிப்புகளுக்குத் தடுப்பு மருந்துகள் விநியோகிக்கவும் தயாராகி வருகிறதாம்