மற்ற எபிசோடுகள்
Published:Updated:

80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 3 - சினிமாவைவிட எனக்குக் காதல்தான் முக்கியம்! - நதியா

நதியா
News
நதியா ( அவள் விகடன் )

தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80’ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்களின் வெற்றிக் கதை சொல்லும் தொடர் இது.

இந்த இதழில், நதியா. அழகும் அபார நடிப்பும் ஒருங்கே அமைந்த பதுமை, நதியா. தமிழ் சினிமா கனவுக்கன்னிகளில் ஒருவரான இவர், நாயகியாக நடித்தது நான்கு ஆண்டுகள் மட்டுமே. அப்போது தன் துடிப்பான நடிப்பாலும் ஆடை, அலங்கார நளினத்தாலும் மக்களின் மனங்களைக் குத்தகை எடுத்தார். என்றென்றும் இளமைக்கு இவர் இலக்கணம். ரசிகர்களின் அன்பு குறையாத எவர்கிரீன் நாயகி நதியா, தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார்.

நதியா
நதியா
அவள் விகடன்

காதல் சினிமாக்களின் ரசிகை! என் பெற்றோரின் பூர்வீகம், கேரளா. திருமணத்துக்குப் பிறகு மும்பையில் குடியேறிட்டாங்க. வகுப்புல டீச்சர் இல்லாதபோது, அவங்கள மாதிரி மிமிக்ரி பண்ணுவேன்; சேட்டை பண்ணுவேன். இதனால் என் மேல அடிக்கடி புகார் வர, அப்பாகிட்ட செமத்தியா அடிவாங்குவேன். நான் பத்தாவது படிக்கும்போதுதான் எங்க வீட்டுல டி.வி வாங்கினோம். இந்தி மற்றும் மலையாளக் காதல் கதை படங்களை விரும்பிப் பார்ப்பேன். ‘லவ் ஸ்டோரி’ங்கிற இந்திப் படம் ரிலீஸானபோது, நடிகர் குமார் கவுரவ்வின் பெரிய ரசிகையானேன். அவர் போலவே ஸ்கூல்ல நடிச்சுக்காட்டுவேன். அந்தப் படத்தை 15 முறைக்கும் அதிகமா பார்த்தேன். ஆனாலும், அதெல்லாம் சராசரி ரசிகையாகத்தானே தவிர, சினிமாவில் நடிக்கும் ஆர்வம் வரலை. ஹீரோயின் நதியா! 10-ம் வகுப்புக்குப் பிறகு, ஐந்து வருட ‘அப்ளைடு ஆர்ட்ஸ்’ கோர்ஸ்ல சேர்ந்தேன். அப்போ நிறைய மாடலிங் வாய்ப்புகள் வந்தும் மறுத்தேன். என் அப்பாவும் இயக்குநர் ஃபாசில் சாரின் தம்பியும் நெருங்கிய நண்பர்கள். அவர் மூலமாக ஃபாசில் சார் என்னை நடிக்க வலியுறுத்திக் கேட்டார். குடும்ப நண்பர் என்பதால ஒப்புக்கிட்டு, ஹாலிடேல நடிக்கிறதா சொல்லிட்டோம். அப்படித்தான், `நோக்கேததூரத்து கண்ணும் நட்டு’ங்கிற மலையாளப் படத்தில் ஹீரோயினானேன். ‘காலேஜ்  போற மாதிரி, உன் விருப்பம்போல டிரஸ் மற்றும் அக்சஸரீஸை செலக்ட் பண்ணிக்கோ. அதில் மஞ்சள் நிறம் டாமினேட்டிங்கா இருக்கட்டும்’னு சொன்னார் ஃபாசில் சார். மும்பையில லோக்கல் பஜார்லதான் எனக்கான அக்சஸரீஸையெல்லாம் வாங்கிப் படத்தில் பயன்படுத்தினேன். ஃபாசில் சார், ஜரீனா மொய்துங்கிற என் பெயரை, நதியானு மாத்தினார். அந்தப் பட ஷூட்டிங் முடிஞ்சதும், மும்பைக்குப் படிக்கப் போயிட்டேன். என் முதல் படம் பெரிய ஹிட். தொடர்ந்து நிறைய மலையாளப் பட வாய்ப்புகள் வந்தது. ஆனா, சரியான முடிவெடுக்க முடியலை. ‘மிஸ் பண்ணிடாதீங்க’னு பலரும் சொன்னாங்க. பிறகு, நடிப்பை டிக் பண்ணினோம். ரெண்டரை வருஷம் படிச்ச நிலையில என் படிப்பை நிறுத்தவேண்டிய அளவுக்கு சினிமாவில் பிஸியாகிட்டேன்.

‘சுந்தரி’தான் என் நிஜ கேரக்டர்!

மூணு மலையாளப் படங்களில் நடிச்சிருந்த நிலையில, ‘பூவே பூச்சூடவா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானேன். இந்தப் படம், `நோக்கேததூரத்து கண்ணும் நட்டு’ படத்தின் ரீமேக்தான். ஃபாசில் சார், பத்மினி அம்மா, இளையராஜா சார், பி.சி.ஸ்ரீராம் சார்னு தமிழில் என் முதல் படத்திலேயே பெரிய கூட்டணியில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைச்சது. அப்போ எனக்குத் தமிழ் கொஞ்சம்கூடத் தெரியாது. பெரிய டயலாக் பேசச் சிரமப்பட்டு, பதினாறு டேக்கெல்லாம் எடுத்தேன். அப்படியான நேரங்கள்ல, ஃபாசில் சார் எனக்கு பிரேக் கொடுத்து, `செட்டுக்குள்ள கொஞ்ச நேரம் சுத்திட்டு வா. பிறகு ஷூட் பண்ணலாம்’னு சொல்லுவார். ஒரு கட்டத்துல தமிழ் கத்துக்க, ஒரு டீச்சரை ஏற்பாடு செய்தாங்க. பத்மினி அம்மாவும் எனக்குத் தமிழ் சொல்லிக்கொடுப்பாங்க. `பூவே பூச்சூடவா’ பட ‘சுந்தரி’ கேரக்டர்போலத்தான், நிஜத்திலும் நான் கலகலப்பாகவும் குறும்பாகவும்தான் இருப்பேன். என் சினிமா அஸ்திவாரம் பலமானது. பிறகு நானே கதைகளைக் கேட்டு, படங்களைத் தேர்வு பண்ணினேன். அப்போதைய டாப் ஹீரோக்கள் பலருடனும் ஜோடியா நடிச்சேன். ‘அன்புள்ள அப்பா’ படத்தில் சிவாஜி சாரின் மகளாக நடிச்சது பெருமையான அனுபவம். கால்ஷீட் பிரச்னையால் `விக்ரம்’ படத்துல கமல்ஹாசன் சார்கூட நடிக்க முடியாமல் போனது வருத்தம்.

நோ கிளாமர்... நோ கிசுகிசு!

கிராமத்துப் பெண், அழுத முகம், புடவை, தலை நிறைய மல்லிகைப்பூனு காட்டப்பட்ட அப்போதைய ஹீரோயின்களுக்கு மத்தியில், ‘சுந்தரி’ கேரக்டர் ரொம்ப ஸ்டைலாவும் மாடர்னாகவும் இருந்துச்சு. அதுபோன்ற கேரக்டர்கள்லயே அதிகம் நடிச்சேன். டி-ஷர்ட், ஜீன்ஸ், சல்வார்னு மாடர்ன் உடைகள், போனி டெயில், டாப் கொண்டைனு விதவித ஹேர் ஸ்டைல், பிளாஸ்டிக் கம்மல், வளையல் மற்றும் பூக்கள் உள்ளிட்ட அக்சஸரீஸ்னு திரையில் என்னோட லுக் தனித்துவமா இருக்கும்படி பார்த்துப் பார்த்து தேர்வு செய்தேன். அதனால நதியா டிரஸ், நதியா கொண்டை, நதியா கம்மல்னு எங்க பார்த்தாலும் நதியாமயமாக, ரசிகர்கள் அமோக வரவேற்பு தந்தாங்க. கமிட்டான படங்களில் சின்சியரா நடிச்சேன். என் எல்லா ஷூட்டிங்குக்கும் என் அப்பா உடன் வருவார். ‘நதியா ரோஜாப்பூ மாதிரின்னா, அவங்க அப்பாதான் முள்போல பாதுகாப்பு’னு அப்போ அதிகம் பேசினாங்க. நடுவுல ஒருநாள் பிரேக் கிடைச்சாலும் உடனே மும்பையிலுள்ள எங்க வீட்டுக்குப் போயிடுவேன். இதனால என்னைப் பத்தி எந்த ஒரு கிசுகிசு செய்தியையும் கேள்விப்படலை. சினிமாவுல என்ட்ரி ஆகும்போதே, ‘நோ கிளாமர் ரோல்’னு உறுதியா இருந்தேன். அந்த உறுதியை இறுதிவரை கடைப்பிடிச்சேன்.

நதியா
நதியா
அவள் விகடன்

காதலுக்காக சினிமாவிலிருந்து விலகினேன்! என் காதல் கணவர் சிரிஷ் காட்போல், மும்பைக்காரர். காமன் ஃப்ரெண்ட்ஸ் மூலமாக, நாங்க ஃப்ரெண்ட்ஸ் ஆனோம். ஒருகட்டத்துல அவர் என் வாழ்க்கைத் துணையா வந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன். முதலில் அவர் புரபோஸ் செய்ய, பிறகு நானும் அக்செப்ட் செய்தேன். நடிப்புக்காக வந்த வாய்ப்புகள் பற்றி அவர்கிட்ட கேட்டப்போ, ‘உனக்கும், உன் குடும்பத்துக்கும் இது நல்ல வாய்ப்புனு தோணுச்சுன்னா தாராளமா நடி’னு சொன்னார். அப்புறம் அவர் அமெரிக்காவுக்குப் படிக்கப் போயிட்டார். அந்த இடைப்பட்ட 1984 – 1988 வரை, நாலு வருஷங்கள்தான் சினிமாவில் ஆக்டிவ்வா நடிச்சேன். தமிழ், மலையாளத்தில்தான் அதிகம் நடிச்சேன். மூணு தெலுங்கு படம் உட்பட, அந்த முதல் இன்னிங்ஸ்ல 27 படங்களில்தான் நடிச்சேன். ஆனா, அதுக்கு ரசிகர்கள் காட்டின அன்பு ரொம்பப் பெரிசு. அதையெல்லாம் அப்போ நான் உணரவேயில்லை. காரணம், என் மனசு முழுக்க என் காதலர் சிரிஷ்தான் இருந்தார். அவருக்காக நிறைய லவ் லெட்டர் அனுப்புவேன். வருஷம்தோறும் ஒருமாத விடுமுறைக்கு அவர் இந்தியா வரும்போது, நானும் நடிப்புக்கு பிரேக் கொடுத்துடுவேன். என் காதல் கணவருடனான திருமண வாழ்க்கை எப்போ தொடங்கும் என்ற எதிர் பார்ப்புடன் ஒவ்வொரு நாளையும் கடந்தேன். என் காதல் விஷயம் எங்க வீட்டுக்குத் தெரியவர, எதிர்ப்பு இருந்தது. `கல்யாணம்னு ஒண்ணு நடந்தால், அது சிரிஷ்கூடதான்’னு நான் தீர்க்கமா சொல்லிட்டேன். பிறகு, இருவீட்டார் சம்மதமும் கிடைச்சது. அவர் படிப்பை முடிச்ச நேரம். ‘அமெரிக்க சூழ்நிலை வித்தியாசமானது. அங்க வசிக்க உனக்கு விருப்பமா? தவிர, இப்போ நீ பெரிய நடிகையாகிட்டே. இப்போதும் என்னைக் கல்யாணம் பண்ணிக்கத் தயாரா இருக்கியா?’னு ஒருநாள் கேட்டார். `ஒவ்வொரு நாளும் உங்களையே நினைச்சுக்கிட்டு இருக்கேன். நீங்க இப்படிக் கேட்கலாமா?’னு அவர்கிட்ட ரொம்பக் கோபப்பட்டேன். சினிமாவைவிட காதல்தான் முக்கியம்னு முடிவெடுத்தேன். ரஜினி சாருக்கு ஜோடியா ‘ராஜாதி ராஜா’ படத்துல நடிச்சு முடிச்ச நேரம். அடுத்த ஒரே வாரத்துல, என் 22 வயசுல, என் காதலரைக் கல்யாணம் செய்துக்கிட்டேன். சினிமா துறையில எல்லோருக்கும் அதிர்ச்சி. `இவ்வளவு பீக்ல இருக்கிறபோது, திடீர்னு கல்யாணம் பண்ணிகிட்டீங்களே?!’னு கேட்டாங்க. முன்பு ஒப்புக்கொண்டபடி, ‘ராஜகுமாரன்’ உட்பட மூணு படங்களில் மட்டும் நடிச்சேன். பிறகு கணவருடன் அமெரிக்காவில் குடியேறிட்டேன்.

ரீ-என்ட்ரி... மீண்டும் ஹிட்!

உண்மையைச் சொல்லணும்னா, கல்யாணத்துக்குப் பிறகுதான், ஒரு நடிகையா நான் அடைந்த புகழை உணர்ந்தேன். ஆனாலும், எல்லா பட வாய்ப்புகளையும், தொடர்ந்து 16 வருஷங்களா தவிர்த்தேன். அமெரிக்காவுல கணவரை தினமும் ஆபீஸ்ல பிக் அப், டிராப் செய்வேன். மகள்கள் சனம், ஜனா இருவரையும் இந்திய மரபுப்படி வளர்த்தேன். இப்படிக் குடும்ப வாழ்க்கையில சந்தோஷமா இருந்தேன். சிரமப்பட்டு, ‘கம்யூனிகேஷன் ஆர்ட்ஸ்’ங்கிற ஒரு கோர்ஸ்ஸும் படிச்சேன். இந்த நிலையில, `எம்.குமரன்’ படத்துல என்னை நடிக்கவைக்க இயக்குநர் மோகன் ராஜா ரொம்ப மெனக்கெட்டார். ஒருகட்டத்துல நான் ஒப்புக்கிட்டாலும், அந்தப் பட பூஜைக்கு நான் வந்த பிறகுதான் எல்லோருக்கும் நம்பிக்கையே வந்தது. படத்துல ஜெயம் ரவிதான் எனக்குப் பரதநாட்டியம் சொல்லிக்கொடுத்தார். எனக்கு ஊசி போடும் சீன்ல, நிஜமாவே ஊசிப் போட்டுட்டாங்க. வலியில கத்தினேன். இப்படி நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்துச்சு. அந்தப் படத்தில் நடிச்சு முடிச்சதும் லண்டன் போயிட்டேன். அங்கதான் இந்தப் படத்தின் வெற்றியை உணர்ந்தேன். பிறகு என் கணவருக்கு மும்பைக்கு டிரான்ஸ்ஃபர் கிடைக்க, அங்கே குடியேறினோம். தொடர்ந்து செலக்ட்டிவ்வான கதைகளில் மட்டும் நடிச்சுக்கிட்டு இருக்கேன்.

காதலால் இனிமையான வாழ்க்கை!

நான் மத்தவங்க பர்சனல் விஷயத்தைத் தெரிஞ்சுக்க விரும்ப மாட்டேன். என் பர்சனல் உலகத்தையும் பிறர் தெரிஞ்சுக்க விரும்பமாட்டேன். அதனால, நான் சோஷியல் மீடியாவுலகூட இல்லை. ரொம்ப எளிமையான வாழ்க்கை வாழ ஆசைப்படறேன். ஒழுக்கத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பேன். அப்படித்தான் என் மகள்களையும் வளர்த்திருக்கிறேன். நானும் என் கணவரும் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொண்டிருப்பதால், 35 ஆண்டுக்கால எங்க காதல் வாழ்க்கை இனிதே கழிகிறது. பெரும்பாலும் கலர்ஃபுல் லுக்லதான் நடிச்சிருக்கேன். மேக்கப் இல்லாத மற்றும் ஏழைப் பெண்ணாக நடிக்கவும், சொந்த வாய்ஸ்ல டப்பிங் பேசவும் ஆசைப்படறேன். எனக்குத் திருப்தியான, மக்களுக்குப் பிடிக்கிற ரோல்களில் நடிக்கணும். இது ரெண்டும் இல்லாம நடிக்கிறதுக்கு, நடிக்காமல் இருப்பது மேல். இதுதான் நதியா!  

- நாயகிகள் பேசுவார்கள்!

 - கு.ஆனந்தராஜ்

படம் உதவி: `கலர்ஸ் தமிழ்' சேனல்

அந்த நாள் ஞாபகம்! சின்ன வயசிலேயே மேக்கப், டிரஸ்ஸிங்ல அதிக ஆர்வம் எனக்கு. அம்மாதான் ஜடைப் பின்னிவிடுவாங்க. அப்போ, ஒண்ணு, ரெண்டு முடி வெளிய நீட்டிக்கிட்டு இருந்தாலும், ஜடையை அவிழ்த்து மறுபடியும் பின்னிவிடச் சொல்லுவேன். இதனாலேயே நான் ஸ்கூல் போக லேட்டாகும். இதனால் கடுப்பான எங்கப்பா, ஒருநாள் என் முடியை அப்படியே ஒட்ட வெட்டிவிட்டுட்டார். எனக்கு ஒரே அழுகையும் கோபமும். ஆனாலும் என் ஃபேஷன் ஆர்வம் விரிவடைந்ததே தவிர, குறையலை.

என் அழகுக்குக் காரணம்! `30 வருஷத்துக்கு முன்னாடி பார்த்த மாதிரியே இப்போதும் இருக்கீங்க’னுதான் எங்க போனாலும் சொல்றாங்க. என் இளமை மற்றும் அழகில் எந்த மேஜிக்கும் இல்லை. என் பெற்றோருடைய ஜீன்தான் முதல் காரணம். உணவுக்கட்டுப்பாடு, தவறாத உடற்பயிற்சி, வாழ்க்கையைச் சந்தோஷமாகவும் எளிமையாகவும் அணுகும் விதம் ஆகியவற்றால் என் அழகைத் தக்கவெச்சுக்கிறேன். சைவமோ, அசைவமோ, வயிறும் மனசும் திருப்தியடையுற வகையில சாப்பிடுறது என் வழக்கம். அழகு மட்டுமல்ல, தன்னம்பிக்கை மற்றும் தைரியம்தான் பெண்களுக்கு உண்மையான அழகு. அந்த வகையிலும் நான் பலமானவள்தான்.