நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா கேப்பிட்டல் குழுமத்தின் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சார்பில் அண்மையில் விருதுநகர் மற்றும் ராஜபாளையத்தில் முதலீட்டு மந்திரங்கள் என்கிற தலைப்பில் மியூச்சுவல் ஃபண்ட் விழிப்பு உணர்வுக் கூட்டங்கள் நடந்தன. இந்த இரு நகரங்களிலும் நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் சார்பாகக் கூட்டம் நடப்பது இதுவே முதல்முறையாகும். இந்தக் கூட்டங்களில் ஆண், பெண் முதலீட்டாளர்கள் திரளாகப் பங்கேற்று பயனடைந்தார்கள்.

இந்த இரண்டு கூட்டங்களிலும் முதலில் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி பேசினார். அடுத்து முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன் பேசினார்.
சுவாமிநாதன் கருணாநிதி விருதுநகரில் பேசும்போது, “எந்த முதலீடு சிறந்தது என்கிற கேள்விக்கு, சிறந்த முதலீடு என்று எதுவும் இல்லை என்பதே பதில். முதலீட்டில் லாபம் பார்க்க அதனை பங்குச் சந்தை சார்ந்தது, கடன் பத்திரங்கள், ரியல் எஸ்டேட், தங்கம் போன்றவற்றில் கலந்து அஸெட் அலோகேஷன் முறையில் முதலீடு செய்து வந்தால் நிச்சயம் நல்ல லாபம் பார்க்க முடியும்” என்றார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வ.நாகப்பன் விருதுநகரில் பேசும்போது, “பணம் சம்பாதித்தவர்களின் முதலீட்டு மந்திரம் என்பது, ‘பணம் பணத்தைப் பெருக்கும்’ என்பதாக இருக்கிறது. அந்த வகையில், அனைவரும் சம்பளம், சம்பாத்தியத்தைத் தாண்டி இரண்டாவது வருமானத்துக்குத் திட்டமிடுவது அவசியம். எண்டோவ்மென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு அதிகம் பிரீமியம் கட்டிக் குறைவான கவரேஜ் பெறுவதற்குப் பதில், குறைவான பிரீமியத்தில் அதிக கவரேஜ் கிடைக்கும் டேர்ம் பிளான் எடுக்கலாம். மீதியை பி.பி.எஃப், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்துவந்தால் லாபகரமாக இருக்கும்” என்றார்.
ராஜபாளையத்தில் சுவாமிநாதன் கருணாநிதி பேசும்போது, ‘‘நம்மவர்கள் தங்கம் நல்ல முதலீடு என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதில் உள்ள செய்கூலி, தேய்மானம், பழைய நகை, குறைவான விலை அதிகரிப்பு, வருமான வரி போன்றவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அது நல்ல முதலீடாக இல்லை” என்றார்.
வ.நாகப்பன் ராஜபாளையத்தில் பேசும்போது, “அதிகமாகப் பணம் சம்பாதித்து, பணத்தைப் பெருக்குவது எளிது. கூட்டு வளர்ச்சியின் வலிமை தெரிந்தவர்கள், மாதந்தோறும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருகிறார்கள். இந்த விவரம் தெரியாதவர்கள் மாதம் தவறாமல் இ.எம்.ஐ கட்டி பணத்தை இழந்து வருகிறார்கள்’’ என்றார்.

கேள்வி-பதில் நேரத்தில் வந்திருந்தவர்கள் தங்களின் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டனர். “அரசு ஊழியர்கள், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாமா, அதனை வரிக் கணக்குத் தாக்கலின்போது தெரிவிக்க வேண்டுமா?’’ என்று ஒருவர் கேட்க, வ.நாகப்பன், “தாராளமாக முதலீடு செய்யலாம். இ.எல்..எஸ்.எஸ் ஃபண்டில் முதலீடு செய்யும்பட்சத்தில், அதனைக் காட்டி வருமானவரி விலக்கு பெறலாம். மற்றபடி, இதர மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றி, வரிக் கணக்குத் தாக்கலின்போது தெரியப்படுத்தத் தேவையில்லை” என்றார்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் செலவு விகிதம் (எக்ஸ்பென்ஸ் ரேஷியோ) குறைவாக இருந்தால், நல்ல ஃபண்டா என முதலீட்டாளர் ஒருவர் கேட்க, அதற்கு சுவாமிநாதன் கருணாநிதி பதில் அளித்தார். “செலவு விகிதம் குறைவாக இருக்கிறது என்பதற்காக மட்டுமே ஒரு ஃபண்டைத் தேர்வு செய்யக்கூடாது. அந்த ஃபண்ட் கடந்த காலங்களில் எப்படி வருமானம் தந்திருக்கிறது, அந்த ஃபண்ட் பிரிவின் சராசரி வருமானம் மற்றும் பெஞ்ச்மார்க் வருமானத்தைவிட கூடுதலாகத் தந்திருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்” என்று விளக்கிச் சொன்னார்.
சிறிய நகரங்களில் இதுமாதிரிக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்துங்கள் என முதலீட்டாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
சி.சரவணன், படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்